ஆலோசனை வழங்கல் சேவையில் வழங்கப்படுகின்ற பல்வேறு வகையான ஆலோசனைகள்
கஷ்டமான சந்தர்ப்பங்களின் போது உதவி செய்வதுடன் திருப்திகரமான செயல் திறனுடைய வாழ்க்கை அனுபவத்தைப் பெற்றுக் கொள்வதை நோக்காக கொண்டு வழங்கப்படுவதே ஆலோசனை வழங்கலாம். இத்தகைய ஆலோசனை வழங்கலானது பல வகைகளை கொண்டுள்ளது. அத்தகைய வகைகளாக கீழ் வருவனவற்றை குறிப்பிடலாம்.
உளவியல்சார் ஆலோசனை
கல்வி சார் ஆலோசனை
தொழில்சார் ஆலோசனை
குடும்ப ஆலோசனை
மேற்குறிப்பிட்டவாறு பொதுவாக நான்கு வகைகளாக ஆலோசனை வழங்கல் காணப்படுகிறது இத்தகைய வகைகள் ஒன்றிலிருந்து ஒன்று தனித்து செயல்படுவதில்லை. அதாவது மனிதனுடைய தேவைகளை தனித்தனியாக பிரித்து வைக்க முடியாதாகையால் மேற்குறிப்பிட்ட நான்கு வகைகளும் ஒன்றோடொன்று இடைத்தாக்கம் புரிந்த வண்ணம் உள்ளன. இந்த வகைகளை சற்று விரிவாக நோக்குவோம்.
உளவியல்சார் ஆலோசனை
உளவியல் எனும் போது மனதை ஆய்வு செய்வதையும் புருந்து கொள்வதையும் பகுப்பாய்வு செய்வதையும் நோக்காகக் கொண்ட துறையே உளவியல் ஆகும். இத்தகைய உளவியல் ரீதியாக ஏற்படும் பயம், பதற்றம், அளவுக்கதிகமான பயம், மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதற்கும், ஒருவர் தமது சுய குண இயல்புகளை விளைதிறனுடன் பயன்படுத்துவதற்கும் சிறந்த முறையில் ஆலோசனை வழங்குவதே உளவியல்சார் ஆலோசனையாகும்.
மனப்பதற்றம் என்பது ஒரு வகையான பயம் ஆகும். மனதில் சிறிதளவு பயம் இருப்பதால் பரவாயில்லை. மாறாக சிலருக்கு பயம் அதிகமாகி, எப்போதும் பயத்திலேயே இருப்பார்கள். எதிர்காலத்தைப் பற்றியோ அல்லது ஏதாவது விபரீதம் நடந்து விடுமோ என்றும் எப்போதும் அச்ச எண்ணத்திலேயே இருத்தலே மனப்பதற்றம். உதாரணமாக நண்பர்களுடன் பழகுவதற்கு தயங்குதல், ஆசிரியர் வகுப்பறையில் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கு அச்சம், நேர்காணலின் போது ஏற்படும் பயம் போன்றவை அன்றாட வாழ்க்கை நடத்துவதில் சிக்கலாக அமையும் போது அது மனப்பதற்ற கோளாறின் அறிகுறிகளாகும். இத்தகைய பிரச்சினைகளுக்கு ஆரம்பத்திலேயே ஆலோசனை வழங்குவதன் மூலம் இந்த மனப்பதற்றம் மன நோயாக மாறுவதைத் தடுத்துக் கொள்ளலாம்.
உளவியல்சார் ஆலோசனை ஊடாக பின்வரும் விடயங்களை அடைந்து கொள்ளலாம்
ஒருவர் தன்னைத்தானே நன்கு விளங்கிக் கொள்ளுதல் அதாவது ஆலோசனை நாடியானவர் தனக்குள்ள பிரச்சினை, நடத்தை மாற்றம் என்பவற்றை இனங்கண்டு அவரைப்பற்றி அவரே விளங்கிக்கொள்ளச் செய்பவராக ஆலோசகர் காணப்படல்.
ஆலோசனை நாடியின் பலத்தையும் பலவீனத்தையும் புரிந்து கொள்வதற்கு உளவியல்சார் ஆலோசனை உதவுதல்.
ஆலோசனை நாடியின் விரும்பத்தகாத நடத்தைகளை அவர் தாமே அடையாளம் கண்டு கொள்வதற்கு உதவுவதை நோக்காகக் கொண்டதாக உளவியல்சார் ஆலோசனை காணபடல்.
சுய பொருத்தப்பாட்டை அடைவதற்கு ஆலோசனை நாடிக்கு செய்யப்படும் உதவி உளவியல் ஆலோசனையின் ஒரு பிரிவாகும்.
வாழ்க்கையில் சில சந்தர்ப்பங்களில் ஏற்படும் உடல் உள மாற்றங்களுடன் ஏற்படும் கவலை, உள நமைச்சல் போன்றவற்றை பலவீனப்படுத்தி ஒருங்கிணைத்தல். மற்றும்
ஆக்கிரமிப்பு முதலான நடத்தைகளை கொண்டவர்களை அந்நிலைமையிலிருந்து மீட்டுவதற்கு உதவுதல்.
உளவியல் ரீதியான பிரச்சினைகளில் மன அழுத்தம், விரக்தி என்பனவும் உள்ளடக்குகின்றன. வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் அதாவது கட்டிளமைப் பருவம், வளர்ந்த பருவம், முதுமை பருவம் என்பவற்றில் ஏற்படும் உளவியல் உடலியல் மாற்றங்கள் காரணமாக இத்தகைய மன அழுத்தம், விரக்தி ஏற்படுகின்றன. இவற்றிற்கு ஆலோசனை வழங்குவதற்கு உளவியல் ஆலோசனை உதவுகின்றது.
எனவே மேற்குறிப்பிட்டவாறு உளவியல் ரீதியான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உளவியல் ஆலோசனை அவசியமாகும். மேலும் ஒருவரது உளவியல் தேவைகளை திருப்திப்படுத்துவதற்காக, உள ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு செய்யப்படும் உதவியே உளவியல்சார் ஆலோசனையாகும்.
கல்விசார் ஆலோசனை வழங்குதல்
தற்காலத்தில் வழங்கப்படும் ஆலோசனைகளில் கல்விசார் ஆலோசனை மிகவும் முக்கியமானது. மாணவர்களுக்கு தங்களது கல்வி தொடர்பான இலக்குகளையும், குறிக்கோளையும் அமைத்துக் கொள்வதற்கு கல்விசார் ஆலோசனை தேவையாகும். இத்தகைய கல்வி சார் ஆலோசனையானது இருவகைகளில் அமைகிறது. அந்த வகையில்,
கற்றல் சார் அடைவுகளில் மாணவரது விளைதிறனையும் அடைவுசார் நிலையையும் பற்றியது. இங்கு பின்வரும் விடயங்கள் கருத்தில் கொள்ளப்படும்.
- கற்றல் இடர்பாடுகள்
- வாசித்தல் பிரச்சனை
- விரைவில் மறந்து போதல் தொடர்பில் வழிகளை முன்வைத்தல்
- சிந்தனை ஒரு முனைப்படுத்துவதில் பிரச்சினை
- வகுப்பில்/ விரிவுரைகள் கேட்டல் போன்ற திறன்களை வளர்ப்பதற்கு கற்றுக்கொள்ளல்
- ஆசிரியர் கற்பிக்கும் விஷயங்கள் விளங்காதிருத்தல்.
- நேர முகாமைத்துவம்
- பரீட்சையில் எதிர்பார்த்ததை விட குறைவான புள்ளிகளைப் பெற்றுக் கொள்ளல்
- குறிப்பு எடுத்தல்
- ஆசிரியர் கற்பிக்கும் முறை மீது இருக்கும் அதிருப்தி
- கற்றலுக்கான ஊக்கல் தடைபடுதல்
- கற்றல் நடவடிக்கைகளை ஒழுங்கு படுத்திக் கொள்வதில் உள்ள பிரச்சனைகள்
தெரிவு செய்வதையும் திட்டமிடுவதையும் பற்றியது. திட்டமிடுவது என்பது இங்கு மாணவர் ஒருவர் எந்த பாடத்தை, பாடநெறியை, எந்த நிகழ்ச்சித் திட்டத்தை தெரிவு செய்வது போன்றவற்றை தீர்மானிப்பதற்கு உதவும் விடயங்கள் இதில் அடங்கும்.
கல்விசார் வழிகாட்டலுடன் தொடர்புடைய ஆலோசகரானாவர், “மாணவரது திறன்களும் உளச்சார்வும், அவரது நீண்ட கால இலக்குகளுடனும் குறுகிய கால நோக்குகளுடனும் எவ்வளவு தூரம் பொருந்துகின்றன” என்பதை கருத்தில் எடுத்துக் கொள்வது அவரது முக்கிய பணியாகும். ஆகவே மாணவர்களது திறன்கள், நாட்டங்கள், உளச்சார்பு, மனப்பாங்குகள், அடைவுகள் போன்றவை த சம்பந்தமான புள்ளி விவரங்களை சேகரிப்பதும் அறிக்கைகளை பேணுவதும் கல்விசார் ஆலோசனை வளங்களின் முக்கிய அம்சங்களாகும்.
எனவே மேற்குறிப்பிட்டவாறு மாணவர்களது கற்றலினை விளைதிறனாகவும் வினைத்திறனாகவும் அமைப்பதற்கு இத்தகைய கல்விசார் ஆலோசனை உதவியாக அமைகிறது. மேலும் தற்காலத்தில் மாணவர்கள் பல வகையான கல்வி ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர் இவற்றை தவிர்த்து அவர்களை எதிர்காலத்திற்கு சிறந்தவர்களாக மாற்றி அமைக்க வேண்டும்.
தொழில்சார் ஆலோசனை
ஒருவர் தனக்கு பொருத்தமான தொழிலை தேர்ந்தெடுக்கவும் அதற்கு ஆயத்தம் செய்யவும் அத்தொழிலில் சேர்வதற்கும் அதில் முன்னேற்றம் அடைவதற்கும் உதவும் ஒன்றே தொழில்சார் ஆலோசனையாகும். இதே கல்விசார் ஆலோசனைகளின் தொடர்ச்சி ஆகும். அதாவது பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் பாடசாலைக் கல்வியை பூர்த்தி செய்ததன் பின்னர் மேற்கொள்ளத்தக்க தொழில் தொடர்பில் விளக்கமானது பாடசாலையிலேயே தொழில்சார் ஆலோசனையின் கீழ் என்று வழங்கப்படுகின்றது. இத்தகைய தொழில்சார் ஆலோசனை மூலம் பின்வரும் விடயங்களை பெற்றுக் கொள்ளலாம்.
உலகில் காணப்படும் தொழில் வாய்ப்புக்கள்
தொழிலுக்குத் தேவையான தகுதிகள்
இருக்க வேண்டிய திறமைகள், ஆற்றல்கள், ஆளுமைகள்
விண்ணப்பங்கள் தொடர்பான விபரங்கள்
ஆட்சேர்ப்பு முறைகள்
மேலும் வாழ்க்கையின் நடுப்பகுதியில் தொழிலை மாற்றுதல், உடல் அல்லது உடல் ரீதியான பாதிப்பினால் அடிப்படை தொழிலுக்கு பங்கம் ஏற்படும்போது தொழிற் பொருத்தப்பாடு அடைதல், ஓய்வு பெறும் போது அதற்கேற்ற பொருத்தப்பாடு அடைதல் போன்ற சந்தர்ப்பங்களிலும் தொழில்சார் ஆலோசகர் தேவையான உதவியை வழங்குவார். ஒருவருக்கு தொழிலில் திருப்தி இல்லையாயின் அவர் மனதளவில் பெரிதும் பாதிப்புக்குள்ளாவார். இதனைத் தவிர்த்து திருப்தி தருகின்ற தொழிலுக்கான வழிகளையும் அதை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடத்தைகளையும் ஒருவர் அடையாளம் காண்பதற்கு உதவுவது இத்தகைய தொழில்சார் வழிகாட்டலின் பணியாகும். அவ்வாறே ஆலோசனை நாடி தான் எதிர்பார்க்கும் தொழில்சார் இலக்குகளை அடைவதற்கு தனது திறமைகளை திறனுடனும் நேரடியாகவும் பயன்படுத்துவதற்கு தொழில்சார் ஆலோசனை ஊக்கமளிப்பதாக காணப்படுகிறது.
குடும்ப ஆலோசனை
குடும்பத்தின் அங்கத்தவர் என்ற முறையில் ஒருவர் தன்னால் மேற்கொள்ள வேண்டிய கடமைகள் பொறுப்புகள் உரிய முறையில் நிறைவேற்றி வெற்றிகரமாகவும் திருப்திகரமாகவும் தனது வாழ்க்கையை நடத்திச் செல்வதற்கு அவருக்கு உதவி வழங்கும் ஆலோசனை செயன்முறை குடும்ப ஆலோசனையாகும். இளம் தம்பதிகள், திருமணம் புரிந்த வளர்ந்தோர், கட்டிமைப் பருவ அமைப்பினர் போன்றோர் ஆரோக்கியமான திருப்திகரமான திருமண வாழ்க்கைக்கான வாழ்க்கையை நடத்துவதற்கு தேவையான அறிவு, திறன் மனப்பாங்கு என்பவற்றை வழங்குவதாக குடும்ப ஆலோசனை உள்ளது
குடும்ப ஆலோசனை ஒருவரது கடமை பின்வரும் சந்தர்ப்பங்களில் உதவுகிறது
- வெற்றி ஆழமில்லாத குடும்ப வாழ்க்கையை மீள ஒழுங்கமைத்து கொள்வதற்கு
- வெற்றியுடன் கூடிய குடும்ப வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதை தவிர்த்துக் கொள்வதற்கு
- குடும்ப உறவு முறிவு அடைவதற்குக் காரணமாக அமையும் மதுபானம் அருந்துதல் போன்ற வாழ்க்கையை நாசமாக்கும் செயல்களினால் உருவாகும் விரக்தி, இயக்கம் மாற்றம் உள்ள குழப்பங்கள் போன்றவற்றிலிருந்து விடுதலை பெறுவதற்கு
- தோல்வி அடைந்து குடும்ப வாழ்க்கையை சீர் திருத்தி அமைத்தல்
- மண வாழ்க்கையை பற்றி சரியான விளக்கம் என்றே திருமண வாழ்க்கையை தொடங்கும் இளம் வயதினருக்கும் அதற்கான அறிவு, ஆற்றல், மனப்பாங்கு முதலியவற்றை பெற்றுக்கொடுத்தல்
எனவே மேற்குறிப்பிட்டது போன்று உளவியல் ஆலோசனை தொழில் ஆலோசனை குடும்ப ஆலோசனை கல்விசார் ஆலோசனை என்ற நான்கு வகையான ஆலோசனைகளும் ஒவ்வொரு மனிதனுக்கும் தற்காலத்தில் மிகவும் அவசியமானதாக உள்ளன இவற்றை சரியான முறையில் ஆலோசனை நாளிதழுக்கு வழங்கிய பொருளாதார வாழ்வின் வெற்றிக்கும் உதவுவதே மேற்குறிப்பிட்ட ஆலோசனை வழங்கும் ஆலோசகர் கடமையாகும்.
Comments
Post a Comment