விளைதிறனான பாடசாலை என்ற துலங்களைக்காட்டும் பண்புகளை இனங்கண்டு அதற்கு சமூகம் எவ்வாறு ஒத்துழைப்பு வழங்க முடியும் என்று ஆராய்க.

 எந்த ஓரு நிறுவனமும் சிறப்பாக இயங்குவதற்கு விளைதிறனும் வினைத்திறனும் மிகவும் அவசியமாகும். அந்தவகையில், விளைதிறன்  என்பது, “ஏதாவதொரு நிறுவனம் அல்லது ஒழுங்கமைப்பின் பணிக்கூற்று மற்றும் நோக்கம் ஆகியவை திட்டமிடப்பட்ட அளவில் அடையப்பட்ட அளவு தொடர்பான அளவுகோளாகும்”. இதனை மேலும் விரிவாக கூறின் ஒரு நிறுவனம் தனது நோக்கங்கள்,குறிக்கோள்கள்  என்பதனை எதிர்பார்த்த அளவில் அடைந்தால் மாத்திரமே அது விளைதிறனான நிறுவனம் எனக் கொள்ளலாம். 

விளைதிறன் என்னும் எண்ணக்கரு கல்விக் குறிக்கோள்கள் அடையப்படுவதற்கு அடிப்படையாக உள்ள அறிகைசார் தொழிற்பாடுகள், சமூக வெளிப்பாடுகள் போன்றவற்றையே குறித்து நிற்பதாக சம்மன்ஸ் (Sammonsா 1999) குறிப்பிடுகிறார். 


மனித பௌதீக வளங்களை விருத்தி செய்வதற்குத் தேவையான அடிப்படைகளை பயன்படுத்துவதையே பாடசாலையை விளைதிறன் மிக்கதாக்குதல் எனும் பதம் குறித்து நிற்பதாக எவ்ராட், மொரிஸ் (1985) ஆகியோர் குறிப்பிடுகின்றனர்.


ஒரு பாடசாலையை பொருத்த வரையில் அப்பாடசாலை பிரதான பயன்நுகரிகளான மாணவர்களின் விருப்பங்களை மற்றும் தேவைகளை அடையச்செய்யும் வகையில் குறைந்த வளங்களைப் பயன்படுத்தி உச்ச பயனைப் பெறுமானால் அப் பாடசாலை விளைதிறனான பாடசாலையாக கருதப்படும். 


கல்வி முகாமைத்துவத்தில், விளைதிறன் பற்றிய எண்ணக்கருவானது 1980 களிலேயே வந்தது. 1983 இல் ஐக்கிய அமெரிக்காவில் நிறுவப்பட்ட கல்வியின் உன்னதம் பற்றிய தேசிய ஆணைக்குழு நடைமுறையில் உள்ள கல்வித்துறை பற்றி வெளியிட்ட அறிக்கையே பாடசாலையின் விளைதிறன் பற்றிய எண்ணக்கருவின் தோற்றம்  எனலாம். இது நடைமுறையிலிருந்த கல்வி முறையை விமர்சனத்திற்குட்படுத்தியது. இவ்வறிக்கை வெளியானது தொடக்கக்ம் பல்வேறு நாடுகளினதும் அரசியல்வாதிகளும் கல்வியியலாளர்களும்  ஏனைய கல்விமான்களும் தத்தமது நாடுகளில் நடைமுறையில் உள்ள கல்வி முறையின் குறைபாடுகள் பற்றி அவதானம் செலுத்தத் தொடங்கி பாடசாலைகளில் விளைதிறன் செயற்பாட்டை 

ஆரம்பித்தனர்.

 


விளைதிறனுள்ள பாடசாலையை இனங்காண்பதற்கு நான்கு பிரமானங்கள் இனங்காணப்பட்டுள்ளன.  


1. கல்வி நோக்கங்களும் அந்நோக்கங்களின் இயல்பும், உள்ளடக்கமும். – அதாவது தேசிய கல்வி நோக்கங்கள் யாவை என்பதைக் கற்றல். அந் நோக்கங்களுக்கு ஏற்ப பாடசாலையினால் முன்வைக்கப்பட்டுள்ள பாடசாலைக்கும் பிரதேசத்திற்குமுரிய விசேட நோக்கங்களின் பங்களிப்பு தெளிவானதாகவும் அளவிடக்கூடியதாகவும் நிறைவேற்றிக்கொள்ளக் கூடியதாகவும் இருத்தல். 

 

2. பாடசாலை விளைதிறனுள்ளதா? இல்லையா? என்பதை இனங்காண்பதற்கான நுட்பங்கள் - அதாவது தரப்படுத்தல் பரீட்சைகள்  பாடசாலைக்கு புகழைத் தேடிதரும் செயற்பாடுகள் பாடசாலை பற்றிய விமர்சனம் மதிப்பீடு அபிவிருத்திச் செயற்பாடுகள் பெற்றோர் தொடர்பும் மனப்பாங்கும் ஆகியன. 

  

3. பாடசாலையின் நோக்கங்கள் எவ்வளவு தூரம் நிறைவேறியுள்னன என்பதை அளவிடுவதற்கு பயன்படுத்தும் நுட்பமுறைகள் - அதாவது தமது நோக்கங்கள் அடைகின்றனவா இல்லையா என்பதை அளவிடுவதற்கான அளவுகோல்கள்  


4. பாடசாலையின் நோக்கங்கள் அடைவதற்காக பயன்படுத்தி கொள்ளும் செயன்முறைகள் - அதாவது பாடசாலையின் தலைமைத்துவம் தீர்மானம் இயற்றும் முறைகள், வெளியாரின் ஒத்துழைப்பு, வளங்களைப் பகிர்ந்து கொள்ளல், பாடவிதானத்தை செயற்படுத்துதல், பாடசாலையின் சூழலும் பாடசாலைகளின் கலாசாரமும் தொடர்புறும் முறைகள் என்பன. 

சிறந்த முகாமைத்துவம் உள்ள இடத்தில் விளைதிறனும் வினைத்திறனும்  உயர்ந்த அளவில் காணப்படும். முகாமைத்துவம் பிழைத்தால் பாடசாலை சீர்குலையும். அதிபரின் சர்வதிகாரமான தலைமைத்துவம் காரணமாக பாடசாலை நிர்வாகம் சீர் குலைந்து மோசமான  பெறுபேறுகள் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். இதனைத் தவிர்ப்பதற்கு விளைதிறன் மிக்க வகையில் பாடசாலையின் செயற்பாடுகள் அமைய வேண்டும். இதனை மேற்கொள்வதற்கு பாடசாலையில் உள்ள அதிபர், ஆசிரியர்கள்.  ஊழியர்கள், மற்றும் ஏனைய ஆளணியினர் போன்றோர் விளைதிறன் பற்றி தெளிவாக அறிந்திருத்தல் வேண்டும்.  


பாடசாலையை விளைதிறனாக மாற்றுவதில் அதிபர் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பு அதிகமாக காணப்பட்டாலும் சமூகத்தின் ஒத்துழைப்பும் கிடைக்கும் போதே பாடசாலையில் அதிபர் ஆசிரியர்களால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் விளைதிறன் மிக்க பாடசாலை என்ற வெற்றியை நோக்கிச் செல்ல முடியும். ஏன்எனில் பாடசாலையும் சமூகமும் பிரிக்க முடியாதவையாகும். சமூகம் முன்னேறுவதற்கு பாடசாலை ஒத்துழைப்பு வழங்குவதோடு பாடசாலை முன்னேற்றமடைவதற்கு சமூகம் ஒத்துழைப்பு வழங்குகிறது. 


ஒரு பாடசாலை விளைதிறனான பாடசாலை என்ற துலங்களைக் காட்டும்  பண்புகளாக கீழ்வருவனவற்றைக் குறிப்பிட முடியும்.  

1) மாணவர் நேர்தன்மையான துலங்கலை வெளிக்காட்டுவார். 

2) சமூகம் ஏற்றுக் கொள்ளும் பாடசாலையாக அமையும். 

3) மாணவர் சேர்வு வீதம் அதிகரிககும். 

4) பாடசாலை கவின் நிலை கவர்ச்சிகரமாக அமையும். 

5) சிறந்த பெறுபேற்றை வெளிக்காட்டும். 

6) நேர முகாமைக்கு ஏற்ப காரியங்கள் இடம்பெறும்.  

7) அதிபர் சிறந்த முமையாளராக காணப்படுவார்.  

8) மாணவர்களின் ஆளுமை விருத்தி பெறும். 

9) செயற்பாடுகளில் மாணவர்களின் பங்களிப்பு வீதம் அதிகரிக்கும். 

10) ஆசிரியர் லீவு எடுக்கும் வீதம் குறையும் 

11) சமூகத்தில் சிறந்த சுட்டியை வெளிக்காட்டும் 

12) மாணவர் இடைவிலகல் வீதம் குறைவு 

13) வகுப்பேற்றல் வீதத்தில் தளம்பல் ஏற்படாது 

14) நூலகம் வினைத்திறனாக இயங்கும் 

15) பழைய மாணவர்களின் பங்களிப்பு அதிகரிக்கும் 

16) விஞ்ஞான ஆய்வு கூடம் விளையாட்டு மைதானம் தொழிநுட்ப அறைகள் என்பன காணப்படும்.  


மேற்குறிப்பிட்ட பண்புகளை ஒரு பாடசாலை அடைவதற்கு சமூகத்தின் ஒத்துழைப்பினை அதாவது சமூகம் எவ்வாறு ஒத்துழைப்பு வழங்கலாம் என்பதை கீழே விரிவாக நோக்குவோம். 


பல குடும்பங்கள் இணையும் போது அது சமூகமாக மாறுகிறது. அத்தகைய சமூகத்தில்  பெற்றோர்கள,; அரசியல் தலைவர்கள், அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள், சமய ஸ்தாபனங்கள், சகல ஊழியர்கள, சமுதாயத் தலைவர்கள் போன்ற அனைவரும் காணப்படுவர். இத்தகைய அனைவரும் பாடசாலைக்கு பங்களிப்பினை வழங்கும் போதே பாடசாலை விளைதிறன் மிக்கதாக அமையும்.  

 

 விஞ்ஞான ஆய்வு கூடம் விளையாட்டு; மைதானம் தொழிநுட்ப அறைகள் போன்ற சகல அறைகளும் கொண்டதாக விளைதிறன் மிக்க பாடசாலை காணப்படும். இவ்வாறு பாடசாலையில் பௌதீக வளத்தினை அரசியல் தலைவர்கள்,  தங்களது அதிகாரத்தின் ஊடாக அரசாங்கத்திடமிருந்து பாடசாலைக்கு பெற்றுக்கொடுத்தல் வேண்டும். இவ்வாறு பல பாடசாலைகளுக்கு பெற்றுக்கொடுக்கப்படும் போது ஊழல் மோசடிகள் இடம்பெற்று; வழங்கப்படும் கட்டிடங்கள் அல்லது ஏனைய வசதிகள் அறைகுறைவாகவே வழங்கப்படுகிறது. இத்தகைய நிலையானது மாற்றமடைய வேண்டும்.  

யுனிசெப் போன்ற அமைப்புக்களும் பாடசாலைக்கு மலசலகூடம் கட்டிக்கொடுத்தல் மற்றும் தண்ணீர் வசதிகளை பெற்றுக்கொடுத்தல் போன்றவாறான சிறிய சிறிய உதவிகளை பாடசாலைக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு வழங்கப்படும் உதவிகளை அதிபர்கள் உதாசீனம் செய்யாது அதனைப் பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் உதவி செய்யும் அமைப்புக்களும், நகரத்தில் உள்ள வசதிகளைக் கொண்டுள்ள பாடசாலைகளுக்கே அதிகம் அத்தகைய உதவிகளை செய்யாது கிராமப்புரங்களில் உள்ள தேவைகள் அதிகமாகவுள்ள பாடசாலைகளுக்கே வழங்க வேண்டும். இதன்போது பாடசாலையானது வளக்குறைபாடின்றி சிறப்பாக இயங்கும். 


விளைதிறனான பாடசாலையின் இயல்புகளில் ஒன்று நூலகம் வினைத்திறனாக செயற்படுவதாகும். தற்காலத்தில் பாடசாலைகளில் உள்ள நூலகங்கள்  வினைத்திறனாக செயற்படுகிறதா என்பது கேள்விக்குறியாகும். இதற்குரிய காரணங்களாக நூல்கள் போதாமை. போதியளவு இடவசதியின்மை, தளபாடங்கள் குறைவு, மாணவர்களிடம் ஆர்வமின்மை போன்ற பல்வேறு காரணங்களைக் குறிப்பிடலாம். இதனைப் பாடசாலை நிவர்த்தி செய்து கொள்வதற்கு பழையமாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் பின்வரும் வகையில் ஒத்துழைப்பு வழங்கலாம். 

நூல்கள் மற்றும் ஏனைய உபகரணங்களை பாடசாலைக்கு வாங்கிக் கொடுத்தல்.  

நூலகத்திற்குரிய தளபாடங்களை சேதமடைந்திருப்பின் திருத்திக் கொடுத்தல் மற்றும் தனவந்தர்களாக உள்ள பெற்றோர்கள்  புதிய தளபாடங்களைப் பெற்றுக் கொடுத்தல்.  

பழைய மாணவர்கள்  ஒன்றாக நிதி திரட்டி அதன்  

ஊடாக நூலகத்தினை முறையாக அமைத்துக் கொடுத்தல்.  

மாணவர்களிடம்  நூலகத்தின் பயன்களைக் கூறி அதனை முறையாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்

நூலகத்தில் உள்ள இரவல் கொடுக்கும் பகுதியை விரிவாக்கிக் கொடுத்தல்.  

நூலகத்தில் வாசிப்பு வாரம் போன்றவாறான தினங்களைக் கொண்டாடுவதற்கு ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தல். 

E- library முறையினை பாடசாலையில் ஏற்படுத்ததல். 


ஒரு பாடசாலையின் முகாமைத்துவத்தை அப்பாடசாலையே மேற்கொள்வதற்கான அடிப்படைகளைக் கொண்டதாக பாடசாலை மேம்பாட்டு நிகழச்சித்திட்ட ம் அறிமுகப்படஒரு பாடசாயின் முகாமைத்துவத்தை அப்பாடசாலையே மேற்கொள்வதற்கான அடிப்படைத்தப்பட்டது. இத்திட்டத்தின் ஊடாக கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள்  இணைப்பாடவிதான செயற்பாடுகள்  ஆசிரியர் வாண்மை விருத்தி, வினைத்திறனுடனான வளப்பயன்பாடு, பாடசாலையை மகிழ்ச்சிகரமாக வழிநடாத்திச் செல்லுதலும் அபிவிருத்தி செய்தலும் போன்றவை மேற்கொள்ளப்படுகிறது. இத்திட்டத்தில் பாடசாலை முகாமைத்துவ குழு, அபிவிருத்திக் குழு என இரு குழுக்கள் உள்ளன. இக்குழுக்களில் பாடசாலை அபிவிருத்திக் குழுவில், அதிபர் மற்றும் ஆசிரியர்களுடன் இணைந்து பெற்றோர்களின் பிரதிநிதிகளும் பழைய மாணவர்களின் பிரதிநிதிகளும் காணப்படுவர். இவ்வாறு இக்குழுவில் இருக்கும் பெற்றோரும் பழைய மாணவர்களும் முறையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் அப்பொழுதே  பாடசாலை அபிவிருத்தி சிறப்பாக இடம்பெறும்.  


மாணவர்களின் கல்வி முன்னேற்றம் என்பது வெறுமனே அதிபர் ஆசிரியர்களின்  கற்பித்தல் நடவடிக்கைகளில் மாத்திரம்  தங்கியிருக்கும் ஒரு விடயமல்ல. பாடசாலையை சுற்றியுளள் சமூகத்தினது ஒத்துப்பிலும் தங்கியுள்ளது என்பதை எவரும் மறுப்பதற்கில்லை. ஒரு பாடசாலையின் வளர்ச்சியில் பல்வேறு அமைப்புகள் பங்களிப்புச் செய்கின்றன. இதில் பழைய மாணவர்களின் பங்களிப்பை புறக்கனிக்க முடியாது. பெரும்பாலான பழைய மாணவர்கள் தாம் கல்விகற்ற பாடசாலைக்காக செலுத்தப்படும் பங்களிப்பானது மிகவும் குறைந்தளவிலேயே இருக்கிறது. பொருளாதார வசதியுள்ளவர்கள் தேவையான பொருளுதவிகளை வழங்கும் அதே வேளை, வசதி குறைந்த மாணவர்கள் சிரமதானங்கள ; மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் தமது உடலுழைப்பை வழங்கி பங்களிப்பு செய்வது பாராட்டத்தக்க விடயமாகும்.  


இன்றைய நிலையில் பாடசாலைகளிலுளள் அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய மாணவர் அமைப்புகளின் பிரசன்னத்தை விரும்புவது குறைவாக காணப்படுகிறது. இதற்குப் பல காரணங்கள் கூறப்படுகிறது. எனினும் பழைய மாணவர் அமைப்புகளைப் புறக்கணிப்பதால் இவர்கள் மூலமாக கிடைக்கும் பல்வேறு உதவிகளும் அந்த பாடசாலை மாணவர்களுக்கு கிடைக்காமல் போய்விடுகின்றன. படாசாலைகளுக்கு மத்தியில் பழைய மாணவர்களின் உதவிகளைப் பெற்றுக்கொடுக்கின்ற பாடசாலை நிர்வாகத்தினரை பாராட்டாமல் இருக்க முடியாது. 


பாடசாலை நிர்வாகம் தமது மாணவர்களின் முன்னேற்றம் கருதி பழைய மாணவர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ள வேண்டியது காலத்தின் தேவையாகின்றது. அபிவிருத்தி கண்டுவரும் சில பாடசாலைகளை உதாரணமாகக் கொண்டு ஏனைய பாடசாலைகளின் முன்னேற்றங்களிலும் பாடசாலை நிர்வாகத்துடன் இணைந்து பழைய மாணவர்களும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு ஒரு சிறப்பான பழைய மாணவர் அமைப்பு காணப்படுவது விளைதிறன் பாடசாலையின் ஒரு இயல்பாகும்.  


மேலும், மாணவர்களுக்கு பரீட்சை தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்குதல், மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை புரிதல், இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கு தங்களால் முடிந்த நிதி உதவிகள் மற்றும் உடல் ரீதியான உதவிகளை செய்தல், பாடசாலையில் உள்ள அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள்  தவறிழைக்கும் போது அதற்கு எதிராக குரல் கொடுத்தல், வருடாந்த பழைய மாணவர் அமைப்புக்  கூட்டங்களை நடாத்தி தங்களது பாடசாலை தொடர்பாக கலந்துரையாடல் போன்றவாறான பல்வேறு உதவிகளை பழையமாணவர்கள் தங்களது பாடசாலைக்கு செய்தல் வேண்டும். இவ்வாறு பழைய மாணவர்களின் ஒத்துழைப்பினால் விளைதிறனான பாடசாலையாக ஒரு பாடசாலை வெற்றியடையும் எனலாம். 


பாடசாலைகளில், மாணவர்கள்  இடைவிலகல் வீதமானது குறைவாகக் காணப்பட வேண்டும். இவ்வாறான நிலையில் உள்ள பாடசாலைகளால் குறிப்பிட்ட அடைவு மட்டத்தை அடைவது சாத்தியமாகாது. மாணவர் இடைவிலகும் நிலை மாணவரின் அடிப்படையான உளவியல் செயன்முறையின் ஒழுங்கு குலைவினால் ஏற்படுகிறது. இந்த இடைவிலகும் தன்மையானது குடும்ப நிலை தாம் முதலில் சந்திக்கும் ஆசிரியர்கள, சகபாடிகள, கற்போனின் மனநிலை, பொரளாதார நிலை, பய உணர்வு  போன்ற  இன்னோரன்ன காரணிகளால் ஏற்படுகிறது.  


இப்பிரச்சினையானது நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களிலேயே அதிகமாக உள்ளது. இதற்குக் காரணம் கிராமத்தில் உள்ள மாணவர்களின் பெற்றோர்கள், தனது பிள்ளை ஓரளவு படித்தால் போதும் என்ற மனநிலையாகும். இவ்வாறு அவர்கள் எண்ணுவதற்குக் காரணம் அவர்கள் படிப்பறிவு குறைந்தவர்களாக உள்ளமையாகும். இந்நிலைமை மாறும் போதே இடைவிலகல் விதம் குறைவடையும். மேலும் வறுமையின் காரணமாக மாணவர்கள் படிப்பை விட்டு விலகி கடைகளுக்கு தொழிலைத் தேடிச்செல்கின்றனர். இதனைத் தவிர்ப்பதற்கு சமூகத்தில் உள்ளவர்கள் உதவிகளை வழங்கி அம்மாணவன் கல்வியைத் தொடர வழியமைக்க வேண்டும். உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு பாடசாலைக்கு வருகைதாரத மாணவர்களை பழையமாணவர்கள் அமைப்பானது அம்மாணவனை உளவியல் ஆலோசகரிடம் கூட்டிச்சென்று அவனுக்குரிய மருத்துவ உதவிகளையும் செய்யலாம். 


பெற்றோர்கள், மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தில் மிகவும; முக்கியமானவர்களாவர். பாடசாலைக்கும் பெற்றோர்களுக்கும் இடையில் ஒரு பரஸ்பர புரிந்துணர்வு காணப்பட வேண்டும். அப்பொழுதே கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை விளைதிறனான வகையில் கொண்டு செல்ல முடியும். பெற்றோர்கள்  பாடசாலையில் பங்குபற்றக்கூடிய சந்தர்ப்பங்கள் தொடர்பாக ஜோன்ஸ் ( 1994), பின்வருமாறு குறிப்பிடுகிறார்.  

தமது பிள்ளைகளுக்கு பாடசாலைகளில் வழங்கக்கூடிய வசதிவாய்ப்புக்களை கேட்டு அறியலாம். 

பாடசாலை முகாமைத்துவச் செயற்பாட்டில் அதிபருக்கு உதவுதல்.  

தமது பிள்ளைகளின் வருடாந்த முன்னேற்ற அறிக்கையை பெற்றுக்கொள்ளல். 

தேசிய கலைத்திட்ட விருத்திக்கு தான் என்ன செய்யலாம் எனத் திட்டமிட்டு தனது பங்களிப்பை வழங்கலாம். 

தமது பிள்னைகள் செய்ய வேண்டிய ஒப்படைகள்  பற்றியும் அவை மதிப்பீடு செய்யும் விதம் தொடர்பாகவும் கேட்டறியலாம் 

பாடசாலை மதிப்பீட்டுச்சூழலுக்கு தமது அபிப்ராயங்களை வழங்கலாம். 

வருடாந்த பாடசாலை அபிவிருத்திக் கூட்டங்களில் பங்குபற்றல் பாடசாலைப் பிரச்சினைகளுக்கு பல்வேறு தீர்வுகளை வழங்கலாம்.


 பெற்றோர் பாடசாலையுடன் எவ்வாறான இடைத்தொடர்பை பேணலாம். என்பதற்கு அற்கின (1988) மேலும் சில விடயங்களைக் குறிப்பிடுகிறார்.  

பாடசாலை எதைச் செய்ய முயல்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுதல் வேண்டும்.  

பாடசாலையின் பிரதான நோக்கத்தை இனங்கண்டு அதனை அடைவதற்காக பாடசாலையுடன் இணைந்து பாடுபடுதல் வேண்டும். 

பெற்றோர்கள் என்ற ரீதியில் பாடசாலையில் தமது வகிபாகம் என்ன என்பதைப்புரிந்து அதற்கேற்பச் செயற்படுதல் வேண்டும். 

மாணவர்களின் பாடசாலை வேலைகளில் கூடிய ஈடுபாடு காட்டி தேவையான உதவிகளை அவர்களுக்கு வழங்குதல் வேண்டும்.  

மேற்குறிப்பிட்டவாறு இருவரதும்  கருத்துக்களை பெற்றோர்கள் செயற்படுத்த வேண்டும். இதன்போதே மாணவர்களின் அடைவுமட்டமானது அதிகரிப்பதற்கு உதவியாக அமையும். இவ்வாறு பெற்றோர் பாடசாலை தொடர்பனது, பெருமளவு கற்பித்தல் சாதனங்கலோ அல்லது நவீன கற்பித்தல் முறைகளாலோ சாதிக்க முடியாதவற்றை சாதித்துவிடும் என்பதில் ஐயமில்லை. பெற்றோரே பாடசாலையின் முதுகெலும்பு என்றால் மிகையாகாது.  

 

மாணவர்கள்  வகுப்பேற்றல் வீதத்தில் தளம்பல் ஏற்படாது கற்றலில் உயர்ந்த அடைவுமட்டத்தை அடைவதற்கு ஆசிரியர்கள ; மாத்திரம் கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபட்டால் போதாது பெற்றோர்களும் பங்களிப்புகளை வழங்க வேண்டும். அந்தவகையில், கல்விக்கும் குடும்பத்தின் தொழிற்பாடுகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது. பிள்ளைகளின் உளவிருத்தி, உடல் விருத்தி, வாழ்க்கைப் பழக்கவழக்கங்கள், கலாச்சாரம் பற்றிய அடிப்படை விளக்கங்கள், சமயம் பற்றும் ஒழுக்கக்கல்வி, மொழியறிவு, மற்றும் தொழல்சார் அறிவு போன்றவற்றினை வழங்குவதில் பெற்றோர் முக்கிய பங்கு வகிக்கின்றனர். குறிப்பாகக் கூறுவதாயின் சமூகமயமாறற்த்திற்கான அடிப்படைகளை வழங்குவது பெற்றோரின் பணியாகும் இதனை கல்வியறிவற்ற பெற்றோர்கள கூட தமது பிள்ளைகளுக்கு வழங்க ஆர்வமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.  


பாடசாலை மற்றும் வகுப்பறைச் செயற்பாடுகளை முற்றுமுழுதாக பாடசாலையின் பொறுப்பில் விடலாமா? அல்லது பெற்றோரின் உதவியின்றி மேற்கொள்ள முடியுமா? என்ற வினாக்கள் எழுகின்றன. உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட கல்விச்சமூகவியல் ஆய்வுகள் வெற்றிகரமான பெற்றோர் பாடசாலை தொடர்புபாடசாலைக்கு அவசியம் என்பதை நிறுவியுள்ளன. “வீட்டில் கல்விச் சூழல் நன்கு அமையும் போது பிள்ளையின் கல்வியில் முன்னேற்றம் உண்டு”’ என மாஸ்கிறெவ் ( 1966 ) எனும் அறிஞர் குறிப்பிடுகிறார்.  மாணவர்களின் கற்றல் செயற்பாட்டி ல் பெற்றோர் முக்கிய பங்கு வகிக்கின்றனர். பெற்றோரின் செயற்பாடுகள் கூடுதலான அளவு மாணவர்களின் இடைவிலகலில் செல்வாக்குச் செலுத்துகின்றது. பிள்ளைகளின் கற்றல் உபகரணங்களை வாங்கிக் கொடுக்காமை, பிள்ளையின் நடத்தை மீது கவனமின்மை, கவனயீனமாக செயற்படுதல், பெற்றாரின் அக்கரையின்மை, பெற்றோர் பிரிந்து வாழ்தல், வெளிநாடு செல்லுதல், மது பாவனை, பலதாரத் திருமணம் போன்றவை மாணவர்களின் கல்வியில் பாதிப்பை ஏற்படுத்தி இடைவிலகும் செயற்பாடையும் அதிகரிக்கிறது. இவ்வாறான செயற்பாடுகளை பெற்றோர் தவிர்த்துக் ; கொண்டு பிள்ளைகளின் கல்வி செயற்பாட்டில் அதிக அக்கறை செலுத்துவர்களாக இருக்க வேண்டும்.  பிள்ளைகள் பாடசாலையில் கற்கம் புத்தகக் கல்வியோடு சேர்த்து சமூகத்தில் உள்ள விடயங்கள் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். இது அவர்கள்  சிறந்த ஆளுமையுள்ளவர்களாக எதிர்காலத்தில் தொழிற்பட வழிவகுக்கும். இதற்காக பெற்றோர்கள் கீழ்வரும் செயற்பாடுகளை மேற்கொள்ளலாம். 

  • நாளாந்த நிகழ்வுகள்  பற்றிக் கலந்துரையாடுதல். 

  • அன்பை வெளிப்படுத்துதல். 

  • புத்தகங்கள் சஞ்சிகைகள்,  செய்தித்தாள்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்  பற்றிக் கலந்துரையாடுதல். 
  • புதிய சொற்களைப் பயன்படுத்தி முயற்சி செய்வதை ஊக்குவித்தலும், சொல் வளத்தை விரிவாக்குதலும். 

  • நூலகங்கள், அரும்பொருட்காட்சி சாலைகள், மிருகக்காட்சி சாலைகள், வரலாற்றுத் தளங்கள், கலாசார செயற்பாடுகள் போன்றவற்றுக்கு குடும்பமாக செல்லுதல். 


இவ்வாறு செய்வது ஏட்டுக்கல்வியை கற்பதற்கு நேரடியாக பார்ப்பதனால் கிடைக்கும் அனுபவக்கல்வி உறுதுணையாக அமையும் எனலாம். 

கட்டிளமைப்பருவ பிள்ளைகள் பாடசாலைகளில் அதிக பிரச்சினைகளை ஏற்படுத்துவபவர்களாகவும் பிரச்சினைக்கு முகம்கொடுப்பவர்களாகவும் காணப்படுவர். உதாரணமாக போதைப்பொருள், பாவனை, பாலியல் ரீதியான பிரச்சினைகள் போன்றவற்றை குறிப்பிடலாம். இதனைத்தவிர்ப்பதற்கு பாடசாலையில் உள்ள அதிபர் மற்றும் ஆசிரியர்கள்  பல நடவடிக்கைகளை மேற்காெண்டாலும் பெற்றோர்களும் சில விடயங்களை மேற்கொள்ள வேண்டும். அதாவது, சிறந்த நண்பர்களுடன் நட்புக் கொள்வதனை ஊக்குவித்தல், பிள்ளைகள் மகிழ்வுடன் இருக்கக்கூடிய சூழலை ஏற்படுத்தி மேற்பார்வை செய்தல், பிரச்சினைக்குரிய பிள்ளைகளை மேற்பார்வைக்கு உட்படுத்துவதுடன் மேற்பார்வை அற்ற பிள்ளைக்குழுக்கள் தோன்ற இடமளிக்கக்கூடாது. பாடசாலைக்கு வெளியே பிள்ளை செலவிடும் நேரத்தைக் குறைத்தல். போன்ற விடயங்களை பெற்றோர் மேற்கொள்ள வேண்டும் இவ்வாறு கட்டிளமைப் பருவ பிள்ளைகள்  திசைமாறிச் செல்வதைத் தடுக்கும் போதே பாடசாலைக்கு சாதாரணதர பரீட்சையிலும் உயர்தர பரீட்சையிலும் சிறந்த பெறுபேறு கிடைக்கும். 


விளைதிறன் மிக்க பாடசாலையின் இலட்சனங்கள் பற்றிய ஆய்வில் துமிந்தஹேவா பணிஹகார பின்வருமாறு குறிப்பிடுகின்றார் பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் நலன் கருதி பாடசாலைக்கு முழு நேரமாக உழைக்க முன்வர வேண்டும். பௌதீக வளங்களை வழங்குதல், மனிதவளங்களை வழங்குதல், அதிபரையும் ஆசிரியர்களையும் ஊக்குவித்தல் மற்றும் நிதி சார்ந்த ஒத்துழைப்புக்களை வழங்குதல் என்பன இவையாகும்.

  

நேரத்திற்கு பாடசாலைக்குச் செல்பவர்களாக மாணவர்கள்  காணப்பட வேண்டும். இதன்போதே நேரத்திற்கு ஏற்ப தங்களது வேலைகளை சிறப்பாக செய்து முடிக்கும் பழக்கத்தை பெற்றுக்கொள்வர். இவ்வாறு இவர்கள் நேரமுகாமைத்துவத்தைப் பேணுவதற்கு பெற்றோர்களும் ஆசிரியர்களும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதாவது மாணவர்கள் பாடசாலைக்கு நேரத்தோடு செல்வதற்குரிய ஏற்பாடுகளை இரவிலேயே செய்து கொடுத்தல் வேண்டும். அத்துடன் ஆசிரியர்கள்  நேரத்தோடு பாடசாலைக்கு வராத மாணவர்களுக்கு தண்டனைகளை வழங்குவதன் ஊடாக அவர்கள் நேரத்தோடு பாடசாலைக்கு வருகைதருமாறு செய்தல் வேண்டும். நேர முகாமைத்துவம் என்பது ஒரு மனிதனுடைய வாழ்வில் மிக முக்கியமானதாகும். இதனை குடுப்பத்திலிருந்குதும் பாடசாலையிலிருந்தும் மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.  


சமூகம் ஏற்றுக்கொள்ளும்  பாடசாலையாக ஒரு பாடசாலை திகழ்வதற்கு அது சிறந்த பெறுபேறுகளை தேசிய பரீட்சைகளில் பெற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு பாடசாலையானது மாலை நேர வகுப்புக்களை நடாத்துதல், படிப்பதற்கு சிரமப்படும் மாணவர்களுக்கு விசேட வகுப்புக்களை நடாத்துதல் போன்றவற்றை மேற்கொள்கின்றனர். இதற்கு ஒத்துழைப்பினை வழங்கி மாலைநேர வகுப்புகளுக்கு தமது பிள்ளைகளை அனுப்புதல், வீட்டில் பிள்ளைகள் உள்ள போது படிக்கவைத்தல், வீட்டுவேலைகள் வழங்கப்படும் போது அதனை செய்வதற்கு உதவி செய்தல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு பெற்றோரும் கவனிக்கும் போதே பிள்ளைகள் சிறந்த பெறுபேற்றைப் பெறுவர் எனலாம். 


சமூகமானது பாடசாலையுடன் எப்பொழுதும் தொடர்பினைக் கொண்டதாகக் காணப்பட வேண்டும். உதாரணமாக பாடசாலை சிறந்த பெறுபேற்றைக் பெற்றுக் கொண்டால் அப்பாடசாலையை பாராட்டுதல், அதற்காக அன்பளிப்புக்களை வழங்குதல், சமூக ஊடகங்களில் வாழ்த்துதல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறே பாடசாலையில் விளையாட்டுப் போட்டி, பொருட்காட்சி  பரிசளிப்பு விழா போன்ற நிகழ்வுகள் இடம்பெறும்போது நிதிகளை வழங்கி அந்நிகழ்வுகள் சிறப்பாக அமைய ஒத்துழைக்க வேண்டும்.   


தொலைக்காட்சி, வானொலி போன்ற ஊடகங்களும் பாடசாலைகள் விளைதிறன்மிக்கதாக செயற்படுதற்கு பெரும் பங்காற்றுகிறது. அதாவது பாடசாலைகள் சிறந்த பெறுபேறுகளைப் பெறும் போது பாராட்டுதல், பாடசாலைகளுக்கு தங்களால் முடிந்த உதவிகளை புரிதல் போன்றவற்றைக் குறிப்பிடலாம். உதாரணமாக சக்தி தொலைக்காட்சியானது மக்கள் சக்தி திட்டத்தின் ஊடாக பல பாடசாலைகளுக்கு உதவிகளை வழங்குகின்றது. அவ்வாறே தற்போது சாதாரணதர மாணவர்களுக்கு இலவசமாக கருத்தரங்குகளை,zoom  தொழிநுட்பம் ஊடாக  சக்தி வானொலி வழங்குகிறது. மேலும் நேத்ரா தொலைக்காட்சியிலும் சாதாரணதரம் மற்றும் உயர்தர மாணவர்களுக்கான பாடங்கள் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறு covid 19 நோய் பரவல் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டிருந்த போது இவ்வாறு மேற்கூறிய ஊடகங்களால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பெரிதும் உதவியாக அமைந்தது என்பதை யாரும் மறுக்கமுடியாது.  


பெற்றோர்கள் பாடசாலையில் உள்ள அதிபர் மற்றும் ஆசிரியர்கள் பற்றி தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். ஏன்எனில் ஆசிரியர்கள் சிறந்த ஒழுக்கமுள்ள வாண்மைவிருத்தியுள்ளவராக இருக்க வேண்டும். அவர்களைப் பார்த்தே மாணவர்கள சகல விடயங்களையும் கற்றுக் கொள்வர். ஆசிரியர்கள் முறையாக கற்பிக்கிறார்களா? மாணவர்களுடன்  எவ்வாறு நடந்து கொள்கிறார். போன்ற விடயங்களை அறிந்து கொள்வதோடு ஏதும் குறைபாடுகள் இருப்பின் அதனை சீர்செய்யும் நடவடிக்கைகளை பெற்றோர் சமூகத்தில் உள்ள ஏனையோருடன் இணைந்து மேற்காெள்ள வேண்டும். இவ்வாறு பெற்றோர்கள் அக்கரையுடன் செயற்படும் போது ஆசிரியர்கள் அதிகமான லீவுகளை எடுக்காது பாடசாலைக்கு முறையாக வந்து சிறந்த முறையில் கற்பித்தல் செயற்பாட்டை மேற்காெள்வர் எனலாம்.  

 

ஆளுமை விருத்தியை ஏற்படுத்துவதில் இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கு பிரதான பங்குண்டு. அந்தவகையில், தமிழத்தினப் போட்டி விளையாட்டுப் போட்டி, கண்காட்சி, பட்டிமன்றங்கள் மற்றும் கலை நிகழச்சிகள் போன்றவற்றில் மாணவர்கள் கலந்து கொள்ளும் போது பெற்றோர்கள் அதனைத்தடுக்காது ஊக்கமளிக்க வேண்டும். இவ்வாறு இணைப்பாடவிதான செயற்பாடுகளில் ஈடுபடும் போதே மாணவர்களின் ஆளுமையானது சிறப்பாக விருத்தியடையும். ஆனால் தற்காலத்தில் சில பெற்றோர், இவ்வாறான நிகழச்சிகளில் தமது பிள்ளைகள் பங்குபற்றினால் பரீட்சையில் குறைவான புள்ளிகளைப் பெறுவர் எனக் கருதி அத்தகைய செயற்பாடுகளில் பிள்ளைகளை கலந்து கொள்வதைத் தடுக்கின்றனர். இது முற்றிலும் தவறான செயற்பாடாகும்.  

 

சமூகத்தில் உள்ளவர்களிடம் கிராமப்புறத்தில் உள்ள பாடசாலை வினைத்திறன் குறைந்தது, நகரத்தில் உள்ள பாடசாலை வினைத்திறன் கூடியது என்று கருதி பாடசாலைகளை தரம் கூடியதாகவும் தரம் குறைந்ததாகவும் கருதும் எண்ணத்தை இல்லாதொழிக்க வேண்டும். அவ்வாறே ஆசிரியர்களும் தங்களது எண்ணத்தை மாற்றிக்  கொள்ள வேண்டும். எந்த ஒரு பாடசாலையும் உடனடியாக சிறந்த பாடசாலையாக மாறுவதில்லை படிப்படியாகவே மாறுகிறது. இந்தவகையில் கிராமப்புறத்தில் உள்ள பாடசாலைகளை விளைதிறனுடைய பாடசாலையாக மாற்றுவது பெற்றோர்களினதும் சமூகத்தினதும் கடமையாகும். இதற்காக தங்களால் முடிந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.  தற்போது பாடசாலை மாணவர்களிடையே போதைப்பாவனை அதிகரித்து வருகிறது இதனைத்தவிர்க்க பாடசாலை பல நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற போதும் அதனைத் தவிர்க்க 

முடியாதுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இதனைத்தவிர்க்க சமூகத்தில் உள்ள நலன்புரி அமைப்புகள்  சமய நிறுவனங்கள் மற்றும் பெற்றோர் போன்றோரும் உதவிகளை வழங்கி போதையற்ற சமூகத்தை உருவாக்க ஒத்துழைக்க வேண்டும்.  


எனவே மேற்குறிப்பிட்டவாறு சமூகமானது, ஒரு பாடசாலை விளைதிறனான பாடசாலையாக அமைவதற்கு ஒத்துழைப்பு வழங்கலாம் எனலாம். தரமான கல்வியே தரமான சமுதாயத்துக்கு; அடித்தளமாக அமையும் இதனால் சமூகமானது பாடசாலையுடன் எந்த தொடர்பின்றியும் செயற்பட முடியாது. அவ்வாறே பாடசாலையும் சமூகத்தின் ஒத்துழைப்பின்றி செயற்பட முடியாது என்பதை உணர்ந்து சமூகமும் பாடசாலையும் இணைந்து செயற்பட்டு சிறந்த நற்பிரஜைகளை உருவாக்க வேண்டும் எனலாம்.  

 

 - RASIMA.BF (BA-R),

EASTERN UNIVERSITY, SRI LANKA.

 

 

 



Comments

Popular posts from this blog

Case Study Analysis Of MAS Holdings

'வினைத்திறனான கற்றல் கற்பித்தல் செயற்பாடானது மூவழித்தொடர்பாடல் நிகழ்ச்சியினூடாக நடைபெறுவதன் மூலம் ஆசிரியர் - மாணவர் இடைத்தாக்கம் சிறப்பாக அமையும். இக்கூற்றின் அடிப்படையில் உமது கருத்துக்களை முன்வைத்து விளக்குக.

Theory of Instinct [மக்டூகலின் இயல்பூக்கக் கொள்கை]