தொழில்சார் ஆலோசனை வழங்கல் செயற்பாட்டில் ஈடுபடுவோர் தொழில்சார் ஆலோசனை தொடர்பில் பல்வேறு கோட்பாடுகளைப் பற்றிய தெளிவு பெற்றிருக்க வேண்டும். அத்தகைய கோட்பாடுகளை தொழில்சார் ஆலோசனைக்கு உதவுமாற்றை விளக்குக.


தற்காலத்தில் உள்ள வழிகாட்டல் ஆலோசனை வழங்கல்   வகைகளில் தொழில்சார் ஆலோசனை வழங்கல் செயற்பாடு மிகவும் முக்கியமானதாகும். இருவருக்கு அல்லது இரண்டுக்கு மேற்பட்டோர் இடையே நிலவும் இயக்க ரீதியான பயனுறுதி மிக்க தொடர்புகளின் ஊடாக உருவாகின்ற உதவி வழங்கல் செயல் முறையே தொழில் வழிகாட்டல் ஆலோசனை வழங்கல் சேவை எனப்படுகின்றது. இத்தகைய தொழில் சார் ஆலோசனை தொடர்பில் ஈடுபடுவோர் பின்வரும் கோட்பாடுகளைப் பற்றிய தெளிவு பெற்றிருத்தல் வேண்டும்.

 

  • கிரின்ஸ்பேர்கின் தொழில் வழிகாட்டல் கொள்கை

  •   றொபேட் ஹோபொக்கின் தொழில் வழிகாட்டல் கொள்கை

  • ஆன்றோவின் தொழில்சார் ஆலோசனை வழங்கல் கொள்கை

  •   ஹோலன்ட்டின் தொழில் வழிகாட்டல் கொள்கை

  •  டொனால்ட் சுபரின் தொழில்  வழிகாட்டல் கொள்கை


இக் கோட்பாடுகளில் கிரின்ஸ்பேர்கின் தொழில் வழிகாட்டல் கொள்கை,  ஆன்றோவின் தொழில்சார் ஆலோசனை வழங்கல் கொள்கை ஆகிய இரண்டினை பற்றியும் அவை தொழில் வழிகாட்டல் ஆலோசனைக்கு உதவுமாற்றையும் கீழே விரிவாக நோக்குவோம்.


  • கிரின்ஸ்பேர்கின் தொழில் வழிகாட்டல் கொள்கை


ஒருவர் ஒரு குறித்த சந்தர்ப்பத்தில் எடுத்த முடிவுக்கு அமையவே தனது தொழிலை தெரிவு செய்கிறார் எனக் கூறிவிட முடியாது என்பதே இவரது கருத்தாகும். தொடர்ந்தும் பல வருடகாலமாக எடுக்கப்படும் தொடரான முடிவுகளின்  பெறும்பேறாகவே ஒருவர் தனது தொழிலை தெரிவு செய்து கொள்கிறார். ஒருவர் தொழில் தொடர்பாக எடுக்கும் முடிவுகள் அவரது வயதுக்கு அமைய வேறுபடுகின்றது. ஒருவரது தொழில்  தேர்வுச் செயல்முறையை மூன்று கட்டங்களாக பிரித்து விளக்குகின்றார். அந்த வகையில், 


  1. கற்பனைத்  தெரிவுக்  காலம்  (11 வயது வரை)

  2.  அனுபவ ரீதியில் தெரிவு செய்யும் பருவம் (11 தொடக்கம் 17 வரை)

  3.  எதார்த்த ரீதியில் தெரிவு செய்யும் பருவம் (17 வயதில் பின்னர்)



கற்பனைத்  தெரிவுக்  காலம்  (11 வயது வரை)


இப்பருவ பிள்ளைகள் தனது எதிர்காலத் தொழில் தொடர்பாக்க் கற்பனை ரீதியிலேயே சிந்திப்பர். இப்பருவ பிள்ளைகள் பெற்றுள்ள அனுபவங்கள் மிக வரையறுக்கப்பட்டதாகும். அவர்களது அறிவாற்றல்கள் விருத்தியடையும் நிலையில் உள்ளன. எனவே தாம் காண்பவற்றை அல்லது கேட்பவற்றை அடிப்படையாக்க் கொண்டே அவர்கள் முடிவுகளை எடுப்பர். இப்பருவத்தில் பிள்ளைகளின் விருப்பு வெறுப்புக்கள் முக்கியமானவையாக அமைகின்றன. அவர்கள் தொழில் தொடர்பாக வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு விதமாக கருத்து தெரிவிப்பர். ஒரு சந்தர்ப்பத்தில் வைத்தியராக வரவேண்டும் எனக் கூறும் பிள்ளை பிரிதொரு சந்தர்ப்பத்தில் இராணுவ வீரனாக வர வேண்டும் எனக் கூறுவதற்கான காரணம் இதுவாகும்.


அனுபவ ரீதியில் தெரிவு செய்யும் பருவம்

இப்பருவத்தை நான்கு உப்பருவங்களாக்க் காட்டுகின்றார். 

  • ஆர்வத்திற்கு அமைய தெரிவு செய்யும் பருவம் ( 11 -12 வயது வரையுள்ள பருவம்)
  • இனங்கண்ட ஆற்றல்களுக்கு அமைய தெரிவு செய்யும் பருவம் ( 13 - 14 வயது வரை)
  • தாம் மதிப்பவற்றுக்கு அமைய தெரிவு செய்யும் பருவம் ( 15  - 16 வயது வரையிலான பருவம்)
  • மாறு நிலைப்பருவம் (17 வயது )


கவர்ச்சிகளுக்கு அமைய தெரிவு செய்யும் பருவத்தில் பிள்ளைகள் தமது கவர்ச்சிகளை முதன்மையாக்க் கொண்டே தொழில் பற்றி சிந்திக்க முனைகின்றனர்.  யாதேனும் ஒரு தொழில் தனது எதிர்பார்ப்புகளுக்கும் ஆற்றல்களுக்கும் பொருத்தமாக உள்ளதா என இப்பருவத்தில் பிள்ளை சிந்தித்துப் பார்ப்பதில்லை. இனங்கண்ட ஆற்றல்களுக்கு அமையத் தொழிலைத் தெரிவு செய்யும்போது அப்பிள்ளை தொழில் தொடர்பாக தான் பெற்றுள்ள சில பல திறன்களின் அடிப்படையிலேயே சிந்திக்க முற்படுகிறது. 


15 - 16 வயதை அடைந்த கட்டிளமைப் பருவத்தினர் தாம் மதிக்கும் சில பல பெறுமானங்களை அடிப்படையாக்க் கொண்டே தமது தொழில் பயிற்சி பற்றி சிந்திப்பர். ஏனையோருக்கு உதவி புரிவதன் மூலம் திருப்தியும் மகிழச்சியும் அடையலாம் எனும் கருத்தை மதிக்கும் பிள்ளை அவ்வாறான ஒரு தொழிலை செய்ய முனையும் பணத்தை பெரிதாக மதிக்கும் பிள்ளை அதிகளவு பணமீட்டக்கூடிய இலபமீட்டக்கூடிய ஒரு தொழிலைத் தெரிவு செய்ய முற்படும். கிறின்ஸ் பேர்க்கின் கருத்துப்படி ஏறத்தாழ 17 வயதை அடைந்த மாறுநிலைப் பருவ இளைஞன் தொடர்ந்தும் கல்வி கற்பதா தொழிலுக்குச் செல்வதா எனும் இரண்டும் கட்ட நிலைக்கு உள்ளாவதாக கிறின்ஸ்பர்க் கருதுகின்றார். 


யதார்த்த ரீதியில் தெரிவு செய்யும் பருவம்


கிறின்ஸ்பேர்க் இப்பருவத்தை மேலும் மூன்று துனைப்பருவங்களாக வகுத்துக் காட்டியுள்ளார். 

ஆய்வுப்பருவம்

உறுதிநிலைப்பருவம்

விசேட பருவம்


ஒருவர் வெவ்வேறு தொழில்கள் தொடர்பான விபரங்களைத் தேடியறியும் பருவமே ஆய்வுப்பருவமாகும். உறுதிநிலைப் பருவத்திலேயே தொழில் தேர்வு பெரிதும் நிலைபேறடைகின்றது என்பது கிறின்ஸ் பேர்க்கின் கருத்தாகும். குறித்த ஒரு தொழிலை தெரிவு செய்யும் போது அத்தொழிலில் பிரவேசிக்கும் பருவத்தையே கிறின்ஸ் பேர்க் விசேட பருவம் என்கிறார்.

 

தொழில் ஆலோசனை தொடர்பில் கிறின்ஸ் பேர்க்கின் கருத்துக்கள்

  • ஒருவர் தொழில் தொடர்பாக எடுக்கும் முடிவுகள் நீண்ட காலமாக அவரிடத்தே விருத்தி அடைந்துள்ள அனுபவங்களுடன் தொடர்படையாவையாகும் தொழில்சார் அபிவிருத்தி என்பது ஒரு தொடர்ச்சியான செயன்முறையாகும்.

  • ஒருவர் தனது அனுபவங்களுக்கு அமையாவே தனது விருப்பு வெறுப்புக்கள் மனப்பாங்குகள் நடத்தைக் கோலங்கள் ஆகியவற்றைக் கற்றுக் கொள்ளவும் திறன்களை வளர்த்துக் கொள்ளவும் செய்கின்றான்.

  • ஓருவரது முழு வாழ்க்கை காலத்திலும் அனுபவங்கள் வளப்படுத்தப்படிவதற்கு வாய்ப்புக் கிடைக்கப் பெறுவது மிகப் பயனுடையதாக அமையும்.

  •  யதார்த்த ரீதியில் தெரிவு செய்யும் பருவத்தில் ஒருவர் பல்வேறு தொழில்கள் தொடர்பான விடயங்களைத் தேடியரிய முயற்சிப்பதால் வேலையுலகு தொடர்பான தெளிவான விளக்கத்தை பெற்றுக் கொள்வதற்கு இப்பருவம் பொருத்தமானது.


ஆன்றோவின் தொழில்சார் ஆலோசனை வழங்கல் கொள்கை


 ஒருவரது சிறுபராய அனுபவங்கள் அவரது தொழில்சார் முடிவுகளில் பங்களிப்புச் செய்கின்றன எனும் கருத்தை ஏற்றுக் கொள்கின்றார். ஒருவர் தெரிவு செய்து கொள்ளும் தொழிலுக்கும் அவரது சிறுபராயத் தேவைகள் நிறைவுபெற்ற விதத்துக்கும் இடையே தொடர்பு உண்டு.  ஆன்றோவினது கருத்துப்படி பிள்ளையினது விருப்புகள் நிறைவேற வேண்டியது மிகமிக அவசியமானதாகும். இவ்விருப்புக்களுள் பெரும்பாலானவை உணர்வின் தேவைகளால் தீர்மானிக்கப்படுகின்றனவையாகும். ஒருவரது விருத்தி அவர் தனது தேவைகளை நிறைவு செய்து கொள்ளும் விதம் ஆகியவற்றுக்கு அமையவே அவரது தொழில்சார்ந்த முனைப்பு உருவாகின்றது.


சிறுபிள்ளையினது பெற்றோர் கொண்டிருக்கும் மனப்பாங்குகள் அப் பிள்ளையின் தேவைகள் நிறைவடைவதில் பெருமளவு பங்களிப்புச் செய்கின்றன என்பது இவரது கருத்தாகும். எதற்கும் மறுப்பு தெரிவிக்கும் தன்மை கொண்ட பெற்றோர் இடத்தில் வளரும் பிள்ளை தொழிலை தெரிவு செய்யும்போது பொதுவாக பொதுமக்களுடன் அதிக தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய வகையிலான தொழிலை தெரிவு செய்யாது தவிர்க்க முனைகின்றனர்,  பொதுமக்களுடன்  தொடர்புகள் அற்ற  தொழிலை தெரிவு செய்வதில் அவர்கள் விருப்பு காட்டுவர், எனினும் குடும்பத்தில் கணிப்பை பெற்று வளரும் பிள்ளையிடத்தே உணர்வு சிறப்பாக விருத்தியடைந்து இருக்குமாதலால் அவ்வாறான பிள்ளை பொதுமக்கள் உடனே இடைத் தொடர்புகளைக் கொண்ட தொழில்களை பெரிதும் விரும்பக் கூடும் இவ்வாறான ஒருவர் பொதுத் தொடர்புகளற்ற ஒரு தொழிலுக்கு தெரிவுசெய்யப்படினும் அவர் ஏனையோரை சந்தேகக்கண் கொண்டு நோக்கும் தன்மையோ ஏனையோரின் தாக்கத்தில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமெனும் தன்மையோ கொண்டிருக்க மாட்டார்.


ஆன்றோர் தொழில்களை வகைப்படுத்தியுள்ளார். சேவைகள், வணிகம் சார்ந்தவை, ஒழுங்கமைப்புக்கள் சார்ந்தவை, தொழில்நுட்பம் சார்ந்தவை, திறந்தவெளி சார்ந்தவை, விஞ்ஞானபூர்வமானவை, பண்பாட்டு ரீதியானவை கலைகளும் அழகியலும் என பரந்த எட்டு வகைகளாக தொழில்களை வகுத்து காட்டியுள்ளார் இவ் எட்டும் பிரதானமாக இரு பிரிவுகளுக்குள் அடங்கும். தொழில் சார்ந்தவை, திறந்தவெளி சார்ந்தவை ஆகிய தொழில் துறைகள் சடப்பொருள்கள் எனும் வகையினுள்ளும், சேவைகள் வணிகஞ் சார்ந்தவை, ஒழுங்கமைப்புக்கள், கலைகளும் அழகியலும் ஆகிய தொழில் துறைகள் ஆட்கள் எனும் வகையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அவ்வாறு தொழில் துறைக்கு உரிய ஆளுமை பண்புகள் தொடர்பான விளக்கத்தையும் முன்வைத்துள்ளார். 


  தொழில்துறை           ஆளுமை பண்புகள்

  •  சேவைகள்          -          ஆட்களுடன் நல்லிணக்க தொடர்புகளைப் பேணும் திறமை
  •  வணிகம் சார்ந்தவை     -       ஏனையோரை தன் வயப்படுத்தும் தன்மை
  •  ஒழுங்கமைப்பு சார்ந்தவை   -    உறுதியான பொருளாதார பெறுமானங்களை கொண்டிருத்தல் ஏனையோரை தன்வயப்படுத்தும் தன்மை
  •  தொழில்நுட்பம் சார்ந்தவை  -  தொழில்நுட்ப அறிவை கொண்டிருத்தல்
  •  திறந்தவெளி சார்ந்தவை   -    சிறப்பான உடல்வலிமை உயர் அறிவாற்றல்
  •  விஞ்ஞானபூர்வமானவை குறித்த விஞ்ஞானபூர்வ அறிவும் திறன்களும்
  •  பண்பாடு சார்ந்தவை - ஆளிடைத் தொடர்புகளைப் பேணும் தன்மை
  •  கலைகளும் அழகியலும் - அழகியல் பண்புகள்


ஒவ்வொரு துறையிலும் பயிற்சியற்ற மட்டம். தொடக்கம் சுதீன வாண்மைத்துவ மட்டம்  வரையிலான ஆறு மட்டங்கள் உள்ளன என ஆன்றோ எடுத்துக்காட்டியுள்ளார். ஒருவன் தனது அடிப்படைத் தொதொழில் துறையின் உள்ளேயே ஒரு தொழிலில் இருந்து மற்றொரு தொழிலுக்கு மாறுவது உண்டு என எடுத்துக் காட்டியுள்ளார்  பொதுவாக தமது தொழில்கள் மட்டத்தையே அவர்கள் மாற்றிக் கொள்வர்,

 ஆன்றோரவின்  கொள்கைகள் தொழில் சார் ஆலோசனைக்கு உதவும் விதத்தினை கீழே விரிவாக நோக்கலாம் குறிப்பிடலாம்


  •  குடும்பத்தின் உளவியல் தொடர்பு கோலம் பெற்றோர் தமது பிள்ளை வளர்ப்பின் போது தமது பிள்ளைகள் மீது திணிக்கும் உளவியல் தாக்கங்கள் ஆகியன பற்றிய தொழில் சார் ஆலோசனை வழங்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் 

  • பெற்றோர்களுக்கான ஆலோசனை வழங்கல் தொடர்பாக 15 கருத்துக்கள் பயனுள்ள வையாகும் 

  • பிள்ளை எனது எதிர்கால தொழில் சார் வாழ்க்கை தொடர்பாக பெற்றோரின் எதிர்பார்ப்புக்கு அமைவாக பெற்றோர் தங்களையும் நடத்தைக் கோலங்களை விரிவுபடுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும்

  •  ஆனால் முன்வைக்கப்பட்டுள்ள ஆளுமை பண்புகள் தொடர்பான விவரமான தொழில்சார் ஆலோசனை வழங்கல் செயல்முறையின் போது ஆலோசகருக்கு மட்டுமன்றி ஆலோசனை பெறுவதற்கும் கூட கணிசமான அளவு வழிகாட்டலை வழங்குகின்றது

தான் தெரிவு செய்து கொள்ளும் தொழிலின் ஊடாக ஒரு குறித்த அளவுக்கேனும் தமது தேவைகள் நிறைவேற வேண்டும் என்று விளக்குகின்றார் தேவைகள் நிறைவு செய்யாத தொழில் அத் தொழிலில் ஈடுபடுவோருக்கு மனநிறைவை ஏற்படுத்தக்கூடியதாக அமையாது அவ்வாறான தொழிலினால் அவர் தொழில்சார் திருப்தியை அடைந்து விடுவதில்லை தமக்குப் பொருத்தமான திருப்தி தரக்கூடிய ஒரு தொழில் கிடைப்பின் மட்டுமே அவர் அர்ப்பணிப்புடன் தொழிலில் ஈடுபடுவார். 


எனவே மேற்குறிப்பிட்டவாறு  இரு கோட்பாடுகளும் தொழில்சார் ஆலோசனைக்கு உதவுகின்றன. இத்தகைய கோட்பாடுகளை தொழில் சார் ஆலோசனை வழங்கும் ஆலோசகர்கள் கட்டாயமாக அறிந்திருத்தல் வேண்டும் அப்பொழுது ஆலோசனைக் செற்பாடு வெற்றிகரமானதாக அமையும் எனலாம்.



Comments

Popular posts from this blog

Case Study Analysis Of MAS Holdings

'வினைத்திறனான கற்றல் கற்பித்தல் செயற்பாடானது மூவழித்தொடர்பாடல் நிகழ்ச்சியினூடாக நடைபெறுவதன் மூலம் ஆசிரியர் - மாணவர் இடைத்தாக்கம் சிறப்பாக அமையும். இக்கூற்றின் அடிப்படையில் உமது கருத்துக்களை முன்வைத்து விளக்குக.

Theory of Instinct [மக்டூகலின் இயல்பூக்கக் கொள்கை]