'நாட்டின் தேசிய இலக்கு அடையப்படவேண்டுமாயின் அதன் அடிப்படையான வகுப்பறைமட்டக் கற்றல் - கற்பித்தல் செயற்பாடு வினைத்திறனாக அமையவேண்டும்.' இக்கூற்றின் அடிப்படையில் கலைத்திட்ட இலக்கு, பாடசாலையின் இலக்கு, இறுதியான தேசிய இலக்கு எவ்வாறு தொடர்புபடுகின்றதென்பதை ஆராய்க.

 

கல்வியின் ஊடாக அனைத்தையும் பெற்றுக் கொள்ள முடியும். கல்வியானது சகல மாற்றங்களுக்கும் காரணமாக அமைகின்றது. இந்த வகையில் படிப்படியாக முன்னேற்றமடைந்து வந்த கல்வியின் ஊடாக நாட்டினை மாற்றியைமக்க முடியும் என்பதன் அடிப்படையிலையே ஒவ்வொரு நாட்டிலும் அதன் தேசிய இலக்கினை அடைவதற்கான அடிப்படைகள் கலைத்திட்டத்தின் ஊடாக பாடசாலையில் இடம்பெறுகின்றன. இதன் ஊடாக பாடசாலையின் இலக்கு அடையப்பட்டு அதனைத் தொடர்ந்து தேசிய இலக்கு அடையப்படுகிறது. இந்த வகையில், கலைத்திட்ட இலக்கு, பாடசாலையின் இலக்கு, தேசிய இலக்கு என்பவற்றை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். முதலில் கலைத்திட்டம் (Curriculum) பற்றி அறிந்து கொள்ள வேண்டும். அதனைக் கீழே விரிவாக நோக்குவோம்.



Curriculum என்ற ஆங்கிலப் பதத்துக்கு ஈடாக பல தமிழ் பதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, கல்வித் திட்டம், கல்வி ஏற்பாடு, பாட ஏற்பாடு, பாடவிதானம், கலைத்திட்டம் என்பன அவற்றுள் சிலவாகும். எமது நாட்டில் கலைத்திட்டம், பாடவிதானம் எனும் சொற்களே பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. Curriculum எனும் ஆங்கிலப்பதம் currere எனும் லத்தீன் சொல்லில் இருந்து மருவியதாகும். இலத்தின் மொழியில் currere என்பது ஓடுதல் அல்லது ஓடிக்கொண்டு இருக்கும் நடவடிக்கை (action of running), நடவடிக்கை (course of action) ஓட்டப்பந்தயம் (race/ racecourse), தேர் (chariot) எனப் பலவாறாக அர்த்தப்படுகிறது. இதனால்தான் என்னவோ, இன்றுள்ள பல கலைத்திட்டங்கள் மாணவர்கள் பல தொடரான தடைகளை தாண்ட வேண்டியதாக உள்ளது. கலைத்திட்டம் என்பதற்கு பல வரைவிலக்கணங்கள் அறிஞர்களினால் முன்வைக்கப்படுள்ளன. அந்தவகையில்,


ஸ்டேன்ஹவுஸ் (Stenhouse 1975)

'கலைத்திட்டம் – கற்பித்தல் நடைமுறை பற்றிய திட்ட விபரம் (விபரக்குறிப்பு) ஆகும். மாறாக பூர்த்திசெய்யப்பட வேண்டிய பாடத்திட்டமோ சாதனப் பொதியோ அல்ல. எந்தவொரு கல்வி சார் அபிப்பிரயங்களையும் பரிசோதனை செய்துபார்க்கக் கூடிய கருதுகோளாக மாற்றுவதாற்கான வழியொன்றாகவும் மற்றும் வெறுமனே ஏற்றுக் கொள்ளப்படுவதனை விடவும், தீர்க்கமாக சோதிக்க அழைக்கக் கூடியதொரு வழியாகவும் இது கருதப்படுகிறது ஸ்டேன்ஹவுஸ், கலைத்திட்டத்தை செயன்முறையாக நோக்குகிறார். இத்தகைய செயன்முறையில், ஆசிரியர்கள் கல்விசார் எண்ணங்களை கடத்துபவர்களாகவும், அவை பற்றிய தீர்ப்புக்களை வழங்குபவர்களாகவும் வகிபங்கேற்க வேண்டியுள்ளது.


• டாபா(Taba 1962)

'கற்றலுக்கான ஒரு திட்டமே கலைத்திட்டமாகும்'.


Tanner and Tanner 1975)

'பாடசாலையொன்றின் வழிகாட்டலின் அடிப்படையில், ஒழுங்கமைக்கப்பட்ட அறிவு மற்றும் அனுபவங்களாக வடிவமைக்கப்பட்ட திட்டமிட்ட மற்றும் வழிகாட்டப்பட்ட கற்றல் அனுபவங்களும் அடைய எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளுமே கலைத்திட்டம் எனப்படுகிறது.


Eraut et al. (1975)

பாட அலகுகள் திட்டமிடப்படுகையில், கற்றல் இடம்பெறுகையில் உள்ள பொதுவான மாதிரிசட்டகமொன்றை தீர்மானிக்கின்ற, எவை கற்பிக்கப்படல் வேண்டும், எவ்வாறு அவை கற்பிக்கப்படல் வேண்டும் என்பது பற்றிய பரந்துபட்ட தீர்மானங்களே கலைத்திட்டமாகும்.


பொதுவாக பாடத்திட்டம், பாடஉள்ளடக்கம், கற்றல் அலகுகள் முதலியவற்றுடன் குறிப்பிட்ட நோக்கத்தின் அடிப்படையில் எதிர்பார்க்கப்பட்ட இலக்கினை அடைவதற்காக ஆசிரியர் தனது கற்றல் அனுபவங்களினூடாக அடையப்படும் செயற்பாடு கலைத்திட்டம் (Curriculum) என கருதப்படுகிறது. மேலும் ஒரு நாட்டின் தேசிய இலக்குகளை அடைந்து கொள்ளவும் அங்குள்ள சமூகத்தில் வாழும் நபரொருவர் எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் சவால்களை சமாளிக்கவும், அறிவு, திறன், மனப்பாங்கு சிறந்த ஆளுமையுடைய சிறந்த பிரஜையாக உருவாக்கவும் வேண்டியும் திட்டமிடப்படுகின்ற கல்வி அனுபவங்களின் சேர்வை கலைத்திட்டம் ஆகும். எனவும் வரைவிலக்கணப்படுத்தலாம்.


கலைத்திட்டத்தின் வகை (Types of Curriculum)

கலைத்திட்டங்களை அவற்றின் அமைப்பு, நோக்கங்கள், செயல்படு முறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் சில பெரும் பிரிவுகளுக்குட்படுத்தலாம்.

1. பாடங்களை மையமாகக் கொண்டவை

2. இணைத்துக் கற்பித்தலை மையமாகக் கொண்டவை

3. முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டவை

4. உள்மையக் கலைத்திட்டம்

5. மாணவர்களை மையமாகக் கொண்ட கல்வித் திட்டம்

6. வாழ்க்கை மையக் கலைத்திட்டம்


கலைத்திட்டத்தினைக் குறிக்கும் பல்வேறு கண்ணோட்டங்கள் இருக்கின்றன. இதனால் பல்வேறு வகையான கலைத்திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவைகளைப் பின்வருமாறு விவரிக்கலாம். கலைத்திட்டத்தில் எந்தப் பண்பு முக்கியமாக மேலுயர்த்தப் படுகின்றதோ அதுவே மையப்படுத்தலுக்கு உள்ளடக்கப்பட்டு அப்பண்பு தொடர்பான பெயர் கலைத்திட்டத்துக்கு இடப்படுகிறது.

1. மாணவர் மையக் கலைத்திட்டம்.

2. கற்றல் மையக் கலைத்திட்டம்.

3. பரீட்சை மையக் கலைத்திட்டம்.

தேசிய இலக்கை அடைவதற்கான அடிப்படையில் நாட்டு மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் ஒவ்வொரு பாடசாலையிலும் சமூகம் என்ற தொகுதி காணப்படும். சமூகம் பாடசாலையின் புரிந்துணர்வின் அடிப்படையில் செய்வதன் மூலமே பாடசாலையின் இலக்குகள் அடையப்படும். பாடசாலையின் இலக்கானது சமூகத்தின் எதிர்பார்ப்புகளை ஈடுசெய்ய வேண்டும். எனவே நடைமுறைப்படுத்தப்படும் கலைத்திட்ட அமைப்பானது வினைத்திறனான முறையில் செயற்பட 4 மூலாதாரங்கள் அடிப்படையாக அமைகின்றன.

1. நோக்கங்களும் குறிக்கோளும் : அமுல்ப்படுத்தப்பட வேண்டிய கலைத்திட்டத்தின் நோக்கங்களும் குறிக்கோளும் பாடசாலையின் இலக்கை மையமாகக்கொண்டிருக்க வேண்டும்.

2. பாடத்திட்டம் அல்லது பாடவிடயங்கள் : பாடசாலையினூடாக கலைத்திட்டத்தின் நோக்கங்களையும் குறிக்கோளினையும் அடையலாம் என்பதைத் தீர்மானிக்க வேண்டும். பாடவிடயத்தைக் கற்;பிப்பதன் மூலம் அதற்குரிய விசேட குறிக்கோள் மட்டுமே அடையமுடியும். ஆனால் கலைத்திட்டத்தின் நோக்கங்களையும் குறிக்கோள்களையும் அடையவேண்டுமாயின் பாடவியங்களுடன் ஆசிரியர் தனது கற்றல் அனுபவங்களை புகுத்தல் வேண்டும்.

3. கற்பித்தல் முறையும் கற்றல் அனுபவங்களும் : கலைத்திட்டத்தின் நோக்கம், குறிக்கோளினை அடைவதற்கு அதாவது அதைநோக்கி இட்டுச்செல்வதற்கு பாடவிடயங்களுடன் எவ்வாறான கற்பித்தல் முறைகளை உட்;புகுத்தலாம் என்பதையும் எவ்வாறான இணைபாடவிதான செயற்பாட்டில் கலைத்திட்டத்தின் நோக்கினை அடையலாம் என்பதையும். தனது வினைத்திறனான செயற்பாடு மூலம் அடைய எத்தனிக்க வேண்டும்.

4. மதிப்பீடு : கலைத்திட்ட நோக்கத்தினை அடைவதற்காக பெறப்பட்ட பேறுகள் உண்மையில் எதிர்பார்க்கப்பட்ட கலைத்திட்ட நோக்கங்களை அடைகின்றதா என்பதை அசிரியர் மதிப்பீடு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாவிடில் கலைத்திட்டத்தின் நோக்கம் அடையப்பட்டுள்ளதா என்பதை அறியமுடியாதிருக்கும். இவ்வாறு ஏற்படின் குறிப்பிட்ட காலத்தின் பின்பு பாடசாலையின் இலக்கு அடையப்படாமல் தோல்வியில் முடியும்.


மேற்குறிப்பிட்டவாறு கலைத்திட்டத்தினைப் பற்றி அறிந்து கொள்ளலாம் , இத்தகைய கலைத்திட்டத்தின் ஊடாக அடைவதற்கு எதிர்பார்க்கப்படும் இலக்குகள் கலைத்திட்ட இலக்குகளாகும். இது காலத்திற்குக் காலம் கலைத்திட்டத்தின் வகைக்கு ஏற்ப மாற்றமடைந்து வருகிறது. உதாரணமாக மாணவர் மையக் கலைத்திட்டத்தில் மாணவர்களின் சமூகம் சார்ந்த, அறிவு சார்ந்த, உடலியல் சார்ந்த மற்றும் மனவெழுச்சி சார்ந்த அனைத்து நிலைகளிலும் செயல்புரிவதால் இக்கலைத்திட்டம் மாணவர்களின் செயல்மிக்க கற்றலை மேம்படுத்துகின்றது. மாணவர்கள் இக்கலைத்திட்டத்தினால் உலக நடப்புக்களையும் ஆராய்வுடன் தேடுவதால் அவர்களது மனம் மற்றும் உடல் ரீதியான செயற்பாடுகள் நன்கு மேம்படுகிறது. இது மாணவர்களின் விளையாடும் செயலையும், கல்வி கற்றலுக்கான செயல்பாடாகக் கருதுகிறது. மேலும் மாணவர்களுக்குத் திட்டமிடுதல், சோதித்தல், கேள்வி கேட்டல் மற்றும் பரிசோதித்துத் தங்களது கற்றலை உருவாக்கி அதன் மூலம் மக்களைப் பற்றியும், பொருட்களைப் பற்றியும் மற்றும் கருத்துக்களைப் பற்றியும், நிகழ்வுகளைப் பற்றியும் அறிவை வளர்க்கும் திறன் கிடைக்கின்றது. இவ்வாறான திறன்கள் மாணவர்களின் எதிர்கால வாழ்கைக்கு பெரிதும் பயன்மிக்கதாகின்றது.


'நமக்குவேண்டியது என்ன என்பதை விஞ்ஞானரீதியில் நிர்ணயித்து, அதை முறையாக திட்டமிட்டு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அடைவதே 'இலக்கு' எனப்படும்.' இவ்வாறு ஒவ்வொரு பாடசாலையும் தனக்குரிய இலக்கினை நோக்கி செயற்படுகின்றன. அந்த வகையில் பாடசாலை என்பது, ஒரு மாணவன் தன்னுடைய அறிவுவிருத்தி, ஆளுமைவிருத்தி என்பவற்றை விருத்தி செய்வதோடு எதிர்கால உலகின் கல்வி, சமூக பொருளாதார, அரசியல் போன்ற விடயங்களுக்கு முகம் கொடுக்க கூடிய வகையில் மாணவர்களை எதிர்கால உலகிற்கு தயார்படுத்தல் என்பதை உள்ளடக்கும்வகையிலாக இலக்குகளை உருவாக்கிக் கொண்டு அதனை நோக்கி பயணிக்கும் ஒரு சமூக நிறுவனம் பாடசாலை ஆகும். இவ்வாறு பாடசாலையின் இலக்கின் ஊடாக நாட்டின் தேசிய இலக்கு நிறைவேற்றப்படுகிறது.



ஒவ்வொரு நாட்டிற்கும் என இலக்குகள் காணப்படும் அவை தேசிய இலக்குகள் எனப்படும். இத்தகைய இலக்கினை அடையும் வகையிலையே கலைத்திட்டம் தயாரிக்கப்பட்டு அதனை பாடசாலையின் ஊடாக நிறைவேற்றி அதன் ஊடாக நாட்டின் தேசிய இலக்கு அடையப்படுகின்றது.

தேசிய கல்வி ஆணைக்குழு அறிக்கையில் (1992) பின்வரும் தேசியக்கல்விக் குறிக்கோள்கள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.

1. மனித கௌரவத்தைக் கண்ணியப்படுத்தல் எனும் எண்ணக்கருவுக்குள் தேசிய பிணைப்பு, தேசிய முழுமை, தேசிய ஒற்றுமை, இணக்கம், சமாதானம் என்பவற்றை மேம்படுத்தல் மூலமும் இலங்கைப் பன்மைச் சமூகத்தின் கலாசார வேறுபாட்டினை அங்கீகரித்தல் மூலமும் தேசத்தைக் கட்டியெழுப்புதலும் இலங்கையர் எனும் அடையாளத்தை ஏற்படுத்தலும்

.2. மாற்றமுறும் உலகத்தின் சவால்களுக்கு தக்கவாறு முகங்கொடுத்தலோடு தேசிய பாரம்பரியத்தின் அதிசிறந்த அம்சங்களை அங்கீகரித்தலும் பேணுதலும்.

3. மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல், கடமைகள், கடப்பாடுகள் பற்றிய விழிப்புணர்வு, ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள ஆழ்ந்த, இடையறாத அக்கறையுணர்வு என்பவற்றை மேம்படுத்தும் சமூக நீதியும், ஜனநாயக வாழ்க்கை முறை நியமங்களும் உள்ளடங்கிய சுற்றாடலை உருவாக்குதலும் ஆதரித்தலும்.

4. ஒருவரது உள, உடல் நலனையும் மனித விழுமியங்களுக்கு மதிப்பளிப்பதை அடிப்படையாகக் கொண்ட நிலைபேறுடைய வாழ்க்கைக் கோலத்தையும் மேம்படுத்தல்.

5. நன்கு ஒன்றிணைக்கப்பட்ட சமநிலை ஆளுமைக்குரிய ஆக்கசிந்தனை, தற்றுணிவு, ஆய்ந்து சிந்தித்தல், பொறுப்பு, வகைகூறல், உடன்பாடான அம்சங்களை விருத்தி செய்தல்.

6. தனிநபரதும், தேசத்தினதும் வாழ்க்கைத் தரத்தை பேணக்கக்கூடியதும், இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்குப் பங்களிக்கக்கூடியதுமான ஆக்கப் பணிகளுக்கான கல்வியூட்டுவதன மூலம் மனிதவள அபிவிருத்தியை ஏற்படுத்தல்.

7. தனிநபர்களின் மாற்றத்திற்கு ஏற்ப இணங்கி வாழவும், மாற்றத்தை முகாமை செய்யவும், தயார்படுத்தவும் விரைவாக மாறிவரும் உலகில் சிக்கலானதும் எதிர்பாராததுமான நிலைமைகளைச் சமாளிக்கும் தகைமையை விருத்தி செய்தல்.

8. நீதி, சமத்துவம், பரஸ்பர மரியாதை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச சமுதாயத்தில் கௌரவமானதோர் இடத்தைப் பெறுவதற்குப்பங்களிக்கக் கூடிய மனப்பாங்குகளையும் திறன்களையும் வளர்த்தல்.


இந்த தேசியக்கல்விக் குறிக்கோள்களை அடையும் வகையிலையே பாடசாலைக் கலைத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது, தற்காலத்தில் காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப பல்வேறு விடயங்கள் இணைக்கப்பட்டு அதற்கமைய கலைத்திட்டம் மாற்றடைந்து வருகிறது.


மேற்குறிப்பிட்டவாறு கலைத்திட்ட இலக்கு, பாடசாலையின் இலக்கு, இறுதியான தேசிய இலக்கு என்பவற்றை தெளிவாக விளங்கிக் கொள்ளலாம். இத்தகைய மூன்றும் எவ்வாறு தொடர்புபடுகின்றது என்பதை கீழே விரிவாக நோக்குவாம்.


தேசிய இலக்கினை அடையும் வகையில் கலைத்திட்ட இலக்கு உருவாக்கப்பட்டு இதன் ஊடாக பாடசாலையின் இலக்கு நிறைவேற்றப்பட்டு அதன் ஊடாக தேசிய இலக்கானது அடையப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, 1981 ம் ஆண்டு கல்வி வெள்ளையறிக்கையில.;'வாழ்க்கைத் திறன்' என்ற ஒரு பாடத்தை கற்பிப்பதன் தேசிய இலக்கு பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது. கைத்தொழில் உலகிற்கு மாணவனை ஆயத்தப்படுத்துவன் அதனுடன் தொடர்புடைய ஒரு மனப்பான்மையும் ஏற்படுத்தப்படுகின்றது இந்த தேசிய இலக்கை அடையும் நேர்க்கத்திலேலே வகுப்பறையில் வாழ்கைகைத்திறனுக்குரிய பாடவிடயம் அறிமுகப்படுத்தப்பட்டு பல்வேறு விசேட குறிக்கோள்கள் ஆசிரியரினால் அடையப்பட்டன. இவை அடையப்பட்டாலேயொழிய கைத்தொழில் உலகிற்குரிய பொருத்தமான மனப்பான்மையுடைய மாணவனை உருவாக்கமுடியாது. தேசிய ரீதியில் இந்த இலக்கினை அடைய பிராந்திய ரீதியில் சில நோக்கங்களை வரையறுத்து மாகாண கல்வித் திணைக்களங்கள் செயற்பட வேண்டும். இதேபோல் பாடசாலை மட்டத்தில் தேசியரீதியான இலக

குகளை மையமாகக் கொண்ட சில செயற்றிட்டங்கள் மூலமாக குறிக்கோள்களை நிறைவேற்ற வேண்டும். இக்குறிக்கோள்கள் அனைத்தும் வகுப்பறைச் செயற்பாட்டில் அடையப்பட வேண்டிய விசேட குறிக்கோள்களின் ஒன்றிணைந்த செயற்பாடாக இருப்பது அவசியமாகும். இந்த ஒழுங்குமுறையில் எதிர்பார்ப்புக்கள் அடையப்பட்டாலேயொழிய தேசிய இலக்கு அடையப்படமாட்டாது.


;

வகுப்பறை மட்டத்தில் விசேட குறிக்கோள் அடையப்பட வேண்டுமாயின் இக் குறிக்கோள்களை வரையறை செய்வது அவசியமாகும். எனவே ஆசிரியரின் கற்பித்தல் செயற்பாட்டின் பிரதான தொழிற்பாடாக இது அமைகின்றது. இதைவிட மேலும் சில விடயங்கள் பிரதான தொழிற்பாடுகளாக அமைகின்றன. அவையாவன,

• குறிக்கோள்களை வரையறை செய்தல்

• அதற்குரிய பொருத்தமான பாட உள்ளடக்கத்தை தெரிதல்.

• பொருத்தமான கற்பித்தல் முறையை தெரிதல்.

• சிறந்த முறையில் கற்பித்தலை மேற்கொள்ளல்.

• இறுதியில் மதிப்பிடலை மேற்கொள்ளல்.

கைத்தொழிலுடன் கூடிய சமூகமொன்றை எதிர்காலத்தில் உருவாக்கும் வகையிலான அனைத்து செயற்பாடுகளுக்கும் அடிப்படையாக கல்விக்கொள்கைசார் அமைப்பும், கல்விக்கொள்கைகளும் முக்கியம் பெறுகின்றது என்பதை உணர்ந்த கல்விக்கொள்கையாளர்களும், கல்விச் சீர்திருத்தவாதிகளும், தேசியகல்வி நிறுவகமும் நாட்டின் தேசிய இலக்கினை அடையும் வகையில் வௌ;வேறு வகையான செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதுடன் காலமாற்றத்திற்கு ஏற்ப புதிய திட்டங்களும், கொள்கைகளும் இலங்கையின் கல்விக் கொள்கையினுள் செல்வாக்கு செலுத்துவதனை காணமுடிவதுடன் அதாவது கலைத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதுடன் இன்றைய வகுப்பறைகளில் இடம்பெறும் மாணவர்களை மையமாகக் கொண்ட கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் நாட்டின் தேசிய இலக்கினை அடையும் வகையில் இடம்பெறுகின்றது.


மாணவனின் சிறந்த நடத்தை மாற்றத்தை உறுதிப்படுத்துவதற்கு ஆசிரியர் கற்பித்த விடயங்களுடாக தான் எதிர்பார்த்த நடத்தை மாற்றத்தை விசேட குறிக்கோளுடாக அடையப்பட வேண்டும். இதன்படி சிறந்த நடத்தை மாற்றம் ஏற்படுவதற்கு பாடக்குறிக்கோள் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும். 'மாணவர்களிடம் கற்றல் செயற்பாடுகள் அறிவு, திறன், மனப்பாங்குகளை ஏற்படுத்தும் வகையிலே ஆசிரியரினால் வகுப்பறைமட்டத்தில் குறிப்பிட்ட பாடத்தின் விசேட குறிக்கோளினை(ளுpநஉகைiஉ ழடிதநஉவiஎந) அடையும் வகுப்பறைமட்டப் செயற்பாடுகள் ஒழுங்குபடுத்தப்படுவதுடன், அவற்றினை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.


கற்றல் - கற்பித்தல் செயன்முறையில் புதிய மாற்றத்தினை ஏற்படுத்துவதன் வாயிலாக நாட்டை அபிவிருத்தி அடையச் செய்து அதன் இலக்கினை அடையலாம் என்பதற்கிணங்க ஒரு நாட்டின் கல்வியமைச்சின் மூலமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அந்தவகையில் கலைத்திட்டம், கற்பித்தல்; முறைகள், கற்பித்தல் துணைச் சாதனங்கள், பாட உள்ளடக்கம், பாடத்திட்டம் என்பன முதன்மை பெறுகின்றது.


நாட்டின் தேசிய இலக்கினை அடையும் வகையிலான அனைத்து செயற்பாடுகளும் வகுப்பறைமட்ட கற்றல கற்பித்தல் செயற்பாட்டை அடிப்படையாக கொண்டு அமைகின்றன. தேசிய இலக்கினை அடையும் வகையிலான கலைத்திட்ட தயாரிப்பினைத் தொடர்ந்து கலைத்திட்டத்தினை அடியொற்றி பாடத்திட்டம் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும். ஓவ்வொரு ஆசிரியர்களும் பாடத்திட்டத்திற்கு அமைவாக வேலைத்திட்டத்தை தயாரித்துக் கொள்வர். வேலைத்திட்டத்தின்படி பாடக்குறிப்பானது பகுப்பாய்வு செய்யப்பட்டு தயாரிக்கப்படுகின்றது. வகுப்பறை ஒன்றில் 40 நிமிட பாடவேளையை அடிப்படையாகக் கொண்டு விசேட குறிக்கோளினை அடையும் வகையில் இடம்பெறும் இச்செயற்பாட்டின் வாயிலாகவே பாடசாலையின் குறிக்கோள் அடையப்பட்டு நாட்டின் தேசிய இலக்கு அடையப்படும் வகையில் கலைத்திட்டம், பாடத்திட்டம், வேலைத்திட்டம், பாடக்குறிப்பு என தொடர்ந்த செயன்முறையில் ஆசிரியரின் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.


ஆசிரியர்கள் பாடக்குறிப்பினை தயாரிக்கும் போது மாணவர்களது ஆயத்தநிலை, மாணவர்களது விருப்பு, கற்றலுக்கான தமது ஆயத்த நிலை, வளங்களின் பயன்பாடு, பொருத்தமான கற்றல் கற்பித்தல் உபகரணங்கள், பாடப்புலமை, பாடமுன் அனுபவம், நேரசூசி, என்பவற்றை கவனித்த பின்னரே விசேட குறிக்கோளினை அடைய முனைதல் வேண்டும். ஆனால் இன்றைய ஆசிரியர்கள் தம்மை தயார்படுத்ததும் வகையான செயற்பாடுகளையும் செய்வதில்லை. மாணவரின் ஆயத்தநிலையினையும் கவனிப்பதில்லை என்பது நோக்கத்தக்கதாகும்.


இன்று வகுப்பறையில் மாணவர்களைக் கற்றலின் பால் ஈர்க்கும் வகையிலான பல்வேறு செயற்பாடுகளை ஆசிரியர்கள் மேற்கொள்கின்றனர், உதாரணமாக கீழ்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.

• முதலில் தலைப்புடன் தொடர்புடைய வேறு ஒரு தலைப்பில் கலந்துரையாடலை செய்து பின்னர் தலைப்பினைப் பற்றி பிள்ளைகளுக்கு அறிவினை வழங்கிய பின்னர் கற்பித்தல் உதாரணமாக, விசை, கதி தொடர்பாக விஞ்ஞானத்தில் கற்பிக்கும் முன் மாணவர்களின் அன்றாட வாழ்வில் இடம்பெறும். விசை, கதி செயற்பாடுகளை குறிப்பிட்டு பின்னர் பாடத்தைத் தொடங்குதல்.

• பொருத்தமான கற்றல் உபகரணங்களை பயன்படுத்தல்.

வகுப்பறை மட்ட கற்பித்தலோடு இணைப்பாடவிதான செயற்பாடுகளான இலக்கிய போட்டிகள், பாடவிதானம் சார்ந்த கணித, விஞ்ஞான, சமூக விஞ்ஞானப் போட்டிகள், விளையாட்டுக்கள், சாரணியர் மன்றம், சுற்றாடல் மன்றம் முதலான மன்றங்களின் ஊடாக மாணவர்களிடம் தலைமைத்துவ செயற்பாடுகள் வளர்க்கப்படுகிறது. இதன் ஊடாக நாட்டினை ஆளக்கூடிய நற்பிரஜைகள் உருவாக்கப்படுகின்றனர். வெரும் மனனம் செய்யும் கற்றலினால் நாட்டின் தேசிய இலக்கானது அடையப்படல் என்பது சாத்தியமற்றதாகும். இவ்வாறான இணைப்பாடவிதான செயற்பாடுகளும் இணைந்தவாறே குறித்த இலக்கினை அடையலாம்.


புதிய கல்விச் சீர்த்திருத்த ஏற்பாடுகளில் இலங்கையின் கனிஷ்ட இடைநிலைப் பாடசாலை மாணவர்களின் சுதந்திரமான கற்றலுக்காக புதிதாக செயற்பாட்டு அறைகள் தாபிக்கப்பட்டுள்ளன. தரம் 6 தொடக்கம் 9 வரையான தரங்களில் கல்விகற்கும் மாணவரைச் சுதந்திரமான கற்றல் செயன்முறை வேலைகளில் ஈடுபடுத்தும் நோக்குடன் இச் செயற்பாட்டறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. மாணவர் தாம் விருப்புக்கும் ஆற்றலுக்கு ஏற்ப செயன்முறைகளைச் செய்து தெரிந்து அவற்றைத் திட்டமிட்டு அமுற்படுத்தும் சுதந்திரம் அவர்களுக்கு வழங்கப்படும். இது இவ் வேலைத்திட்டத்தின் முக்கிய இயல்பாகும். மேலும் மாணவன் தன் கற்றல் தேவைகளைக் கண்டறிவதற்கும், தன் கற்றல் இலக்குகளை அமைப்பதற்கும், கற்றல் வளங்களை இனம் காண்பதற்கும், கற்றல் உத்திகளைத் தானே அறிந்து சுய வழிப்பட்ட கற்றலுக்கும் இச்செயற்பாட்டறைத்திட்டம் வழிவகுக்கிறது. செயற்பாடு களுக்காக பாடசாலையில் ஒதுக்கப்பட்ட இடவசதியானது மிகப்பரந்தது. இது பின்வரும் ஐந்து செயன்முறைப் பிரிவுகளுக்கும் ஏற்றவாறாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. புதிதாகவும் இவற்றுள் பலவற்றைச் சேர்க்கலாம்:

1. விவசாயமும் உணவு தயாரித்தலும் - இதில் பயிர்ச் செய்கை, விலங்கு வேளாண்மை, உணவுப் பொருட்களை சேகரித்தல், உணவு தயாரித்தல், களஞ்சியப்படுத்தல், உணவுப் பொருட்களை பாதுகாத்தல், பாடசாலைத் தோட்டத்துடனான ஒருங்கிணைவு, பனங்கட்டி தயாரித்தல், கடல் வளப் பயன்பாடுகள், நவீன மீன்பிடி உபகரணப்பயன்பாடு, பரிசோதனைகள் செய்தல்.

2. ஒழுங்கமைத்தலும் தொழில்முயற்சி ஆய்வு நடவடிக்கைகளும் - தகவல்களைக் கையாளலும் தகவல் சேகரித்தல், தரவு நிரைப்படுத்தலும் தொடர்பாடலும், இதற்கு கணினிகளைப் பயன்படுத்தல், மானுட தாபனங்களின் தகவல்களைப்பயன்படுத்தல், தொழில் முயற்சி தொடர்பான அடிப்படையான விடயங்கள், நவீன உபகரணங்கள், தொலைக் காட்சி, வானொலி, பத்திரிகைகள், வழிகாட்டிகளும், சேகரித்துப் பயன்படுத்தப்படும்.

3. உற்பத்தி செய்தலும் ஆக்குதலும் - மூலப் பொருட்களை உற்பத்திப் பொருளாக மாற்றுதல், விசை, சக்தி, ஆகியவற்றைப் பயன்படுத்துதல், உயிரியல் வாயு, சூரியசக்தி, காற்றலை, மின்சக்தி, என்பனவற்றைப் பயன்படுத்தல,; பொறிகளின் பயன்பாடு, தொழிற்சாலை ஆக்கம்.

4 சித்தரிப்புக் கட்புலக் கலைகள் - உளப்படங்கள், வரிப்படங்கள் போன்றவற்றை தேவைகளுக்குப் பயன்படுத்தல், தரவுகள், வடிவமைப்புகள், தொடர்பாடல்கள், காட்சிப்படுத்தல் போன்றவற்றை அறிக்கைப்படுத்தும் வகையில் வரைதல், சித்திரங்கள், மாதிரி கைவினை, மட்பாண்டப் பொருட்களை ஆக்குதல், பூக்கள், பூச்சாடிகள் செய்தல், பனை ஓலையில் உபகரணம், பாய், ஆக்கல், பொம்மைகள் செய்தல்.

5. ஆற்றுகைக் கலைகள் - நடனம், நடித்தல், குறித்த மெய் நிலைகளைப் பேணியவாறு கருமமாற்றல், உடல் அசைவுகளும் அபிநயமும், அழகியலுணர்வு, பாடல் இசைத்தல் பற்றிய நயப்பு, இசைக் கருவிகளைக் கையாளுதல், பொம்மலாட்டத்தை மேற்கொள்ளல், ஆற்றுகையின் போது பயன்படுத்தப்படும் பொருட்களையும், கோலங்களையும் ஆக்குதல்.

இவ்வாறான செயன்முறைத் தொழிற்பாடுகளுக்கு உதவும் உபகரணங்கள், கருவிகள், பொருட்கள் பாடசாலைகளுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட ஐந்து பிரிவு களுக்கும் அமைய செயற்பாட்டு அறையும், அயலில் அமைந்துள்ள நிலப்பரப்பும் திட்டமிடப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இச்செயற்பாடுகளுக்காகப் பல்வேறு சாதனங்களையும், பொருட்களையும் அதிபரும் ஆசிரியர்களும் பெற்றுக்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வறையில் மாணவர்கள் குறித்த பாடவேளையில் சென்று சுதந்திரமாக தமது கருத்துக்கோ, தேவைகளுக்கோ, விருப்பங்களுக்கோ செயல்வடிவம் கொடுக்கலாம். தேவையேற்படும் போது மட்டும் ஆசிரியரின் வழிகாட்டல் வழங்கப்படும். இவ்வாறாக நிகழும் செயன்முறைகளினூடாகவே மாணவர் கற்பர். இங்கு மாணவர் தாமாகவே கற்றுக் கொள்வர். மரபு ரீதியான கற்பித்தல் இன்றி மாணவர்கள் தாமாகக் கற்றுக் கொள்கின்றமை செயற்பாட்டறையின் சிறப்பியல்பாகும்.

செயற்பாட்டு அறையினூடாக மாணவர் தமது ஆற்றல்களை, திறன்களை வெளிக்காட்டுவர். விரும்பியவாறு சிலநேரம் ஆடுவர், சிலநேரம் பாடுவர், நடிப்பர், சித்திரம் தீட்டுவர், தாம் ஏற்கனவே அறிந்த ஒன்றை உருவாக்க முயற்சிப்பர். இவ்வாறாக ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மாணவர் புதிதாக ஒன்றைக் கற்றுக் கொள்ளவே முனைவர். ஈற்றில் தாமே கற்றுக் கொள்வர். யாதேனும் ஒன்றைக் கற்க வேண்டிய விதத்தையும் கற்பர். எவ்வாறு கற்கவேண்டும் என்பதையும் தாமே கற்பர். இதனூடாக கற்பதற்காகக் கற்றல் தொடர்பாகக் கவனம் செலுத்துவதோடு விருப்பையும் அதிகரித்து மென்மேலும் கற்பதைப் பழக்கமாக்கிக் கொள்வர்.


இதற்கமைய தற்போது அமுலில் உள்ள பாடசாலைப் பண்பாட்டில் வேரூன்றிக் காணப்படும் கற்றல் - கற்பித்தல் செயன் முறையில் தெளிவான ஒரு மாற்றம் ஏற்படுத்தப்படுகின்றது. சமூகப் பொருளாதார மாற்றங்களை எதிர்கொள்ளக் கூடிய ஆக்கத்திறன் கொண்ட மாணவ சக்தியை உருவாக்கும் பொறுப்பு பாடசாலைகளைச் சார்ந்ததாகவே உள்ளது. இதற்கு வழிவகுக்கும் மிகமுக்கிய கல்வியின் இலக்குகளும் பூரண மனிதர்களை உருவாக்கலும் பாடசாலைச் சமூகக் களத்தில் இடம்பெறுகின்றது. இதன் ஊடாக நாட்டின் சிறந்த திறன்களைக் கொண்ட நற்பிரஜைகளை உருவாக்குதல் எனும் தேசிய இலக்கும் நிறைவேற்றப்படுகிறது.


கலைத்திட்ட இலக்கிற்கு அமைய பாடசாலையினால் உருவாக்கப்படும் விடயங்கள்

  • மொழித்திறன் அபிவிருத்தி

எழுதுதல்,

செவிமடுத்தல்,

வாசிப்பு படைப்பாக்க மொழித்திறன்கள,;

நடைமுறைப் பதிவு

  • கணிதத்திறன்

ஆரம்பகணிதத் திறன்,

கிரமப்படுத்திய செயல்கள்,

பாராட்டத்தக்க உயர்திறன்கள்

  • வாழ்க்கைத் தேர்ச்சி அபிவிருத்தி

உணவு தயாரிப்பு,

வீட்டுத்தினசரி வேலைகள்

பண்பாட்டு அபிவிருத்தி

நன்னடத்தை,

பகிர்ந்தளித்துக் கொள்ளல்,

பொறுமை

தொலைத்தொடர்பு சாதனங்கள் மாற்றமடையும் உலகினைப் பற்றிய அறிவு

தாய்நாடு, உலகமும் பற்றிய தகவல்கள்,

விமர்சனமான மனித உரிமைகள் சிந்தனை, பன்மைக் கலாசாரம்.

அழகியல் அபிவிருத்தி


எனவே மேற்குறிப்பிட்டவாறு வகுப்பறை மட்ட கற்றல் கற்பித்தல் செயற்பாடு வினைத்திறனாக அமைவதன் ஊடாக நாட்டின் தேசிய இலக்கினை அடைந்து கொள்ளலாம். அத்தோடு கலைத்திட்ட இலக்கு, பாடசாலையின் இலக்கு, இறுதியான தேசிய இலக்கு எவ்வாறு தொடர்புபடுகின்றதென்பதையும் அறிய முடியும். அதாவது வாட்சனின், 'ஆரோக்கியமான ஒரு டசின் குழந்தைகளை என்னிடம் தாருங்கள். என்னையே அவர்களுக்கான வாழும் சூழலை நிர்ணயிக்க விடுங்கள். இந் நிலையில் நான் உங்களுக்கோர் உத்தரவாதத்தைத் தருகின்றேன். நீங்கள் விரும்பும் படி அவர் எந்தவிற்பனராக வர வேண்டுமோ அவ்வாறே உருவாக்கிக்காட்டுவேன் என்கிறார்.' இக் கூற்றுக்கு அமைய எந்தப் பின்னணியினைக் கொண்ட பிள்ளைகளையும் பாடசாலையின் சிறந்த கற்றல் சூழ்நிலையின் ஊடாக நாட்டின் தேசிய இலக்கினை அடையக்சகூடிய வகையில் உருவாக்கலாம் எனலாம். இதற்காக மாணவர், ஆசிரியர்கள், அதிபர், கல்வி அதிகாரிகள், அரசாங்கம் என சகலரின் கூட்டு முயற்சியும் அவசியமாகும்.




Comments

Popular posts from this blog

Case Study Analysis Of MAS Holdings

'வினைத்திறனான கற்றல் கற்பித்தல் செயற்பாடானது மூவழித்தொடர்பாடல் நிகழ்ச்சியினூடாக நடைபெறுவதன் மூலம் ஆசிரியர் - மாணவர் இடைத்தாக்கம் சிறப்பாக அமையும். இக்கூற்றின் அடிப்படையில் உமது கருத்துக்களை முன்வைத்து விளக்குக.

கலைத்திட்ட மேம்பாட்டினை இன்றைய தேவையை முக்கியப்படுத்தி உமது கருத்துக்களை விளக்குக.