பாடசாலையில் ஆலோசனை சேவையில் ஈடுபடும் ஆசிரியர்கள் ஆற்றவேண்டிய கடமைகளையும் பொறுப்புக்களையும் தற்கால பாடசாலைகளில் காணப்படும் தன்மைகளை அடிப்படையாகக் கொண்டு விபரிக்குக.

ஏனைய  நாடுகளில் காணப்படுவதைப் போலவே இலங்கையிலும் சமுதாய ரீதியிலான, பாடசாலை ரீதியிலான, காரணிகளால் பாடசாலை மாணவர்கள் தமது மனவெழுச்சி சார் தொந்தரவுகளில் இருந்து விடுதலை பெறுவதற்காகவும், பொருத்தமான மனப்பாங்குகளையும் நடத்தைகளையும் கற்றுக் கொள்வதற்காகவும் பாடசாலை அமைப்பில் உருவாக்கப்பட்ட அமைப்பே வழிகாட்டல், ஆலோசனை சேவையாகும். 

இத்தகைய சேவையை மேற்கொள்வதற்கு 300 மாணவர்களிற்கும் மேற்பட்ட மாணவரை கொண்டுள்ள ஒவ்வொரு 1AB, 1C பாடசாலையிலும் ஒரு முழுநேர பாடசாலை ஆலோசகரும் 300க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்டுள்ள 1AB, 1C பாடசாலையிலும் ஒரு பகுதி நேர பாடசாலை ஆலோசகரும் இருக்க வேண்டும், என கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கை(2001/06) குறிப்பிடுகின்றது. இந்த வகையில், பாடசாலையில் இத்தகைய சேவையில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் ஆசிரியர்களாகவே உள்ளனர். இவர்களுக்கு பல்வேறு கடமைகளும் பொறுப்புகளும் உள்ளன அவற்றை கீழே விரிவாக நோக்குவோம்.


ஒரு பாடசாலையில் தலைமைத்துவமாக உள்ள அதிபரின் ஒத்துழைப்பின்றி ஆசிரியர்கள் எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியாது. அவ்வாறே அதிபரும், ஆசிரியர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குபவராக காணப்பட வேண்டும். இந்த வகையில் அதிபர் வழிகாட்டல், ஆலோசனை வழங்கல் சேவைக்கு பின்வரும் கடமைகளைச் செய்தல் வேண்டும்.

  •  செயற்பாடுகளை ஒன்றிணைத்தல்.
  • வளங்களை தேடுதலும் வழங்குதலும்  - ஆலோசனை சேவையை நன்றாக மேற்கொள்ளக்கூடிய ஆசிரியர்களை இனங்கண்டு பாடசாலையின் ஆலோசனை சேவையை மேற்கொள்ளுமாறு பணித்தல் அல்லது ஆலோசகர் ஒருவரை கேட்டு பெற்றுக் கொண்டு மாணவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க ஆலோசனைச் சேவையினை நன்றாக மேற்கொள்ளல்.
  • சேவை தொடர்பான தீர்மானங்களை எடுத்தல்
  • பல்வேறு அதிகாரிகளுக்கு இடையில் இணைப்பை ஏற்படுத்தல் - ஆலோசனை சேவையை மேற்கொள்ளும் வெளியிலுள்ள அமைப்புகளுடன் தன்னுடைய பாடசாலை ஆலோசனை சேவையை இணைத்தல் அல்லது அவற்றின் உதவிகளை பெற்றுக் கொள்ளல்.
  • இச்சேவை பற்றி மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் போன்றோருக்கு மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தல். 

போன்றவற்றை அதிபர் செய்தல் வேண்டும். மேலும் ஆலோசனை சேவையானது பரவலாக்கப்பட்ட அமைப்பாக காணப்படும் போது அதிபர், சேவையின் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படலாம்.


அதிபரினை அடுத்து இச் சேவையில் ஈடுபடுபவர்களாக ஆசிரியர்கள் காணப்படுவர். ஒருங்கிணைக்கப்பட்ட ஒழுங்கமைப்பிலும் பரவலாக்கப்பட்ட ஒழுங்கமைப்பிலும் ஆசிரியரே பாடசாலை ஆலோசகராக காணப்படுகிறார். இவர் ஆலோசகருக்குரிய தகைமைகளை கட்டாயம் கொண்டிருத்தல் வேண்டும். ஆலோசகர் என்ற வகையில் ஆசிரியரது கடமைகளாக கீழ் வருவனவற்றை குறிப்பிடலாம்.

  • ஆலோசனை தேவைப்படும் மாணவரை இனங்காணல்
  •  மாணவர்கள் பற்றிய விவரங்களை சேர்த்தல், ஆலோசனை வழங்கல்
  •  பதிவேடுகளை பேணல்
  •  அதிபர், ஆசிரியர், பெற்றோர், வெளியில் உள்ளவர்கள் என்போருக்கு இடையில் தொடர்பை பேணல். 


ஆலோசகராகச் செயற்படும் ஆசிரியரின் பொறுப்புகளாக கீழ் வருவனவற்றை குறிப்பிடலாம். 

  • ஆலோசனை தேவைப்படும் மாணவரை இனங்காணல்.
  •  தேவையான தகவல்களை ஆலோசகருக்கு வழங்குதல்.
  •  பாடசாலையில் வாண்மைத்துவ பயிற்சி பெற்ற ஆலோசகரிடம் மாணவரை அனுப்புதல்.
  •  பிரச்சினை உடைய மாணவர்களை ஆலோசனை பெறுவதற்கு ஊக்குவித்தல்.
  • பாடசாலை வழிகாட்டல் ஆலோசனை சேவை பற்றிய விழிப்புணர்வை மாணவர், ஆசிரியர், பெற்றோருக்கு மத்தியில் ஏற்படுத்தல்.
  •  பின்னூட்டங்கள் வழங்கல். 


மேற்குறிப்பிட்ட கடமைகளையும் பொறுப்புக்களையும் தற்காலத்தில் உள்ள பாடசாலைகளில் காணப்படும் நிலைமைகளை கருத்தில் கொண்டு சற்று விரிவாக நோக்குவோம்.


ஆலோசனை தேவைப்படும் மாணவரை இனங்காணலானது ஆலோசகராக உள்ள ஆசிரியரின் பிரதான கடமை ஆகும். அதாவது பிரச்சினை யாருக்கு உள்ளது என்பதை முதலில் அறிந்தாலே அதனை தீர்ப்பதற்கான வழிகளைக் காணலாம். இந்த  வகையில் ஆலோசனை தேவைப்படும் மாணவர்களை இனங்காணல்.


ஆலோசனையை நாடி நிற்கும் மாணவர்களின் பிரச்சினைகளாக கீழ் வருவனவற்றை குறிப்பிடலாம்.

  •  ஆரம்பப் பாடசாலை மாணவர்களிடையே ஏற்படும் பிரச்சினைகள

  •         கற்றல் இடர்பாடுகள், கற்றல் குறைபாடுகள்
  •        சாதாரண உளவியல் ரீதியான குறைபாடுகள்
  •   பார்த்தல், கேட்டல், பேச்சு குறைபாடுடைய பிள்ளைகள் எதிர்நோக்கும்           பிரச்சினைகள் 
  •  கற்றலில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் பொருளாதார கஷ்டங்கள்.
  •  அதி தொழிற்பாட்டு நடத்தை, அழித்தல் சார் நடத்தை, சமூகத்திலிருந்து பின் வாங்குதல் போன்ற சாதகமற்ற நடத்தை 
  • இடைநிலை மாணவர்களுக்குரிய பிரச்சினைகள்
  • கற்றல் செயற்பாட்டில் ஆர்வம் குறைவு
  •     பாடத்தில் கவனம் செலுத்த முடியாமை
  •     பாடப்பிரிவை தேர்வு செய்வதில் சந்தேகம்
  •    பாடசாலைக்குச் செல்வதில் நாட்டமின்மை, சோம்பல் தன்மை
  •    பரீட்சை பற்றிய பயம், பதட்டம்
  •    கற்றவற்றை நினைவில் இருத்திக் கொள்வது கஷ்டம்
  •    வாசித்தல், எழுதுதல் போன்றவற்றில் உள்ள கஷ்டம்.


எனவே மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளையுடைய மாணவர்களை, ஆசிரியர்கள் இனங்கண்டு கொண்டால் அவர்களுக்கு உடனடியாக ஆலோசனைகளை வழங்க வேண்டும். இல்லாவிடின் அவர்கள் மன விரக்தி ,மன உளைச்சல் போன்றவற்றிற்கு தங்களை உள்ளாக்கி தங்களின் படிப்பையே நிறுத்தும் நிலைக்கு தள்ளப்படலாம்.


ஆலோசனை தேவையாக உள்ள மாணவர்களை இனங்கண்டதன்பின்னர், மாணவர்கள் தொடர்பான விவரங்களை சேர்த்தல் வேண்டும்.. அதாவது மாணவர்கள் பல்வேறு பிரச்சினைகளை கொண்டவர்களாக காணப்படுவர். இப்பிரச்சினை பற்றி அறிந்து கொள்வதற்கு அவர்களின் குடும்ப நிலை, பொருளாதார நிலை என்பவற்றினை அறிந்து அவை தொடர்பான தகவல்களை சேகரித்து தொகுத்ததன் பின்னர் மாணவர்களுக்கு முறையான ஆலோசனை வழங்குதல் வேண்டும். ஆலோசனை தொடர்ச்சியானதாகவும் மாணவர்கள் பிரச்சினையிலிருந்து தீர்வு பெறும் வரைக்கும் இடம்பெறுவதாகவும் காணப்படல் வேண்டும்.


ஒவ்வொரு மாணவர்களுக்கும் அவர்களுக்கென பதிவேடுகளை ஆசிரியர்கள் வைத்திருத்தல் வேண்டும்.  இவ்வாறு ஒரு மாணவனுக்கு ஏற்படும் பிரச்சினைகள் பற்றி எழுதப்பட்ட பதிவுகள் உள்ள  போது ஏனைய ஆசிரியர்கள் அல்லது ஆலோசகர்கள் அம்மாணவன் பற்றியும் அவனது பிரச்சினைகளை பற்றியும் புரிந்து கொள்வது  இலகுவானதாக இருக்கும்.


ஆசிரியர் ஆலோசகராக செயற்படும்போது தனியாக செயற்பட்டு வெற்றி அடைவது சாத்தியமற்றது. பிற ஆசிரியர்கள், பெற்றோர் வெளியிலுள்ள ஆலோசக வாண்மையாளர்கள் போன்றோரின் தொடர்பை அல்லது உதவிகளை பெற்றுக் கொள்ளல் வேண்டும். ஒரு மாணவனின் பிரச்சினைக்கு வீட்டிலிருந்தே தீர்வு ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதால் பெற்றோரிடம் தொடர்புகொண்டு மாணவன் தொடர்பாக குறிப்பிடுதல் வேண்டும். மேலும் ஒரு மாணவனுக்கு இவ்வாறான பிரச்சினை உள்ளது என்பதை பிற ஆசிரியர்களிடம்  ரகசிய தன்மைடன் கூறி அவர்களுடன் சேர்ந்து பிரச்சினைக்கான ஆலோசனைகளை வழங்க வேண்டும். உதாரணமாக ஆலோசகர் ஓர் ஆணாக இருக்கும் போது அவரிடம் ஒரு பெண் பிள்ளையைஆலோசனைகக்கு தனியாக அனுப்பாது பெண் ஆசிரியர் ஒருவர் கூட இருத்தல் வேண்டும். இல்லையெனில் வேறு பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.


ஆசிரியரால் ஆலோசனை கூற முடியாத அளவு மாணவனது பிரச்சினை காணப்படும்போது வெளியில் உள்ள  ஆலாசக வாண்மையாளர்களை நாடவேண்டும். உதாரணமாக தற்கொலை முயற்சி செய்யும் மாணவர்கள், போதைவஸ்துக்கு மிகவும் மோசமான நிலையில் அடிமையான மாணவர்கள் போன்றோருக்கு முறையான வகையில் ஆலோசனை வழங்க ஆலாசக வாண்மையாளர்களை நாடவேண்டும். இதன்போதே இத்தகைய மாணவர்களை பிரச்சினைகளிலிருந்து விடுவிக்கலாம்.


பெற்றோர், பாடசாலை வழிகாட்டல் ஆலோசனை சேவைக்கு பலவகைகளில் ஈடுபட வேண்டியுள்ளது. பொதுவாக இச்சேவை பற்றிய எதிர்மறையான கருத்து பெற்றோரின் மனதில் உள்ளது. இதனால் பிள்ளைகள் ஆலோசகரை நாடுவதை தடுத்தல், தேவையான தகவல்களை வழங்காது இருத்தல் போன்றவற்றை. செய்கிறார்கள். மேலும் மாணவருக்கு வழங்கப்படும் வழிகாட்டல் ஆலோசனை சேவை வினைத்திறனாக  அமைய வேண்டுமாயின் பெற்றோர் அதில் பிரதான பங்கு வகிக்க நேரிடுகிறது.  குறைநீக்கச் செயன்முறைகள் செய்வதற்கு  தீர்மானிக்கப்பட்டால் அவற்றை வீட்டில் தொடர வேண்டியுள்ளதுடன், பின்தொடர் நடவடிக்கைகளுக்கும் அது தேவைப்படுகின்றது. பெற்றோர் ஆலோசகருக்கு பின்னூட்டம் வழங்குதல் வேண்டும். இத்தகைய செயற்பாட்டை மேற்கொள்வதற்கு பெற்றோருக்கு  ஆலோசனை சேவை தொடர்பான முழுமையான விளக்கத்தை ஆசிரியர்கள் வழங்க வேண்டும்.


பாடசாலைகளில் இத்தகைய ஆலோசனை சேவையானது பாடசாலையின் தூர நோக்கின் அடையும் நோக்கில் சிறப்பாக இடம்பெறுகின்றது. முழுமையாக சகல பாடசாலைகளிலும் இச்சேவையானது மிகவும் வினைத்திறனுடன் மேற்கொள்ளப்படுகின்றது என கூற முடியாது. அந்தவகையில் ஆலோசனை சேவையில் ஈடுபடும் ஆசிரியர்கள் தங்களின் கடமைகளையும் பொறுப்புக்களையும் சரியாகச் செய்கிறார்களா என்பது கேள்விக்குறியாகும்.


தற்போது பாடசாலைகளில் உள்ள ஆசிரியர்கள் தங்களது ஆலோசனைகளை வழங்க வேண்டிய சகல விடயங்களுக்கும் ஆலோசனை வழங்குகிறார்கள் எனக்கூற முடியாது. எனினும் க.பொ.த சாதாரண தரமானவர்கள் மற்றும்  க.பொ.த உயர்தர மாணவர்கள் ஆகியோறுக்கு  தன்னம்பிக்கையை கட்டியெழுப்புதல், கட்டிளமை பருவ அமைப்பினருக்கு ஏற்படும் உடல், உள ரீதியான மாற்றங்களுக்கு ஆலோசனை வழங்குதல், என சில விடயங்களுக்கு ஆலோசனை வழங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


க.பொ.த உயர்தர  மாணவர்களுக்கு வெரும் புத்தகப் படிப்பு  மட்டும் அவசியம் எனும் நிலைக்கு ஆசிரியர்களும் மாணவர்களும் உள்ளனர். அதாவது உயர்தர மாணவர்கள் பாடசாலைக்குச் செல்லாத நிலையும் உள்ளது. இத்தகைய மாணவர்களுக்கு உயர் கல்வி, தொழில் உலகம், அதற்குத் தேவையான திறன்களை விருத்தி செய்வதற்கு தேவையான ஆலோசனை மற்றும் உள்நாட்டு வெளிநாட்டில் தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொள்வதற்கான முறைகள் பற்றிய வழிகாட்டலுடன் தொழில் வாய்ப்புகள், பகுதிநேர தொழில் வாய்ப்புகள், பல்கலைக்கழகத்தில் உள்ள கற்கை நெறிகள்  போன்றன தொடர்பாக பெரும்பாலான பாடசாலைகளில் ஆலோசனை வழங்கப்படுவதில்லை. 


பெற்றோர்க்கு ஆலோசனை சேவை தொடர்பாக தெரியப்படுத்துவதும் தெளிவுபடுத்துவதும் ஆசிரியர்களின் கடமையாகும். ஆனால் தற்போது உள்ள சில பாடசாலைகளில் இச்செயற்பாடானது இடம் பெறுவது குறைவாகும். பெற்றோர் மாணவர்களின் கல்வி கற்கும் நிலை,  மற்றும் அபிவிருத்திச் செயற்பாடுகள் என்பவற்றுக்காக மட்டும் பாடசாலைக்கு அழைக்கப்படுகிறார்களே தவிற ஆலோசனை சேவை அவர்களுக்கு வழங்குவதற்கு அழைக்கப்படுவதில்லை. என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். 


ஆசிரியர் மாணவர்களுடன் மிகவும் நெருங்கிய தொடர்புடையவர்களாக இருத்தல் ஆலோசனை சேவைக்கு மிகவும் முக்கியமாகும். தற்போது உள்ள பெரும்பாலான ஆலோசனை சேவையில் ஈடுபடும் ஆசிரியர்கள் அவ்வாறான நெருக்கத்தைப் பேணுவது குறைவாகும். இதனால் மாணவனின் பலம், பலவீனம், அடைவு மட்டம் குடும்ப பின்னணி போன்றவற்றை அறிந்து கொள்ள முடியாத நிலையே ஏற்படுகிறது.


ஆலோசகர் என்ற வகையில் ஆசிரியரிடம்,  பரிவுணர்வு, உன்னிப்பாக செவிமடுக்கும் தன்மை, எதிர்வினைவை காட்டும் தன்மை, எதிர்வாதம், தொடர்பாடல் திறன், பிரதிபலித்தல், சுருக்கிக் கூறல் போன்ற திறன்கள் காணப்படவேண்டும். இத்திறன்கள் அனைத்தும் தற்கால ஆலோசகர்களிடம் காணப்படுகின்றதா என்பது கேள்விக்குறியாகும். இத்தகைய திறன்களை ஆலோசகராகச் செயற்படும் ஆசிரியர்கள் கட்டாயமாக வளர்த்துக் கொள்ள வேண்டும். 


இன்று பாடசாலைகளில் இடைநிலை மாணவர்களிடையே எழும் பிரதான பிரச்சினை காதல் மற்றும் பாலியல் ரீதியான பிரச்சினையாகும். இத்தகைய மாணவர்களை ஆசிரியர்கள் மிகவும் நிதானத்துடன் செயல்பட்டு ஆலோசனை வழங்க வேண்டும். ஆனால் அவர்களை மானபங்கப்படுத்தல், அவர்களின் பெற்றோர்களிடம் மிகவும் கடினமான முறையில் குறிப்பிடல், தண்டனை வழங்கல் என்பவற்றை ஆசிரியர்கள் மேற்கொள்ளும் சூழ் நிலைகளும் உள்ளன. இத்தகைய ஆசிரியர்கள் ஆலோசகர் என்ற பாத்திரத்திற்கு தகுதியற்றவர்களாகின்றனர். 


நேரமின்மை ஆலோசனை சேவையினை திருப்திகரமாக மேற்கொள்வதற்கு தடையாக அமைகிறது. அதாவது 300 மாணவர்களுக்கு மேற்பட்ட பாடசாலைக்கு ஒரு ஆலோசகர் என்ற ரீதியில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர் இத்தகைய ஆசிரியர்கள் ஒரு வகுப்புக்குச் செல்லும் போது, ஆலோசனைகளை ஏனையவர்களுக்கு வழங்க முடியாத நிலை காணப்படுகிறது. அதுமாத்திரமன்றி பகுதி நேரமாக ஆலோசகராக தொழிற்படும் ஆசிரியர்கள் முழுமையான கவனத்தை பாடங்களை கற்பிப்பதிலேயே  செலுத்துகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


ஆலோசனை சேவையை மேற்கொள்வதற்குரிய வளங்களை பாடசாலையில் ஏற்படுத்தல் வேண்டும். உதாரணமாக ஆலோசனை சேவைக்கு தனியான அறை ஒன்றை உருவாக்குதல் வேண்டும் பெரும்பாலான பாடசாலைகளில் இந்த அறையை காணப்படுவதில்லை. வேறு அறைகளிலேயே ஆலோசனை வழங்கப்படுகிறது. மேலும் ஆசிரியர் தங்களது ஆலோசனை சேவையை ஆற்றுவதற்குரிய வசதிகளை அதிபரிடம் கேட்டு பெற்றுக் கொள்வது அவசியமாகும் எனினும்  இந்நிலைமை பாடசாலைகளில் குறைவாகவே உள்ளது.


ஆலோசனை சேவைகள் வாய்ப்புகளும் ஆசிரியர்கள் ஒத்துழைப்பு வழங்காத நிலையில் பாடசாலைகளில் இச்சேவை தொடர்பாக தமக்கு அறிவுறுத்தல் அறிவுறுத்தல் வழங்கவில்லை என்றும் அதனால்தான் எவ்வித உதவிகளையும் ஒத்தாசையும் வழங்கத் தேவையில்லை என்றும் சில ஆசிரியர்கள் குறிப்பிடுவது இதற்கு அப்பாடசாலையின் அதிபர் அனைத்து ஆசிரியர்களையும் வழிகாட்டல் ஆலோசனை கூறு சேவையில் ஈடுபடுவது வாய்ப்பளித்து ஊக்கப்படுத்தல் வேண்டும்


ஆலோசனைக்கு உட்படும் மாணவர்களை தப்பாக கருதும் தன்மை சமூகத்தில் உள்ளது. இதனால் ஆலோசனைக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகும் இதனை தவிர்க்கும் வகையில் ஆசிரியர்கள் இது தொடர்பான முழுமையான விளக்கத்தை வழங்குதல் அவர்களது கடமையாகும்,  தரம் 6 தொடக்கம் 11 வரையுள்ள மாணவர்களை மீத்திரன் உள்ள பிள்ளைகளையும் மெல்ல கற்கும் பிள்ளைகளையும் அவர்களுக்கு பொருத்தமான முறையில் பிரதேச செயலகத்தினாலும் வைத்திய ஆலோசனை குழுவினாலும் ஏனைய நிறுவனங்களினாலும் அவர்களைகேற்ப பயிற்சி வழங்கப்பட்டு கற்பிக்கப்பட வேண்டும். இது ஆலோசனை குழுவின் பணியாகும். இது பாடசாலைகளில் மேற்கொள்ளப்படுவது குறைவாகும்.


தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா நெருக்கடி நிலைமையினால் மாணவர்கள் இணையவழி ஊடாக கல்வியை கற்கின்றனர்.. இத்தகைய முறையில் சகல மாணவர்களும் கல்வியைப் பெறுகிறார்கள் என்பது சந்தேகத்துக்குரியதாகும், பல்வேறு காரணிகளால் கல்வியைப் பெற முடியாமல் அதிகளவான மாணவர்கள் காணப்படுகின்றனர். அத்தகையவர்களை இனங்கண்டு அவர்களுக்கு உரிய ஏற்பாடுகளை செய்வது ஆசிரியர்களின் கடமையாகும். மேலும் இணையவழி ஊடாக மாணவர்களின் பிரச்சினைகளை இனங்காண்பது என்பது சாத்தியமற்றது. இதனால் இணையவழி ஊடாக பொதுவாக வாரத்திற்கு ஒரு முறையாவது மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குவது காலத்தின் தேவையாக உள்ளது. மேலும் பெற்றோர்களும் இந்த நெருக்கடி நிலைமையினால் பல்வேறு மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களுக்கும் சிறந்த ஆலோசனை வழங்குவது சிறப்புக்குரியதாகும்.


எனவே மேற்குறிப்பிட்டது போன்று ஆலோசனை சேவையை வழங்க கூடிய ஆசிரியரது கடமைகளையும் பொறுப்புக்களையும் விளங்கிக் கொள்வதோடு அவை தற்காலத்தில் எவ்வாறான நிலைகளில் உள்ளன என்பதையும் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம். இத்தகைய சேவையினை நன்றாக மேற்கொண்டு எதிர்காலத்தின் வெற்றிக்கு மாணவர்களை எடுத்துச் செல்ல வேண்டியது ஆசிரியரின் கடமையாகும். கடமையை சிறப்பாக மேற்கொள்ளாமல் விடப்பட்ட பாடசாலைகளில் மாணவர்களின் தற்கொலைகள், போதைவஸ்து பாவனை போன்றவை அதிகமாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும். 


_RASIMA.BF (BA-R)









 


Comments

Popular posts from this blog

Case Study Analysis Of MAS Holdings

'வினைத்திறனான கற்றல் கற்பித்தல் செயற்பாடானது மூவழித்தொடர்பாடல் நிகழ்ச்சியினூடாக நடைபெறுவதன் மூலம் ஆசிரியர் - மாணவர் இடைத்தாக்கம் சிறப்பாக அமையும். இக்கூற்றின் அடிப்படையில் உமது கருத்துக்களை முன்வைத்து விளக்குக.

கலைத்திட்ட மேம்பாட்டினை இன்றைய தேவையை முக்கியப்படுத்தி உமது கருத்துக்களை விளக்குக.