யாதாயினும் 1AB அல்லது 1C பாடசாலையைத் தெரிவு செய்து, வளங்களை வினைத்திறனுள்ளதாகப் பயன்படுத்துவதில் இப்பாடசாலை அதிபரின் வகிபாகங்களை முகாமைத்துவத் தொழிற்பாட்டுக் கட்டங்களை அடிப்படையாக கொண்டு விளக்குக.
பொருளடக்கம்
1) ஆய்வுச் சுருக்கம்
2) நன்றியுரை
3) பாடசாலை வளங்கள்
பௌதீக வளங்கள்
மனித வளங்கள்
நேர வளம்
நிதி வளம்
தகவல் வளம்
4) அதிபர் இவ்வளங்களை முகாமை செய்யும் விதம்
5) வளப்பற்றாக்குறையால் எதிர்நோக்கப்படும் சவால்கள்
6) இச்சவால்களை எதிர்கொள்ள அதிபரினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள்
7) பின்னிணைப்பு I
பின்னிணைப்பு II
பின்னிணைப்பு III
ஆய்வுச் சுருக்கம்
பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், சமய விழுமியங்கள் அறக்கருத்துக்கள், ஆற்றல்கள், பண்பாட்டு வடிவங்கள், திறன்கள், நல்ல மனப்பாங்குகள் யாவும் உருவாக்கப்படும் களமாகப் பாடசாலைகள் விளங்குகின்றன. இதனால் பாடசாலைகள் சமூக நிறுவனங்களுள் முதன்மையானதொன்றாக காணப்படுகின்றது. எனவேதான் சமூகத்துக்குத் தேவையான பெறுமதியான ஆற்றலுள்ள பிரஜைகளை உருவாக்கும் பணியினைப் பாடசாலைகள் மேற்கொள்கின்றன.
பொதுவாக பாடசாலையானது, கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளுடன் பயன்படுத்தக் கூடியதும், அந்த நடவடிக்கைகளை மேலும் எளிதாக்க உதவுவதும் அச்செயற்பாடுகளை மேலும் கருத்துள்ளதாக மாற்றியமைக்கக்கூடியதுமான எல்லா பௌதீக வளங்களையும், நிறுவன ரீதியான வளங்களையும், நிதிச் சாதனங்களையும் வளங்களாகக் கொண்டுள்ளது.
மேற்கூறிய வளங்களை வினைத்திறனுள்ளதாகப் பயன்படுத்தி பாடசாலையைத் திறம்பட இயக்குவதில் அதிபரின் முகாமைத்துவ வகிபங்கு பிரதானமாக விளங்குகின்றது. இந்த வகையில், இது தொடர்பான தகவல்களைத்திரட்டிக் கொள்ளும் நோக்கில் 1AB பாடசாலையான மட்/ககு/வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயத்திற்கு களப்பணி ஒன்றினை மேற்கொண்டோம். இக்களப்பணியின் போது அப்பாடசாலையில் காணப்பட்ட வளங்கள், வளப்பற்றாக்குறைகள், வளங்களின் பயன்பாடு, தாம் வளங்களை முகாமை செய்யும் விதம் போன்றவை தொடர்பாக, பாடசாலையின் அதிபர் திரு.எஸ்.மோகன் அவர்களின் நேர்காணலினூடாக அறிந்து கொண்டோம்.
இந்தவகையில் இவ்வறிக்கையானது வளங்களை வினைத்திறனாக பயன்படுத்துவதில் அதிபரின் வகிபாகங்களை, முகாமைத்துவ தொழிற்பாட்டு கட்டங்களை அடிப்படையாக் கொண்டு விரிவாக ஆராய்கின்றது.
நன்றியுரை
கிழக்குப் பல்கலைக்கழகத்தின், கலை கலாசார பீட இரண்டாம் வருட மாணவர்களான எங்களுக்கு களப்பணி ஆய்வினை திறன்படச் செய்வதற்கு பல வழிகளிலும் ஆதரவு நல்கி ஆலோசனை வழங்கி உதவி செய்தவர்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம். இவ்வாய்வினை மேற்கொள்வதற்கு அனுமதியளித்த பாடவிரிவுரையாளர் அவர்களுக்கும், மேலும் சிரமம் பாராது நேர்காணலுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கிய பிரதி அதிபர் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
- நன்றி
பாடசாலை வளங்கள்
பொதுவாக பாடசாலை வளங்களை 5 வகையாகப் பிரிக்கலாம்.
• பௌதீக வளம்
• மனித வளம்
• நேரவளம்
• நிதி வளம்
• தகவல் வளம்
பௌதீக வளங்கள்
பௌதீக வளங்கள் எனும் போது பாடசாலைக் கட்டடங்கள், மைதானம், வகுப்பறை தளபாடங்கள், விஞ்ஞானஆய்வுகூடம், கணினிக்கூடம், ஒலி,ஒளி அறைகள், நூலகம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்
மனித வளங்கள்
மனித வளங்கள் எனும்போது பாடசாலை அதிபர், பிரதி அதிபர், உதவி அதிபர்கள், பகுதித்தலைவர்கள், பாட இணைப்பாளர்கள், வகுப்பாசிரியர்கள், முகாமைத்துவக்குழு, ஒழுக்காற்றுக்குழு, மாணவத்தலைவர்கள் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
நேர வளம்
நேர வளம் எனும் போது பாடவேளைகளைக் குறிப்பிடலாம்.
நிதி வளம்
அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிதி, சமூக அமைப்புக்களால் வழங்கப்படும் நிதி, பழைய மாணவர் சங்கம், பெற்றோர்கள், மற்றும் சமூக நலன் விரும்பிகளால் வழங்கப்படும் நிதி போன்றவற்றை நிதி வளத்திற்கு உதாரணமாக குறிப்பிடலாம்.
தகவல் வளம்
பாடசாலையில் காணப்படும் தகவல் வளங்களாக ஆசிரியர்கள், நூலகங்களில் காணப்படும் பத்திரிகைகள், புத்தகங்கள், கையேடுகள், இணையவசதிகள் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
அதிபர் இவ்வளங்களை முகாமை செய்யும் விதம்
பொதுவாக பௌதீக வளங்களை அதிபர் முகாமை செய்வதில் சமத்துவத் தன்மையைப் பேணியமை எங்களால் அவதானிக்கப்பட்டது. உதாரணமாக வகுப்புக்களுக்கிடையில் மாணவர்களின் தொகையைப் பங்கீடு செய்யும்போது அதிகமாகவோ அல்லது குறைவாகவோ அல்லாமல் சம எண்ணிக்கையில் பங்கிடப்பட்டதை அவதானிக்க முடிந்தது. இச்செயற்பாடானது வகுப்பறையில் மாணவர்களின் கற்றலுக்கு ஏதுவான சூழலை உருவாக்கியிருந்ததை அவதானிக்க முடிந்தது.
இது போன்றே நூலகத்தைப் பொறுத்த வரையில் நூலகமானது பரப்பளவில் சிறியதாக காணப்பட்டாலும், அதனை நூலகமாக ஒழுங்குபடுத்துவதில் வெற்றி கண்டுள்ளார் என்றே கூற வேண்டும். எவ்வாறெனில், எளிமையான முறையிலும், சிக்கனமாகவும், நூலகத்தின் இடப்பரப்பிற்கு ஏற்ற வகையில் ஒழுங்குபடுத்தியிருப்பது சிறப்பான ஒன்றாகக் காணப்பட்டது. அவ்வாறே மாணவர்கள் சௌகரியமாக தங்களுக்குத் தேவையான தகவல்களைத் திரட்டுவதற்கும், பாட இடைவேளை நேரங்களில் நூல்களை வாசிப்பதற்கும் ஏற்ற வகையில் நூலகத்தை வடிவமைத்திருந்தார்.
பாடசாலைக்கென்று பொதுவான மைதானமொன்று காணப்படாத போதிலும், பாடசாலை வளாகத்தின் ஒரு பகுதியை மைதானமாகப் பயன்படுத்துவது அதிபருடைய வினைத்திறன்மிக்க முகாமைத்துவத்தையே பறைசாற்றுகின்றது. இந்த வகையில் இந்நடவடிக்கையானது, கற்றலுக்கு மேலதிகமாக இணைப்பாடவிதான செயற்பாடுகளைச் சிறப்பாக மேற்கொண்டு மாணவர்களின் திறமைகளை வெளிக்காட்ட வழிவகுக்கின்றது.
பாடசாலை வளாகமானது குறுகிய அளவு பரப்பைக் கொண்ட போதும், அங்கு பச்சை வீட்டுப் பயிரச்செய்கை, திண்மக்கழிவு வெளியேற்றல் முகாமைத்துவம், மாணவர் சேமிப்பு மையம் சிறப்பன முறையில் முகாமை செய்து அமைக்கப்பட்டுள்ளது.
உயர்தர விஞ்ஞானப்பிரிவு, மற்றும் தொழிநுட்பப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதற்கேற்ற வகையில், விஞ்ஞான ஆய்வு கூடம், தொழிநுட்ப ஆய்வு கூடம், என்பன புதிதாக கொண்டுவரப்பட்டன. இதனால், இதுவரை காலமும் நிலவி வந்த ஆய்வுகூடப்பிரச்சினை நிவர்த்தி செய்யப்பட்டு மாணவர்களுக்கு சிறந்த முறையில் வழிகாட்டுவதற்காக ஆசிரியர்களை நெறிப்படுத்துவதில் அதிபரின் வினைத்திறன் சிறப்பான முறையில் அமைந்திருந்தது.
மனித வளம் என்ற வகையில் இப்பாடசாலையில் அவ்வளமானது சிறப்பான முறையில் முகாமை செய்யப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருந்தது. அந்த வகையில், 1AB பாடசாலையாக இப்பாடசாலை காணப்பட்ட போதிலும், மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர் வளம் இன்றி காணப்பட்டமையை அவதானிக்க முடிந்தது. இவ்விடயம் கவலைக்கிடமாக இருந்த போதிலும் இதனை முகாமை செய்வதில் அதிபரின் வினைத்திறன் சிறப்பாக காணப்பட்டது. அதாவது, பாடவேளைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு பதிலீட்டு முறையில் ஆசிரியர்களை நியமித்துளளமையை இனங்காணக்கூடியதாக. உள்ளது
நேரவளத்தினை முகாமை செய்யும் பொருட்டு நேரசூசி தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நேரசூசியானது, ஆசிரியர்களுக்கு சிரமம் இல்லாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பாடவேளைகளானது, பாடத்திட்டங்களை தவணைப் பரீட்சைகளுக்கு முதல் முடிக்கக் கூடிய வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பாடசாலைக்கு கிடைக்கும் நிதி வளமானது எந்தவித மோசடிக்கும், ஊழலுக்கும் உட்படாது முழுவதும் பயன்படுத்தக்கூடிய வகையில் நிதிக்குப் பொறுப்பாக ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு கிடைக்கப் பெறுகின்ற நிதிவளங்கள் பாடசாலையின் பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுகின்றது. உதாரணமாக- விளையாட்டுப்போட்டி, கலைநிகழ்ச்சிகள், பரிசளிப்பு விழாக்கள் போன்ற நிகழ்வுகளுக்கு திட்டமிடப்பட்ட வகையில் நிதி பயன்படுத்தப்படுகின்றது
வளப்பற்றாக்குறையால் எதிர்நோக்கப்படும் சவால்கள்
1AB பாடசாலையாக எங்கள் பாடசாலை காணப்படும் பட்சத்திலும், பல்வேறு சவால்களை தங்களது பாடசாலை எதிர்கொள்வதாக அதிபர் எங்களிடம் குறிப்பிட்டார்.
அந்த வகையில்,
1. இடப்பற்றாக்குறை
இப்பாடசாலையில் போதியளவு காணியின்மையால் விஞ்ஞானத்துறை, கலைத்துறை மற்றும் வர்த்தகத்துறை என்பவற்றுக்கு எனத் தனித்தனியான கட்டடங்களை அமைக்க முடியாத நிலை காணப்படுகின்றது.
நடனம், மற்றும் சங்கீதம் என்பவற்றுக்குத் தனித்தனி அறைகள் காணப்படாமை
இப்பாடசாலையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாகனங்களை தரித்து வைக்க இடமில்லை என்பதால் பாடசாலையின்; வெளிப்புறத்தில் பாதையோரங்களில் மாணவர்கள் தரித்து வைக்கின்றனர். இதனால் பல அசௌகரியங்கள் ஏற்படுகின்றன. அதாவது மாணவர்களின் துவிச்சக்கரவண்டி மற்றும் வாகனப் பாகங்கள் திருட்டுப்போதல், அவற்றுக்கு சேதம் விளைவிக்கப்படல், வீதியில் செல்லும் பயணிகள் செல்வதற்கு சிரமப்படல், போன்றன ஏற்படுகின்றன.
2. தளபாடப் பற்றாக்குறை
மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமான கதிரை, மேசைகள் காணப்படாததன் காரணமாக பல சிரமங்களை மாணவர்கள் எதிர்கொள்கின்றனர். அந்த வகையில் அப்பாடசாலையில் ஆசிரியர்களும், மாணவர்களும் கற்றல் செயற்பாட்டில் திருப்தி கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது.
3. ஆசிரியர் இன்மை
மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கணிதம், விஞ்ஞானம் ஆகி;யபாடங்களுக்கு உரிய ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ளனர். குறிப்பாக உயர்தர விஞ்ஞான மற்றும் கணித பிரிவுக்கு போதியளவு ஆசிரியர்கள் இல்லாமையால் வெளியிலிருந்து ஆசிரியர்களை அல்லது பழைய பல்கலைக்கழகம் சென்ற மாணவர்களை நாட வேண்டிய நிலைமை காணப்படுகின்றது.
4. நிதி திட்டமிடல் உதவியாளர் இன்மை
அதாவது இப்பாடசாலையில் நிதி தொடர்பான கணக்கு வழக்குகளை மேற்கொள்வதற்கு பொறுப்பாக ஒருவர் இன்மையினால் பல அசௌகரியங்களை எதிர்நோக்கக்கூடியதாக காணப்படுகின்றது.
இச்சவால்களை எதிர்கொள்ள அதிபரினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள்
கட்டட பற்றாக்குறை நிலவிய போதும் உயர்தர கணிதம் மற்றும் விஞ்ஞானத்துறையில் பாடங்களானது, பிரதான மண்டபத்தில் பகுதிபகுதியாக பிரிக்கப்பட்டு நடாத்தப்படுகிறது.
உடைந்த தளபாடங்கள் மற்றும் சேதப்படுத்தப்பட்ட தளபாடங்கள் என்பவற்றை மீள்திருத்தம் செய்வதன் மூலமாக தளபாடப் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படுகின்றது.
ஆசிரியப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் குறிப்பிட்ட பாடத்தைக் கற்பிக்கும் ஆசிரியர்களை அவர்களால் முடிந்த வேறு பாடங்களையும் கற்பிக்குமாறு ஒழுங்கமைப்புக்கள் செய்யப்பட்டிருந்தன. மேலும் பழைய பாடசாலை மாணவர்கள், ஓய்வு ஆசிரியர்களைக் கொண்டும் சில பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.
முகாமைத்துவ செயற்பாடுகளுக்கென அதிபர், பாடசாலை ஆசிரியர்களைக் கொண்டு இப்பாடசாலை முகாமைத்துவத்தை மேற்கொண்டு வருகின்றார்.
நூலகப் பொறுப்பாளர் ஒருவர் இல்லாத போதும் அதற்குப் பொறுப்பாக ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட்டிருந்தார்.
பொதுவாக பாடசாலை எதிர்கொள்ளும் சவால்களை நிவர்த்தி செய்யும் வகையில் பல குழுக்கள், அமைப்புக்கள், மாணவர் மற்றும் ஆசிரியர்களுக்கு இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதாவது,
1) சாரணர் இயக்கம்
2) திண்மக்கழிவு முகாமைத்துவக்குழு
3) பசுமைப்படையணி
4) அனர்த்த முகாமைத்துவக்குழு
5) பாடசாலை ஒழுக்காற்று அமைப்பு
மேற்கூறிய விதத்தில் சவால்களை எதிர்கொள்ள மேற்கூறிய நடவடிக்கைகளினூடாக இருக்கின்ற வளங்களை வினைத்திறனாகப் பயன்படுத்தி முகாமை செய்வதன் மூலம் அச்சவால்களை வெற்றி கொள்வதாக அதிபர் தெரிவித்தார்.
முடிவுரை
வளங்களை வினைத்திறனாகப் பயன்படுத்துவதில் முகாமைத்துவத் தொழிற்பாட்டுக் கட்டங்களை அடிப்படையாக கொண்டு அதிபரின் வகிபாகத்தை பற்றிய ஆய்வினை 1AB பாடசாலையான மட்/ககு/வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் நாங்கள் மேற்கொண்டோம். இதன்போது அப்பாடசைலை வளங்களை வினைத்திறனான வகையில் முகாமை செய்வதாக பாடசாலை அதிபர் குறிப்பிட்டார். மேலும் அதனை எங்களால் காணக்கூடியதாகவும் இருந்ததென்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வாயிய்வினூடாக இப்பாடசாலையில் உள்ள வளங்கள், வளங்களின் வகைகள், அப்பாடசாலை அதிபர் வளங்களில் பற்றாக்குறையால் எதிர்கொள்ளும் சவால்கள், அதனை நிவர்த்திக்க அதிபர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், போன்றவற்றை அறியக் கூடியதாகவிருந்தது.
மேலும் பாடத்திட்டங்களை உரிய காலத்தில் முடிப்பதற்காக அதிபரின் பணிப்புரைக்கிணங்க மாலை நேரத்தில் க.பொத.உயர்தர மற்றும் க.பொத.சாதாரண தர மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புக்கள் ஏற்படுத்துப்பட்டிருந்தன. இச்செயற்பாடுகள், ஒழுங்கமைப்புக்களின் ஊடாக அண்மைக்காலங்களில் பெறுபேறு அடைவுமட்டம் சிறப்பாக காணப்பட்டது.
எனவே இவ்வாய்வினூடாக எங்கள் குழுவானது பல்வேறு வகையான அனுபவங்களையும், முகாமைத்துவத்தில் அதிபரின் வகிபங்கினையும் தெளிவாக விளங்கும் வகையில் இக்களப்பயணமானது சிறப்பாக அமைந்தது.
Comments
Post a Comment