B.F ஸ்கின்னரின் மீளவலியுறுத்தல் கொள்கை
மீளவலியுறுத்தல் செயற்பாடும் பின்னூட்டலும் வகுப்பறை கற்பித்தல் செயற்பாட்டின் வினைத்திறனை அதிகரிக்கும். இக்கூற்றினை அடிப்படையாகக் கொண்டு கனிஷ்ட இடைநிலை வகுப்புக்களில் எவ்வாறான பிரயோகத்தை மேற்கொள்வீர் என்பதை ஆராய்க.
மீளவலியுறுத்தல் பற்றிய பரிசோதனைகளை மேற்கொண்டவர்களில் மிக முக்கியமானவர் B.F ஸ்கின்னர் ஆவார். இவர் 20 மார்ச் 1904 அமெரிக்காவில் பிறந்தார். ஹவார்ட், மின்னி செட்டா மற்றும் இண்டியான போன்ற பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக பணிபுரிந்தார். அவர் தனது வாழ்நாளில் இறுதியில் கூட உளவியல் தொடர்பாக எழுதுவதிலும் சொல்வதிலும், சொற்பொழிவிலும் ஈடுபட்டார். இதனால் இவருக்கு அமெரிக்க உளவியல் சங்கம் வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கி கௌரவித்தது. மேலும் இவர் 21 நூல்களையும் 180 சிறு கட்டுரைகளையும் எழுதினார் என்பது
குறிப்பிடத்தக்கதாகும்.
இவர் அமெரிக்காவின் ஹவார்ட் பல்கலைக்கழகத்தில் மீளவலியுறுத்தல் பற்றிய பல பரிசோதனைகளை நடாத்தி அது நடத்தையில் என்ன மாற்றங்களை விளைவிக்கின்றெதென அறிந்தார். ஹல், தோண்டைக் ஆகியோரின் பரிசோதனைகளையே ஸ்கின்னரும் ஏற்பாடு செய்து கற்றல் மீளவலியுறுத்தல் பற்றிய பல உண்மைகளை கண்டறிந்தார். இம் மூவரின் கொள்கைகள் பரந்த பொருளில் கருவிசார் நிபந்தனைப்பாடு எனப்படும்.
இதில் ஸ்கின்னருடைய கொள்கை ஒரு வகையான தொழிலிசார்(operant) நிபந்தனைப்பாடு எனப்படும்
ஸக்கின்னர் உயிரிகளின் நடத்தைகளில் இருவகையினை அவதானித்தார்.
1. விஷேட தூண்டியை தொடர்ந்து ஓர் உயிரியில் ஏற்படும் நடத்தையாகும்.
உதாரணம் - உரத்த ஒலிக்கு விழித்துப் பார்த்தல், ஒளிக்கு இமைகளை மூடுதல்
2. வெளிப்படையாக புலப்படாத சில தூண்டிகள் காரணமாக ஓர் உயிரிடமிருந்து ஏற்படுத்தப்படும் நடத்தையாகும். இவ்வகை நடத்தைகள்;“தொழிலிகள்” எனப்படும். இது உயிரியில் ஏற்படுவதற்கு குறிப்பிடட் தூண்டி கிடையாது. உதாரணம் - பேசுதல், நடத்தல், வேலை செய்தல்
இதில் அதிகமான நடத்தைகள் தொழிற்பாட்டு நடத்தைகளே எனக் கூறினார். 1வது வகை பழைய நிபந்தனைப்பாட்டு கொள்கையாகும் 2வது வகை நடத்தைகளைச் சூழலில் காணப்படும் ஏதாவதொரு தூண்டியுடன் பினைத்தல் தொழில் நிபந்தனைப்படுத்தலாகும். இதன்படியே ஸ்கின்னர் தொழில் நிபந்தனைப்பாட்டு கொள்கையை அமைத்தார். உயிரியில் காணப்படும் நடத்தைகளில் பெரும்பாலானவை தொழிலி நடத்தைகளாகும். இவ்வாறு விஷேட தூண்டிகளின் கட்டுப்பாட்டின் கீழ் எவ்வாறு கொண்டு வரலாம் என்பதற்கான வழிகளை அறிவதில் ஈடுபட்டார். ஒரு துலங்கலை எவ்வகையான நிகழ்ச்சிகள் தொடர்கின்றன என்பதைப் பொறுத்தே அத்துலங்கல்கள் மறுபடியும் நிகழக்கூடும் என்பதை வலியுறுத்திய ஸ்கின்னர், இதனை மீளவலியுறுத்தல் என இனங்கண்டார். எனவே நடத்தையை வலுப்படுத்தும் தூண்டல் மீள வலியுறுத்தி எனக் கூறப்படுகிறது. ஸ்கின்னரின் கொள்கைப்படி தூண்டியின் அளவு அல்லது அதற்கு மேலாக துலங்களுக்கான விளைவுகளே முக்கியத்துவம் பெறுகின்றன. ஸ்கின்னரின் பரிசோதனை மூலம் இதனை விளங்கிக் கொள்ளலாம்.
இதற்கு ஒரு பெட்டியை தயார் செய்து அப்பெட்டியினுள் நெம்புகொளை அழுத்தும் போது அதனுடன் தொடுக்கப்பட்ட ஒரு கருவியிலிருந்து ஒரு சிறு உணவுத்துண்டு தட்டில் விழும்படி செய்தார். அதனுள் எலியை இட்ட போது அது அங்குமிங்கும் அமைதியற்று ஆராயத் தொடங்கியது இதன் போது தற்செயலாக தட்டினை அழுத்தும் போது உணவு விழுகிறது அதனை உண்ட பின்பு மீண்டும் ஆராயத் தொடங்கும் இதன் போதும் தட்டை அழுத்தி உணவை பெறும் இங்கு தட்டினை அழுத்துவதற்கு உணவு மீளவலியுறுத்துகிறது. இவ்வாறு பல தடவை செய்த பின்பு தட்டினை விரைவாக அழுத்த ஆரம்பிக்கின்றது. அத்துடன் தொழில் நிபந்தனைப்படுத்தல் நடத்தை கூடுதலாக வலுப்பெறுகிறது. உணவினால் உடனடியாக மீளவலியுறுத்தப்படுவதினால் எலி தட்டினை அழுத்த நிபந்தனைப்படுத்தப்படுகிறது. இங்கு அனுபவத்தின் விளைவையும் அதன் நடத்தை மாற்றம் நிகழ்வதையும் அவதானிக்கின்றோம். இப் பரிசோதனை மூலம் தொழில் நிபந்தனைப்பாட்டுக்; கொள்கையை விளக்குகிறார்.
துலங்களினை துரிதப்படுத்த தெரிவு செய்யப்பட்ட மீளவலியுறுத்தல் பயன்படுத்தப்படுகிறது. அதாவது (துலங்களை) இறுதி நடத்தைகளை உருவாக்குவதற்கு மட்டுமான தூண்டலை தெரிவு செய்து அதனை மட்டும் வலியுறுத்தல். இதன் போது ஸ்கின்னர், நடத்தை உருவாக்கம் எந்த ஒரு கற்றல் நடவடிக்கைகளையும் மீளவலியுறுத்தல் மூலம் உருவாக்க முடியும், மீளவலியுறுத்தல் தொடராவிடின் துலங்கல்கைப் பெற்றுக் கொளண்டார். தொழில் நிபந்தனைப்பாட்டு பரிசோதனை மூலம் பல கொள்கைகளை ஸ்கின்னர் அறிமுகம் செய்தார். இக் கொள்கைகள் பல துறைகளிலும் பரந்த அளவில் பயன்படுத்தப்படுவதனைக் காணலாம். இவருடைய கொள்கைகள் முக்கியமான கோட்பாடுகள் யாவும் மீளவலியுறுத்தலைப் பற்றியதாகும்.
சில கோட்பாடுகள் வருமாறு,
மீளவலியுறுத்தல்
குறித்த ஒரு துலங்களை வலிமையாக்கும் மீளவலியுறுத்தல் இரு வகைப்படும்.
1. நேர் (Positive) மீளவலியுறுத்தல் உதாரணம் வெகுமதி வழங்கப்படல்
2. எதிர்(Negative) மீளவலியுறுத்தல் உதாரணம் தண்டனை வழங்கப்படல்
தெரிவு செய் மீளவலியுறுத்தல்
தொடர் மீளவலியுறுத்தல்
மீளவலியுறுத்தல் அளவுத்திடட் ங்கள்
இவை வகுப்பறை கற்பித்தல் செயற்பாட்டில் வினைத்திறனை அதிகரிக்கும் இந்த வகையில் இதனை மேம்படுத்த கனிஷ்ட இடைநிலை வகுப்புகளில் எவ்வாறான பிரயோகத்தை மேற்கொள்ளலாம் என்பதை விரிவாக நோக்குவோம்.
மீளவலியுறுத்தல்
ஒரு துலங்கள் வலுப்பெறுவதற்கான ஏதேனும் நிகழ்ச்சி அமையுமாயின் அது மீளவலியுறுத்தியாகும். இது இரண்டு வகைப்படும்.
1. நேர் மீளவலியுறுத்தல்
நல்ல நடத்தைகள் தொடர்ந்து நடப்பதற்கு அல்லது செய்வதற்கு நேர்ப்பெறுமானமுள்ள எதையும் கொடுத்தல் நேர் மீளவலியுறுத்தல் ஆகும். இதற்கு பின்வரும் உதாரணங்களை குறிப்பிடலாம்.
கனிஷ்ட இடைநிலை வகுப்புகளில் உள்ள மாணவர்கள் எனும் போது தரம் 6 தொடக்கம் 9 வரை உள்ளவர்களாகும். இந்த மாணவர்களுக்கு நேர் மீளவலியுறுத்தலானது மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது. உதாரணமாக கனிஷ்ட இடைநிலை மாணவர்களிடையே தமிழ் மொழித்தினம், ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம் ஆகிய பல விதமான போட்டிகள் இடம்பெறுகின்றன. இத்தகைய போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு சிறந்த பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. இதன் போது குறிப்பிட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்கள் தாங்கள் மீண்டும் அப்பரிசில்களை பெற வேண்டும் என்பதற்காக கடினமான முயற்சிகளை செய்வர். இங்கு பரிசில்கள் மீளவலியுறுத்தியாகிறது.
அவ்வாறே வகுப்பறையில் கணிதம், விஞ்ஞானம் போன்ற சகல பாடங்களினையும் சரியாக செய்யும் மாணவர்களுக்கு “நன்று” என்று கூறுதல், புன்னகைத்தல், பாராட்டுதல், மேலும் வகுப்பறையில் காட்சிப்படுத்தும் வகையில் அடட் வணை ஒன்றை தயாரித்து குறிப்பிட்ட அந்த மாணவனின் பெயரிற்கு நேரே புள்ளிகளை அல்லது நட்சத்திர குறியீடுகளை இடுதல். இதன் போது அம் மாணவர்கள் தான் அதிகம் புள்ளிகளை பெற வேண்டும் என்பதற்காக கவனமாக பயிற்சிகளை செய்வர்.
2. எதிர் மீளவலியுறுத்தல்
ஒரு துலங்களுக்குப் பின் எதிர்வுப் பெறுமானமுள்ள எதையேனும் நிறுத்தி விட்டாலும் அத்துலங்கல் மீண்டும் அதிகரிக்க கூடியதாக அமையும். உதாரணமாக மாணவர்கள் பாடத்தில் கவனியாது இருக்கும் போது ஆசிரியர்களின் கிண்டல்கள் அவர்களை பாடத்தின் மீது கவனம் செலுத்த வைக்கும். இதன் போது கிண்டல்கள் நிறுத்தப்படும் இது மீளவலியுறுத்தியாகும். ஏனெனில் மாணவர்கள் இத்தகைய எதிர் நிகழ்வுகளில் இருந்து தப்பவே முயல்வர். எதிர் மீளவலியுறுத்தல் தப்பும் நிகழ்வாகும்.
இதனை மற்றொரு உதாரணத்தின் ஊடாக விளக்கலாம். வீட்டு வேலைகளை செய்து வராவிடின் வகுப்பை விட்டு வெளியேற்றுவேன் அல்லது பிரம்பால் அடிப்பேன் என்றவாரான தண்டனைகளை ஆசிரியர் வழங்குகிறார. எனின் அம்மாணவன் அத் தண்டனையிலிருந்து தப்பிக்க வீட்டு வேலைகளை கவனமாக செய்து முடித்து விட்டே வருகிறான். மேலும் பாடசாலைக்கு உரிய நேரத்திற்கு செல்லாவிடின் தண்டனை கிடைக்கும் என அஞ்சும் மாணவன் அதிலிருந்து தப்பிக்க உரிய நேரத்திற்கு பாடசாலைக்கு சமூகமளிக்கின்றான் எனலாம்.
இவ்வாறு எதிர் மீளவலியுறுத்தியை ஓர் உயிரிக்கு அளித்தல் தண்டனை என கூறப்படுகிறது. எனினும், ஒரு உயிரியிடம் சில நடத்தைகளை ஏற்படாமல் தடுப்பதற்குத் தண்டனை ஒரு நம்பகமான முறையல்ல என ஸ்கின்னர் குறிப்படுகின்றார் அப்படி தண்டனையானது ஓர் உயிரியில் குறிப்பிட்ட நடத்தை ஏற்படும் வாய்ப்பை குறைப்பதாயின் அது பின்வரும் காரணிகளில் ஒன்றாக அமையலாம்.
• தண்டனையாக வழங்கப்பட்ட தூண்டி சில மனவெழுச்சிப் பிரச்சினையை ஏற்படுத்தக்கூடும் ;.
• தண்டனையாகிய தூண்டியுடன் நடுநிலையான தூண்டி இணைத்து வழங்கப்படின் அங்கு நிபந்தனைப்படுத்தல் நிகழ்கிறது.
எனவே ஆரம்பத்தில் வழங்கிய தண்டனை இப்பொழுது வழங்கப்படாவிடினும் நிபந்தனைப்படுத்தப்பட்ட நடுநிலையான தூண்டி மனவெழுச்சி நிலைமைகளை ஏற்படுத்தக்கூடும்.
• தண்டனையுடன் சேர்ந்து வழங்கிய நிபந்தனைப்படுத்தப்பட்ட ஒரு நடுநிலைமையான தூண்டி ஓர் எதிர் மீளவலியுறுத்தியாக தொழிற்பட ஆரம்பித்திருக்கலாம். எனவே இவ்வாறு தண்டனைகள் வழங்குவது எதிர் மீளவலியுறுத்தியாகும். இதன் மூலம் வகுப்பறை செயற்பாடுகளை வினைத்திறனை ஏற்படுதத முடியும்.
தெரிவு செய் மீளவலியுறுத்தல்
ஒரு தூண்டிக்குப் பல வகையான துலங்கள் இருக்கலாம். அவற்றுள் குறிப்பிட்ட ஒரு துலங்களை மாத்திரம் தெரிவு செய்து அதனை ஒரு பிள்ளை சரியான முறையில் செய்யும் போது அது தெரிவு செய் மீளவலியுறுத்தியாகும். சகல திறன்களும் இம்முறையினாலேயே கற்கப்படுகின்றன.
எடுத்துக்காட்டாக, குண்டெறிதற் பயிற்சியின் போது குண்டை கையால் பிடிக்கும் முறை, மணிக்கட்டினதும் கையினதும் இயக்கம் வீசும் முறை போன்ற பல நிலைகளிலும் பிள்ளை சரியாக செய்யும் செயலே மீள வலியுறுத்தப்படுகின்றது.
ஒரு பிள்ளை எழுதப்பழகும் போது கைபிடிக்கும் முறை, எழுதும் முறை என்பனவற்றை சரியாக செய்யும் போது ஆசிரியர் மிக நன்று என்றோ, கெட்டிக்காரன் என்றோ சொல்லி வெகுமதி வார்த்தைகளைக் கூறினால் அத்தகைய சரியான முறைகள் மேலும் வலுப்பெறும். ஒரு பிள்ளையினுடைய சரியான நடத்தைகளுக்கு மாத்திரம் ஆசிரியர் ஊக்கம் கொடுக்கக் கூடாது. அவனது பிழையான நடத்தைகளையும் அறிந்து அதன் தவறை உணர்த்த வேண்டும்.
எனவே துலங்களை கட்டியெழுப்புவதற்கு அதாவது இறுதி நடத்தைகளை உருவாக்குவதற்கு பொருத்தமான தூண்டல்களை மட்டும் தெரிவு செய்து அதனை மீளவலியுறுத்த வேண்டும் என ஸ்கின்னர் கூறுகின்றார் இதனை ஒவ்வொரு ஆசிரியரும் வகுப்பறையில் செயற்படுத்த வேண்டும்.
தொடர் மீளவலியுறுத்தல்
பிள்ளைக்கு வாசித்தல் அல்லது எழுதுதலை கற்பிக்கும் போது எல்லா விடயங்களையும் ஒரு தடவையில் கற்பித்து விட முடியாது. நாம் குறிப்பிட்ட இலக்கை அடைவதற்கு அதைப்பல சிறு பகுதிகளாக பிரித்து ஒவ்வொறு பகுதியையும் பிள்ளை சரியாக செய்யும் போது மீளவலியுறுத்தி இவ்வாறு படிப்படியாக வெற்றி பெற்று இறுதியில் பிள்ளை இலக்கை அடையுமாறு அமைவதே தொடர் மீளவலியுறுத்தல் எனப்படும். இதனை ஸ்கின்னர் பின்வரும் பரிசோதனை மூலம் தெளிவுபடுத்தினார்.
ஒரு புறா பெட்டியினுள் வைக்கப்பட்டு ஒரு குறித்த கோட்டிற்கு மேலே கொத்தினால் மட்டுமே தானியம் கிடைக்குமாறு ஒழுங்கு செய்யப்பட்டது. அது கோட்டிற்கு மேலே கொத்தப்பழகியது. பின் அக்கோடு கொஞ்சம் கொஞ்சமாக உயரத்தப்பட்டது. புறாவும் அக்கோட்டிற்கு மேலே உயர நீட்டி கொத்தப்பழகியது. இதன் பின்பு பறா கழுத்தை உயர நீட்டியவாறு திரிந்தது. இதன்படி ஸ்கின்னர் பிள்ளைகளுக்கு எழுத்து, வாசிப்பு, கணிதம்
ஆகியவற்றைக் கற்பிக்கும் போது அவற்றை சிறு கூறுகளாக்கி மீளவலியுறுத்தி நடத்தையை உருவாக்க வேண்டும் எனக் கூறினார்.
உதாரணமாக, ஒரு பிள்ளைக்கு எழுதக் கற்பிக்க வேண்டுமாயின் முதலில் அப்பிள்ளைக்கு எழுத கொப்பி, பென்சில், அட்டை தொடர்பாக மீளவலியுறுத்தல் வேண்டும். அதன் பின் ஏறக்குறைய எழுத்தைப் போன்ற உருவத்தை மீளவலியுறுத்தி அடுத்த படியில் ஓரளவு தெளிவாக பின்பற்றப்பட்ட எழுத்துக்களை மீளவலியுறுத்த வேண்டும்.
எனவே கற்பவன் தான் அடையவருக்கும் இறுதி இலக்கிற்கு; படிப்படியாக இட்டுச் செல்லும் முறையே தொடர் மீளவலியுறுத்தல் ஆகும். இது கனிஷ்ட இடைநிலை வகுப்புக்களில் கற்பித்தல் செயற்பாட்டின் வினைத்திறனை அதிகரிககு;ம். இதன் அடிப்படையிலே பாட அலகுகள் ; சிறு சிறு அலகுகளாக பிரிக்கப்பட்டு கற்பிக்கப்படுகிறது.
மீளவலியுறுத்தல் அளவுத்திட்டங்கள்
மீளவலியுறுத்தலை தொடர்ச்சியாகவும் இடைவிட்டும் ஏற்படுத்த முடியும். இடைவிட்டு மீளவலியுறுத்தலை நிகழ்த்த ஸ்கின்னர் சில அளவுத்திட்டங்களை வகுத்தார். அவை இரு அடிப்படை அமைப்பைக் கொண்டவையாகும்.
1. விகித அளவுத்திட்டம்
இதில் ஓர் உயிரி வெளிப்படுத்தும் துலங்கல்களின் விகிதத்திற்கேற்றவாறு மீளவலியுறுத்தல்(வெகுமதி) வழங்கப்படுகிறது. இது, மாறாத விகித அளவுத்திட்டம், மாறும் விகித அளவுத்திட்டம் என இரு வகையில் அமையும்
2. கால அளவுத்தி;ட்டம்
குறிப்பிட்ட ஒரு நேரம் முடிவடைந்ததும் மீளவலியுறுத்தல் நடைபெறும். இது, மாறாத கால அளவுத்திட்டம், மாறும் கால அளவுத்திட்டம் என இரு வகையில் அமையும்
பின்னுட்டல்
பின்னூட்டல் தற்காலத்தில் அதாவது கனிஷ்ட இடைநிலை வகுப்பு கல்வி நடவடிக்கைகளை வினைத்திறனாக மாற்ற பெரிதும் முக்கியமாக உளள்து. அந்தவகையில் பின்னூட்டல் என்பது ஒரு செயற்பாடு இடம்பெற்று முடிந்ததும் அதற்குரிய விளைவை அல்லது மதிப்பீட்டை மேற்கொள்வதாகும்.
நாம் மேற்கொள்கின்ற ஒரு வேலையின் விளைவு திருப்தியாக அமையும் போது அதன் பெறுபேறு மீளவலியுறுத்தியாக அமைகின்றது. இதனை மீண்டும் செய்தால் குறித்த பெறுபேறு கிடைக்கும் என்ற வகையில் ஊக்கம் கொள்வதாக அமையும் கற்றல் முறையில் முக்கியமான அம்சமாக பின்னூட்டல் உள்ளது. பின்னுட்டல் இரு வழிகளில் நடைபெறும்
1. உயிரியின் நடத்தையின் விளைவை உயிரியே பிறர் உதவியின்றி அறிதல்.
2. நடத்தையின் விளைவை பிறர் உதவியுடன் அறிதல். ஒரு நடததையின் பின்னூட்டல் நடத்தை முடிவுற்ற சில வினாடிக்குள் தொடருமாயின் மிகத்திறமையான விளைவை இது அளிக்கும்.
கனிஷ்ட இடைநிலை மாணவர்களிடையே பின்வரும் வகைகளில் பின்னூட்டலை மேற்கொள்ளலாம்.
குறிப்பிடட் விடயத்தை உதாரணமாக தரம் 6 விஞ்ஞானப்பாடத்தில் இரசாயனக் கலவை பற்றிய பாடத்தை கற்பித்து விட்டு; அது தொடர்பான கேள்விகள் சிலவற்றை மாணவர்களிடம் கேட்டல். இதன் போது இவர்கள் பதில் அளித்தார்கள் எனின் பின்னூட்டல் வெற்றிகரமானதாக அமைந்து விளைவு திருப்தி தரும். பதில் அளிக்க சிரமப்படுவார்களாயின் அவர்கள் அந்த விடயத்தை தெளிவாக விளங்கவில்லை என்பதாகும்.. இதன் போது அதனை மீண்டும் தெளிவாக கற்பிக்க முடியும்.
கணிதம், விஞ்ஞானம், வரலாறு ஆகிய பாடங்களில் ஒவ்வொரு சிறு அலகுகளை கற்பித்து முடித்த பின்பு அவ்வலகில் பரீட்சைகளை நடாத்துதல். மேலும் அப்பரீட்சையின் புள்ளிகளை உடனே வெளியிடுதல்.
எனவே பின்னூட்டலை சிறப்பாக மேற்கொள்வதன் மூலம் கனிஷ்ட இடைநிலை வகுப்புகளில் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை வினைத்திறனாக அமைக்கலாம்.
இவ்வாறு ஸ்கின்னரின் மீளவலியுறுத்தல் மற்றும் பின்னூட்டல் வகுப்பறை செயற்பாடுகளின் வினைத்திறனை அதிகரிக்கின்றது. இதற்காக ஆசிரியர்கள் அவற்றை தெளிவாக விளங்கி வகுப்பறை செயற்பாடுகளில் பிரயோகிக்க வேண்டும்.
உசாத்துனைகள்
1.கலாநிதி அருள்n;மாழி.செ, (2017), “கற்பித்தலுக்கான உளவியல்”, துர்க்கா பிரின்டரஸ்;, கொக்குவில்.
2. முத்துலிங்கம்.ச,(2010), “கல்வியும் உளவியலும்”, சேமமடு பதிப்பகம்.
-RASIMA. B.F (BA-R).
EASTERN UNIVERSITY, SRI LANKA.
Comments
Post a Comment