இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் பெண்களுக்கான சுய தொழில் வாய்ப்புத் திட்டமிடலை மேற்கொள்ளும் போது கல்வித்திட்டமிடலாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள் தொடர்பில் வியாக்கியானம் செய்க.
இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் பெண்களுக்கான சுய தொழில் வாய்ப்புத் திட்டமிடலை மேற்கொள்ளும் போது கல்வித்திட்டமிடலாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள் தொடர்பில் வியாக்கியானம் செய்க.
உலகில் உள்ள நாடுகளானது, “அபிவிருத்தி அடைந்த நாடுகள், அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள்” என்றவாறு நோக்கப்படுகிறது. இந்த வகையில், அபிவிருத்தி அடைந்த நாடுகளில் பெண்கள் சுய தொழில் வேலை வாய்ப்பானது அதிகளவில் காணப்படும் அதே வேளை அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் குறைவாகவே காணப்படுகிறது. மதவாதம், ஆணாதிக்கம் மற்றும் அடக்குமுறை போன்றவற்றால் பெண்கள் வேலை வாய்ப்பு குறைவாகவே உள்ளது. இருப்பினும் தற்காலத்தில் கல்வியறிவு அதிகரித்து வருகின்றமையால் அந் நிலைமை குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
வியாபார சந்தர்ப்ப சூழ்நிலைகளை இனங்கண்டு நிச்சயமற்ற தன்மைகளையும் இடர்களையும் எதிர்கொண்டு வளங்களை வினைத்திறனாகவும் காலம், செல்வம், திறமை போன்றவற்றை பயன்படுத்தி புதியன புனைதல் மூலம் மாற்றங்களை கொண்டு வந்து மனித தேவைகள் விருப்பங்களை திருப்தி செய்வதற்கும் தேசிய உற்பத்திக்கு பெறுமதி சேர்க்கவுமே பெண்களுக்கான சுய தொழில் வாய்ப்பு திட்டமிடல் அறிமுகப்படுத்தப்பட்டது.
இன்று முயற்சியாண்மை செயற்பாடுகளில் பெண்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சி கண்டு வருவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. பெண்கள் பல்வேறு வகையான முயற்சிகளில் ஈடுபடுவதுடன் வெற்றிகரமான முயற்சியாளர்களாகவும் செயற்படடு வருகின்றனர். மேலும் பல்வேறு நிறுவனங்களில் கணக்காளர், முகாமையாளர், பணிப்பாளர்கள் போன்ற உயர் பதவிகளில் பெண்கள் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். பெண்கள் அதிகம் தொழில் முயற்சிகளில் ஈடுபடுவதற்கு பொதுவாக பின்வரும் விடயங்கள் காரணங்களாக அமைந்துள்ளன எனலாம்.
• பெண்களின் கல்வி அறிவு வளர்ச்சி
• குடும்பங்களின் அதிகரித்த பொருளாதார தேவை.
• சமூக மனப்பாங்கு மாற்றம்.
• அரசாங்கத்தின் ஊக்குவிப்புக்களும் விழிப்புணர்வு திட்டங்களும்.
பெண்களுக்கான ஐ.நா. தாபன நிதியம் வறிய பெண்களுக்கு விஷேடமான தேவை உண்டென்றும் அவை முயற்சியாண்மை மேம்பாட்டுக கல்வி; தொடர்பாகவும் கவனிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றது.
பெண்களுக்கு சுய தொழில் வழங்கப்படுவதற்கான காரணங்கள்
• மக்களின் வாழ்க்கைத் தரத்தை பேணுதல்
போதியளவு வருமானம் இல்லாத போது மக்களின் வாழ்க்கைத் தரமானது குறைவாக காணப்படும். பெண்களும் தொழிலில் ஈடுபடும் போது வருமானம் அதிகரித்து மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வடையும் எனலாம்.
• பொருளாதார நெருக்கடிகளை தீர்த்தல்
இன்று பொருளாதாரத்திலேயே வாழ்க்கையின் அனைத்து விடயங்களும் தங்கியுள்ளது. அதாவது கல்வி, வைத்தியம், அன்றாட உணவுத் தேவை, என அன்றாட வாழ்க்கையின் அனைத்து தேவைகளும் பொருளாதாரத்திலேயே தங்கியுள்ளது. இந்த வகையில் பெண்களும் தொழிலாளர்களாக உள்ள போது குடும்பத்தின் பொருளாதார நெருக்கடியானது தீர்க்கப்படுகிறது. இவ்வாறு ஒவ்வொரு குடும்பத்தின் நெருக்கடி தீர்க்கப்படும் போது முழு நாட்டினதும் பொருளாதார நெருக்கடியானது தீர்க்கப்படுகிறது எனலாம்.
உதாரணமாக, மலையகத்தில் பெண்களே தேயிலைத் தோட்டம், இறப்பர், கோப்பிச் செய்கை போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். இவை நாட்டின் மொத்த வருமானத்தில் பெரும்பகுதியை பெற்றுத் தருகிறது. இங்கு பெண்கள் வேலைக்கு செல்லும் போது குடும்பத்தின் வருமானம் அதிகரிக்கும் அதே வேளை நாட்டின் பொருளாதாரமும் உயர்வடைகிறது.
• வறுமையை ஒழித்தல்.
வறுமையை ஒழிப்பது அரசாங்கத்துக்கே பெரிய சவாலாகவுள்ளது. இந்த வகையில், இது நாட்டின் அபிவிருத்தியை கேள்விக்குறியாக மாற்றுவதாகவும் உள்ளமையால் பெண்களும் சுய தொழிலில் ஈடுபடும் போது குடும்பத்தின் வறுமையானது இல்லாமல் செய்யப்படுகிறது. கணவனை இழந்த பெண்கள், கணவனைப் பிரிந்த பெண்கள், கணவன் கூலித் தொழில் செய்யும் பெண்கள் போன்றோர் வறுமையை எதிர் நோக்குபவர்களாகவுள்ளனர். இவர்களுக்கு சுய தொழில் வாய்ப்பானது ஏற்படுத்திக் கொடுக்கப்படும் போது ஆண்களிடம் தங்கி வாழும் நிலை இல்லாமலாக்கப்பட்டு வாழ்க்கைத் தரம் உயர்வடைகிறது.
• மக்களின் நல்லெண்ண மேம்பாடு.
• மக்களின் உழைப்பாற்றலை மேம்படுத்த முதலீடுகளை உயர்த்தல்.
• சமூக மேம்பாடு.
தற்காலத்தில் பெண்களால் மேற்கொள்ளப்படும் சுய தொழில் முயற்சிகள்
பொதுவாக சுய தொழில்களை 04 வகையாக பிரிக்கலாம்.
1. நில அடிப்படையிலான தொழில்கள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள்
2. விவசாயம் சாராத தொழில்கள்.
3. கைத்தொழில், கைவினைப் பொருட்கள் மற்றும் நெசவுத் தொழில்.
4. சேவைத் தொழில்கள்.
நில அடிப்படையிலான தொழில்கள்
• பூக்கள், காய்கறிகள், பழ வகைகள் பயிரிட்டடு அதிக வருவாய் பெறுதல், கால் நடை சார்ந்த தொழில்களான கறவை மாடுகள், நாட்டுக் கோழி வளர்ப்பு, காளான் வளர்ப்பு
• உயர் தொழிநுட்பத்துடன் விதை உற்பத்தி, மூலிகை செடி வளர்ப்பு, உலர் மலர்கள் சேகர்த்தல், பதப்படுத்தல். இயற்கை உரம் தயார்த்தல்.
விவசாயம் சார்ந்த தொழில்கள்
• உணவு பதப்படுத்தல், அரிசி, சேமியா, உடனடி இட்லி, தோசை மாவு, சிப்ஷ் தயாரித்தல், உலர்ந்த காய்கறிகள், வெங்காயம் போன்ற பல உணவுப் பொருட்களை பதப்படுத்தி விற்பனை செய்தல்.
• ஊறுகாய், பழச்சாறு, ஜாம், ஜெலி போன்ற பதப்படுத்தப்பட்ட பொருட்கள் தயாரித்தல்.
• கீரைகள், காய்கறிகள், வெங்காயம் இவற்றை சுத்தம் செய்து கட் செய்து பாக்கட்களில் அடைத்து விற்பனை செய்தல்.
விவசாயம் சாராத தொழில்கள்
• சோப்பு, சோப்புத் தூள், ஷாம்பு, பினாயில், கிளினிக் பௌடர் தயாரித்தல்.
• மெழுகுவர்த்தி, சோக் பீஸ் தயாரித்தல்.
• பற்பசை, ஹெர் ஒயில், பற்பொடி தயாரித்தல்.
• ஆயத்த ஆடைகள் தயாரித்தல்.
• நகை தொழிலில் கவரிங் நகை தயாரித்தல், தென்னை நார், வாழை நார் மூலம் நகைகள், கூடைகள், பைகள் தயாரித்தல்.
• தென்னை ஓடு, மரக்கழிவுகள் போன்றவற்றிலிருந்து அலங்காரப் பொருட்கள்
வியாபாரம் பெருகிவரும் இக்கால கட்டத்தில் சேவை தொழில்களுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக உணவு விடுதிகள் முதல் அழகு நிலையம் வரை சுய தொழல்களுக்கான வாய்ப்புகள் நிறைந்துள்ளன. இவை பொதுவாக அனைத்து இடங்களிலும் பெண்களால் மேற்கொள்ளப்படும் சுய தொழில்களாகும். குறிப்பாக இந்தியாவிலேயே இத்தகைய தொழில்கள் மேற்கொள்ளப்படுகிறது. இவற்றில் இலங்கையில் பெண்களால் மேற்கொள்ளப்படும் சுய தொழில்களாக பின்வருவனவற்றை குறிப்பிடலாம்.
1. தேனி வளர்ப்பு
2. காளான் வளர்ப்பு
3. தையல் நடவடிக்கை
4. சிகையலங்காரம்
5. தோட்டம் செய்தல்
6. மட்பாண்ட கைத்தொழில்
7. உணவு மற்றும் சமையல்
8. மின் வணிகம் மற்றும் ழடெiநெ வர்த்தகம்
9. அழகுசாதனப் பொருட்கள் தயாரித்தல்.
10. சமூக வலைத்தளங்களில் அழகு குறிப்புக்கள் மற்றும் சமயல் குறிப்புக்களை பதிவிட்டு வருமானம் ஈட்டுதல்
.
இலங்கையில் பெண்கள் சுய தொழில் வாய்ப்பு எவ்வாறு உள்ளது என்பதையும், அங்கு பெண்களுக்கான சுய தொழில் வாய்ப்புத்திட்டலின் போது கல்வித்திட்டமிடலாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள் தொடர்பாகவும் விரிவாக நோக்குவோம்.
இலங்கை அரசும் பெண்களையும் தொழிலில் ஈடுபடுத்தி நாட்டின் பொருளாதார அபிவிருத்தியை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு வகையான திட்டங்களை அமுல்படுத்திக் கொண்டே இருக்கிறது. உதாரணமாக பின்வரும் திட்டங்களை குறிப்பிடலாம்.
சமூர்த்தி திட்டங்கள்
முதலீட்டுத் தேவைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு சுவசக்தி, மிஹிஜய, யொவுன்திரிய, ஜனபுது போன்ற கடன் திட்டங்கள்.
நுகர்வோர் கடன், சுய வேலை வாய்ப்புக்கடன், விவசபய கடன, மீன் பிடி தொழிலுக்கான கடன் போன்றனவும் சமூர்த்தியால் வழங்கப்படுகிறது.
நுண்கடன் திட்டங்கள்
கமீர கடன் செயல் திட்டம், திறிய கடன் திட்டம், சுய தொழிலுக்கான நுண்கடன் வழங்கல், சுறதுற, சகன்யா, காந்தா ரன்திவி மக
காந்தா ரண் திரிய - சிறிய மற்றும் நுண் தொழிற்துறைகளைச் சேர்ந்த பெண் தொழில் முயற்சியாளர்கள் மத்தியில் வருமானத்தை ஊக்குவித்து, விருத்தி செய்து மேம்படுத்துவது. இதன் நோக்கமாகும். இது இலங்கை வங்கியினால் வழங்கப்படுகிறது.
மானியம் வழங்குதல்
தொழில் மற்றும் மேலாண்மை
பயிற்சிகள்
கண்காட்சி
இவ்வாறு பெண்கள் சுய தொழிலில் ஈடுபடுவதற்கு அரசானது பல்வேறு திட்டங்களை உருவாக்குகிறது. அதனை மேலும் வினைத்திறனானதாக மாற்றுவதற்கு பெண்களுக்கான சுய தொழில் வேலைவாய்ப்பினை திட்டமிடும் போது கல்வித்திட்டமிடலாளர்கள் பின்வரும் விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
கலைத்திட்டத்தில் பெண்கள் தொழில் வாய்ப்பினை மேற்கொள்ளும் வகையிலான பாடக் கலைத்திட்டத்தினை உருவாக்குதல்.
கா.பொ.த சாதாரண தரம் மற்றும் கா.பொ.த உயர் தரம் ஆகிய தரங்களில் மனையியல் பாடத்தின் மூலம் உணவு சமைக்கும் முறை, தையல் மற்றும் ஆக்க வேலைப்பாடுகள் கற்பிக்கப்படுகிறது. இதன் மூலம் பாடசாலைக் கல்வியை முடித்த பிறகு வருமானத்தைப் பெறும் வகையில் தாங்கள் பெற்ற கல்வியை பயன்படுத்துகின்றனர். இப் பாடத்தெரிவானது மாணவிகளால் தெரிவு செய்யப்படும் வீதம் குறைவாகும். ஏன் எனில் இதனை தெரிவு செய்வதனால் அதிகளவான பயன் இல்லை என்று அவர்கள் கருதுகின்றனர். தெரிவு செய்யும் வீதம் குறைவாகியுள்ளமையினால் இதனைக் கற்பிப்பதற்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. இதனை நிவர்த்தி செய்ய கா.பொ.த உயர் தரத்தில் இப்பாடத்தினை தெரிவு செய்த மூன்று பாடங்களிலும் சித்தி பெற்ற மாணவர்களை அதிகளவில் கல்வியியற் கல்லூரிகளுக்கு தெரிவு செய்தல் வேண்டும். மேலும் தற்காலத்தில் பெருமளவில் வளர்ந்து வரும் துறையாக சுற்றுல்லாத் துறை உள்ளது. இதில் அதிகம் பெண்கள் ஈடுபடுவதற்கு பாடசாலைக் கல்வித்திட்டத்தில் இத்துறை தொடர்பான விடயங்களை அதிகமாக புகுத்துதல் வேண்டும்.
பெண்களுக்கான சுய தொழில்வாய்ப்புத் திட்டமிலில் உள்ள பிரச்சினைகளை அகற்றும் வண்ணம் கல்வி திட்டமிடப்பட வேண்டும்.
அதாவது பெண்கள் சுய தொழிலில் ஈடுபடும் போது எதிர் நோக்கும் பிரச்சினைகளான, “ ஆண்களின் வெறுப்பு, சமூகங்களுக்குள் பெண்கள் உட்படுவதை ஆண்கள் விரும்பாமை, சமயச்சம்பிரதாயத் தடைகள், கலாச்சாரங்கள் பாரம்பரியங்களை மீறுவதற்கு பெண்கள் விரும்பாமை” என்பவற்றை தீர்க்கும் வகையில் கல்வித் திட்டமிடலினை மேற் கொள்ளல்.
தெளிவான பயிற்சி வழங்குதல்
அரச நிறுவனங்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும் தையல், ஆடை அலங்காரம் செய்தல், கைவினையாக்கப் பொருட்களை செய்தல், சிகை அலங்காரம், போன்ற சகல சுய தொழில் முயற்சிகளுக்கும் பயிற்சி வழங்குகின்றது. உதாரணமாக, பிரதேச சபையின் ஊடாக தையல் பயிற்சி ஒரு வருடம் வழங்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. மேலும் சிகை அலங்காரம், தையல் பயிற்சி, சுற்றுல்லாத் துறையில் ஈடுபடுதல், உணவு சமைத்தல், அழகுக்கலை போன்றன தனியார் நிறுவனங்களின் ஊடாக பயிற்சியளிக்கப்படுகிறது. குறிப்பிட்ட சில தொழில்கள் அரசினால் பயிற்சியளிக்கப்படுவதில்லை. இதனை கருத்தில் கொண்டு அவற்றையும் பயிற்சியளிப்பதில் இணைத்துக் கொள்ள வேண்டும்.
பணப்பெறுமதி பற்றிய அறிவு
அதாவது நாட்டிலுள்ள பணத்தின் பெறுமதி, நாணய மாற்று வீதம், பணவீக்கம், பணச்சுருக்கம், பணத்தினுடைய பெறுமதி மாற்றம் போன்ற பொருளியல் விடயங்களினை பெண்களுக்கு வழங்கும் வகையில் கல்வித்திட்டமிடலினை மேற்கொள்ள வேண்டும். பாடசாலைக் கல்வியிலோ உயர் கல்வியிலோ மக்களுக்கு பணம் பற்றிய அறிவு கொடுக்கப்படுவதில்லை. இதனால் எதிர்காலத்தில் ஒரு தொழிலினை மேற்கொள்ளும் போது குறிப்பாக பெண்கள் பணம் தொடர்பான அறிவின்றி பல சிக்கல்களை எதிர் கொள்கின்றனர். இதனைத் தவிர்க்கும் வகையில் பாடசாலைக் கல்வியிலேயே பணம் பற்றிய அறிவினை வழங்க வேண்டும்.
வரவு செலவு மற்றும் நிதிப்பகுப்பாய்வு பற்றிய அறிவு
சுய தொழிலினை மேற்கொள்ளும் போது தனது தொழிலுக்கான வருடாந்த வருமானம், மாதாந்த வருமானம், முதலீட்டுக்கான செலவு போன்ற வரவு செலவு போன்ற நிதிப்பகுப்பாய்வு பற்றிய அறிவு பெண்களுக்கு வழங்குதல் வேண்டும்.
நிறுவனக்கடன்களை பெறும் விருப்புத் தகுதியை அறிவதற்கான அறிவு மற்றும் பயிற்சி.
அதாவது, சுய தொழிலினை மேற்கொள்ளும் போது வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் கடன்களை பெறும் போது அதற்கான வழிமுறைகளை ஆரம்பம் முதல் இறுதி வரை அறிந்திருத்தல் வேண்டும். உதாரணமாக, பெறக்கூடிய உச்ச அளவு கடன் தொகை, அதற்கான வட்டி, எவ்வளவு காலத்தில் திருப்பி செலுத்த வேண்டும், செலுத்த முடியாவிடில் மேற்கொள்ள வேண்டிய மாற்று நடவடிக்கை போன்றன தொடர்பாக அறிந்திருத்தல் வேண்டும்.
எளிய தொழிநுட்ப கருவிகளை தரமாக இயக்குவதற்குரிய பயிற்சி
தற்காலத்தில் அனைத்து சுய தொழில்களுக்கும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக, மாவு அரைத்தல் இயந்திரம், கரும்பு பிழியும் கருவி, சிகை அலங்காரம் மற்றும் அழகுக்கலை ஒப்பனைகளுக்கான கருவிகள், பேப்பர் கப் தயாரிக்கும் கருவி போன்றவற்றை குறிப்பிடலாம். இவற்றை பாவிப்பது தொடர்பான அறிவினையும் பயிற்சியையும் வழங்க வேண்டும்.
உற்பத்தி அபிவருத்தி, உற்பத்தி திறன், தொழிநுட்ப அபிவிருத்தி, சந்தைப்படுத்தல் தொடர்பிலான போதுமான பயிற்சி
தான் உற்பத்தி செய்யும் பொருள் என்ன, அதை எவ்வாறு உற்பத்தி செய்வது, அதற்குரிய கேள்வி சந்தையில் எவ்வாறு உள்ளது, எவ்வளவு காலத்திற்குள் அதனை உற்பத்தி செய்ய முடியும் என்பவை தொடர்பில் தெளிவான அறிவினை பெற்றிருத்தல் வேண்டும். உற்பத்தி திறன் என்பது, இருக்கின்ற வளங்களை வினைத்திறனாகப் பயன்படுத்தி கூடிய பயனைப் பெறுவதாகும். உற்பத்தி அபிவிருத்தி என்பது, உற்பத்தியின் தரத்தினையும் அளவினையும் அதிகரிப்பதாகும். தொழிநுட்ப அபிவிருத்தி என்பது, தற்காலத்தில் உள்ள பெறுமளவிலான தொழிநுட்பங்களை பயன்படுத்துவதாகும். தனது சுய தொழிலின் இறுதியானது தான் உற்பத்தி செய்த பொருட்களை சந்தைப்படுத்துவதாகும். இதற்குரிய இலகுவான கவர்ச்சியான அம்சங்களை அறிந்திருத்தல் வேண்டும். இதன் போதே தனது சுய தொழிலானது வெற்றி அடையும் எனலாம்.
நாகரீக மோகம், தரம், பண்பாடு, தன்மை போன்றவற்றுடன் தம் உற்பத்திகளை இணைப்பதன் மூலம் எவ்வாறு உயர்ந்த விலையை பெறலாம் என்பதைக் கற்பித்தல்.
மகளிர் சுய தொழில் முயற்சிக்கான அடிப்படை விடயங்களை விளக்கும் வகையிலான செயலமர்வுகளை திட்டமிட்டு நடாத்துதல்.
சமுதாய தலைவர், வங்கி உயர் தொழில் ஆலோசகர், அனுபவம் மிக்க முயற்சியாண்மையாளர்களின் வழிகாட்டல்களை ஒழுங்குபடுத்துதல்.
பெண்கள் தமக்கு இடையிலான வியாபார முயற்சிகளில் ஈடுபட பயிற்சியளித்தல்.
இவ்வாறு மேற்கூறிய விடயங்களை கவனத்தில் கொண்டு கல்வி திட்டமிடலானது மேற்கொள்ளப்படும் போது குடும்பங்களின் வறுமை ஒழிக்கப்பட்டு நாட்டின் பொருளாதாரம் உயர்வடையும் என்பதில் ஐயமில்லை.
Comments
Post a Comment