ஆசிரியர் அபிவிருத்தி


ஒரு தேசத்தின் வளமான எதிர்காலத்தை தாங்கவிருக்கும் தூண்களுக்கு வைரம் பாய்ச்சுகின்றவர்களான ஆசிரியர்களே மாணவர்களிடையே என்றும் இணக்கத்தை ஏற்படத்துபவர்கள். ஒரு ஆசிரியர் மாணவர்களிடையே காட்டும் உன்னதமான கவனிப்பே அந்த மாணவனை பின்னாளில் சிறந்து விளங்கச் செய்கிறது. களிமண்ணாய்க் கிடந்த மாணவனை இணைத்து அவனுக்கு உருக்கொடுத்து அவனை பக்குவப்படுத்தி இந்த உலகிற்கு நல்லதொரு குடிமகனாய் வழங்கும் பெருமை ஆசிரியர்களுக்கே உரியதாகும். ஆசிரியர் இல்லாத மனித வாழ்வு என்பது இருக்க இயலாது. படித்து பட்டம் பெற்றவனுக்கும், படிக்காமல் பட்டறவு பெற்றவனுக்கும் என்றும் மூலதனம் அவன் பெற்ற ஆசிரியர்கள் தான். ஆசிரியர்களுக்கு மட்டும் என்றும் அந்த தனித்தன்மை உண்டு. 

ஆசிரியரின் முக்கியத்துவம் மற்;றும் பெருமை பற்றி பல்வேறு அறிஞர்களும் பல்வேறு கருத்துக்களைக் கூறியுள்ளனர். அந்த வகையில்,


  • ஜிக்ஜேக்ளர் -  “கல்விக்கூடம் ஒரு தோட்டம்: மாணவர்கள் செடிகள்: ஆசிரியர்கள்  தோட்டக்காரர்கள்.”


  •  வில்லியம் ஆல்பர்ட் - “சராசரி ஆசிரியர் பாடத்தை நடத்துகிறார். சிறந்த ஆசிரியர் நடைமுறை உதாரணங்களோடு கற்பிக்கிறார். உன்னதமான ஆசிரியர் உயிரோட்டத்தை ஏற்படுத்துகிறார்.”


  • பெர்ஷியா ஆக்ஸ்டெட் - “சிறந்த ஆசிரியருக்கு கற்பனைத்திறன் உண்டு. அவர்கள் மாணவர்களை துல்லியமாக மதிப்பீடு செய்வார்கள். அவர்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். புதிய சிந்தனைகளையும் வளர்ச்சிகளையும் பின்பற்றுவார்கள். 


இவ்வாறு சிறப்பு மிக்க ஆசிரியர்களிடையே “ஆசிரியர் அபிவிருத்தி” என்ற விடயம் மிகவும் முக்கியமானதொன்றாகவுள்ளது. அந்தவகையில் ஆசிரியர் அபிவிருத்தி என்பது ஆசிரிராக தெரிவு செய்யப்பட்ட ஒருவர் தனது வாண்மை விருத்தியை ஏற்படுத்திக் கொள்வதாகும். 


ஆசிரியர் அபிவிருத்தி தொடர்பாக அறிஞர்கள் சிலரின் வரைவிலக்கணங்கள் பின்வருமாறு.


“தொழில்முறை மேம்பாட்டு உள்ளடக்கம் தெளிவாக கட்டமைக்கப்பட்டு சரியான முறையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளதோடு முன்னய அனுபவங்களில் இருந்து ஆசிரியர்கள் தங்கள் சொந்த அறிவை உருவாக்குவதற்கான செயல்பாடுகளையும் உள்ளடக்கியுள்ளது. மேலும் குறிப்பிட்ட செயற்பாட்டில் ஆசிரியர்களின் செயற்பாட்டை அதிகரிப்பதற்குமான வகையில் நடவடிக்கைகள் உண்மையான வகுப்பறை சூழ்நிலைகளுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும். ( கோஹ்லர் மற்றும் மிஸ்ரா, 2006)


பாடங்களில் தொழிநுட்ப ஒருங்கிணைப்பில் குறைந்த அனுபவமுள்ள ஆசிரியர்களுக்கு பயனளிக்கும் பயிற்சிகளை வழங்க நிபுணத்துவ ஆசிரியர்கள் அல்லது குழுவிடமிருந்து உதவும் சிறந்த முடிவுகளை வழங்கும் பொருட்டு கூட்டு நடவடிக்கைகள் ஆசிரியர் அபிவிருத்திக்குள் உள்ளடங்கும். ( பெர்ணான்டஸ் மற்றும் யோஷிடா, 2004)


ஆசிரியர் வாண்மை விருத்தியை ஏற்படுத்திக் கொள்வது ஆசிரியர் அபிவிருத்தி ஆகும். அதாவது, ஆசிரியர்கள் தங்களின் ஆற்றல்களை, “கல்வி, கற்பித்தல் முறைகள், பாடவிடயம், வகுப்பறை முகாமை” போன்றவற்றில் மேம்படுத்திக் கொள்வதாகும். ஆசிரியர் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு கீழ்வருவனவற்றை உதாரணமாக குறிப்பிடலாம்.

பாடசாலை ஆசிரியர்களது உயர் பங்குபற்றுதலுடன் ஆசிரியர் அபிவிருத்தித் திட்டங்களைத் திட்டமிடல், ஒழுங்கமைத்தல், நடைமுறைப்படுத்தல்

பிரதிபலிப்பபுச் செயன்முறை 

செயல் விளக்கக் கற்பித்தல்

அனுபவமிக்க ஆசிரியர்களது ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்

சுய கற்கை 

ஆசிரியர் கலந்துறையாடல்

பாடசாலை மட்ட நிபுணத்துவ வழிகாட்டல்


காலமாற்றத்திற்கு ஏற்ப கல்வி இலக்குகளில் மாற்றமேற்படும் போது அவற்றை நிறைவு செய்யும் நோக்கில் பாடசாலைச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் பாரிய பொறுப்பினை ஆசிரியர்கள் கொண்டுள்ளதால் புதிய நூற்றாண்டில் நிகழந்து வரும் துரித மாற்றங்களுக்கு புதிய தொழிநுட்ப விருத்தி அறிவும் கொண்டவர்களாக தங்களை அபிவிருத்தி செய்து கொள்ளவேண்டும். 


மேற்கூறியவாறு புதிய விடயங்களை ஆசிரியர்கள் கற்று தங்களது வாண்மை விருத்தியை ஏற்படுத்திக் கொள்வதன் ஊடாக உயவர்தொழிலுக்குரிய பண்புகளைக் கொண்டதாக ஆசிரியத்தொழில் மாற்றமடைகிறது. இவ்வாறு ஆசிரியர், அபிவிருத்தியை ஏற்படுத்திக் கொள்வதன் ஊடாகவே புதுமையும் ஆக்கத்திறனும் கொண்ட நற்பிரஜைகளை சமூகத்தில் உருவாக்க முடியும்.


வாண்மை என்பது ஒரு குறித்த துறை தொடர்பான சிறப்பான அறிவும் சுதந்திரமாக செயற்படும் திறனும் எதனையும் தயங்காமல் பொறுப்பேற்கும் ஆற்றலுமாகும். எனவே இம்மூன்று அம்சங்களும் எந்த ஆசிரியரிடம் நிறைந்து காணப்படுகிறதோ அவரே வாண்மை மிக்க ஆசிரியர் ஆவார். வாண்மையாளர்கள் தாம் மேற்கொள்ளும் தொழில் துறையில் தேர்ச்சியும் ஆற்றலும் பெற்றிருப்பது அவசியமாகும். ஒரு சாதாரண மனிதனின் இயலுமைகளுக்கு அப்பாட்பட்டவைகளே வாண்மைத் துறைகளாகும். எனவே வாண்மையாளர்கள் சாதாரணமானவரகளாக அல்லாமல் நீண்ட காலப்பயிற்சிகளோடு சிறப்புத் துறையில் சேவையாற்றுவதோடு ஆய்வு அடிப்படையிலான அறிவுத் தொகுதிகளை விளங்கி கற்பதற்கான வாய்ப்பும் கற்றுக் கொண்ட அறிவை பொருத்தமான சந்தர்ப்பத்தில் பயன்படுத்தும் திறனையும் பெற்றிருக்க வேண்டும்.


மாறும் உலகில் பணியாற்றும் ஆசிரியர்கள் சர்வதேச வர்த்தமானங்களுக்கு ஏற்றவாறு தமது வாண்மையை விருத்தி செய்வது அவசியமாகும். எனவே தான் இன்றைய கல்வியில் தொடருறு கல்விக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் தாம் பெற்ற கடந்த கால அனுபவங்களை வைத்துக் கொண்டு தற்காலக் கல்வித் தேவைக்கு ஈடுகொடுக்க முடியாது. ஏனெனில் மாறி வரும் நவீன உலகிற்கு புதுமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு விளங்கும் வாண்மை மிக்க ஆசிரியர்கள் சில பண்புகளை தன்னகத்தே கொண்டிருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்நவகையில்,

நேர்த்தியான உடை நடையும் மனவெழுச்சி உறுதிப்பாடும்

எப்போதும் அக்கறையுடனும் சுறுசுறுப்புடனும் இருத்தல்

தமது பாடத்தினை மாத்திரமன்றி ஏனைய பாடங்களையும் கற்பிக்கக் கூடிய பரந்த அறிவு இருத்தல்

சுய ஒழுக்கக் கட்டுப்பாடும் மாணவரின் ஒழுக்கத்தைப் பேணுவதில் அதிக ஆர்வம்

ஆக்கத்திறனுடன் தமது கடமையினை சரியாக செய்தல்

நேர முகாமைத்துவமும் மத சிந்தனையும் இருத்தல்

மாணவர் மையக் கற்றல், கற்பித்தல் உத்திகளைப்பயன்படுத்தி ஒவ்வொரு மாணவரையும் குறைந்தபட்ச அடைவுக்கேனும் இட்டுச்செல்லல்.


இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் புதிய கல்வி மறுசீரமைப்பிலும் கூட ஆசிரியர் தொழில் விருத்திக்கான பல்வேறு விதப்புரைகள் முன்மொழியப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு இரண்டு வகையில் பயிற்சி வழங்கப்படுகிறது. 

1. ஆசிரியர் தொழிலுக்கு முன்னர் வழங்கப்படும் பயிற்சி ஆசிரியர் முன்தேவைப்பயிற்சி – தற்போது சேவை முன் ஆசிரிய கல்வி வழங்களுக்கு தேசிய கல்வியியற் கல்லூரிகளின் (NCOE) கற்பித்தல் தேசிய டிப்ளோமாவும் குறிப்பிட்ட சில பல்கலைக்கழக பீடங்களோ பிரிவுகளோ வழங்கும் B.Ed பட்ட நிகழ்ச்சித்திட்டங்களுமான இரு ஒழுங்குகள் உள்ளன.

2. ஆசிரியர் தொழில் சேவையில் இருக்கும் போது வழங்கப்படும் பயிற்சி அதாவது சேவைக்காலப் பயிற்சி எனவும் குறிப்பிடலாம். – தற்போது சேவைக்கால நிகழ்ச்சித்திட்டங்களை தேசிய கல்வி நிறுவனமும், மாகாணக்கல்வி அதிகாரமும் வடிவமைக்கின்றன. 


இவ்விரு பயிற்சிகளை வழங்குவதன் ஊடாக எதிரிபார்க்கப்படுவது ஆசிரியர் வாண்மை விருத்தியாகும். தேசிய கல்வித்தரத்தினை உயர்த்துவதற்கு அடிப்படையாக அமைவது ஆசிரியர்களின் தரமுன்னேற்றமாகும்.

ஆசிரியர் வாண்மை மேம்பாட்டை பின்வரும் பரிமாணங்களில் நோக்கி வளர்ச்சியடைய வேண்டியுள்ளது.

  • இலக்குகள்

  • இடைநிலையம்

  • நீட்சி (காலம்)

  • முறைகள் ( அனுபவங்கள் )

  • விளைவுகளின் மட்டங்கள்


பேராசிரியர் Ray Bloom என்பர் கல்வித்தொகுதியையும் பணி ஆசிரியர்களின் முதன்மைகளையும் எதிர்நிலைப்படுத்தி விளக்கியுள்ளதோடு, “செயல்நிலை மேம்பாடு, வாண்மைக்கல்வி, வாண்மைப்பயிற்சி, வாண்மை ஆதரவு” போன்ற அபிவிருத்திச் செயற்பாடுகளை முன்மொழிந்தார். 


ஆசிரியர் வாண்மை இலக்குகள் தொடர்பாக Haward  bradly பின்வருவனவற்றை முன்மொழிந்தார்.

  • தமது வாண்மை பற்றிய பெறுமானங்களை உணரச் செய்தல்.

  • தொழில்சார் உயர் நிறைவு மற்றும் ஊக்கல்களைப் பெறத்துணிதல்

  • தமது வாண்மையை வளப்படுத்துவதற்கான ஆற்றலும் நேர்முகப்  பின்னூட்டல்களையும் பெறுதல்.

  • மாற்றங்களுடனே நிகழும் ஈடுபாடுகளுக்கு உற்சாகம் வழங்குதல்.

  • பாடசாலையின் மேம்பாட்டுக்கு ஆக்க பூர்வமான பங்களிப்பைச் செய்வதற்கு உதவுதல். 

  • வேலை மாற்றங்களுக்கு ஏற்றவாறு தம்மைத் தாம் அறிந்து கொள்வதற்கும் எதிர்பார்த்துக் கொள்வதற்கும் உதவுதல்.


தற்போது ஆசிரியர் விருத்தியானது பாடசாலை மட்ட விவகாரமாக உருவாகி வருகிறது. உண்மையான நடவடிக்கைகளுக்கும் அதைத் தொடர்ந்த வரும் பிரதிபலிப்புகளுக்குமிடையே எவ்வளவுக்கு அது அமைக்கப்பட்டிருக்கிறதோ அவ்வளவுக்கு அது வெற்றிகரமானது. ஆசிரியர்கள் அனைவரும் ஓரிடத்துக்கு வருவதற்கும் பிரதிபலிப்புக்கான ஒரு மேடையை அவர்களுக்கு வழங்குவதற்கும் ஒருவரை ஒருவர் கேள்வி கேட்டு தமது கருதுகோள்களையும் நம்பிக்கைகளையும் புதுப்பித்துக்  கொள்வதற்கும் ஊக்கமளிப்பதன் ஊடாக PSI மேலும் பயன்பெறும். பாடசாலை அனுபவங்களை ஆசிரியர்கள் பகிர்ந்து கொள்வதன் ஊடாக சவால்களையும் புதிய நிலைமைகளையும் எதிர்கொள்ளத் தயாராகின்றனர். சகபாடிகளிடையே கருத்துப்பகிர்வு ஊக்கமளிக்குமாதலால் கருத்துப் பகிர்வுக்கான களங்களான ஆசிரியர் கூட்டம் மற்றும் பெற்றோர் கூட்டம் என்பவற்றை ஏற்பாடு செய்தல் வேண்டும். 


பாடசாலை மட்ட ஆசிரியர் அபிவிருத்தி என்பது, மாணவரின் அடைவு மட்ட உயர்வு மற்றும் ஆளுமை விருத்திக்கு வழிகாட்டக் கூடிய பொறுப்பு மிக்க ஆசிரயர்களை உருவாக்குவதற்காகப் பாமசாலை மட்ட ஆசிரியர் அபிவிருத்தி தேவையை இனங்காணல், திட்டமிடல், நடைமுறைப்படுத்தல் ஆகிய செயற்பாடுகளைக் கொண்ட தொடர்ச்சியான வேலைத்தி;ட்டமாகும்.

 

SBTD தொடர்பான தெளிவை அதிபர் ஆசிரியர்களிடையே ஏற்படுத்துவது இன்றியமையாததாகின்றது. SBTD  யினை மேற்கொள்வதில் பின்வரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கறது.


SBTD செயற்திட்டம் பற்றிய பூரண விளக்கமின்மையாலும் போதிய தெளிவின்மையாலும் இச் செயற்திட்டங்களை முழுமையாகத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்;த முடியாதுள்ளது.

அதிபர் தமது பாடசாலை ஆசிரியர்களுக்கு அவசியமான SBTD செயற்பாடுகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் தெரிவு செய்யாமல் தமது விருப்பத்திற்கு ஏற்ப ஆசிரியர்களுக்கு பொருத்தமற்றதும் சரியாக இனங்காணபகாணப்படாததமான செயற்பாடுகளைத் திட்டமிடுவதன் காரணமாக சரியான இலக்கினை அடைய முடியாதுள்ளது.

நீண்ட காலம் ஒரே பாடசாலையில் கற்பித்தல் ஆசிரியர்களின் சுயகற்றலில் விருப்பம் இல்லாமை.

உரிய பாடமல்லாத ஆசிரியர் அப்பாடத்தினை கற்பிக்க நிரிப்பந்திக்கப்படல் காரணமாக ஆசிரியர்களின் ஒத்துழைப்பு கிடைக்காமை.

பாடசாலையில் அதிபர் ஆசிரியர்களிடையே காணப்படும் முரண்பாடுகள் காரணமாக SBTD செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாமை.

அதிபரின் கட்டாயப்படுத்தலினால் ஆசிரியர்கள் விருப்பமின்றி செயலமர்வுகளில் பங்குபற்றல்.

தகுதியற்ற வளவாளர்களைக் கொண்டு செயலமர்வுகள் நடத்தப்படலும் வினைத்திறனற்ற செயற்பாடுகளாக காணப்படல்.

வலயமட்டத்தில் உரிய காலத்தில் SBTD செயற்பாடுகள் தொடர்பாக தொடரச்சியாக மேற்பார்வை செய்யப்படுவதில்லை.


பாடசாலை மட்ட ஆசிரியர் அபிவிருத்திச் செயற்பாடுகளைத்(SBTD ) திட்டமிடும் போது,SBTD  பற்றிய 2013.03.11 ஆம் திகதிய 10/2013 இலக்க சுற்று நிருபம் மற்றும் வழிகாட்டி நூல் என்பன கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். SBTD யினை வலுப்படுத்தி வளமூட்டுவதற்காக பின்வரும் படிமுறைகள் கையாளப்படும். 


  • SBTD யானது ஐந்தாண்டு  தந்திரோபாய திட்டத்திலும் வருடாந்த அமுலாக்கத் திட்டத்திலும் பிரதிபலிக்க வேண்டும்.

  • SBTD செயற்பாடுகளைத் திட்டமிடும் போது ஆசிரியர் அபிவிருத்தித் தேவைகள் இனங்காணப்படல் வேண்டும்

.

SBTD செயற்பாடுகளில் பின்வரும் விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டும். 


  • ஆசிரியர் அபிவிருத்திக் கருத்துக்ககளுக்காக ஆசிரியர் கூட்டங்களும் பெற்றோர் கூட்டங்களும்.

  • ஒழுங்கான அடிப்படையில் குழு ரீதியான ஆசிரியர் குழுக்கூட்டங்கள்.

  • பாடசாலை நிகழ்வுகள்

  • செய்து காட்டல் வகுப்புக்கள் 

  • தனிப்பட்ட ஆலோசனை பெறல்

  • செயல்நிலை ஆய்வு 

  • சம்பவக்கற்கை தொடர்புகள்

  • பாடசாலையின் பரந்த அபிவிருத்தி முன்னுரிமைகள் ஆராயப்படல்.

  • ஏனைய பாடசாலைகள் நிறுவனங்களுக்கு ஆசிரியர்கள் விஜயம் செய்தல்

  • சிரேஷ்ட ஆசிரியர்கள் மற்றும் சகபாடிகளால் பயிற்சியளிக்கப்படல்.


SBTD யானது, “பாடவிடயம், கற்றல் கோட்பாடுகள், பிள்ளை விருத்தி, கற்பித்தல் முறைகள், மாணவர் மதிப்பீடு, வகுப்பறை முகாமைத்துவம்” போன்றவற்றுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும். ஒவ்வோரு பாடசாலையும் ஆசிரியர் அபிவிருத்திக்கான குழுவொன்றைக் கொண்டிருக்க வேண்டும். மேலும் SBTD செயற்பாடுகளுக்கு பாடசாலை மட்ட கற்றல் மேம்பாடு நிதியிலிருந்து நிதியினைப் பெறமுடியும். அவ்வாறே சகல பாடசாலைகளும் ஆசிரியர் அபிவிருத்திக்கென பாதீட்டில் ஒரு பங்கை ஒதுக்கிக் கொள்ள முடியும்.


SBTD வேலைத்திட்டத்தில் அதிபரின் பொறுப்புக்கள்


SBTD யின் நோக்கம், தன்மை, நடைமுறைப்படுத்தும் முறை தொடர்பாக அறிதல்.

SBTD யின் முக்கியத்துவம் குறித்து வளவாளர்களின் உதவியுடன் ஆசிரிய குழுவை உருவாக்குதல்.

ஆசிரிய அபிவிருத்தி தேவைகளை இனங்காணல்.

SBTD செயற்பாட்டுக்குத் தேவையான வளங்களை பெற்றுக் கொடுத்தல்.

கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டில் ஈடுபடல்.

வேலைத்திட்டத்தின் இறுதியில் அதன் அனுபவங்கள் தொடர்பாக கலந்துறையாடல்

வேற்றிகரமான பயன்பாட்டு அனுபவங்களை ஏனைய பாடசாலைகளுடன் பகிர்ந்து கொள்ளுதல்.


வாண்மைத்துவ விருத்தியின் அடிப்படையில் ஆசிரியர்கள் மேற்கொள்கின்ற பணிகள் ஆசிரியர் வகிபாகம் எனப்படுகிறது. தொழில்சார் திறன் அடிப்படையில் ஆசிரியர் ஆற்றும் வகிபாகங்கள் மூன்றாகக் காணப்படுகிறது. அந்தவகையில்,

1. கடத்தல் வகிபாகம் - மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் செயற்பாட்டாளராக ஆசிரியர் காணப்படுதல். கற்றலை விட கற்பித்தலுக்கு முக்கியத்துவம் வழங்கப்படல்.

2. பரிமாற்று வகிபாகம் - ஆசிரியர் செயற்பாடுகள்  மாணவர் மையமாகவும் ஓரளவு ஜனநாயகத் தன்மை கொண்டதாகவும் காணப்படுதல்.

3. நிலைமாற்று வகிபாகம் - செயற்பாட்டறிவை கோட்பாட்டறிவாகவும் கோட்பாட்டறிவை செயற்பாட்டறிவாகவும் நிலைமாற்றம் செய்பவராக ஆசிரியர் காணப்படுவார்.


இவ்வாறான வகிபாகங்களை மேற்கொள்ளும் ஆசிரியர்கள் மாற்றங்களுக்கு உட்பட்டு வாண்மை விருத்தியை எற்படுத்திக் கொள்ள வேண்டும். இலங்கையில் 2 இலட்சத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களுக்கு வாண்மை விருத்தியை வழங்க பின்வரும் நிறுவனங்கள் செயற்பட்டு வருகின்றன. 

  • பல்கலைக்கழகம் 

  • திறந்த பல்கலைக்கழகம்

  • தேசிய கல்வி நிறுவகம் (NIE)

  • ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை (GTC)

  • தேசிய கல்வியியற் கல்லூரி

  • ஆசிரியர் கல்வி நிறுவகம்

  • ஆசிரியர் கல்வி மத்திய நிலையம்


மேற்குறிப்பி;ட்ட நிறுவனங்களின் ஊடாக ஆசிரியர்களுக்கு வாண்மை விருத்தியை ஏற்படுத்துவதில், “ வயதுக்கட்டுப்பாடு, தெரிவுமுறை, பயிற்சி நெறிக்காலம், கற்பித்தல் முறை, தங்குமிட வசதி” போன்றவை பிரச்சினைகளாக அமைவதோடு அந்நிறுவனங்களில் பயிற்றப்படும் ஆசிரியர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர். இதனை தவிர்க்கும் முகமாக ஆசிரியத்துவ வாண்மையை விருத்தி செய்யும் பொருட்டு 1997ம் ஆண்டு புதிய கல்வி மறுசீரமைப்பின் ஊடாக “ஆசிரிய கல்வி அபிவிருத்தி அதிகார சபை (NATE National Authority in Teacher Education) எனும் நிறுவனம் உருவாக்கப்பட்டது. 


முன்னர் குறிப்பிட்ட ஆசிரிய பணி நிறுவனங்களுக்கிடையே உள்ள பிரச்சினைகளை இல்லாமல் செய்து ஆசிரிய வாண்மையை விருத்தி செய்வதே இந் நிறுவனத்தின் நோக்கமாகும். இதனை சிறப்புற மேற்கொள்ள பின்வரும் 6 பணிகளை மையப்படுத்தி ஆசிரிய வாண்மையை விருத்தி செய்வதற்கு முயற்சிசெய்து கொண்டிருக்கிறது.

1. ஆசிரியர் அபிவிருத்தி தொடர்பான கொள்கைகளையும் திட்டங்களையும் உருவாக்குதல்.

2. அக்கொள்கைகளுக்குப் பொருத்தமான கலைத்திட்டத்தினை உருவாக்குதல்.

3. அவற்றினை நடைமுறைப்படுத்தல்.

4. மதிப்பீடு செய்தல்.

5. அவற்றினை ஆய்விற்குட்படுத்தல்.

6. மறுசீரமைத்தல்.


இலங்கையில் ஆசிரிய வாண்மை இன்னும் உறுதி நிலையை அடையவில்லை. அதாவது வைத்தியர், பொறியியலாளர் மற்றம் வழக்கறிஞர் போன்ற தொழிலுக்கு இருப்பதைப் போன்று வாண்மை விருத்தியை ஏற்படுத்துவதற்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வும் வழங்கப்பட்டு உயர் தொழிலுக்குரிய அந்தஸ்த்தை வழங்கியுள்ள போதும் அதனை வாண்மை விருத்தயுள்ளதாக மாற்றுவதற்கு முடியாத நிலையே உள்ளது. இதற்கு பின்வருவனவற்றை உதாரணங்களாக குறிப்பிடலாம். 


பிரத்தியோக கல்வியினை வழங்குவதன் ஊடாக மாதாந்த சம்பளப்பணத்தினை விடுத்த தினசரி சந்தாப்பணம் பெறுபவர்களாக ஆசிரியர்களில் சிலர் காணப்படுதல்.

அதனால் மாணவர்களும் பெற்றோர்களும் சகல ஆசிரியர்களையும் தவறான கண்ணோட்டத்தில் நோக்குதல்.

தற்காலத்தில் பல்கலைக்கழக தெரிவில் அதிக போட்டி நிலவுவதனால் மாணவர்கள் வெளியில் இடம்பெறும் பிரத்தியோக பாடங்களிலே அதிக கவனத்தை செலுத்துவதனால் பாடசாலையில் சிறப்பாக கற்பிக்கும் ஆசிரியர்கள் கூட அதிருப்தியடைதல். 

இன்று பிரத்தியோகக் கல்வி இலவசக் கல்வியை அர்த்தமற்றதாக்கிவிடும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியர்கள் பாடசாலைக்கு வருகை தந்தும் வகுப்பறைக்கு செல்வதில்லை.


ஆசிரியர்கள் கட்டாயமாக தமது தொழில் தொடர்பாக தெளிவினையும் நிலைப்பாட்டையும் கொண்டிருக்க வேண்டும். இதன்போதே மாணவர்களிடையே கற்பித்தல் செயற்பாட்டை திருப்தியாக மேற்கொள்ள முடியும். மாற்றத்தை ஏற்றுக் கொள்ளத் தயங்கும் ஒரு தொழிலாளனால் வளர்ச்சியடைய முடியாது. ஆகவே மாணவர்களிடையே ஏற்படும் முரண்பாடுகளை நடுநிலையானக தீர்த்து வைப்பதோடு உளவியல் நுட்பம் தெரிந்தவராகவும் ஆலோசகராகவும் வழிகாட்டியாகவும் விளங்கி மாணவர்களுக்கு சிறந்த அறிவினை வழங்குபவராக திகழ வேண்டும்.

தற்காலத்தில் ஆசிரியர்கள் கட்டாயம் கற்றக் கொள்ள வேண்டிய ஒரு விடயம் தொழிநுட்ப அறிவாகும். Multimedia projector ஊடாக கற்பித்தல் செயற்பாட்டை மேற்கொள்ளுதல் மற்றும் ஊழஎனை 19 தொற்று காரணமாக பாடசாலைகள் மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் கற்றல் செயற்பாடனது, Zoom app , WhatsApp  ஊடாக வழங்குதல் போன்ற செயற்பாடுகளுக்கு ஆசிரியர்கள் கட்டாயம் தொழிநுட்ப அறிவை கொண்டிருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ஆசிரியர்களுக்கு பல்வேறு வகையான செயலமர்வுகள் நடாத்தப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். 


எனவே, கல்வி தற்காலத்தில் அனைத்து துறைகளுக்கும் அடிப்படையாக அமைவதனால் மாணவர்களுக்கு கல்வியினை வழங்கும் ஆசிரியர்கள் தங்களை அபிவிருத்தி செய்து கொள்வதில் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். மேலும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளும் ஆசிரியர் அபிவிருத்திச் செயற்பாடுகளில் தவறாது கலந்து கொண்டு பாடசாலை வினைத்திறனாக செயற்பட ஒத்துழைக்க வேண்டும் எனலாம். 21ம் நூற்றாண்டுக்கான சிறந்த மாணவ சமுதாயத்தை உருவாக்கும் சிறப்பான ஆசிரியர்கள் தமது தொழில் உயர்தொழில் என்பதைக் கருத்தில் கொண்டு செயலாற்றக் கடமைப்பட்டவர்களாவர்.


- RASIMA. BF. (BA-R),
EASTERN UNIVERSITY, SRILANKA.

                     


Comments

Popular posts from this blog

Case Study Analysis Of MAS Holdings

'வினைத்திறனான கற்றல் கற்பித்தல் செயற்பாடானது மூவழித்தொடர்பாடல் நிகழ்ச்சியினூடாக நடைபெறுவதன் மூலம் ஆசிரியர் - மாணவர் இடைத்தாக்கம் சிறப்பாக அமையும். இக்கூற்றின் அடிப்படையில் உமது கருத்துக்களை முன்வைத்து விளக்குக.

Theory of Instinct [மக்டூகலின் இயல்பூக்கக் கொள்கை]