பவ்லோவின் நிபந்தனைப்படுத்தல் கோட்பாடு

பவ்லோவின் நிபந்தனைப்படுத்தல் கோட்பாடு வகுப்பறைக் கற்பித்தலில் ஆசிரியருக்கு எவ்வளவு தூரம் பயனுடையதாகிறது என்பதை நீர் விரும்பும் ஒரு பாடத்தின் ஊடாக பல்வேறு உதாரணங்களுடன் விளக்குக. 


ஆதிகாலத்தில் தத்துவத்துடன் இணைந்திருந்த உளவியல் 19ஆம் நூற்றாண்டிலிருந்து தனித்துவம் வாய்ந்த ஒருதுறையாகப் பல்வேறு ஆய்வுகள் மூலம் வளர்ந்தது. இவ்வளரச்சிக்கு வித்தாக கற்றல் என்ற எண்ணக்கருவே அமைந்தது. முக்கிய உளவியல் விருத்தி தொடர்பான நிகழ்வாக வில்லியம் வொன்ட்,(William Wund : 1832-1920 ) என்ற உளவியல் அறிஞர் உலகின் முதலாவது ஆய்வு கூடத்தினை 1879ஆம் ஆண்டு ஜேர்மனியின் லீப்சிக் பல்கலைக்கழகத்தில் தொடக்கி வைத்ததைக் குறிப்பிடலாம். இதனூடாகத் தத்துவத்திலிருந்து வேறாகி உளவியல் ஒரு விஞ்ஞானக்கலையானது. கற்றலும் அது தொடர்பான கோட்பாடுகளும் எழ வழிகாட்டியது.

 

தொடரந்து சார்ல்ஸ் டாவினின் உயிரியல் பரிணாமவாதமும், கூர்ப்பு தொடர்பான  ஆய்வுகளும் மனித உளவியல் தொடர்பான ஆய்வுகளும் உதவின. பின்னர் நடத்தைசார் உளவியலாளர்கள் தூண்டல் மற்றும் துலங்கல் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு நடத்தைவாத உளவியல் கற்றல் கொள்கையை விருத்தியாக்கினர். 


கற்றலென்பது நிபந்தனைப்படுத்திய துலங்களினால் ஆக்கப்பட்டுள்ளது என நிபந்தனைப்படுத்திய துலங்கல் கொள்கை கூறுகின்றது. இது இரு வகைப்படுத்தப்படும். 

1. பழைய நிபந்தனைப்பாடு (Classical conditioning) 

2. தொழிலில் அல்லது கருவி நிபந்தனைப்பாடு (Operant or Instrumental Conditioning) 


பவ்லோ, ஹல் (Pavlow, Hull) ஆகியோரின் கருத்துக்கள் பழைய நிபந்தனைப்பாட்டிலடங்கும். ஸ்கினர் (Skinner) என்பவரின் கருத்துகள்  தொழில் நிபந்தனைப்பாடு சார்ந்ததாகும். இயன் பவ்லோவின் பழைய நிபந்தனைப்பாட்டினை ஆராய்கின்றபோது அக்கொள்கையினையும் அதன் பிரயோகங்களையும் அறிய முடியும்.   

                                                                          Pavlow

நிபந்தனைப்படுத்தல் பற்றி பவ்லோவ் பல பரிசோதனைகளை நடத்தினார். பவ்லோவின் இக்கொள்கை “பழைய நிபந்தனைக்கோட்பாட்டு கொள்கை என அழைக்கப்படுகின்றது. ஒரு வைத்தியரும் உளவியலாளருமான இவர் உணவு சமிபாடு அடையும் முறை பற்றி பல்வேறு ஆய்வுகளை மேற் கொண்டிருக்கும் போது சில தூண்டல்கள் நிபந்தனைப்படுத்தப்பட்டதனால் நாய்க்கு உமிழ்நீர வடிவதனைக்கண்டார். இதன்படி இவரின் ஆய்வானது தூண்டி, துலங்கல் தொடர்பான ஆய்வாக அமைந்தது.

  

நிபந்தனைப்படுத்தல் பற்றி பின்வரும் பரிசோதனையை நடத்தினார். இப் பரிசோதனை நான்கு கட்டங்களைக் கொண்டதாக அமைந்தது. நாயின் கன்னத்தினூடாக அதன் உமிழ் நீர்ச்சுரப்பியில் குழாய் ஒன்றைப்பொருத்தி, அதனூடாகச் சுரந்துவரும் உமிழ்நீரின் அளவைக் கணிப்பதற்கு ஏற்பாடு செய்தார். பிற கவனக்கலைப்பான்களினால் நாயின் கவனம் சிதறாத படி பரிசோதனையை ஒலிபுகா அறையொன்றினுள் நடத்தினார். பரிசோதனையாளர் சற்று தூரத்தில் கண்ணாடி ஜன்னல் மூலமாக நாயை அவதானித்துக் கொண்டிருந்தார். தன்னியக்க கருவிகள் மூலமாக நாய்க்கு உணவு வழங்க ஏற்பாடு செயயப்பட்டிருந்தது.

 

நாய்க்கு உணவு வழங்கப்படும் போது ஒவ்வொரு தடவையும் மணி ஒலிக்கப்பட்டது. உணவு மணியொலி ஆகிய இரு தூண்டிகளும் ஒரேவேளையில் அளிக்கப்பட்டன. இவ்விதம் பல தடவைகள் செய்யப்பட்டன. இதன் பின்பு மணியொலியை தனியாக வழங்கும் போது அந்நாய் முன்னைய அளவு உமிழ் நீரை சுரப்பதனை அவதானித்தார். இப் பரிசோதனையின் பிரகாரம், மணியொலிக்கு உமிழ் நீர் சுரக்க நாய் எப்படிக் கற்றுக்கொண்டது என்ற வினா எழுப்பப்படுகின்றது. இதனை பரிசோதனைக் கட்டங்களினூடாக அவதானிக்கலாம். 


 பரிசோதனையின் முதற்கட்டம் 

இறைச்சித் துண்டைக் கண்டதும் பசியுள்ள நாயின் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இதில் இறைச்சித் துண்டு, தூண்டி ((stimulus-s)) உமிழ் நீர் சுரத்தல் - துலங்கல் (Response) ஆகும். 

இறைச்சித் துண்டு      உமிழ் நீர் சுரத்தல் 

           (s)                                                                         (R) 


உமிழ் நீரைச் சுரக்கச் செய்த உணவு இயல்பான நிபந்தனைப்படுத்தப்படா தூண்டி ஆகும். இதனால் ஏறப் ட்ட துலங்கலும் நிபந்தனைக்குட்படாத இயல்பானதாகும். 


பரிசோதனையின் இரண்டாம் கட்டம்  

நாய்க்கு இறைச்சித்தண்டைக் கொடுக்கும் போது மணி ஒலிக்கப்பட்டது. மீண்டும் மீண்டும் இறைச்சித்துண்டுகள் வழங்கும்போது மணியும் ஒலிக்கப்பட்டது. சில காலத்தின் பின் இறைச்சித்துண்டைக் கொடுக்காது மணி ஒலிக்கப்பட்டபோது உமிழ் நீர் வடிந்தது.  

(CS) பரிசோதனையின் மூன்றாம் கட்டம் 



இங்கு இயற்கையான தூண்டிக்குப் (இறைச்சிச் துண்டு) பதிலாக வேறொரு தூண்டி (மணிஒலி) நிபந்தனைப்படுத்தப்பட்டது. இறைச்சித்துண்டைக் கண்டவுடன் நாயின் உமிழ்நீர் சுரத்தல் இயற்கையான துலங்கலாக இருந்தாலும் மணி ஒலிக்கு உமிழ் நீர் சுரத்தல் இயற்கையானதல்ல. அது நிபந்தனைக்குட்படுத்தப்பட்ட தூண்டியினால் (conditional stimulus –CS ) ஏற்படும் நிபந்தனைப்படுத்தப்பட்ட துலங்கலாகும். (Conditional Response CR)  


பரிசோதனையின் நான்காவது கட்டம்

இங்கு மணி ஒலியான நிபந்தனைப்படுத்தப்பட்ட தூண்டியுடன் (1ம் வகை நிபந்தனைப்படுத்தப்பட்ட தூண்டி ) மற்றுமொரு நிபந்தனைப்படுத்தப்பட்ட தூண்டியான ஒளியை (வெளிச்சம்) ஒன்றாக சேர்த்து (2ம் வகை நிபந்தனைப்படுத்தப்பட்ட தூண்டி ) வழங்கப்படுகின்றது. பின்னர் ஒளி மட்டும் காட்டப்படுகின்றது. இவ் வெளிச்சத்தை நாய் கண்டவுடன் உமிழ் நீர் சுரத்தல் காணப்பட்டது. 


இப் பரிசோதனையின் அடிப்படையில் இயன் பவ்லோ, 

(அ) உயர்நிலை நிபந்தனைப்பாடு (Higheroder conditionoinng) 

(ஆ) மறைதல்/ நிபந்தனைப்பாடு அழித்தல் (Extinction) 

(இ) பொதுமைப்பாடு (Generalization)   ஆகிய கொள்கைகளை முன்வைத்தார்.

 

உயர்நிபந்தனைப்பாட்டுத் தூண்டியை  உணவிற்குப்பதிலாக புதிய தூண்டிக்கு உமிழ் நீரைச் சுரக்கச் செய்யமுடியும் என்பதனை பவ்லோ செய்து காட்டினார். மணிஒலியுடன் கறுப்பு நிறச் சதுரத்தைத் திரையில் காட்டிய போது உமிழ் நீர் சுரந்தது. இப்பொழுது முன்னை நடுநிலைத் தூண்டல் புதிய நிபந்தனைப்படுத்தப்பட்ட தூண்டியாகிவிட்டது. இவ்வகையான நிபந்தனைப்படுத்தப்பட்டதை இரண்டாம் வகை நிபந்தனைப்படுத்தப்பட்ட தூண்டி என அழைத்தார். அதாவது மணி ஒலிக்கு உமிழ் நீர் சுரப்பதைப் போல வேறு தூண்டல்களினாலும் பெற்றுக்கொள்ள முடியும் என்பதாகும். இவ்வாறு வேறு தூண்டல்கள் நிபந்தனைப்படுத்தப்படுவதை உயர்மட்ட நிபந்தனைப்படுத்தல் என பவ்லோ கூறுகின்றார. இவ்வாறு உயர்மட்டத்தில் நிபந்தனைப்படுத்தப்படமுடியுமானால் அவை பெரும்பாலும் நிலையற்றவையாகும். இவ்வாறு கற்றல் மூலம் மூன்றாம், நான்காம் நிலை நிபந்தனைப்பாட்டிற்கு அப்பால் செல்ல முடியாதென்பதை அறிந்தார்.


காலம் செல்லச் செல்ல மணியொலியுடன் நாய்க்கு உணவு கொடுக்கப்படாவிடின் அது நாளடைவில் உமிழ் நீர் சுரப்பதனை நிறுத்திவிடும். இவ்வாறு துலங்கலை காட்டாது இருத்தல் துலங்கல் அழிதல் அல்லது மறைதல் என அழைக்கப்படும். உணவுக்கும் மணி ஒலிக்கும் இருந்த தொடர்பு நாளடைவில் மங்கியதால் நாய் சம்பவத்தை மாற்றிக் கொண்டதாக கருதப்படும். இவ்வாறு அழிந்த துலங்கல் சில சந்தர்ப்பங்களில் மீண்டும் தானாகவே ஏற்படவும் இடமுண்டு உதாரணமாக மணி ஒலிக்கு மட்டும் நாயின் உமிழ்நீர் சுரத்தல் தடைப்பட்டு பிரிதொரு சந்தர்ப்பத்தில் மணி ஒலி உமிழ்நீர் சுரக்கும் இதனைப் பவ்லோ சுயமாகத் தோன்றும் துலங்கல் அல்லது மீண்டும் தோன்றல் ((Spontaneous Recovery) என அழைத்தார்.

 

மணியோசைக்குத் துலங்கல் நிபந்தனைப்படுத்தப்பட்ட நாய் அது போன்ற ஒலிகளுக்குத் துலங்கியது. உதாரணமாக மணியொலிக்குச் சமமான ஒலியை ஏற்படுவதன் மூலம்  நாயின் உமிழ் நீர் சுரந்தது. இவ்வாறு ஒரு தூண்டியிலிருந்து மற்றாெரு தூண்டிக்கு துலங்கலை மாற்றுதல் தூண்டியின் பொதுமையாக்கம் என அழைக்கப்படும். 

நிபந்தனைப்படாத தூண்டியால் முன்பு ஒரு உயிரியில் ஏற்பட்ட துலங்கலை நிபந்தனைப்படுத்தப்பட்ட தூண்டி ஒன்று ஏற்படுத்துமாறு ஒரு தூண்டிக்கும் துலங்கலுக்குமிடையே ஒரு புதிய தொடர்பு ஏற்படுத்தலே நிபந்தனைப்படுத்தலாகும். பெரும்பாலும் சமமான தூண்டிகளைத் தெரிவு செய்து ஒன்றுக்ககுப்பதிலாக மற்றாென்றை நிபந்தனைப்படுத்துவதன் மூலமும் துலங்களைப் பெற்றக்கொள்ள முடியும் என்பதை இக் கொள்கை சுட்டிக்காட்டுகிறது. 


பவ்லோவின் பரிசோதனையில் இருந்து உணவுக்கு மட்டும் உமிழ் நீர் சுரத்தல் என்ற நிலைமாறி மணியொலிக்கு உமிழ் நீர் சுரத்தல் ஆரம்பமாக்கப்பட்டது. இங்கு ஒலியாகிய தூண்டிக்கும் உமிழ் நீர் சுரத்தலாகிய துலங்களுக்கும் எவ்வித தொடர்பும் முன்பு இருந்திருக்கவில்லை. ஆனால் நிபந்தனைப்படத்தப்பட்ட காரணத்தினால் ஒலிக்கும் உமிழ் நீர் சுரத்தலுக்குமிடையே ஒரு தொடர்பு ஏற்பட்டுவிட்டது. இங்கு நிபந்தனைப்படுத்தப்பட்ட தூண்டி வேறு ஒரு தூண்டிக்காகத் தொழிற்பட்டு முன் தான் ஏற்படுத்தாத துலங்கலை ஏற்படுத்திவிட்டது. இந்த செயற்பாட்டின் மூலமாக கற்றல் எதுவுமின்றி சில தூண்டிகளுக்கு தானாகவே துலங்கல் ஏற்படுவதை மனிதன் உட்பட பல உயிரிகளில் ஏற்படுவதைக் காணலாம். 


இவ் நிபந்தனைப்படுத்தல் கேபட்பாடு கற்றல் - கற்பித்தலில் செல்வாக்குச் செலுத்துவதனைக் காணலாம். பல ஆசிரியர்கள்  அறிந்தும் அறியாமலும் பல சந்தர்ப்பங்களில் இக்கொள்கையை பயன்படுத்துகின்றனர். அந்த வகையில் இக் கோட்பாடனது வகுப்பறைக்கற்பித்தலில் ஆசிரியருக்கு எவ்வளவு தூரம் பயனுடையதாகின்றது என்பதை விஞ்ஞான பாடத்தினை அடிப்படையாகக் கொண்டு. பின்வரும் உதாரணங்களின் மூலமாக ஆராயலாம். 


மாணவர்களிடத்தே நன்நடத்தைகள் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணல் என்பவற்றை மீள வலியுறுத்தல் மூலம் மாணவர்களுக்கு இலகுவாக கற்பிக்கலாம். வகுப்பறையில் முந்தைய நாள் பாடம் திருத்தப்பட்டு சரியான முறையில் விடையளித்த மாணவர்களின் பெயர்களுக்கு எதிராக நட்சத்திப் பெறுமதியை வழங்கலாம். 


இவ் செயற்பாட்டின் மூலம் மாணவர்களிடத்தில் கற்றல் ஈடுபாடு அதிகரிக்க முடியும். மாணவர்கள ; உயர் பெறுமதி நட்சத்திரங்ளை பெறவேண்டும் என்ற நோக்கத்துக்காக  மாணவர்களிடத்தே கற்றல் ஈடுபாடு அல்லது ஆர்வம் அதிகரிக்கும். இந்நிலைமை வெகுமதி என்ற பகுதியினுள் கல்வி உளவியலாளர்கள் உட்படுத்துகின்றனர். வெகுமதி என்ற பரிசுகள் பொருள் சார்ந்ததாகவோ இருக்கலாம் பரிசுகள், சிறப்புப் பொருட்கள் போன்றவற்றை வழங்கலாம். பொதுவாக எல்லா மாணவர்களையும் உள்ளடகக் க் கூடிய வகையில் ஆசிரியர்கள இவற்றைப் பயன்படுத்தலாம். 


மேலும், இவ் வலுவூட்டிகள் என்ற வகையில் பாராட்டுக்களையும் மேற்கொள்ளலாம். இப் பாராட்டுக்கள் சொல்லார்ந்த பாராட்டுக்களாக “நல்லது” ,“மிக்க நல்லது” ,“சரியான விடை”, என்றவாராக மாணவர்களை தூண்டக் கூடிய சொற்களைப் பயன்படுத்தலாம். சொல்சாராப் பாராட்டுக்களாக தலையை அசைத்தல், புன்னகைத்தல், நட்புணர்வுடன் நோக்கல் போன்றவற்றின் மூலம் மாணவர்களைத் தூண்டலாம்,


இடைநிலை மாணவர்களுக்கு தவனைப்பரீட்சை நடைபெறுவதோடு அப்பரீட்சை முடிவில் அம்மாணவர்களுக்கு மதிப்பெண்களுடன் கூடிய அறிக்கை வழங்கப்படும். அதுவும் ஒன்றுகூடல் மண்டபத்தில், எல்லா மாணவர்கள் முன்னிலையில் நிகழும். அதாவது நல்ல மதிப்பெண்களைப் பெற்ற மாணவன் பாராட்டப்படுவதினால் அம்மாணவனுக்கு மீண்டும் மீண்டும் அப்பாராட்டை பெறவேண்டும் என்ற தூண்டல் உருவாகும். அதாவது மாணவர்களின் மனவெழுச்சியை தூண்டி அவர்களை முன்னேற்ற பாதையில் செலுத்த இம்முறை பயன்படும் இதில் இன்னொரு துலங்களும் நிகழும். அதாவது ஒரு மாணவன் பாராட்டப்படும் போது மற்றய மாணவர்களும் தானும் இவ்விடத்தை அடைய வேண்டும் என தூண்டப்படுவர். இவ்வாறே விஞ்ஞான பாடத்தை கற்பிக்கும் போது ஆசிரியர் இப்பாடத்தில் அதிக மதிப்பெண்களை பரிசுகளை வழங்குதல் என்ற நிபந்தனையை வழங்குகிறார் எனின் அதனைக் கேட்ட மாணவர்கள் தான் அந்த பரிசை அடைய வேண்டும் என்ற நோக்கிலே சிறப்பாக கற்க முனைவர். அவ்வாறு முதல் தடவையில் ஒரு மாணவன் பரிசில் பெறுவதை காணும்  மற்ற மாணவர்கள் தாங்களும் அத்தகைய பரிசிலினை பெற வேண்டும் என்ற வகையில் படிப்பதில் அதிக கவனம் செலுத்துவர். இதன் அடிப்படையிலேயே பரிசளிப்பு நிகழ்வுகளும் விளையாட்டுப் போட்டிகளின் வெற்றிக் கொண்டாட்டங்களும் நடத்தப்படுகின்றன. 


வகுப்பறைக் கற்பித்தலில் மாணவர்களுக்கு விளங்கும் முறைக்கேற்ப இலகுவாக கற்பதன் மூலம் அவர்கள்  சிறந்த துலங்களை அடைவார்கள் காலம் செல்லச் செல்ல மணியொலியுடன் நாய்க்கு உணவு கொடுக்கப்படாவிடின் அது நாளடைவில் உமிழ் நீர் சுரப்பதனை நிறுத்திவிடும். இவ்வாறு துலங்கலை காட்டாது இருத்தல் துலங்கல் அழிதல் அல்லது மறைதல் எனப்படுகிறது. இதனைக் வகுப்பறைக் கற்பித்தலில் நோக்குவோமாயின், இடைநிலை மாணவர்களுக்கு தரம் 10, 11 ஆகிய வகுப்புக்களின் விஞ்ஞான பாடத்தில் உயிரியல், பௌதீகவியல், இரசாயனவியல் போன்ற பாடங்கள் தர்க்க சிந்தனை வாய்ந்ததாக காணப்படும் இதனைக் கற்பிக்கும் ஆசிரியர் வாய் வார்த்தையாக கற்பிக்கும் போது அது குறிப்பிட்ட நேரத்திற்கே விளங்கக்கூடியதாக இருக்கும். நாளடைவில் அது மறந்து விடும் இதுவே மறைதல் ஆகும். இதனால் அங்கு துலங்கள் இடம்பெறாது. இதனைப் போக்குவதற்கு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இலகுவாக பதியக்கூடிய முறைகளை பின்பற்ற வேண்டும். உதாரணமாக மூலகங்களை ஞாபகப்படுத்த Hi, he little, boy……… என்ற பாடலினை சொல்லிக் கொடுத்தல். கதி, வேகம், ஆர்முடுகள் போன்றவற்றின் சமன்பாடுகளை வகுப்பறையில் காட்சிப்படுத்தல். அவ்வாறே விஞ்ஞான பரிசோதனைகள் உள்ளடங்கிய கண்காட்சிகளை பாடசாலை மட்டத்தில் ஏற்பாடு செய்தல். இதன் போது குறிப்பிடட் விடயம் எப்போதும் ஞாபகத்தில் இருக்கும். 


ஓர் அங்கியின் தொழிற்பாட்டை அல்லது அதன் அவையகத்தை மாணவர்களுக்கு வெறுமனே கூறும் போது அதனை மறந்து விடுவர். இதனை விடுத்து அவ் அங்கியின் உறுப்பை செயன்முறை ரீதியாக பார்க்கும் போது அது மனதில் பதியும். இல்லையேல் அங்கு துலங்கலற்ற மறைதல் ஏற்படும். இதனைக் கருத்தில் கொண்டே பரிசோதனைகள் ஆய்வு கூடங்களில்  மேற் காெள்வதன் தன் மூலம் கற்பிக்கப்படுகிறது. ஒரு கோழி எவ்வாறு உருவாகிறது என்பதை புத்தகத்தின் வாயிலாக கற்கும் போது நாளடைவில் அது மறந்து விடும் இதனைக் கண்கூடாக பார்க்கும் செயன் முறையாக செய்யும் போது நினைவிலிருக்கும். மாணவர்களிடையே கற்பித்தலை மேற்கொள்ளும் போது பரிசோதனைகளை வெறுமனே கற்பிக்காமல் அவர்களை செய்து பார்க்க செய்தல் வேண்டும். உதாரணமாக தாவரமானது சூரிய ஒளியில் வைத்தும் ஒளிபடாமலும் வைத்து அவதானிப்பதன் மூலம் ஒளித்தொகுப்பு பற்றி அறிந்து கொள்வர். அவ்வாறே இவ்வாறான செயன்முறைகளை குழுவாகவச் செய்வதன் மூலமும் மறக்காது ஞாபகத்தில் வைப்பர் எனலாம். 


ஒரு தூண்டி – துலங்கள் இணைப்பு நிபந்தனைப்படுத்தப்பட்ட பின்பு குறித்த தூண்டியுடன் ஒத்த வேறு தூண்டிகளும் அதே தலங்களை கொடுக்கின்றன. இதுவே பொதுமைப்படுத்தல் விதி ஆகும். இதனை கனிஷ்ட இடைநிலை பிரிவு வகுப்பறையில் சில உதாரணங்களின் வாயிலாக விளக்கலாம். 5ம் தரத்தில்  சுற்றாடல் பாடத்தின் விளக்கமே தரம் 6,7 வகுப்புக்களில் விஞ்ஞான பாடமாக கற்பிக்கப்படுகிறது. உதாரணமாக தரம் 5இல் அங்கியின் வாழ்க்கை வட்டம் கனிஷ்ட இடைநிலை வகுப்புக்களில் வாழ்கைச் சங்கிலி என விரிவாக்கம் அடைகிறது. இங்கு மாணவன் கற்கும் முன்னமே கற்ற பாடம் நினைவிற்கு வரும். அப்பாடத்திற்கு நிபந்தனைப்படுத்தப்பட்டு தூண்டப்பட்டு விடுகிறான்.

.  

எனவே இவற்றை தொகுத்து நோக்கும் போது பவ்லோவின் நிபந்தனைப்படுத்தல் கோட்பாடு விஞ்ஞானப்பாடத்தை கற்பிப்பதில் பெறும் பயனுடையதாக அமைகிறது எனலாம்.  இக் கோட்பாடானது கணிதம், தமிழ், புவியியல் போன்ற சகல பாடங்களுக்கும் பொறுத்தமானதாகும். ஆசிரியர்கள் இதனைப் பின்பற்றுவதன் மூலம் வினைத்திறனான கற்பித்தலை ஏற்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

 உசாத்துனைகள் 

1.கலாநிதி அருள்n;மாழி.செ, (2017), கற்பித்தலுக்கான உளவியல்துர்க்கா பிரின்டரஸ்;, கொக்குவில்.

2. முத்துலிங்கம்.ச,(2010), கல்வியும் உளவியலும், சேமமடு பதிப்பகம்.

-RASIMA. B.F (BA-R).

EASTERN UNIVERSITY, SRI LANKA.


Comments

Popular posts from this blog

Case Study Analysis Of MAS Holdings

'வினைத்திறனான கற்றல் கற்பித்தல் செயற்பாடானது மூவழித்தொடர்பாடல் நிகழ்ச்சியினூடாக நடைபெறுவதன் மூலம் ஆசிரியர் - மாணவர் இடைத்தாக்கம் சிறப்பாக அமையும். இக்கூற்றின் அடிப்படையில் உமது கருத்துக்களை முன்வைத்து விளக்குக.

Theory of Instinct [மக்டூகலின் இயல்பூக்கக் கொள்கை]