பாடசாலையில் வினைத்திறனான கலைத்திட்ட அபிவிருத்தி

கற்றலுக்கு உரித்தானவற்றுக்கான ஒரு திட்டமே கலைத்திட்டமாகும். பாலர் பாடசாலை முதல் பல்கலைக்கழகம் வரை அதாவது முறைசார்ந்த கல்வியிலும் முறைசாராத கல்வியிலும் உள்ள கற்றல் கற்பித்தல் செயன்முறை தொடர்பாக காணப்படும் முறையான திட்டமே கலைத்திட்டம் எனலாம். இது ஒழுங்கமைந்த கல்வி தொடங்கிய காலத்திலிருந்தே மனிதனுடன் இணைந்தவாறு தோற்றம் பெற்று விட்டது. பாடசாலையின் வடிவங்கள் ஆரம்ப காலத்திலிருந்து மாற்றமடைந்து வருகிறது. அதற்கு ஏற்ற வகையில் கலைத்திட்டமும் மாற்றமடைகிறது. 


கலைத்திட்டத்துக்கு ஆங்கிலத்தில் Curriculum எனப்படுகிறது. Curriculum என்ற ஆங்கிலப் பதத்துக்கு ஈடாக பல தமிழ் பதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில், “கல்வித்திட்டம், கல்வி ஏற்பாடு, பாடஏற்பாடு, பாடவிதானம், கலைத்திட்டம்” போன்றவை குறிப்பிடத்தக்கதாகும். எமது நாட்டில் கலைத்திட்டம், பாடவிதானம் எனும் சொற்களே பயன்படுத்தப்படுகின்றன. Curriculum என்ற ஆங்கிலப்பதம் ; Currere எனும் லத்தீன் சொல்லில் இருந்து மருவியது. லத்தீன் மொழியில் Currere  என்பதற்கு, “ஓடுதல் அல்லது ஓடிக்கொண்டிருக்கும் நடவடிக்கை(Action of running), நடவடிக்கை(Course of Action),ஒட்டப்பந்தயம்(race), தேர் (Chariot) ” எனப்பல அர்த்தங்கள் வழங்கப்படுகிறது. இதனால் தான் மாணவர்கள் பல தடைகளைத்தாண்டி சித்தியடைய வேண்டியுள்ளது எனMarsh, C.J (2009) “Key concepts for Understanding Curriculum”என்ற தனது நூலில் குறிப்பிட்டுள்ளமை நோக்கத்தக்கதாகும்.

.

கலைத்திட்டம் என்பதற்கு பல்வேறு அறிஞர்களும் பல்வேறு வரைவிலக்கணங்களை வழங்கியுள்ளனர். அந்தவகையில்,

  •   Tanner and Tanner ,1975 

“பாடசாலை ஒன்றின் வழிகாட்டலின் அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்ட அறிவு மற்றும் அனுபவங்களாக வடிவமைக்கப்பட்ட திட்டமிட்ட மற்றும் வழிகாட்டப்பட்ட கற்றல் அனுபவங்களும் அடைய எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளுமே கலைத்திட்டம் எனப்படுகிறது”. 

  •  Eraut et al. 1975

“பாட அலகுகள் திட்டமிடுகையில், கற்றல் இடம்பெறுகையில் உள்;ள பொதுவான மாதிரிசட்டகமொன்றை தீர்மானிக்கின்ற, எவை கற்பிக்கப்படல் வேண்டும், எவ்வாறு அவை கற்பிக்கப்படல் வேண்டும் என்பது பற்றிய பரந்து பட்ட தீர்மானங்களே கலைத்திட்டமாகும்.”

  • போசவ் 1961

“கலைத்திட்டம் எனின் மாணவர்களுக்கான அறிவை பெற்றுக் கொள்வதற்காக சமூகத்தின் ஒரு சிலரால் தொகுத்தளிக்கப்பட்ட கல்வி அனுபவங்களாகும்.”

  • நிஸ்வி எவன்ஸ்

“தனது ஆற்றல்களை உச்ச அளவில் வெளிப்படுத்தி திட்டவட்டமான கல்வித்தேர்ச்சிகளை அடைவதற்காக மாணவர்களுக்கு வழிகாட்டுகின்ற பாடசாலையால் திட்டமிட்ட கற்றல் அனுபவங்களாகும்.”

மேற்கூறியவாறு கலைத்திட்டம் என்பதற்கு பல வரைவிலக்கணங்கள் பல்வேறு அறிஞர்களால் வழங்கப்படுகின்றன.  இதனால் கலைத்திட்டம் என்பதற்கு எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரைவிலக்கணத்தை முன்வைப்பது முடியாதுள்ளது. குறிப்பிட்ட காலம் அக்காலத்தில் நிலவிய தத்துவ உளவியல் பின்னணிகள் இவ்வாறு பல வரைவில்க்கணங்கள் உருவாக காரணமாகியுள்ளன எனலாம். பரந்துபட்ட அடிப்படையில், கல்வி பற்றிய எடுகோள்கள். தத்துவங்கள், கோட்பாடுகள் மற்றும் நம்பிக்கைகள் போன்ற இன்னோரன்னவற்றை உள்ளடக்கிய வகையில் கலைத்திட்டத்தை நோக்குவது அவசியமாகும். 


டையிலர் மற்றும் ஸ்டேன்ஹவுஸ் என்பவர்களது கலைத்திட்டம் பற்றிய வரைவிலக்கணம் குறிப்பிடத்தக்கதாகும். அவற்றை கீழே நோக்கலாம்.


  • டையிலர் கலைத்திட்டத்தை கல்வியின் ஒரு தொழிற்பாட்டு சாதனமாக நோக்குகின்றார். கலைத்திட்டத்தை வடிவமைக்கும் போது நான்கு பிரதான கூறுகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்கிறார். “அடைய வேண்டிய கல்வி நோக்கங்கள், வழங்க வேண்டிய கல்வி அனுபவங்கள், அக்கல்வி அனுபவங்களை வினைத்திறனான முறையில் ஒழுங்கமைத்தல், நோக்கங்கள் அடையப்பபெற்றனவா என்பதற்கான மதிப்பீடு” என்பனவே அந்நான்குமாகும்.


  • ஸ்டேன்ஹவுஸ் (Stenhouse,1975)  கலைத்திட்டம் பற்றி பின்வருமாறு கருத்து கொண்டுள்ளார். “கலைத்திட்;டம் - கற்பித்தல் நடைமுறை பற்றிய திட்ட விபரமாகும். பூர்த்தி செய்யப்பட வேண்டிய பாடத்திட்டமோ சாதனப் பொதியோ அல்ல. எந்தவொரு கல்வி சார் அபிப்ராயங்களையும் பரிசோதனை செய்து பார்க்கக்கூடிய கருதுகோளாக மாற்றுவதற்கான வழியொன்றாகவும் மற்றும் வெறுமனே ஏற்றுக்கொள்வதை விடவும், தீர்க்கமாக சோதிக்கக் கூடிய வழியாகவும் இது கருதப்படுகிறது.” ஸ்டேன்ஹவுஸ் கலைத்திட்டத்தை செயன்முறையாக நோக்குகிறார். இத்தகைய செயன்முறையில், ஆசிரியர்கள் கல்வி சார் எண்ணங்களை கடத்துபவர்களாகவும், அவை பற்றிய தீர்ப்புக்களை வழங்குபவர்களாகவும் வகிபங்கேற்க வேண்டியுள்ளது.


தற்காலத்தில் உள்ள தொழிநுட்ப விருத்திக்கு ஏற்ப கலைத்திட்டத்திற்கு பின்வருமாறு வரைவிலக்கணம் வழங்கப்படுகிறது.


 “மாணவர்கள் கணனிகள் மற்றும் அதன் பல்வேறு வலையமைப்புக்களில் இருந்து கட்டியெழுப்புகின்ற விடயங்கள் கலைத்திட்டமாகும்.” ஓவ்வொருவரின் வீட்டிலும், பாடசாலையிலும், காரியாலங்களிலும், கணனிகள் காணப்படுவதுடன் மாணவர்களும் கணனிகள் தமது சூழலில் உள்ள ஓர் இன்றியமையாப் பொருள் என புலக்காட்சியைக் கொண்டுள்ளனர் என்ற எடுகோளினைக் கொண்டே இத்தகைய வரைவிலக்கணம் வழங்கப்படுகிறது.

 

கலைத்திட்டமானது உள்ளீடு, செயற்பாடு, பயப்பு என்ற மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. அதனை கீழ்வரும் வரைபடம் மூலம் காட்டலாம்.



கலைத்திட்டமானது நான்கு வளர்ச்சி நிலைகளைக் கொண்டுள்ளது.


01. ஒரு பாடவிடயமாக கலைத்திட்டம்

புரதான காலங்களில் கலைத்திட்டம் பாடவிடயமாக கருத்தில் கொள்ளப்பட்டது. இன்றைய காலங்களிலும் சில சமூக கட்டமைப்புக்களில் காணலாம். தகவலானது ஒழுங்குபடுத்தப்பட்ட அறிவு என்றவகையில் ஒரு பரம்பரையில் இருந்து மற்றொரு பரம்பரைக்கு கடத்தப்படுவதே இங்கு கருத்தில் கொள்ளப்படுகிறது. இத்தகைய கலைத்திட்டத்தில் அத்தியவசியமான பாடங்கள் அல்லது நூல்களின் திரட்டுக்கள் காணப்படும். 


02. ஒரு திட்டமாக கலைத்திட்டம்

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பப்பகுதியில் கலைத்திட்டம் ஓர் திட்டமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இக்காலத்தில் ஏற்பட்ட பாரிய சமூக மாற்றங்களின் காரணமாக கலைத்திட்டமானது, பாடங்களாக அல்லாமல் நோக்கம் அல்லது இலட்சியம் உடையதாக அமைக்க வேண்டும் என்ற சிந்தனை காணப்பட்டது.


03. ஒரு அனுபவமாக கலைத்திட்டம்

இந்த சிந்தனை இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் இருந்து காணலாம். இது முகாமில் உள்ள மாணவர்களின் அனுபவங்களை முக்கியத்துவப்படுத்துகின்றனர். உதாரணமாக, பாடசாலையின் வழிகாட்டலின் கீழ் மாணவர்கள் பெறும் சகல அனுபவங்களும் பொதுவாக கலைத்திட்டமாக கருதப்படும்.


04. ஒரு பேறாக கலைத்திட்டம்

இருபதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் இருந்து இச் சிந்தனை கலைத்திட்டத்தில் தோற்றம் பெற்றது. உலகளாவிய ரீதியில் நிதி தொடர்பான அக்கறைகள் நிலவியதால், கலைத்திட்டத்தின் ஊடாக மாணவர்கள் ஒரு தயாரிப்பு பொருளாக கருதப்படுகின்றனர். இதன்படி முன்கூட்டியே பேறுகள் இனங்காணப்பட்டு அதன்படி கலைத்திட்டம் ஒழுங்கமைக்கப்படுகிறது.


சிறந்த கலைத்திட்டத்தின் பண்புகள்

  • கலைத்திட்டம் நிர்வாக ரீதியான நெகிழ்வினைக் கொண்டிருக்கும்.

  • கல்வி சார் தரத்தினை கொண்டிருத்தல்

  • சமூகத்தின் ஏனைய நிகழ்ச்சித்திட்டங்களுடன் இணைந்த வகையிலும் ஒத்துழைத்தும் காணப்படும்.

  • பாடங்களை தர்க்க ரீதியாக வழங்கக்கூடியதாக இருக்கும்.

  • சிக்கலான தகவல்களைக் கொண்டிருத்தல்.

  • கலைத்திட்டமானது நீண்ட கால முயற்சியின் விளைவாக காணப்படும்.

  • தொடரச்சியாக மாற்றமடைவதாக இருத்தல்.

  • கலைத்திட்டமானது மக்களின் தேவைகளின் அடிப்படையில் காணப்படும்.

  • கலைத்திட்டமானது ஜனநாயகமானதாக உணரப்படும்.


ஸ்மித், டூயி மற்றும் கெல்லி ஆகியோரின் கருத்துக்களின் படி கலைத்திட்டத்தை நான்கு வகையாக குறிப்பிடலாம்.


திட்டவட்டமான கலைத்திட்டம் - பாடசாலையில் அடையாளம் காணப்பட்ட இலக்கு நிறைவேற்ற கற்பிக்கப்பட இருக்கும் பாடங்கள் மற்றும் பாடசாலை  வெற்றிகரமான மாணவர்களிடம் எதிர்பார்க்கக் கூடிய, மாணவர்கள் அடைய வேண்டிய அறிவு மற்றும் திறன்கள்.


வெளிப்படையாகத் தெரியாத கலைத்திட்டம் - பாடசாலையின் கலாசாரத்திலிருந்து எழக்கூடிய பாடங்கள் மற்றும் அந்த கலாசாரத்தை அடையாளப்படுத்தும் நடத்தை, மனப்பான்மை மற்றும் எதிர்பார்ப்புக்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய திட்டமிடப்படாத கலைத்திட்டமாகும்.


மறைந்திருக்கும் கலைத்திட்டம் - திட்டமிடப்பட்டு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட பாடசாலையின் வேலை நடைபெறும் விதத்தால் மாணவர்கள் கற்றுக் கொள்பவை.


தவிர்க்கப்பட்ட கலைத்திட்டம் - கலைத்திட்டத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்ட தலைப்புக்கள் மற்றும் கண்ணோட்டங்கள்.


ஸ்மித்தின் கூற்றுப்படி, கலைத்திட்டத்தை பின்வரும் முறையில் ஒரு ஒழுங்கு வரிசையில் வைக்கலாம்.


படி 1    -    தேவைகளைக் கண்டறிதல

படி 2    -    குறிக்கோள்களை உருவாக்குதல

படி 3    -   உள்ளடக்கத்தின் தேர்வு

படி 4   -    உள்ளடக்கத்தின் அமைப்பு

படி 5    -   கற்றல் அனுபவங்களின் தேர்வு

படி 6     -    கற்றல் அனுபவங்களின் அமைப்பு

படி 7    -    எதை மதிப்பீடு செய்வது மற்றும் அதைச் செய்வதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகளைத் தீர்மானித்தல


கலைத்திட்டத்தின் இலக்குகள்


வாழ்நாள் முழுவதும் கற்றலுக்கான ஊக்கலையும் திறன்களையும் வளர்த்தல்.

நாட்டின் சமூக பொருளாதார விருத்திக்கு வினைத்திறனுடன் உதவுதல்.

அடிப்படைப் பாடங்களில் ஆற்றல்களையும் பாண்டித்தியத்தையும் வளர்த்தல்.

தனியாள் ஆளுமை மற்றும் படைப்பாக்கல் புத்தாக்கத் திறன்கள் முதலியவற்றை வளர்த்தலும் மேம்படுத்தலும்.

மரபுகளையும் பண்பாட்டுச் செல்வங்களையும் பாதுகாத்தல் மற்றும்   கையளிப்புச் செய்தல்.

மக்களாட்சிப் பண்புகளை அகல்விரி நிலையில் வளர்த்தல்.


 கலைத்திட்டத்தின்   குறிக்கோள்கள்


புலமை சார்ந்த குறிக்கோள்

நுண்திறன்களை மேம்படுத்தல், பாண்டித்தியம் பெறல், அறிவை அகலமாக்கியும் ஆழமாக்கியும் கொள்ளல், நுண்மதித் தொழிற்பாடுகளை மேற்கொள்ளல் போன்றவை இப்பிரிவினுள் உள்ளடங்கும். உதாரணமாக வகுப்பறையிலே புலமைகளை திறன்களை அதிகரிக்கும் முகமாக பாடத்திட்ட உள்ளடக்கங்களை சேர்த்தல்.


தொழில்சார் குறிக்கோள்

தாம் மேற்கொள்ளவிருக்கும் தொடர் தொழிலை இனங்காணல், அதற்குரிய உளப்பக்குவம், பழக்கவழக்கங்கள் புலக்காட்சி மற்றும் ஆற்றல்களை வளர்த்துக் கொள்ளல் பொருளாதார வாழக்கையில் முழுவிச்சில் பங்குகொள்ளல் இங்கே முக்கியத்துவம் பெறும். உதாரணமாக வகுப்பறைக் கலைத்திட்டத்திலே தொழில் சார்ந்த பாடங்களை கற்பித்தல் அப்பாடந் தொடர்பான செயற்பாட்டு முறைகளையும் மேம்படுத்தல்.


சமூகக் குறிக்கோள் 

மனித விழுமியங்களுக்கு மதிப்பளித்தல், இசைவாக்கமுள்ள ஆளிடைத் தொடர்புகள், சமூக நீதியை நிலைநாட்டதல், பண்பாடு காத்தல் முதலியவை இதில் இடம்பெறுகின்றன. உதாரணமாக அழகியல் பாடக்கலைத்திட்டத்தில் ஆடுதல், பாடுதல், நடனம்      உள்ளடக்கியிருத்தல்.


தனியாள் குறிக்கோள்கள்

உடல் நலம் உள நலம் மனவெழுச்சி நலம் முதலியவற்றின் மேம்பாடுகள் ஆக்க மலர்ச்சி தன்னிலை விழிப்புணர்வு தன்னிலை முன்னேற்றம் முதலியவை இங்கு சிறப்புப்பெறுகின்றன. உதாரணமாக உடல் உள சமூக விருத்திகளை மேற்கொள்ளும் வகையில் சுகாதார உடற்கல்வி பாடத்திட்டம் காணப்படல்.

கலைத்திட்டம் மற்றொரு வகையில், “மையக்கலைத்திட்டம், இணைந்த கலைத்திட்டம், மறைக்கலைத்திட்டம்” என மூன்றாகவும் பிரித்து நோக்கப்படுகிறது. 


மையக்கலைத்திட்டம் - கல்வி அமைச்சினால் வழங்கப்படும் பிரதான பாடங்கள் தொடர்பான பாடத்திட்டங்கள் பாட நூல்கள், ஆசிரிய கை நூல்கள் என்பவற்றைக் குறிக்கும். சமூகக் கல்வி மற்றும் விஞ்ஞானம் ஆகிய பாடப்பரப்பைக் கொண்டிருக்கும்.


இணைந்த கலைத்திட்டம் - சாரணியம், விளையாட்டு, இலக்கிய மன்றம் போன்றவற்றைக் குறிக்கும். இச் செயற்பாடுகள் மையக்கலைத்திட்டச் செயற்பாடுகளை அடைய உதவியாக இருக்கும். 


மறைக்கலைத்திட்டம் - மாணவர் தமது முயற்சி இல்லாமலே பாடசாலை சூழலில் பல்வேறு விடயங்களை கற்றுத் தம் நடத்தைகளை மாற்றிக் கொள்கிறார்கள். ஆசிரியர் மாணவர் பெற்றோர் தொடர்பு மூலமும் பாடசாலை சூழல் பாரம்பரியம் என்பவற்றிலிருந்து மாணவர் பெற்றுக் கொள்ளும் அறிவும் அதனால்  ஏற்படும் நடத்தை மாற்றமும் மறைக்கலைத்திட்டத்தை குறிக்கும். 


இவ்வாறு பல்வேறு வகைகளில் வகைப்படுத்தப்படும் கலைத்திட்டத்தில் “கலைத்திட்ட அபிவிருத்தி” என்ற விடயம் மிக முக்கியமானதாகும். கலைத்திட்ட அபிவிருத்தி என்பது கற்றல் இலக்குகள், தெரிவு செய்யப்படும் பாட உள்ளடக்கம், கற்றற்கவிநிலை, வினைத்திறன் மிக்க ஆசிரியத்துவம், மாணவர்தம் ஆளுமையை வளர்க்கக்கூடிய சூழல், சமூகம் தழுவிய பாடசாலைச் செயற்பாடு, ஆகிய அனைத்துத் துறைகளிலும் ஒன்றிணைந்த அளவு வளர்ச்சியையும், பண்பு வளர்ச்சியையும் உள்ளடக்கி நிற்கின்றது. தற்போது கலைத்திட்ட அபிவிருத்தியில் நவீன தொழிநுட்பம் சார்ந்த விடயங்கள் அதிகமாக உள்ளீர்க்கப்பட்ட வண்ணம் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

வெவ்வேறு நாடுகளில் அதனுடைய தேசிய கொள்கைகளுக்கு ஏற்ப கலைத்திட்ட அபிவிருத்தி காலங்காலமாக இடம்பெற்று வருகிறது. அந்தவகையில், இலங்கையில் கல்விக்கான மத்திய அதிகாரமே கலைத்திட்டத்தை எப்போதும் பரிந்துரைத்துள்ளது. தற்போதைய பாடசாலை முறை முதலில் அறிமுகமான பிரித்தானியர் ஆட்சிக்காலத்திலேயே இந் நடைமுறை தொடங்கியது. கல்வித் திணைக்களம், பாடசாலைகளிற் கற்பித்தற்குரிய கலைத்திட்டத்தைப் பரிந்துரைத்து பாடசாலைகளிட்குச் சுற்றுநிருபமாக வழங்கியது. சுதந்திரத்தின் பின் அரசாங்கம் நிறுவிய கலைத்திட்ட விருத்தி மையம் பின்னர் தேசிய கல்வி நிறுவனமாக விருத்தி பெற்றது. எல்லா வகையான கல்விப்பணியாளர்களின் தொழில் முறை விருத்திக்கும் கல்வி சாரந்த ஆய்வுகளை நடத்துவதற்கும் மேலாக கலைத்திட்ட விருத்திப்பணியும் இந் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் இதனுடன் இணைந்தவாறு கல்வி வெளியீட்டுத் திணைக்களம் (DEP), கல்வித் திணைக்களம் (DOE) என்பனவும் கலைத்திட்டத்தை விருத்தி செய்கின்றன. 


ஒரு நாட்டின் கல்வி முறைமை அதன் தேசிய கலைத்திட்டத்தினால் வழி நடாத்தப்படுகிறது. அது எல்லாப் பாடசாலைகளுக்குமான விழுமியங்களையும் குறிக்கோள்களையும் வரையறை செய்வதன் மூலம் பாடசாலைப் பணிக்குரிய கட்டமைப்பை ஒழுங்கமைக்கிறது. இதன் விளைவாக பாடசாலை முறைமையை விட்டுச் செல்லும் மாணவர்கள் சிறந்த பிரஜைகள் என்ற வகையில் வாழ்க்கையை வெற்றிகரமாக நடாத்திச் செல்ல முடிகிறது. இலங்கையின் கல்வி முறைமையானது 13 வருட பாடசாலைக் கல்வியை, “ஆரம்ப வட்டம், கனிஷ்ட இடைநிலை வட்டம், சிரேஷ்ட இடைநிலை வட்டம், கல்லூரி நிலை வட்டம்” எனும் நான்கு வட்டங்களில் வழங்குகிறது. எட்டு வருடங்களுக்கு ஒரு முறை கலைத்திட்டம் இலங்கையில் மாற்;றப்படுகிறது. குறிப்பாக பாடத்திட்டத்தில் மாற்றங்கள் இடம்பெறுவதைக் குறிப்பிடலாம்.


இவ்வாறு மேற்கொள்ளப்படும் கலைத்திட்ட அபிவிருத்தியில், 2007 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இடைநிலைப் பாடசாலைக் கலைத்திட்டம் சீரமைப்பு செய்யபப்பபட்டமை குறிப்பிடத்தக்கதாகும். கோளமயமாக்கத்தின் விளைவாக தோற்றம் பெற்ற நவீன தகவல் யுகத்தை வெற்றி கொள்ளச் செய்யும் வகையில் மாணவர்களைப் பாடசாலைகளில் ஆயத்தப்படுத்தித் தேசத்துக்கு வழங்கும் தூய நோக்கிலேயே இக் கலைத்திட்டச் சீரமைப்புச் செய்யப்பட்டது.  இது தேர்ச்சி மையக்கலைத்திட்டம் என்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை அறிமுகப்படுத்தும் போது ஏற்கனவே இருந்த பல பாடங்கள் நீக்கப்பட்டு  புதிய பாடங்கள் சேர்க்கப்பட்டன. அத்துடன் அனைத்து பாடப்பரப்புக்களும் இற்றைப்படுத்தப்பட்டன. தேர்ச்சி, தேர்ச்சி மட்டம், செயற்பாடு, செயற்பாட்டுத்திட்டம் போன்ற பல புதிய பதங்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. 


2007 ற்குப் பிறகு 2015 இல் கலைத்திட்ட சீராக்கம் இடம்பெற்றது. இச்சீர்திருத்தத்தில் பெரிய மாற்றங்கள் இடம்பெறவில்லை. கலைத்திட்ட வடிவமைப்பாளர்கள் பழைய கலைத்திட்ட உள்ளடக்கத்தில் சுமார் 30 வீதமான பகுதிகளையே மாற்றுவதற்கு பரிந்துரைத்தனர். அதன் படி 30 வீத மாற்றத்தடன் புதிய கலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இச் சீர்திருத்தத்தில் இடம்பெற்ற முக்கியமான மாற்றங்களை கீழே நோக்கலாம்.

  • இடைநிலை வகுப்புக்களுக்கான கலைத்திட்ட அமுலாக்கம் பின்வரும் ஒழுங்கில் இடம்பெற்றது.

2015 - தரம் 10 மற்றறும் தரம் 6

2016 - தரம் 11 மற்றும் தரம் 7

2017 – தரம் 8

2018 – தரம் 9

  • ஆரம்ப வகுப்புக்களுக்கான கலைத்திட்டம் ஒரு வருடம் பிற்போடப்பட்டு பின்வரும் ஒழுங்கில் அமுலானது. 

2016 – தரம் 1

2017 – தரம் 2

2018 – தரம் 3

2019 – தரம் 4

2020 – தரம் 5


உயர்தரத்திற்கான பாடத்திட்ட சீராக்கம் பின்வருமாறு அமைந்திருந்தது.

2009 தரம் 12 க்கும் 2010 இல் தரம் 13 க்கும் புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன அதற்கேற்ப 2017 இல் தரம் 12 க்கும் 2018 இல்தரம் 13 க்குமான புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.


கலைத்திட்ட சீராக்கத்தின் இடையே 13 வருட உறுதிப்படுத்தப்பட்ட கல்வி தொடர்பான பரீட்சார்த்த அமுல்படுத்தல் இடம்பெற்றறது. 23 பாடங்கள் உயர்தரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. NVQ முறையுடன் தெடர்புபட்ட வகையில் அறிமுகப்படுத்தப்பட்டன.


கடந்த 2020 இல் இக்கலைத்திட்ட சீராக்கம் முடிவடைகிறது. இதன்காரணமாக புதிய கலைத்திட்ட சீராக்கத்தை 2023 இல் அறிமுகப்படுத்த கல்வித்துறை சார் நிறுவனங்கள் உழைத்துகொண்டிருக்கிறது. 2ம் நிலைக கல்விக்காக செலவிடும் காலத்தை ஒரு வருடமாக குறைத்தல், சாதாரண தரப் பொதுப் பரீட்சைக்கான பாடங்களைக் குறைத்தல் மற்றும் தரம் 10 இல் நடைபெறும்  சாதாரண தரப் பரீட்சை தடைதாண்டல் பரீட்சையாக அல்லாமல் உயர் தரத்தில் துறை ஒன்றை தெரிவு செய்வதற்கான பரீட்சையாக கருதுதல் போன்ற இன்னும் பல விடயங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பித்தக்கதாகும். 


மேற்குறிப்பிட்டவாறு இலங்கையில் கலைத்திட்டம் பல தடவைகளில் மாற்றியமைக்கப்பட்ட போதும் அக்கலைத்திட்டங்களில், அனுபவங்களை விட பாடவிடயங்களுக்கே அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும் பாட மையக்கலைத்திட்டத்தை விட அனுபவமையக் கலைத்திட்டம் முக்கியத்துவமிக்கதாகும். 


உலக நாடுகளின் கல்வி மேம்பாடானது அந்தந்த நாடுகளின் கலைத்திட்ட அமுலாக்கத்திலேயே தங்கியுள்ளது. கலைத்திட்ட அமுலாக்கத்தை நடைமுறைப்படுத்துபவர்களின் அறிவு, செயற்திறன், வகைகூறும் மனப்பாங்கு, குழுவாகச் செயற்படுதலில் திருப்தி காணல், சகிப்புத்தன்மை தன்னெடுப்பூக்கம், அனுபவங்களை ஒழுங்கமைத்தல், போன்ற ஆளுமைப்பண்புகளிலும் புறக்காரணிகளான பாடசாலையின் பௌதிக வளங்கள், அரசியல் சமூக பொருளாதார நிலைமைகள், மெய்யியல் சமய, தொழிநுட்ப, விஞ்ஞானப் பண்புகள் போன்றவையே கலைத்திட்ட அமுலாக்கத்தில் செல்வாக்குச் செலுத்துகின்றன. 


பாடசாலையில் கலைத்திட்டத்தை அமுலாக்கும் முதல் நிலை முகாமையாளராக அதிபர் காணப்படுகிறார். இவர் வினைத்திறனுடன் செயற்பட்டு விளைதிறனை ஏற்படுத்துபவராகவும் சிறந்த கல்வியறிவும் தேர்ச்சியும் மிக்கவராக திகழவேண்டும் ஏனெனில் பாடசாலையில் கலைத்திட்டத்தின் வெற்றி அதிபரின் ஆளமைப்பண்புகளிலேயே தங்கியுள்ளது. எனவே அதிபர்கள் பாடசாலைகளுக்கு நியமிக்கும் போது கல்வித்தகுதி, அனுபவம், ஆளுமைப்பண்புகள் என்பவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதிபரினை அடுத்து கலைத்திட்ட அமுலாக்கலில் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது. ஒரு பாடசாலையின் இலக்கினை அடையும் வகையில் கலைத்திட்டத்தின் இலக்கு பாடவி;டயத்தின் ஊடாக ஆசிரியரினால் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். ஆசிரியர்கள் முதலில் வகுப்பறையிலே கலைத்திட்டத்தை ஒழுங்கான முறையில் செயற்படுத்த வேண்டும். அவ்வாறு செயற்படுத்துகின்ற வேளையில் நாட்டின் தேசிய இலக்குகள் அடையப்படுவதைக் காணலாம். 


கலைத்திட்ட அமுலாக்கலில் ஆசிரியரின் பொறுப்புக்கள்


  • பாடவிதான அபிவிருத்தி நிலையங்களினாலும் வலய பிரதேச கல்வி திணைக்களங்களினாலும் வழங்கப்படும் ஆலோசனையின் படி தனது பாடத்திற்குரிய ஆசிரிய கைநூல் பாடத்திட்டம் கற்பித்தற் துணைசாதனங்கள் ஆகியவற்றையும் பொறுப்புக்களையும் சிறந்த முறையில் பரிமாறல், வழிகாட்டல் ஆலோசணைகளை சிறப்பாக கடைப்பிடித்து கலைத்திட்ட மற்றும் பாடத்திட்ட ஒழுங்கமைப்பையும் சிறப்;பா மேற்கொள்ளல். உதாரணமாக வகுப்பறை செயற்பாடுகளை தவணை அடிப்படையில் வேலைத்திட்டமாக தொகுத்தெடுத்தல். 


  • தான் கற்பிக்கும் தரங்களில் பாடங்களை கற்பித்தலுக்காக வழங்கப்பட்ட ஆலோசணை பற்றி எந்நேரமும் கவனத்தோடு இருத்தலும் அவ்வாறு புதிய ஆலோசணைக்கு ஏற்ப கற்றல் தொடர்பாக திட்டமிடலும். உதாரணமாக கற்பித்தல் கருவிகளை பயன்படுத்தி கற்பித்தல்.

  • அக் குறிப்பிட்ட பாடத்தை கற்பிக்கும் ஏனைய ஆசிரியர்களோடு  தொடர்புகளை கொண்டு கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளல். உதாரணமாக பகுதித்தலைவர் வகுப்பாசிரியர் போன்றோருடன் தொடர்பை ஏற்படுத்தி கலைத்திட்டத்தில் உள்ள விடயங்களை நேர்த்தியாகச் செய்தல்.

  • நூல் நிலையத்தையும் மேலதிகமான பாடப்புத்தகங்களையும் உபயோகத்திற்காக வழிகாட்டல்.

  • தன்னுடைய பாடம் தொடர்பாக சேவைக்கால கருத்தரங்கில் பங்குபற்றுதல். 

  • அதிபர் ஏனைய ஆசிரியர்களுடன் பாடசாலை தொடர்பாக மேற்கொள்ள்படும் விடயங்களுக்கு ஒத்துழைத்தல்.

  • வகுப்பறையில் வினா வங்கி ஒன்றை அமைப்பதன் மூலம் அதிலிருந்து மாணவர்களை பயன்பெற தூண்டுதலும் ஈடுபடுத்தலும்.

  • தனது பாடத்திற்குரிய ஒப்படைக் கோவைகளை தயாரித்து மாணவர்களுக்கு வழங்குதல்.

இலங்கையில் உள்ள கலைத்திட்டம் காலத்திற்கு மாற்றமடைந்து அறிமுகப்படுத்தப்பட்டாலும் கல்விப்பிரச்சினைகள் தொடர்நத வண்ணமே உள்ளன. இதற்கு வளப்பற்றாக்குறை, ஆளுமையற்ற ஆளணியினர், அரசியல் செல்வாக்கு, என பல விடயங்களை காரணங்களாக கூறிக்கொண்ட போதும் இதற்கு பிரதான காரணமாக விளங்குவது கலைத்திட்டப் பொருத்தப்பாடின்மையே ஆகும். இதனாலேயே நம் நாட்டுக்கல்வியானது நடைமுறைச் சவால்களுக்கு தீர்வளிக்க முடியாததாக உள்ளது. 


இலங்கையில் காணப்படும் கல்விக் கொள்ளையும் அதனால் உருவாக்கப்படும் கலைத்திட்டமும் இலட்சக்கணக்காண மாணவர்களின் வாழ்வை சிதைத்து ஒரு சிலரை மட்டுமே உருவாக்குகிறது. கல்வி கற்போரில் பல்கலைக்கழக அனுமதி பெறுவோர் அண்ணளவாக 0.82% மட்டுமே ஆகும். இதில் பொறியியலாளர் மற்றும் வைத்தியர் மிகச்சிறிய அளவினராக அதாவது 0.12% ஆகும். இன்று பல்கலைக்கழகத்திற்கு செல்லும் 4.7% வீதமானவர்களைத்தவிர ஏனையோரின் நிலை என்னவென்று சிந்திப்பின் அதற்கான விடை கேள்விக்குரியதாகிறது. ஆகவே இக் கல்விக் கொள்கையானது எதிர்கால நடைமுறை வாழ்வோடு தொடர்பில்லாத கல்வியை வழங்குவதால் அதன் பயனும் அர்த்தமற்றதாகிறது.

 

இங்குள்ள கலைத்திட்டமானது மாணவர்களின் நாளாந்த வாழ்வுடன் தொடர்புற்றதாக இல்லை. இங்கு மாணவர்களின் புத்தாக்கம், இணைப்பாடவிதானச் செயற்பாடு, போன்றவற்றில் கவனம் செலுத்துவது குறைவாகவே உள்ளது. மேலும் இது மாணவர்களின் அறிவுப் பெருக்கத்திற்கு ஊக்குவிப்பு அளிக்காமல் மனனம் செய்து  பரீட்சையில் தேர்ச்சி பெற ஊக்குவிக்கிறது. அத்தோடு புதிய விடயங்களும் ஒப்பீட்;டளவில் குறைவாகவே உள்ளன. உதாரணமாக இடைநிலைக் கல்வியில் புவியியல், வரலாறு, தமிழ், சமயம், சுகாதாரம் போன்ற பாடங்கள் அறிவு விருத்திக்கு உகந்தன அத்தோடு இவை அதிகமாக தத்துவ ரீதியாக காணப்படுவதால் மனனம் செய்யப்படுகின்றன. அவை வாழ்வுக்கு பயனளிப்பதாக செயல் வடிவில் இல்லை.


கலைத்திட்டத்தின் ஊடாக வழங்கப்படும் கல்வி முறையானது தொழில் ஒன்றை மேற்கொள்வதற்கு உகந்தவையுமள்ள. இதனை பல்கலைக்கழகத்திலும் காணலாம். இங்கு சமூக விஞ்ஞானம் மருத்துவம், பொறியியல், கலை போன்றவற்றில் அதிகம் கோட்பாட்டு ரீதியான கற்கையினைக் காணலாம். இங்கு செயற்பாட்டுக்கு ஊக்கமளிக்காததால் மாணவர்களின் புத்தாக்கம் கண்டுபிடிக்கும் ஆற்றல் என்பன மழுங்கிப் போகின்றன. இருப்பினும் தற்போது தொழில் சார் கற்கை நெறிகளும் பயிற்றுவிக்கப்படகின்றன. தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம், மனைப் பொருளியல் போன்ற தொழில் சார் கற்கைகள் சேர்க்கப்பட்டிருப்பினும் அவற்றின் செயற்படு தன்மை குறைவு என்றே கூற வேண்டும். இவை பரீட்சையை நோக்காகக் கொண்டு எழுத்து வடிவிலேயே கற்பிக்கப்படுகின்றன. மேலும் செய்முறை ரீதியில் கற்பிக்கப்படாமையும் தொழில் நிபுணர்கள் இல்லாமைக்கு காரணமாகும். 


எனவே மேற்குறிப்பிட்டவாறு இலங்கையில் உள்ள கலைத்திட்டமானது பல்வேறு விமர்சனங்களைக் கொண்டுள்ளது. அவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் 2023 இல் கொண்டுவரப்படும் கலைத்திட்டமானது அமைய வேண்டும் என்பது கல்வியியலாளர்களின் அபிப்ராயமாகும். அத்தோடு கலைத்திட்டம் நவீனமயமாக்கலுக்குட்பட்டதாகவும் காணப்பட வேண்டும். “மாறுகின்ற உலகிற்கும் சமூகத்திற்கும் பொருத்தமான வகையில் கலைத்திட்டத்தில் மாற்றங்கள் இடம்பெறுவதே கலைத்திட்ட நவீனமயமாக்கம்” என சூஜான் டூயி என்வபர் குறிப்பிடுகின்றார். நவீனமயமாக்கல் கற்றல், கற்பித்தல் செயன்முறையுடன் இணைந்து செல்ல வேண்டும். இதன் போதே எதிர்கால மாணவர்களுடைய சீரிய வாழ்க்கைக்கு கலைத்திட்டம் காலத்திற்கு பொருத்தமாக அமையும். ஆகவே புதிதாக அறிமுகப்படுத்தப்படும் கலைத்திட்டமானது புத்தகத்தின் சாயலாக அமையாமல் நடைமுறை வாழக்கைக்கு ஏற்றதாக அமைய வேண்டும். அதன்போதே அக் கலைத்திட்டம் வினைத்திறனான கலைத்திட்டமாக அமையும் எனலாம்.  


-RASIMA.BF (BA-R)
EASTERN UNIVERSITY, SRI LANKA.

Comments

Popular posts from this blog

Case Study Analysis Of MAS Holdings

'வினைத்திறனான கற்றல் கற்பித்தல் செயற்பாடானது மூவழித்தொடர்பாடல் நிகழ்ச்சியினூடாக நடைபெறுவதன் மூலம் ஆசிரியர் - மாணவர் இடைத்தாக்கம் சிறப்பாக அமையும். இக்கூற்றின் அடிப்படையில் உமது கருத்துக்களை முன்வைத்து விளக்குக.

Theory of Instinct [மக்டூகலின் இயல்பூக்கக் கொள்கை]