ஆலோசனை சேவையில் பயன்படுத்தப்படும் முக்கியமான கோட்பாடுகள்

 ஆலோசனை சேவையில் பயன்படுத்தப்படும் முக்கியமான கோட்பாடுகள்

ஆலோசனைச் சேவையானது தற்காலத்தில் பரந்துபட்ட மட்டத்தில் மேற்கொள்ளப்படுகிறது. இத்துறையில் ஆழமான ஆய்வுகள் மற்றும் புதிய கோட்பாடுகள் உருவாக்கம் பெற்று வருகின்றன. இதன் அடிப்படையில் இன்று ஆலோசனை சேவையானது பல்வேறு கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்றது. இக்கோட்பாடுகளாக கீழ்வருவனவற்றை குறிப்பிடலாம்.

  •  உளப்பகுப்புக் கொள்கை

  •  புலக்காட்சி நிகழ்வுக் கொள்கை

  •  நடத்தைவாதக் கொள்கை

  •  இருத்தலியல் கொள்கை

  •  பகுத்தறிவு வாத கொள்கை

  •  சமூக உளவியல் கொள்கை


மேற்குறிப்பிட்ட கோட்பாடுகளுள் உளப்பகுப்பு கொள்கை மற்றும் நடத்தைவாத கோட்பாடுகள் என்பன எவ்வாறு ஆலோசனை சேவையில் பயன்படுத்தப்படுகின்றன என்பதை கீழே விரிவாக நோக்குவோம்.


உளப்பகுப்புக் கொள்கை

இந்தக் கோட்பாட்டை முன் வைத்தவர்கள், சிக்மண்ட் பிராய்ட், அட்லர் (1927), அலெக்சாண்டர் (1963),  யுங் (1954), ஹோர்னி (1950), சலைவன் (1953) போன்றோர் ஆவர். இவர்களில் சிக்மண்ட் பிராய்டுடன் ஆரம்பமான அடிப்படை உளப்பகுப்பாய்வு முக்கியமானதாகும். எமது நிகழ்கால நடத்தையில் நனவிலி நோக்கங்களும் முரண்பாடுகளும் முக்கிய இடத்தை வகிக்கின்றன என்பதே இவரது கோட்பாடாகும். அதாவது உள சக்தியும், ஆரம்பகால அனுபவமே மனித மனதில்  பிரதிபலிப்புகளை தீர்மானிக்கின்றதன. பிற்கால ஆளுமை பிரச்சினைகளுக்கு அடக்கப்பட்ட பிள்ளைப்பராய முரண்பாடுகளே காரணமாகின்றன என்ற கோட்பாட்டை சிக்மண்ட் பிராய்ட் முன்வைக்கிறார்.


வெற்றுத் தாள் போல் வெறுமையாகவே மனிதன் பிறக்கிறான். இவ்வுலகில் அவன் பார்த்து, உணர்ந்து, உற்றறியும் நிகழ்வுகள் மூலம் மெல்ல மெல்ல நல்லது கெட்டது பற்றி பகுத்தறியும் திறனை பெறுகிறான். பல உள ரீதியான பிரச்சினைகளை முகம் கொடுக்கின்றான். இப்பிரச்சினையில் இருந்து ஆரம்ப காலங்களில் மனிதர்களை விடுவிப்பதற்கு வேறு விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. உதாரணமாக இருட்டில் வைத்தல், தனிமையில் வைத்தல் போன்றவற்றை குறிப்பிடலாம். இத்தகைய  பிரச்சினையை வேறு விதமாக தீர்ப்பவராக சிக்மன் பிரைட் விளங்கினார். இதனாலேயே இவர் உளப்பகுப்பாய்வின்  தந்தை எனப்படுகிறார்.


நனவு மனம், நனவிலி மனம், நனவடி மனம் என மூன்று வகையாக மனித மனத்தை பிரித்தார்.

  • நனவு மனம் -  நம்மால் தெளிவாக உணர்ந்து கொள்ளக்கூடிய நனவு நிலையில் செயற்படும் சக்தியாகும்.
  • நனவடி மனம் -  மனதின் ஒரு பகுதியாயினும், நம் அறிவு நினைவுக்கு சற்று அப்பாற்பட்டதாகும். அதாவது சற்று முயன்றால் அவர் சொன்னது ஞாபகத்திற்கு கொண்டு வரலாம்.
  • நனவிலி மனம் -  எண்ணங்கள், உணர்வுகள், நினைவுகள் ஆகியவற்றை அதிகளவில் கொண்டிருப்பதாகும்.

இந்தப் பிரிவுகளில் உள்ள நனவிலி மனமானது நாம் அறியாமலேயே எமது நடத்தைகளை பெரிதும் பாதிக்கிறது. இதற்கு  சிறுவயது முதலிருந்தே நிறைவேறாத ஆசைகளே காரணமாகும் என சிக்மண்ட் பிராய்ட் குறிப்பிடுவதோடு இதனை  வாய் நிலை பருவம்,  குதவழி இன்பநிலை பருவம், பாலுறுப்பு இன்ப நிலைப்பருவம்,  மறைநிலை இன்ப பருவம்,   பாலியல் இன்பநிலைப்பருவம் என  ஐந்து கட்டங்களின் ஊடாக விளக்குகின்றார். இத்தகைய பருவங்களில் பிள்ளைகள் இன்பம் அனுபவித்தல்  கட்டுப்படுத்தப்படும் போது பிள்ளையின் ஆளுமை, மனநிலை நடத்தைகளில் கோளாறுகள் ஏற்படுகிறது.


இவ்வாறான பிரச்சினைகளிலிருந்து மனிதனை விடுவிக்க சில வளர்ச்சி நுட்பங்களை முன்வைக்கிறார். அந்தவகையில்,

  • உறக்க நிலை -  பாதி அளவில் உறக்கமும் பாதி அளவில்  விழிப்பும் கொண்ட செயற்கை நிலையே இதுவாகும். அதாவது முழு மனமும் தொழிற்படாது ஒரு பகுதி மட்டும் தொழிற்படும் மனநிலையில் உருவாக்குவதை இது குறிக்கிறது. இதனால் ஒருவரின் உள்ளத்தில் மறைந்துள்ள ஒடுக்கப்பட்ட அனுபவங்களை மீட்டி பாதக நிலையை நிவர்த்திக்கும் வகையில் தேவையான அறிவுரைகள் வழங்கப்படும். இம்முறையானது பிற்காலத்தில் சிக்மன் ப்ராய்டினால் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

  • கனவு விளக்கம் -  கனவுகள் நனவிலி மனதில் இருந்தே தோன்றுகின்றன. ஒடுக்கப்பட்ட நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றும் வெற்றுத் தோற்றமே கனவு என்றார். கனவுகளை பகுப்பாய்வு செய்து மன நோய்களுக்கான காரணங்களை கண்டறியலாம் என்பதே இவரது கனவு பகுப்பாய்வு ஆகும்.


  • மனோவசியம் -  இது மெய்மறந்த நிலையாகும்.  இம்முறை ஒருவரது மனநிலையானது எந்த அளவுக்கு புறச்சூழல் தூண்டிகளால் தாக்கப்படுகிறது என்பதை அறிய உதவுவதோடு அதனால் ஏற்படும் விளைவுகளையும் கட்டுப்படுத்த உதவுகிறது.


  • சுயாதீன இயைபு முறை - ஆலோசனையின் நாடி தனது நனவிலி மனதில் ஒதுக்கப்பட்டுள்ள உணர்வுகள் அனுபவங்களை சுயாதீனமாக ஆலோசகருக்கு கூறும் நுட்ப முறையாகும். இம்முறை 1802 -  1808 காலப்பகுதியில் சிக்மண்ட் பிராய்டினால் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறை உளப்பகுப்பாய்வு முறையின் கோல்டன் என வர்ணிக்கப்படுகிறது. இம்முறையில் ஆலோசனை கூறுபவர் புத்திமதி, அறிவுறுத்தல், தீர்மானம் போன்றவற்றை நேரடியாக கூறாமல் சுயாதீனமாக ஆலோசனை நாடி தன்னை பற்றி அறிய  உதவி அளிக்க வேண்டும் 

இத்தகைய  சிக்மண்ட் பிராய்டின் உளப்பகுப்பாய்வு கோட்பாட்டின் மூலம் ஆலோசனை நாடி இதற்கு முன் வெளிப்படுத்தாத தனது அனுபவங்களையும் சிந்தனைகளையும் வெளிப்படுத்துவதற்கு உதவி செய்ய தனக்கு மனதில் தோன்றும் அனைத்தையும் அது சிறியதாகவோ அல்லது சங்கடமான தாகமாக இருந்தால் கூட அவற்றை கூறும்படி ஆலோசனை நாடி உற்சாகப்படுத்துவார். கட்டற்ற இணைப்பை பயன்படுத்துவதன் மூலம் ஆலோசனை நாடி தன்னளவில் மனதை ஆழ்ந்து பரிசீலனை செய்யவும் அவரது உணர்ச்சிகளையும் நடத்தையையும் தொடர்ந்து செல்வாக்குச் செலுத்தும் அடைத்து வைக்கப்பட்டுள்ள அவரது இளம் பிராய மன அதிர்ச்சியான அனுபவங்களை கண்டுபிடிக்கவும் அவற்றிற்கு விளக்கம் அளிக்கவும் பகுப்பாய்வாளர் உதவி செய்வார். இம்முறை மூலம் தனது மனதுடன் தொடர்புடைய அடக்கி வைக்கப்பட்ட உணர்வுகள் தனது தற்போதைய பிரச்சினைகளை தீர்க்க பங்களிப்பு செய்கின்றன என்று ஆலோசனை நாடி நேரடியாக காட்சி பெற முடியும்.


உளப்பகுப்பாய்வு கோட்பாடானது ஆலோசனை சேவைக்கு பின்வரும் வழிகளில் உதவுகிறது 

  • ஆலோசனை வழங்குபவருக்கு ஒருவரது நடத்தையை கவனிப்பதற்கும் அறிகுறிகளின் ஆரம்பத்தையும் தொழிற்பாட்டை தான் விளங்கிக் கொள்வதற்கும் தேவையான கோட்பாட்டு ரீதியான சட்டத்தை வழங்குதல்.
  • பிள்ளை பருவ நிகழ்வுகளின் பங்களிப்பையும் ஆலோசனை நாடி தற்போது முகங்கொடுக்கும் போராட்டங்களில் இவற்றின் தாக்கத்தையும் முழுமையாக விளங்கிக் கொள்வதற்கும் தேவையான சட்டத்தை உளப் பகுப்பாய்வு அணுகுமுறை வழங்குகின்றது
  • ஆலோசனை நாடியை விளங்கிக் கொள்வதற்கும் அவரது போராட்டங்களின் மூல காரணங்களை அவர் தாமே ஆழமாக விளங்கிக் கொள்வதற்கும் உதவுதல் 

  • ஆலோசனை நாடி மீண்டும் அவரது கடந்த கால அனுபவங்களை ஏற்றுக்கொள்ளவும் அடக்கி வைக்கப்பட்டிருந்த முரண்பாடுகளை வெளிக் கொண்டு வரவும் இக்கோட்பாடு சந்தர்ப்பத்தை வழங்குகின்றது 

இத்தகைய உளப்பகுப்பாய்வு கொள்கையானது ஆலோசனை வழங்கல் சேவைக்கு மிகவும் அதிகமான பங்களிப்பினை செய்கின்றது அதாவது ஒருவருக்கு தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு அவரது ஆரம்ப காலத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் விளைவுகள் காரணமாக அமையலாம் அவற்றை நன்றாக விளங்கிக் கொண்டாலே குறிப்பிட்ட அந்த ஆலோசனைநாடிக்கு சிறந்த முறையில் ஆலோசனைகளை வழங்கலாம்.

 


நடத்தைவாதக் கொள்கை


எல்லா மனிதர்களும்  ஒரேவிதமானவர்கள் என்று கூறமுடியாது வெவ்வேறு நடத்தைக் கோலங்களை கொண்டவர்களாக அவர்கள் காணப்படுவர். இவ்வாறு அவர்களின் நடத்தையில் ஏற்படும் மாற்றத்திற்கு கற்றலே காரணமாகும். சூழல், சமூகம், குடும்பம், அனுபவங்கள் என்பவையே இதற்கு காரணமாக குறிப்பிடலாம். தூண்டல் அதிகரிக்க அதிகரிக்க ஒருவருடைய நடத்தையில் மாற்றங்களும் அதிகரிக்கும்,  இக் கொள்கையை வெளியிட்டவர்களாக பவ்லோ, ஸ்கின்னர், வொட்சன்,  போன்றோரைக் குறிப்பிடலாம். வொட்சன் என்பவரே உளவியல் நடத்தை வாதக் கொள்கையை அறிமுகப்படுத்தினார். இவருடன் இணைந்தவாறே  தோண்டைக், பவ்லோ, ஸ்கின்னர், வொல்ப் போன்றோர் இக்கொள்கையை ஆராய்ந்தனர்.


மனிதனுடைய நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு புறவயமானதும் உற்று நோக்க கூடியதுமான காரணிகளே அவசியம் என   வொட்சன் குறிப்பிட்டார். அதற்காக அவர் நிபந்தனைப்படுத்தல், அறிக்கை, சோதனை முறை, அவதானம்  ஆகிய முக்கிய விடயங்களை முன்வைத்தார். மேலும் தூண்டலக்கும் துலங்களுக்கும் இடையிலுள்ள உறவை விபரிக்கக்கூடிய உளவியளாக  காணப்பட வேண்டுமென  வொட்சன் குறிப்பிட்டுள்ளார். இங்கு தூண்டல் என்பது உணரியின்  அளவிடக்கூடிய தசை இயக்கங்கள் எனவும், துலங்கல் என்பது தூண்டி ஒன்றால் உடலியல் ஆற்றலில் ஏற்படும் மாற்றங்கள் எனவும் இவர் குறிப்பிட்டுள்ளார். 


தோண்டைக் என்பவர் இக்கொள்கை தொடர்பாக புதிய கருத்துக்களை முன்வைத்தார். அதாவது நடத்தை அல்லது கற்றல் உருவாகுவதற்கும் மேலும் வளர்ச்சி அடைவதற்கும் மீளவலியுறுத்தல் மற்றும் தண்டனை வழங்கல் அவசியம் ஆகும் எனக் கூறினார். மீளவலியுறுத்தல் மூலம் நடத்தையில் மாற்றம் எற்படும்  என்பதை பல பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தினார்.


வொல்ப்  என்ற உளவியலாளர் ஒருவரிடம் காணப்படும் நடத்தைப்பிறழ்வுகளை  பல்வேறு சிகிச்சை நுட்பங்கள் மூலம் திருத்தி அமைக்கலாம் என்றார், இவரது கூற்றுப்படி தூண்டல் - தூலங்கள்  பிணைப்பை உடைப்பதன் மூலம் ஒருவருடைய நடத்தையை முன்னேற்ற முடியும் எனக் கூறுகிறார். உதாரணமாக, மது பாவனைக்கு அடிமையான ஒருவருக்கு அதிலிருந்து விடுபடுவதற்கு முதல் கட்டத்தில் மதுவிற்கு பதிலாக வெற்றிலையும் பின்னர் சுவிங்கம் அதன்பின் இனிப்பு பண்டம் என கட்டங்கட்டமாக உன்ன பயிற்றுவித்தால் அவரது மது அருந்தும் பழக்கத்தை மாற்றலாம். கணிதப் பாடத்தை விரும்பாத மாணவன் ஒருவனுக்கு அப்பாடத்தை சிறுசிறு அலகுகளாக பிரித்து கட்டங்கட்டமாக படிப்பிப்பதன் மூலம் அவனை அந்த பாடத்தில் சிறந்து விளங்க செய்யலாம். மேலும் இவர் அச்ச நோய் போன்ற சிக்கலான பிறழ்வு நடத்தைகளுக்கு அகவய குழப்பம் ஏற்படுத்தும் ஏறு நிறை அலகுகளை பிரயோகிக்கும் முறையை அறிமுகப்படுத்தினார். இது ஒருவரது பதகளிப்பு அனுபவங்களை சிறு சிறு பகுதிகளாக பிரித்து ஆலோசனை நாடியுடன் கலந்துரையாடி பிழையான நடத்தைகளை சாதாரண நிலைக்கு கொண்டுவர உதவுவதாகும்.

 

கீழ்வரும் பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் ஒருவருடைய பிறழ்வு நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என குறிப்பிடுகிறார். அந்த வகையில்

  •  தளர்வு பயிற்சிகள்

  •  யோகா

  •  ஆழ்ந்த உறக்க நிலைக்கு கொண்டுவரல்

  • மீளவலியுறுத்தல் 

  • சிந்தனை மாற்ற பயிற்சிகள் 

  • வித்தியாசமான வீட்டுப் பயிற்சிகள்

  • சமூகத்தில் பிறழ்வான நடத்தை உள்ளவர்களை சமூகத்தில் சேர்ந்து பழக விடல். 


இக்கொள்கையின் பிரதான நோக்கம் ஒத்துப்போகக்கூடிய நடத்தை முறைகளை மனிதர்கள் பெற்றுக்கொள்வதற்கு அல்லது பொருத்தமில்லாத நடத்தை முறைகளை அவர்கள் நீக்கி கொள்வதற்கு உதவி செய்தலாகும்.இக்கொள்கையின் கருத்துக்கள் வெளிப்படையாயினும் நடத்தையில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளிலும் கவனம் செலுத்துகிறது. கற்றலின் மூலம் பிரச்சினையான நடத்தைகளை மாற்றலாம் என்ற அனுமானத்தின் அடிப்படையில் புதிய கற்றல் நிலைமைகளை ஏற்படுத்தல் இக்கொள்கையின் பிரதான பணியாகவுள்ளது.


இக் கொள்கையினை பயன்படுத்தி ஆலோசனை வழங்கப்படும் போது பின்வரும் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.


  • ஆலோசனை நாடிகள் தாமே இலக்குகளை உருவாக்குவதிலும் அவை எந்தளவு அடையப்பட்டுள்ளன என மதிப்பிடுவதிலும் அவர்களே ஆலோசகர் ஒருவர்பிரதான பங்கு வகிப்பர்.

  • ஏனைய கொள்கையுடன் ஒப்பிடும் போது இக் கொள்கையே இலக்குகளை உருவாக்கும் செயற்பாட்டை அதிகம் வலியுறுத்துகிறது.

  • ஆலோசனை நாடி திட்டமாக தெளிவாக அளவிடக்கூடிய இலக்குகளை உருவாக்குவதற்கு ஆலோசகர் உதவி செய்தல்.

  • ஆலோசகரும் ஆலோசனை நாடியும் சிகிச்சை செயற்பாடுகளுக்கு காலம் முழுவதிலும் இலக்குகளை மாற்றுயமைத்துக் கொள்ளல்.

  • ஆலோசகர் தன் பணியில் முழுமையாக செயற்படும் அதே வேளை விளைதிறனான நடத்தைகளை ஆலோசனை நாடி பெறுவதற்கு உதவும் ஆசிரியராக செயற்படல்

  • தேர்ச்சி பெற்ற நடத்தைவாத ஆலோசகர் பிரச்சினைகளை நடத்தை ரீதியாக எண்ணக்கருவாக்கம் செய்து மாற்றத்தை எளிது படுத்துவதற்கு ஆலோசனை நாடியின் உறவை பயன்படுத்தல்.


நடத்தை வாதத்தை பயன்படுத்தும் ஆலோசகர்கள் சிகிச்சை முறைகளை எழுமாற்றாக தெரிவு செய்வதில்லை. ஒவ்வொரு ஆலோசனை நாடியின் தேவையை பொருத்தே தெரிவு செய்வர்.ஏராளமான நடத்தை சார் நுட்பங்களில் இருந்து வேண்டியவற்றை தெரிவு செய்து கொள்ள முடியும்.இவற்றுக்கு தளர்த்தல் பயிற்சி, ஒழுங்கு முறையான உணர்ச்சி குறைப்பு,உறுதியாக நிற்றலில் பயிற்சி தளரத்தல் பயிற்சி என்பது தசைகளையும் உள்ளத்தையும் தளர்தும் முயற்சியாகும். இது நாளாந்த வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தத்தை சமாளிப்பதற்கு உதவும் முறையாகும். நடத்தை வந்த சிகிச்சையில் அதிகமாக பயன்படுகிறது.உறுதியாக நிற்றல் பயிற்சியானது ஆலோசனை நாடிகள் தாம் உறுதியாக நிற்க வேண்டும் என அறிந்துருந்த போதும் மாற்றத்தை ஏற்படுத்த முடியாத போது இப்பயிற்சியானது பயன்படுகிறது.உறுதியாக நிற்பது பின்வருவோர்க்கு பயனுடையதாகும்.இல்லை முடியாது என்று கூற முடியாதவர்கள்,பிறர் தன்னை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வழி செய்பவர்கள் தமது கோபத்தை எரிச்சலை வெளிப்படுத்த முடியாதவர்கள் அன்பை வெளிப்படுத்த கஷ்டப்படுபவர்கள்


நடத்தைவாத கொள்கையை பயன்படுத்தி ஆலோசனை வழங்குவதற்கு பின்வரும் நடைமுறை உதாரணங்களை குறிப்பிடலாம். அதாவது ஒரு பிள்ளை இருட்டை கண்டு பயப்படுதல்,  கணித பாடத்தை விரும்பாமை, தனிமை இருத்தல் போன்றவை ஏதோ ஒரு கற்றலின் விளைவே ஆகும்.  இத்தகைய பிரச்சினைகளை ஆலோசகர் இனங்கண்டு அவற்றை இல்லாமல் செய்ய வேண்டும். அதாவது பயனளிக்காத நடத்தையை எதிர்பார்ப்பு மிக்க பயனுள்ள நடத்தையாக மாற்றியமைக்க அல்லது அதனை செயலிழக்கச் செய்ய உதவி புரிபவராக ஆலோசகர் காணப்படவேண்டும்.  மேற்குறிப்பிட்ட உதாரணத்தில் உள்ள கணித பாடத்தில் பிள்ளை விரும்பாமை இயல்பை மாற்றி அதில் விருப்பம் கொள்ளும் பிள்ளையாக மாற்றுதல், தனிமையில் இருக்கும் பிள்ளையை அந்நிலையில் இருந்து விடுவித்தல், இருட்டு தொடர்பாக பிள்ளை கொண்டுள்ள சிந்தனையை மாற்றியமைத்தல் இவற்றை மேற்கொள்ளும்போது அப்பிள்ளை அத்தகைய பிரச்சினைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு சிறந்த முறையில் கற்றலில் ஈடுபடும். 


எனவே மேற்குறிப்பிட்டவாறு ஆலோசனை சேவையில் பயன்படும் கோட்பாடுகளை விளங்கிக் கொள்ளலாம்.  இவ்வாறான கோட்பாடுகளில் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்று ஆலோசகர், ஆலோசனை நாடிக்கு பொருத்தமான முறையில் ஆலோசனை வழங்குதல் வேண்டும்.


உசாத்துணைகள்

1. விமலா கிருஷ்ணபிள்ளை,(2001), 'வழிகாட்டலும் ஆலோசனையும், வாலுகாராம,கொழும்பு – 3.

2. நௌபர்,யூ.எல்.எம்.(2010), 'உளவியல் சார் உளவளத்துணை அணுகுமுறை', குமரன் புத்தக இல்லம், கொழும்பு-6.


-RASIMA. BF (BA - R),

EASTERN UNIVERSITY, SRI LANKA.

Comments

Popular posts from this blog

Case Study Analysis Of MAS Holdings

'வினைத்திறனான கற்றல் கற்பித்தல் செயற்பாடானது மூவழித்தொடர்பாடல் நிகழ்ச்சியினூடாக நடைபெறுவதன் மூலம் ஆசிரியர் - மாணவர் இடைத்தாக்கம் சிறப்பாக அமையும். இக்கூற்றின் அடிப்படையில் உமது கருத்துக்களை முன்வைத்து விளக்குக.

கலைத்திட்ட மேம்பாட்டினை இன்றைய தேவையை முக்கியப்படுத்தி உமது கருத்துக்களை விளக்குக.