பாடசாலை முகாமைத்துவத்தில் EMIS இன் பங்களிப்பு

முகாமைத்துவம் என்பது நிறுவனத்தின் இலக்கினை மற்றும் குறிக்கோளை அடைவதற்கு, வினைத்திறனுடன் செயற்பட்டு விளைதிறனாக மாற்றமடைய அருமையாக கிடைக்கின்ற வளங்களான மனித பௌதிக வளம் மற்றும் நிதி, நேரம் முதலான வளங்களை அதி  உச்ச பயன்பாட்டின் ஊடாக ஒழுங்கமைக்கும் ஓர் செயற்பாடாகும். இத்தகைய முகாமைத்துவமானது ஒரு நிறுவனத்தில் சிறந்த முறையில் இடம்பெறுவதற்கு அந்நிறுவனம் தொடர்பான தகவல் தொகுதி சரியாக இனங்காணப்பட்டு வரிசைப்படுத்தப்பட்டு நிரற்படுத்தப்பட வேண்டும். இங்கு பெறப்படும் தகவல் நம்பகத்தன்மையாகவும் உண்மையாகவும் காணப்படல் வேண்டும். அவ்வாறு தகவல்கள் சரியாக பெறப்பட்டு முகாமைத்துவ செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் போதே ஒரு நிறுவனம் வினைத்திறனுடைய நிறுவனமாக இயங்க முடியும்.



முகாமைத்துவ தகவல் தொகுதி என்பது சகல நிறுவனங்களிலும் காணப்படும். அந்தவகையில், ஒரு நிறுவனமாகவுள்ள பாடசாலையிலும் முகாமைத்துவ தகவல் தொகுதி காணப்படுகிறது. அதனை EMIS என சுருக்கமாக குறிப்பிடுவர். அதன் விரிவாக்கம் Educational Management Information System (கல்வி முகாமைத்துவ தகவல் தொகுதி) ஆகும். இந்த EMIS திட்டமானது, கல்வி முறையைப் பற்றி தகவல் நிர்வகிக்க வடிவமைக்கப்பட்ட ஒரு தகவல் முறைமையாகும். பாடசாலை தொடர்பான தகவல்கள், மாணவர் தொடர்பான விபரங்கள், பாடசாலை செயற்பாடுகள், மாணவர் அடைவுகள், சாதனைகள், பாடசாலையின் எதிர்காலத்திட்டங்கள் போன்ற தகவல்களையும் தரவுகளையும் உரிய முறையில் பகுப்பாய்வு செய்து தகவல்களை ஒன்றாக்கி ஒழுங்காகவும் முறையாகவும் பேணுவதுடன் தேவையான போது தேவையான இடங்களுக்கு அவற்றை வழங்கும் ஒழுங்கமைப்பு முறையே EMIS ஆகும்.


ஒரு நிறுவனத்தின் முகாமையாளர் வழிநடத்தல், திட்டமிடல், ஒழுங்கமைத்தல், கட்டுப்படுத்தல் போன்ற முகாமைத்துவ செயற்பாடுகளில் நேரத்திற்கு ஏற்ற வகையில் சிறந்த தீர்மானங்களை எல்லா நிலையிலும் சகல செயற்பாடகளிலும் மேற்கொள்ள முகாமையாளருக்கு உதவும் வண்ணம் நிறுவனத்திற்கு உள்ளிருந்தும் வெளியிருந்தும் பெறப்படும் தகவல்களை மாற்றவும் அவற்றைப் பரிமாறவும் உதவுகின்ற ஒரு தகவல் தொகுதி கல்வி முகாமைத்துவ தகவல் தொகுதி ஆகும்.


கல்வி முறையின் அனைத்து மட்டங்களிலும் முடிவெடுத்தல், கொள்கை உருவாக்கம் மற்றும் பகுப்பாய்வு, கண்காணிப்பு மற்றும் மேலாண்மை ஆகியவற்றை மேற்கொள்வதற்கான தரவு மற்றும் தகவல்களை சேகரித்தல், ஒருங்கிணைத்தல், செயலாக்குதல், பராமரிப்பு மற்றும் பரப்புதல் ஆகியவற்றுக்கான ஒரு அமைப்பு EMIS எனலாம். இது மாணவர்களின் தரவுகள், தேர்வுப்பதிவுகள், விடுதி மற்றும் நூலக விபரங்கள் போன்ற முக்கியமான தரவுகளை சேமிக்கின்றது. அதிகமாக இது மாணவர்களின் அன்றாட முன்னேற்றத்தை கண்காணிக்கும் இறுதியில் மாணவர்களின் முன்னேற்றத்தை அல்லது பின்னடைவை பகுப்பாய்வு செய்யவும் கண்காணிக்கவும் பயன்படுகிறது. 


நல்ல தகவல் தொகுதி ஒன்று இல்லாதவிடத்து அதிபர் தனது நேரத்தினையும் சக்தியினையும் வீணாக செலவிட வேண்டியேற்படுகிறது. தகவல் தொகுதி ஒன்றை உருவாக்க ஒரு நிறுவனத்தின் உள்ளிருந்தும் வெளியிருந்தும் தரவுகளைப் பெற்று அவற்றை தகவல்களாக மாற்ற வேண்டும் இத்தகவல்கள் ஒரு நிறுவனத்தின் சகல மட்டங்களிலும் பணியாற்றுபவர்களது தேவைக்கேற்ப வழங்கப்பட வேண்டும். அது உரிய நேரத்தில் திட்டமிடுவதற்கான பயன்தரும் தீர்மானங்களை மேற்கொள்ளும் பொருட்டு வழங்கப்பட வேண்டும்.


பாடசாலைகளிலோ ஏனைய கல்வி நிறுவனங்களிலோ காணப்படும் தகவல் தொகுதி ஒன்றில் பின்வரும் செயற்பாடுகள் இடம்பெறும

  • தற்காலப்படுத்தல
  • படிவம் தயாரித்தல
  • ஒழுங்கமைத்தல
  • சரிபார்த்தல்
  • தரவு நிரற்படுத்தல
  • களஞ்சியப்படுத்தல்
  • பகுப்பாய்வு செய்தல்
  • பிரதிபலித்தல்
  • பரப்புதல்
  • உபயோகித்தல்
  • தற்காலப்படுத்தல்

தகவல் தொகுதி பற்றி நோக்கும் போது பின்வரும் இரு பிரதான விடயங்களை விளங்கிக் கொள்ளுதல் வேண்டும். 

1. தரவு(Data)

பாடசாலையில் திட்டமிடல் செயற்பாடுகளுக்கு தரவுகள் இன்றியமையாததாகும். இத்தரவுகளை வைத்துக்கொண்டே திட்டமிடல் மற்றும் எதிர்வு கூறல்கள் இடம்பெறுகின்றன. தகவல் தொகுதி ஒன்றிற்கு உள்ளீடுகளைத் தரும் ஒழுங்கமைக்கப்படாத உண்மைகளே தரவுகள் எனப்படும். உதாரணமாக குறிப்பிட்ட பாடசாலையில் ஒரு தொகை மாணவர்கள் உள்ளனர் எனின் அது தரவாகும். அக்குறிப்பிட்ட மாணவர்கள் ஆண், பெண் வகுப்பு வேறுபாடாக காட்டப்படுமாயின் அது தகவல்கள் எனப்படும். தரவுகள் தகவல்களுக்கு முன்னுள்ளதும் ஒழுங்கமைக்கப்படாததுமாக இருக்கும். தகவல்கள் உபயோகத்திற்கு தயாராக உள்ளவையும் ஏதாவதொரு ஒழுங்கமைப்புக்கு உட்பட்டதாகவும் இருக்கும். தரவுகள் அதனைப் பெற்றுக் கொள்வோர்க்கு தன்னளவில் உபயோகிக்கக் கூடிய நிலையில் இருக்கும். இவ்வாறான நிலையில் அது தகவல்களாக அமையலாம். எனினும் இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்புடையனவாகவும் இடையளவையுமாகவும் இருக்கின்றன. 


2. தொகுதி முறைமை

இதில் மூன்று அம்சங்கள் உள்ளன அவை,

உள்ளீடு Input

செயன்முறை Process

வெளியீடு Out Put

ஆரம்ப காலத்தில் கல்வி முகாமைத்துவ தகவல் தொகுதிக்குரிய தரவுகளை சேகரித்தல் தகவல்களாக மாற்றி தேவையான போது பயன்படுத்தும் நிலையே காணப்பட்டது. அதாவது, கல்வி அபிவிருத்தித் திட்டமிடல் மற்றும் நிர்வாக செயற்பாடுகளுக்கு அவசியமாகவுள்ள தரவுகள் தொடர்பான விபரங்களை சேகரிப்பதற்கு காகிதப் படிவங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டு தரவுகள் சேகரிக்கப்பட்டன. நேரம் அதிகமாதல், நம்பகத்தன்மை குறைவு, கணிப்புக்களை மேற்கொள்ள முடியாமை போன்ற காரணங்களால் இம்முறை மந்தமடைந்தது.


பின்னர், மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளை கருத்தில் கொண்டு தரவுகளைச் சேகரிப்பதற்கு ஒரு தரவுத்தளம் உருவாக்கப்பட்டது. அத் தரவுத்தளத்தினை வலயங்களுக்கு இறுவட்டுக்களில் வழங்கி குறித்த காலத்தின் பின்னர் அத்தரவுத்தளங்களை மீள இறுவெட்டுக்களில் பெற்றுச் சேர்த்து அத்தரவுத்தளம் பயன்படுத்தப்பட்டது. தரவுகளின் நம்பகத்தன்மை குறைவு, பாடசாலைகளில் இருந்து தரவுகளைப் பெறுவதற்கு வலயங்கள் கையாண்ட பொறிமுறைகள் வேறுபட்டமை, தரவுத்தளத்தினை கையாளுவதில் ஏற்பட்ட தொழிநுட்ப இடர்பாடுகள், சில வலயங்கள் உரிய நேரத்தில் தரவுத்தளங்களை பூரணப்படுத்துவதில் எதிர்கொண்ட சவால்கள், தரவுகள் சரியான முறைமையில் தரவேற்றம் செய்யப்படாமையினால் தரவுகளைச் சேர்க்க முடியாமை போன்ற காரணங்களால் இப்பொறிமுறையும் சவால்மிக்கதாயிற்று. 


அதன் பின்னர், கோட்டக்கல்விப் பணிப்பாளர்களை தரவு முகாமைத்துவத்தில் உட்படுத்தி இரு மாதங்களுக்கு ஒரு முறை உள்ளக வலையமைப்பு பொறிமுறை மூலம் பாடசாலைத்தரவுகள் சேகரிக்கப்பட்டு கல்வி முகாமைத்துவ தகவல் தொகுதி சிறபப்பாக இடம்பெற்றது. இவ்வாறு பெறப்படும் தரவுகள் உரிய நிரட்படுத்தலுக்கு உட்பட்டு மென்பிரதிகளாகவும் கையேடுகளாகவும் வெளியிடப்பட்டன. பின்னரான காலப்பகுதியிலேயே இணைய வழி இயங்கு தள மென்பொருள் முறைமை உருவாக்கப்பட்டு தரவுகள் இலகுவாக தரவேற்றம் செய்யப்பட்டு EMIS ஆனது இலகுவாக பேணப்படுகிறது எனலாம். இதற்கு உதாரணமாக பின்வரும் மென்பொருட்களைக் குறிப்பிடலாம்.


Student database ( மாணவர் தரவுத்தளம்) 

Teacher’s database ( ஆசிரியர் தரவுத்தளம் )

Cheque Writer Software   ( பாடசாலை ஆசிரியர் சம்பள பட்டியல் தயாரிக்கும் மென்பொருள்)

Teacher’s Relief  Time table


ஒவ்வொரு மாகாணத்திற்கும் தனித்தனியாக EMIS வலயமைப்பு காணப்படும். அதில் குறிப்பிட்ட மாகாணத்திற்குரிய பாடசாலைகளின் தரவுகள் உள்ளீர்க்கப்பட்டு தகவல்களாக நிரட்படுத்தப்பட்டு பேணப்படும். 


EMIS இல் அதிகமாக தகவல் பரிமாற்றம் இடம் பெறுவதனால் தகவலானது பின்வரும் அடிப்படைப் பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும்.

  • உரிய நேரத்தில் உரிய தகவல்களை வழங்கக் கூடியவகையில் தகவல் ஒழுங்கமைக்கப்படல்.

  • தேவைக்கு ஏற்ப தரவுகளை வழங்கும் தன்மை.

  • தகவல் காலத்துக்கு காலம் இற்றைப்படுத்தப்படல் வேண்டும்.

  • தகவல்களை வெளிப்படுத்துவதற்கு பயன்படும் ஊடகம் பொருத்தமானதாக இருத்தல்.

  • முழுமையான தரவுகளையும் தகவல்களையும் கொண்டிருத்தல்.

  • நம்பகமாக இருக்கும் அதே வேளை பொருத்தமான இடங்களுக்கு பொருத்தமான நேரங்களில் விநியோகிக்கப்பட வேண்டும்.

  • நவீன தொடர்பாடல் சாதனங்களை பயன்படுத்தி தகவல்களைப் பேண வேண்டும். உதாரணமாக Website, Facebook

 

கல்வி முகாமைத்துவ தகவல் முறைமையானது பாடசாலை முகாமைத்துவத்தில் பெறும் பங்காற்றுகிறது. அதாவது EMIS ஆனது கல்வி நிர்வாகம், கல்வி அபிவிருத்தி, திட்டமிடல் மற்றும் மதிப்பீடு செய்தல் போன்றவற்றுக்கு மிக அவசியமாகிறது. இது நிறுவனத்தின் செயற்பாடுகள், உட்புற வெளிப்புற திறன்கள், செயற்திறன் தேவைகள் மற்றும் குறைபாடுகள் என்பவற்றை வெளிப்படுத்துகிறது. இது பாடசாலை சார்ந்த தகவல்களையும் கல்வி பங்குதாரர் செயற்பாடுகளையும் முன்வைப்பதோடு சிக்கலான பொருளாதார சூழ்நிலைகளிலும் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குகிறது. 

பாடசாலை ஒன்றில் கல்வி முகாமைத்துவ தகவல் முறைமை ஒன்றை ஏற்படுத்துவதில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளாவன. 

  • தகவல் செயலமைப்பு செயற்பாடுகள் இங்கு தரவு உள்ளீடு, செயன்முறை, வெளியீடு, தரவுகளைக் களஞ்சியப்படுத்தல், கட்டுப்படுத்தல் என்பன உள்ளடங்கும்.

  • ஆளணி வளங்கள் - இங்கு கணனி இயக்குபவர், கட்டுப்படுத்தும் எழுத்தாளர், ஆசிரியர், மாணவர்கள்.

  • மென்பொருட்கள் வளம் - இங்கு மாணவர்களின் தரவுகள், ஆசிரியர்களின் தரவுகள்  போன்றவற்றை உள்ளீர்க்கும் வகையிலான மென்பொருட்கள் உள்ளன. இவை தேவையின் போது அறிக்கைகளாகவும் மாதிரிகளாகவும் மாற்றப்படல் மற்றும் களஞ்சியப்படுத்தி பாதுகாப்பதும் முக்கியமானது.

  • தரவுகளைப் பெறுவதில் கவனம் செலுத்துதல் அதாவது பெற்றோர், மாணவர், ஆசிரியர், நலன்விரும்பிகள், கல்வி கோட்ட வலய அதிகாரிகள், அறிக்கைகள் மற்றும் ஊடகங்கள் போன்றவற்றிலிருந்து தகவல்களைப் பெறும்போது கவனமாக செயற்படல்.

  • வன்பொருட்கள் வளத்தினை அறிதல். அதாவது, தகவல் மூலகங்கள், கணனிகள் செயல் நிலையகங்கள் பற்றி அறிதல். இங்கு ஒலியும் எழுத்தும் முக்கியம்.

  • தரவுகளை தகவல்களாக மாற்றும் செயன்முறை

  • வெளியீடு – அதாவது வெளியீடாகப் பெறும் தகவல்களை கற்றல் கற்பித்தல் மற்றும் முகாமைத்துவ செயற்பாடுகளுக்கு ஏற்ப பல வடிவங்களில் மாற்றி பயன்படுத்தல். பொருத்தமான இடங்களில் கட்டுப்படுத்தி தவறுகள் வராது பார்த்துக் கொள்ளல்.   


பாடசாலையில் EMIS யினை அமைக்கும் போது அதன் உபதொகுதிகளை இனம்கண்டு கொள்ளல் அவசியம். ஒரு பாடசாலையில் பின்வரும் உபதொகுதிகளை இனங்காணலாம்.

  • பதிவேடுகள் உபதொகுதி

  • பௌதிகவள தகவல் தொகுதி

  • கலைத்திட்ட தகவல் தொகுதி

  • ஆளணி தகவல் தொகுதி

  • நிதி தகவல் தொகுதி

  • முன்னேற்றக் கட்டுப்பாட்டு தகவல் தொகுதி

  • நிறுவனத்தகவல் தொகுதி

  • மாணவர் வகுப்புத் தகவல் தொகுதி


கல்வி முறையிலுள்ள பலம், பலவீனம் என்பவற்றை தெளிவாக புலப்படுத்துவதற்கு குறிகாட்டிகள் துணைபுரிகின்றன. எதிர்கால கல்வி விருத்திக்கான திட்டமிடலுக்கு இவை பயன்படுகின்றன. இத்தகைய குறிகாட்டிகளை 4 வகையாக நோக்கலாம்.

1) Efficiency Indicators( வினைத்திறன் காட்டிகள்)

  • ஒரு மாணவனுக்குரிய ஆசிரியர்

  • மாணவனுக்குரிய செலவு

2) Effectiveness Indicators ( விளைதிறன் காட்டிகள்)

  • பரீட்சை முடிவுகள்

  • போட்டி முடிவுகள்

3) Equality Indicators ( சமத்துவம்)

பட்டதாரி ஆசிரியர்களின் எண்ணிக்கை

4) Quality Impregnate Indicators ( தரமேம்பாட்டுக்காட்டிகள்)

  • கற்பிக்க தகைமையுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை

  • 1C பாடசாலை 1AB  பாசாலையாக மாற்றமடைதல்

  • முன்னேற்றம் 

  • சேவைக்காலப் பயிற்சி


தகவல் முகாமைத்துவ தொகுதி ஒன்றை வினைத்திறனான முறையில் அமைப்பதற்கு பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.


  • உரிய பொருத்தமான மென்பொருட்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.    உதாரணமாக SPSS, MS Office,

  • உரிய உபகரணங்கள் கருவிகளைப் பெற்றுக் கொள்ளல் உதாரணமாக  computers , Laptops, Ipads

  • உரிய துறையில் அனுபவம் கொண்ட ஆளணியைப் பெற்றுக் கொள்ளல்


முகாமைத்துவம் எனும் போது இங்கு வினைத்திறனும் விளைதிறனும் முக்கியமாகவுள்ளன. இவை இரண்டும் ஒன்றில் ஒன்று தங்கியுள்ளது. இவை இரண்டையும் அடிப்படையாகக் கொண்டு விளக்குவதானால் ஒரு ஒழுங்கமைப்பு, குறைந்தளவு வளத்தைப்பயன்படுத்தி ஒழுங்கமைப்பின் குறிக்கோளை வெற்றிகரமாக அடையும் வகையில் செயற்படுதலாகும். இவை வெற்றிகரமாக அமைவதற்கு பாடசாலையின் தரவுகள் முறையாகப் பேணப்பட்டு கிடைக்கப்பெறல் வேண்டும் இவ்வாறு பெறும் தரவுகள் உண்மையாகவும் நம்பகத்தன்மையுடன் கூடியதாகவும் காணப்பட வேண்டும். இவ்வாறு தரவுகளை இலகுவாக பெற்றுக் கொள்ளEMIS ஆனது பெறும் பங்களிப்பினை வழங்குகிறது. 


முகாமையாளராகவுள்ள அதிபரின் பொறுப்புக்களில் “பாடசாலைத் தகவல்களை அறிக்கைப்படுத்தலும் தரவுத்தளத்தை நடைமுறைப்படுத்தலும்” எனும் செயற்பாடும் காணப்படுகிறது. இதனை விரைவாகவும் உரிய நேரத்திலும் மேற்கொள்வதற்கு EMIS ஆனது உதவுவதோடு அதிபரின் முகாமைத்துவத்தை சிறப்பாக பேணவழிசெய்கிறது எனலாம். தற்காலத்தில் அனைத்து பாடசாலைகளிலும் கணனி வசதிகள் உள்ளன. இதன் ஊடாக தகவல் முகாமைத்துவ தொகுதியானது பேணப்படுகிறது. இதன் ஊடாக கேரிக்கக் கூடிய தரவுகளாக பின்வருவனவற்றை குறிப்பிடலாம். 


  • கலைத்திட்டத்தை திட்டமிடுவதற்கு தேவையான தரவுகள

  • பங்குபற்றும் 

  • தரவுகள

  • பண்புரீதியான தரவுகள

  • திறனை 

  • வெளிப்படுத்தம் தரவுகள

  • பௌதீக வளங்களை திட்டமிடுவதற்கு தேவையான தரவுகள


இத்தகைய தரவுகளானது EMISயில் சேகரிக்கப்படுவதன் ஊடாக கலைத்திட்டம் தயாரித்தல், பௌதீக வளங்களை திட்டமிடல் மற்றும் வளப்பங்கீட்டில் ஏற்படும் பிரச்சினைகளை இனங்காணல், தேவையான வளங்களைப் பெற்றுக் கொள்ளல்  போன்றவற்றை மேற்கொள்ள முடிகிறது.

 

முகாமைத்துவத்தில் தீர்மானமெடுத்தல் முக்கியமான ஒன்றாகவுள்ளது. இந்த வகையில் சரியான தரவுகளே சரியான தீர்மானமெடுத்தலுக்கு உதவும். இதனை      EMIS  ஊடாக மேற்கொள்ளலாம். மேலும் பாடசாலையின் செயற்திட்டத்தின் விiனைத்திறனையும் விளைதிறனையும் கண்டறிதல், பாடசாலையின் ஒவ்வொரு துறை தொடர்பான முன்னேற்றத்ததை அறிதல் போன்றவற்றுக்கு கல்வி முகாமைத்துவ தகவல் தொகுதியானது உதவுகிறது. 


ஒரு பாடசாலையின் முன்னேற்றம் அங்குள்ள மாணவர்களின் அடைவு மட்டம் உயர்வடைவதிலேயே வெளிக்காட்டப்படும். அதற்கு அங்குள்ள அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் சிறந்த முறையில் செயற்பட வேண்டும். ஆசிரியர்களின் எண்ணிக்கை, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றதாக காணப்பட வேண்டும் அதற்காக பாடசாலையில் உள்ள ஆசிரியர்களின் தரவுகள் தெளிவாக வெளிக்காட்டப்பட வேண்டும். இவ்வாறு அமையும் போதே பாடசாலைக்கு தேவையான ஆசிரியர்கள் மேலதிகாரிகளால் நியமிக்கப்படுவர். தற்காலத்தில் இணைய வழி மென்பொருள் ஊடாக EMIS இடம்பெறுவதனால் தரவுகளை உடனடியாக பெறக்கூடியதாக உள்ளமை அதனை மேற்கொள்ள இலகுவாக உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 


EMIS  ஊடாக கிடைக்கும் நன்மைகளாக கீழ்வருவனவற்றை குறிப்பிடலாம்

 

01. முறைசாராத காகிதப்பதிவுகள் மற்றும் கையேடு முறைகள் குறைபாடுகளை அல்லது பிழைகளை ஏற்படுத்தலாம். அதனை நிவர்த்தி செய்வதாக EMIS அமைதல்.

02. குறுகிய நேரத்தில் வினைத்திறன் மிக்கதாக சேவையாற்றுதல்.

03. அதிக எண்ணிக்கையான தொழிலாளர்களின் வேலையையும் மிகக்       குறுகிய நேரத்தில் செய்து முடிக்கிறது.

04. பதிவுகளை மேற்கொள்ள அதிகமான தொழிலாளர்கள் தேவையின்மை.

05. நூற்றுக்கணக்கான பதிவேடுகள் தேவைப்படாததோடு பதிவுகள் மிகத் தெளிவாகவும் காணப்படும்.

06. இவற்றை பராமரிக்க அதிகம் செலவிட வேண்டி ஏற்படாது. பாதுகாப்பு    மிக்கது.

07. தேவைக்கேற்ப இலகுவாக தரவுகளைப் பெறக்கூடியதாயிருத்தல்.

08. இலகுவாக கணிப்புக்களை மேற்கொள்ளக்கூடியதாயிருத்தல்.

09. தேசிய கல்வி தகவல் தேவைகளை பூர்த்தி செய்ய உதவும்.

10. நம்பகத்தன்மை வாய்ந்ததாக காணப்படல்.

11. தெளிவான தரவுத்தளம் பின்பற்றப்படல். உதாரணமாக, பாடசாலையில் உள்ள மாணவர்கள் எண், வயது, பாலினம், வகுப்பு என பிரிக்கப்பட்டிருப்பதைக் குறிப்பிடலாம்.

12. கணக்கு கண்கானிப்பு மதிப்பீடுகளை மேற்கொண்டு கல்விக் கொள்கைகளை செயற்படுத்த உதவும்.

13. சர்வதேச அபிவிருத்தியின் பால் இட்டுச்செல்கிறது.


ஒரு பாடசாலையைப் பொறுத்தவரையில் அப்பாடசாலை பிரதான பயன்நுகரிகளான மாணவர்களின் விருப்பங்களை மற்றும் தேவைகளை அடையச் செய்யும் வகையில் குறைந்த வளங்களைப் பயன்படுத்தி உச்ச பயனைப் பெறமானால் அப் பாடசாலை வெற்றிகரமான பாடசாலையாக கருதப்படும். இதற்கு அப்பாடசாலையின் முகாமைத்துவம் சிறப்பாக இடம்பெறவேண்டும். இவ்வாறு முகாமைத்துவம் சிறப்பாக இடம்பெறுவதற்கு மேற்கூறியவாறு EMIS பெரும் பங்களிப்பினை வழங்குகிறது எனலாம். தற்காலத்தில் EMIS யினை மேலும் இலகுபடுத்தம் வகையில் புதிய புதிய மென்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட வண்ணமே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


-RASIMA. BF ( BA- R ) 
EASTERN UNIVERSITY, SRI LANKA.

Comments

Popular posts from this blog

Case Study Analysis Of MAS Holdings

'வினைத்திறனான கற்றல் கற்பித்தல் செயற்பாடானது மூவழித்தொடர்பாடல் நிகழ்ச்சியினூடாக நடைபெறுவதன் மூலம் ஆசிரியர் - மாணவர் இடைத்தாக்கம் சிறப்பாக அமையும். இக்கூற்றின் அடிப்படையில் உமது கருத்துக்களை முன்வைத்து விளக்குக.

Theory of Instinct [மக்டூகலின் இயல்பூக்கக் கொள்கை]