பாடசாலையில் வள முகாமைத்துவம்

 “சரியானவற்றை சரியாக செய்தலை முகாமைத்துவம்” எனப்படுகிறது. அதாவது சரியான நோக்கங்களை தீர்மானித்துக் கொண்டு அவற்றை உயர்ந்த மட்டத்தில் நிறைவேற்றிக் கொள்வதற்கு வரையறுக்கப்பட்ட வளங்களை சரியாக பயன்படுத்துதலை முகாமைத்துவம் எனும் பதம் குறித்து நிற்கிறது.

முகாமைத்துவம் என்பதற்கு பல்வேறு அறிஞர்களும் பல்வேறு வரைவிலக்கணங்களை வழங்கியுள்ளனர். அந்தவகையில்,


  • மேரி பாக்கர் பொலட் (Merry Parker Follett, 1968)  - இவரே முகாமைத்துவம் என்பதற்கு முதலில் வரைவிலக்கணம் கொடுத்தவர் ஆவார். “ஏனையவர்களின் ஊடாக செயற்கிரமத்தை நிறைவு செய்து கொள்ளலே முகாமைத்துவம்”. என வரைவிலக்கணப்படுத்தியுள்ளார்.


  • கோக் மற்றும் ஜோன்சன் (Hodge and Johnson, 1970)  – “ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட உறுதியான குறிக்கோளை அடைவிப்பது தொடர்பான வளங்களையும், சேவையையும் பயன்படுத்துவதும் அவற்றை ஒழுங்கமைப்பதுமான செயற்பாடு”. 


  • சர்வதேச கல்விக் களைக்களஞ்சியம் (The International Encyclopaedia of Education) - குறிக்கோளை உருவாக்குதல், தெளிவான நிகழ்ச்சித்திட்டத்தினை அபிவிருத்தி செய்தல், அதனை வெற்றிகரமாக அடைவதற்கேற்ற வகையில் வசதிகளை திட்டமிடுதலும், பின்னூட்டலை வழங்குவதும், மாற்றங்களை ஏற்படுத்துவதும் அவற்றைக் கண்காணித்து ஊக்குவிப்பை வழங்குவதும் முகாமைத்துவம் எனக் குறிப்பிடுகிறது. 


பொதுவாக ஒரு நிறுவனத்தின் இலக்கை அடைவதற்காக அந்நிறுவனத்தில் உள்ள மனித, பௌதீக வளங்களைத் திட்டமிடல், ஒழுங்கமைத்தல், கட்டுப்படுத்தல், கண்காணித்தல், நெறிப்படுத்தல் போன்ற செயன்முறைகள் முகாமைத்துவம் எனக் குறிப்பிடலாம். அதாவது நிறுவனத்தின் இலக்குகளை அடைந்து கொள்வதற்கான கருமங்கள் அனைத்தும் முகாமைத்துவம் எனப்படும். 


ஒரு நிறுவனத்தின் முகாமைத்துவ செயற்பாடுகள் ஒரு செயன்முறை ஒழுங்கில் செயற்பட வேண்டும். இதன் அடிப்படையில் ஹென்றி பயோல் முகாமைத்துவ செயற்பாட்டுக்கட்டங்களை ஐந்தாக பிரித்துள்ளார். அவை,


1. திட்டமிடல் - எதிர்காலத்தை ஆராய்ந்து செயற்திட்டத்தை ஆயத்தம் செய்தல் 

2. ஒழுங்கமைத்தல் - மனித, பௌதீக வளங்களை கட்டியெழுப்பி ஒழுங்கமைத்தல்

3. கட்டளையிடல் - ஆளணியினரை தமது பணிகளை ஆற்றப்பண்ணுதல்

4. இயைபாக்கம் - எல்லா செயற்பாடுகளையும் ஒருங்கு சேர்த்து இணைத்தல்

5. கட்டுப்படுத்தல் - விதிகள் அறிவுறுத்தல்கள் என்பவற்றிற்கு இயைபாக செயற்றிட்ட செயற்பாடுகள் நடைபெறுகின்றதா என்பதனை கவனித்தல்.


இவ்வாறு ஹென்றி பயோலின் முகாமைத்துவக் கட்டங்களில் சில குறைபாடுகளை அவதானித்த கலிக், உர்விக் ஆகியோர் அவற்றை நிவர்த்தி செய்யும் நோக்கில் முகாமைத்துவக் கட்டங்களை ஏழு கட்டங்களாக பிரித்தள்ளனர். இவ் ஏழு செயற்பாடுகளையும் இலகுவழியில் விளங்கிக் கொள்வதற்காக “PODSCORB” எனும் சொற்றொடர் பயன்படுத்தப்படுகிறது. 


திட்டமிடல் - Planning

ஒழுங்கமைத்தல்- Organisation

நெறிப்படுத்தல் -Detecting

ஆளணி வழங்கல் - Staffing

இணைப்பாக்கம் - Cooperation

அறிக்கை செய்தல் - Report

பாதீடு – Budjet


ஒரு சிறந்த முகாமைத்துவமானது பின்வரும் அடிப்படைத் தொழிற்பாடுகளை கொண்டிருக்க வேண்டும். 


1) குறிக்கோள்களை அமைத்தலும் அவற்றை அடைவதற்கான செயற்பாடுகளை இனங்காணலும் 

2) கட்டமைப்புக்கள், முறைமைகள், குறிக்கோளை அடைவதற்கான நடைமுறை விதிகளை ஸ்தாபித்தல்

3) குறிக்கோளை அடைவதற்காக ஆளணியினரையும் இயந்திரங்கள் மற்றும் பணியாற்றும் முறைமைகளையும் பொருத்தமான சூழ்நிலைகள் இடங்கள் என்பவற்றில் இடம்பெறச் செய்தல்

4) திட்டத்தை தயாரித்த நிலையில் செயலாக்குதல்

5) திட்டம் செயற்படுத்தப்படும் போது தேவையான இடங்களில் கண்காணித்தல், சரிபார்த்தல், மதிப்பிடல்.


பாடசாலை ஒரு முதன்மை நிறுவனம் ஆகும். இது பாடங்களை கற்பிக்கும் சாலை அல்லது பாடங்களை கற்பிக்கும் கூடம் எனப்படுகிறது. பாடசாலை ஒன்று வெற்றிகரமாக இயங்குவதற்கு பாடசாலையில் முகாமைத்துவம் சரியாக இடம்பெற வேணடும். இந்த முகாமைத்துவமானது, அபிவிருத்தி முகாமைத்துவம் மற்றும் வள முகாமைத்தவம் என்றவாறு பல வகைகளில் அமையும். இவற்றில் வள முகாமைத்துவம் பாடசாலையில் எவ்வாறு இடம்பெறுகிறது என்பதை விரிவாக நோக்குவோம்.

 

இந்த வகையில் வளங்கள் எனும் போது பௌதீக வளம், மனித வளம் என இரண்டாக நோக்கலாம். 


பௌதீக வளங்கள் - பாடசாலையில் கற்கும் ஒவ்வொரு மாணவனது சிறந்த பெறுபேற்றிற்கு பௌதீக வளங்கள் அடிப்படையாக அமைந்துள்ளன. கட்டிடங்கள், தளபாடங்கள், நீர், மின்சாரம், வகுப்பறைகள், ஆய்வுகூடம், நூலக வசதிகள், தொழிநுட்ப பாடங்களுக்குரிய வசதிகள், அலுவலக பொருட்கள், இலவச பாடநூல் மற்றும் இலவச சீருடைகள் , அழகியல் பாடத்துக்குரிய வசதிகள் என்பனவற்றை பௌதீக வளங்களாக குறிப்பிடலாம். 


பாடசாலை மதிப்பீட்டில் ஒரு பகுதியாக பௌதீக வளங்கள் காணப்படுகிறது. இது பௌதீக வள முகாமைத்துவம் எனப்படுகிறது. இதனால் பாடசாலையில் இனங்காணப்பட்ட வளங்கள் முறையாக முகாமை செய்யப்படுவதன் மூலம் விளைதிறன் மற்றும் வினைத்திறன் மிக்க பாடசாலையாக உருவாக்க முடியும். 

மனித வளம் அல்லது ஆளணி வளம் - மாணவர்கள், ஆசிரியர், நிர்வாகிகள், கல்வி சார் ஊழியர்கள், போன்றோர் இதனுள் அடங்குகின்றனர். கல்வி சார் ஊழியர்கள் இரு வகைளாக பிரிக்கப்படுகின்றனர். 


ஆசிரியர்கள்

கல்வி சாரா ஆளணியினர்

ஆசிரியர்கள் என்போர் ஒவ்வோரு பாடசாலைக்கும் நியமிக்கப்படும் போது பல்வேறு வகையான தரங்களை உடையவர்களாக காணப்படுகின்றார்கள். இதன் அடிப்படையில் ஆசிரியர்களை 4 வகையாகப் பிரிக்கலாம். 

ஆரம்பப் பாடசாலை அசிரியர் 

2ம் தரப் பாடசாலை ஆசிரியர்

தொழிநுட்ப பாட ஆசிரியர்

ஆசிரிய போதனையாளர்

ஆசிரியர்கள் தவிர ஆளணி வளத்தினுள் பாடசாலையில் வேலை செய்யும் ஊழியர்கள், நிர்வாகத்துறை உறுப்பினர்கள் அகியோரும் உள்ளடக்கப்படுகின்றனர்.


தற்காலத்தில் வளங்களை 5M வகைப்பாட்டில் பின்வருமாறு வகைப்படுத்துவர்.

Men  – மனிதர்

Material - மூலப்பொருள்

 Money  – நிதி

Methods – முறைமை

Machinery - இயந்திரங்கள்


மேற்குறிப்பிட்;ட பௌதீக வளம் மற்றும் மனித வளம் என்பன பௌதீக வள முகாமைத்துவம், நிதி முகாமைத்துவம், மனித வள முகாமைத்துவம், நேர முகாமைத்துவம், வகுப்பறை முகாமைத்துவம் என்றவாறு விரிவாக நோக்கலாம். 


பின்வரும் வகையில் பௌதீக வள முகாமைத்துவம் இடம்பெறுகிறது.


  • உடைந்த தளபாடங்களை முகாமை செய்தல்  அதாவது களஞ்சியப்படுத்தி அவற்றை திருத்துவதற்கான பொறிமுறையை உருவாக்குதல்.


  • பொருட் கணக்கெடுப்புகளை வலயக்கல்வி அலுவலகத்துடன் இணைந்து காலத்துக்கு காலம் மேற்கொள்ளுதல்.


  • ஆய்வு கூடம், மலசல கூடம், விளையாட்டு மைதானம் , விளையாட்டு உபகரணங்கள் தொழிநுட்ப பீடம் போன்றவற்றை முறையாக பராமரித்தல் மற்றும் அதற்குத் தேவையான ஊழியர்களையும் நியமித்தல். 


மனித வள முகாமைத்துவம் எனும் போது, அதற்குள் தனியாள் இலக்குகள், தொழிற்பாட்டு இலக்குகள், நிறுவன இலக்குகள், சமூக இலக்குகள் ஆகியவற்றிடையே நேரிய ஒன்றிணைப்புகளும் இணக்கங்களும் முன்னெடுக்கப்படுகின்றன என சபா. ஜெயராசா குறிப்பிடுகின்றார். பல்வேறு முகாமைத்துவ நிபுணர்களும் மனிதவள முகாமைத்துவம் தொடர்பாக வரைவிலக்கணங்களைக் கூறியுள்ளனர். உதாரணமாக, சூலர் மற்றும் ஜங் பிளட் (schuler and Youngblood, 1986) பின்வருமாரு குறிப்பிடுகின்றனர்.


“ஒரு நிறுவனத்தின் ஒழுங்கமைப்பு, சேவையாளர்களின் முக்கியத்துவம், தனியாளினதும் சமூகத்தினதும் நன்மை என்பவற்றுக்காக மனிதவளத்தினை நேர்மையாகவும், சட்டரீதியாகவும் பயன்படுத்துவதற்கும், உறுதிப்படுத்துவதற்குமாக பல்வேறு செயற்கிரமங்களை மேற்கொள்வது மனிதவள முகாமைத்துவமாகும்.”

மனித வள முகாமைத்துவம் என்பது ஒரு நிறுவனத்தின் செயற்பாட்டுக்கு மிகவும் முக்கியமானது. எந்த ஒரு நிறுவனமும் வெற்றி அடைவதும் தோல்வி அடைவதும் மனிதவள முகாமைத்துவத்திலே தங்கியுள்ளது. அந்த வகையில் ஒரு நிறுவனமாகவுள்ள பாடசாலையில் மேலே குறிப்பிட்ட மனித வளங்கள் மிகவும் அத்தியவசியமாகவுள்ளன. இத்தகைய மனித வளங்கள் சிறப்புற செயற்பட பொருத்தமான சூழல் கவின் நிலை முக்கியமாகவுள்ளது.


பாடசாலையின் தலைவராக அதிபர் காணப்படும் அதே வேலை மேற்குறிப்பிட்ட ஆளணியினரை முகாமை செய்பவராகவும் உள்ளார். இந்த வகையிலே குயின் மற்றும் டொலர்ஸ் (1999) ஆகியோர் ஒரு அதிபரின் முகாமைத்துவ வகிபாகம் தொடர்பாக பின்வருமாறு கருத்துக் கூறியுள்ளனர். நிர்வாகம், கலைத்திட்ட செயற்பாடு மற்றும் ஆலோசனை, தொழில் விருத்தி மற்றும் மேற்பார்வை மனிதவள முகாமைத்துவம், மாணவ முரண்பாடுகளை தீர்த்தல், மாணவர்களின் கடமைகளை முறைப்படுத்தல் போன்றவை அதிபரின் கடமையாகும். 


பாடசாலை அதிபருடன் பிரதி அதிபர், உதவி அதிபர், பிரவுத்தலைவர்கள், பாட இணைப்பாளர்கள், வகுப்பாசிரியர்கள் போன்றோர் பாடசாலை முகாமையில் பங்கெடுக்கின்றனர். இவர்களை அதிபரானவர் உரிய முறையில் முகாமை செய்ய வேண்டும். இதன்போது  பாடசாலையின் இலக்குகளை இலகுவாக அடையமுடியும். மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது. இதனால் அதிபர் ஆசிரியர்களுடன் முரண்பாடின்றி செயற்பட வேண்டும். அவ்வாறே ஆசிரியர் - ஆசிரியர், ஆசிரியர் - மாணவர், ஆசிரியர் - பெற்றோர் போன்றோர்களுக்கு இடையில் ஏற்படும் முரண்பாடுகளை தீர்த்து மனிதவள முகாமையினை சிறப்பாக பேண வேண்டும். 


அதிபர் செயற்திறன் மிக்கவராக இருக்க வேண்டும். தன்னை காலத்துக்கு ஏற்ப இற்றைப்படுத்திக் கொள்ள வேண்டும். உதாரணமாக, தொழிநுட்பத் தேர்ச்சித் திறன், மனிதவியல் தேர்ச்சித் திறன், எண்ணக்கரு தொடர்பான பேச்சுத்திறன் என்பவற்றை வளர்த்துக்  கொள்வதோடு பின்வரும் விடயங்கள் தொடர்பாகவும் அறிந்திருத்தல் வேண்டும்.

இலங்கை சட்ட திட்டங்களை அறிந்தவராக இருத்தல்..

சிறந்த முறையில் தீர்மானங்களை எடுத்தல். 

சிறந்த முறையில் நிதி முகாமையை பேணல்.

சிறந்த முறையில் திட்டமிடல்களை மேற்கொள்ளல்.

சிறந்த முறையில் தரவுகளை நிரற்படுத்தல் அதனை சேமித்து வைத்தல்.

கல்வித்திணைக்களங்கள் அதிகாரிகளுடன் இணைந்து பயணித்தல். 

சுற்று நிருபங்களை அறிந்தவராக இருத்தல்.

SDC,  SMT யுடன் இணைந்து செயற்படுபவராக இருத்தல்.


சிறந்த நற்பிரஜைகளை உருவாக்குவதன் மூலம் சிறந்த சமூகத்தை உருவாக்குவதற்கே பாடசாலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் மாணவர்கள் சரியாக முகாமை செய்யப்பட வேண்டும். இதற்காக,

மாணவளின் ஒழுங்கு, விழுமியம், நடத்தை போன்றவற்றை நன்கு திட்டமிட்டு மாணவர்களிடையே ஏற்படுத்த வேண்டும்.

இலவச சீருடை மற்றும் இலவச பாடநூல் சரியாக மாணவர்களிடையே பகிரப்படல் வேண்டும்.

அவ்வாறே உணவும் மாணவர்களுக்கு உரிய முறையில் சுத்தமாக வழங்கப்படுவதை கவனித்தல் வேண்டும்.

மாணவர்கள் அழுக்கற்றவர்களாக சுத்தமாக வருகை தர வேண்டும் அதனை மானவத்தலைவர்கள் ஊடாக கண்காணிக்கலாம். 

மாணவர்கள் குழுக்களாக செயற்பட ஊக்குவித்தல்.

நேரசூசிக்கு அமைய மாணவர்கள் செயற்படுகின்றனரா என்பதை அவதானித்தல்.

  போன்றவற்றை மேற்கொள்ளல் வேண்டும்.


தனியாள் விருத்தி ஏற்படும் போதே ஆளுமை விருத்தி ஏற்பட்டு சமூக அபிவிருத்தி ஏற்படும். இந்த வகையில் பாடசாலையில் உள்ள அதிபர், ஆசிரியர், மாணவர், சிற்றூழியர் போன்றோரிடம் தனியாள் விருத்தி ஏற்பட வேண்டும். இது பாடசாலை சிறந்து விளங்க அவசியமாகும். மாணவர்களின் தனித்திறமைகளை இனங்கண்டு விருத்தி செய்வது அதிபர் மற்றும் ஆசிரியரின் கடமையாகும். மேலும் மாணவர்களின் திறனுக்கு ஏற்ப பாடங்களைத் தெரிவு செய்ய ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும். இதன் போதே பாடசாலை விளைதிறனும் வினைத்திறனும் மிக்க பாடசாலையாக மாறும்.

 

ஒரு விளைதிறன் பாடசாலையில் நேரம் என்பது முதன்மையான வளமாகும் என்பதனால் அங்குள்ள அனைவரும் நேரமுகாமைத்துவத்தைப் பேணுவது முக்கியமாகும். பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் அனைவரும் நேரத்தை மிகவும் பயன்பாடுள்ள வகையில் திட்டமிட்டு பயன்படுத்தல் அவசியமாகும். நேரம் எவ்வாறு திட்டமிட்டு பயன்படுத்தப்படுகிறது என்பதும் எவ்வளவு நேரம் வீணாக கழிக்கப்படுகிறது என்பதும் எப்பொழுதும் கவனத்தில் இருக்க வேண்டியதாகும். நேரத்தின் மீதான இவ்வாறான அவதானம் அதனைச் சிறப்புற பயன்படுத்த உதவும். 


ஒரு ஆசிரியர் நேர முகாமைத்துவத்தைப் பேணுவது என்பது அதிபரிலேயே தங்கியுள்ளது. ஒரு ஆசிரியர் சிரமப்படுகிறார் என்று கருணை காட்டுவதை விட வகுப்பிலுள்ள அனைத்து மாணவர்களும் பாதிக்கப்படுகின்றார்கள் என்பதை அவர் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் அத்துடன் ஆசிரியர்களும் தாம் பெறும் வேதனத்துக்கு வகை கூறுபவர்களாக இருத்தல் வேண்டும். அப்போது தான் விளைதிறன் மிக்க பாடசாலையை உருவாக்க முடியும். 

நேரத்தை பயனுள்ளதாக மாற்றுவதற்கு பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

  • முன்னுரிமை அடிப்படையில் பணிகளை மேற்கொள்ளல்.

  • அதிபர்கள் பாடசாலையின் தினசரிக் கடமைகள் பற்றி உரையாட திட்டவட்டமான நேரங்களை ஒதுக்கிக் கொள்ளல்.

  • வகுப்பறை மற்றும் பாடசாலைச் சூழல் சிறந்ததாக இருத்தல்.

  • தலையீடுகளைத் தவிர்த்துக் கொள்ளல்.

  • ஒரு வேலையை ஒரு நேரத்தில் செய்தல்.

வகுப்பறை முகாமைத்துவம் என்பது ஒரு அமைப்பு ரீதியான தொழிற்பாடாகும். ஆசிரியர்கள்  பல்வேறு பணிகளை ஆற்ற வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப் பணிகளை ஆசிரியர் சிறப்பாக ஆற்றும்போது தனது வகுப்பறை முகாமைத்துவ செயற்பாட்டை திறன்பட செயற்படுத்துகின்றார் என மற்றவர்களால் இனங்காணப்படுவார். இவ்வாறு சிறந்த வகுப்பறை முகாமைத்துவமானது ஆசிரியர்கள் வாண்மை விருத்தியுள்ளவர்களாக இருத்தல் என்ற விளைதிறன் மிக்க பாடசாலையின் இயல்பை திருப்திப்படுத்துவதாக அமையும் எனலாம்.


நிதி வளமானது சிறப்பான முறையில் முகாமை செய்யப்படும் போதே பாடசாலையில் நிதிப்பிரச்சினைகள் இடம்பெறாது சிறந்த பெறுபேறுகளை அடையக் கூடிய வகையில் பாடசாலையின் செயற்பாடுகள் இடம்பெறும். ஊழல் மோசடி இன்றி நம்பிக்கையான முறையில் அதிபர் பாடசாலைக்கு கிடைக்கும் நிதியினை பயன்படுத்த வேண்டும். உதாரணமாக, செலவுகள் தொடர்பாக காசேடுகளை பேணுதல், உரிய முறையில் கணக்குகளை பதிந்து கொள்ளல், இவற்றை செய்வதற்கு தனியாக ஒரு ஆசிரியரை நியமித்துக் கொள்தல் போன்றவற்றை அதிபர் மேற்கொள்வதன் மூலம் நிதி முகாமையினை சிறப்பாக மேற்கொள்ள முடியும்.


வளமுகாமையில் வளப்பகிர்வு முக்கியமான ஒன்றாகவுள்ளது. பாடசாலையின் தலைவரான அதிபரினால் பெற்றுக் கொள்ளப்படும் வளங்கள் சரியான முறையில் முகாமைத்துவ செயற்பாடுகளுக்காக பகிர்ந்தளிக்கப்படல் வேண்டும். இதுவே வளப்பகிர்வாகும். தற்போது கல்வி அமைச்சானது அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் பாடசாலைகளுக்கு வலயக்கல்வி திணைக்களம் ஊடாக வளப்பகிர்வினை மேற்கொள்கிறது. ஓவ்வொரு பாடசாலைக்கும் உள்ள ளுனுஊ வங்கி கணக்குப்புத்தகத்துக்கு வலயக்கல்வி அலுவலக நிதிக்கிளை அதனை வலயக் கல்விப்பணிப்பாளரின் அனுமதியுடன் மாற்றீடு செய்யும். பாடசாலையில் தர உள்ளீட்டுப் பொருட்களை கொள்வனவு செய்ய இதனைப் பயன்படுத்துவர்.


மேற்கூறியவாறு வளப்பகிர்வு இடம்பெற்ற போதும் வளங்களை பகிர்வதில் சமமின்மை இடம்பெற்று அது, பாடசாலை முகாமைத்துவத்தில் எதிர்கொள்ளும் சவால்களில் பிரதானமாக விளங்குகிறது.  அதாவது கிராமப்புற பாடசாலைக்கு வழங்கப்படும் வளங்களுக்கும் நகர்ப்புற பாடசாலைக்கு வழங்கப்படும் வளங்களுக்கும் இடையில் சமநிலையற்ற தன்மை உள்ளது. உதாரணமாக,


கிராமப்புற பாடசாலைகளில் பயிற்றப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைவாகவும் நகர்பபுற பாடசாலையில் அதிகமாகவும் காணப்படுதல்.

கணிதம், ஆங்கிலம், விஞ்ஞானம் போன்ற பாடங்களுக்கு ஆசிரியர்கள் குறைவாக காணப்படுதல். 

கிராமப்புற பாடசாலைகளில் வகுப்பறைகளாக மரநிழல், அழகியற்பாட அறைகள், தொழிநுட்ப பாட அறைகள் போன்றவற்றை பயன்படுத்துதல். 

கிராமப்புர பாடசாலைகளில் ஆய்வுகூடம், மைதானம் போன்றவை இன்மையினால் அங்குள்ள மாணவர்கள் இடைவிலகி நகர்ப்புற பாடசாலைகளுக்கு வருதல். போன்றவற்றை குறிப்பிடலாம். 

ஆசிரியர்களில், 

தராதரம் அற்றதும் பயிற்றப்படாததுமான ஆசிரியர் 

தராதரம் உள்ளதும் பயிற்றப்பட்டதுமான ஆசிரியர்

தராதரம் உள்ளதும் பயிற்றப்படாததுமான ஆசிரியர்

தராதரமற்றும் ஆனால் பயிற்றப்பட்டதுமான ஆசிரியர்


என்றவாறு 4 வகைகளில் உள்ளனர். இந்த வகையில் மேற்குறிப்பிட்ட 4 வகையினரையும் கவனத்தில் கொண்டு தமது பாடசாலைக்குரிய ஆசிரியர்களை அதிபர் பெற்றுக்கொள்கிறார். அத்தடன் குறிப்பிட்ட ஒரு வகுப்புக்கு குறிப்பிட்ட ஒரு மாணவர் தொகைக்கு ஒரு ஆசிரியர் வீதம் போதுமான ஆசிரியர்கள் இருக்கின்றார்களா? அவர்களின் தரங்கள் எவ்வாறு உள்ளது என்பவற்றைக் கருத்தில் கொண்டே பாடசாலைக்குத் தேவையான ஆசிரியர்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் பாடசாலை அதிபர் தமது பாடசாலையின் ஆசிரியர் வளப்பற்றாக்குறை ஏற்படும் போது பின்வரும் பிரதியீட்டு முறைகளை மேற்கொள்வதன் மூலம் தேவையான ஆசிரிய  வளத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். 

இருக்கின்ற ஆளணியினரை போதியளவு பயன்படுத்திக் கொள்வதற்காக நேரசூசியை திட்டமிட்டு நடைமுறைப்படுத்தல். 

ஆசிரியர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கு கோட்டக்கல்வி அலுவலகம், மாகாணக்கல்வித் திணைக்களம் போன்றவற்றுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளல்.

ஓய்வு பெற்ற ஆசிரியர்களை பாடத்துறை ரீதியாக வரவழைப்பதன் மூலமும் ஓரளவு ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யலாம். 

அருகில் காணப்படும் பாடசாலையில் உள்ள ஆசிரியர்களில் இருந்து தங்களுக்குத் தேவையான பாடத்துக்குப் பொருத்தமான ஆசிரியரை குறிப்பிட்ட நேரத்திற்கு வரவழைக்கலாம்


இவ்வாறு கிடைக்கப்பெறும் வளங்களானது தரம் குறைவாகவும் பற்றாக்குறைவாகவும் காணப்பட்டாலும் அவற்றை பயனுள்ள விதத்தில் பயன்படுத்துவதும் பாதுகாப்பதும் அவசியமாகும். உதாரணமாக, 


  • மாணவரின் தொகைக்கு ஏற்ப தளபாடங்களை வழங்கல் 

  • பாராளுமன்ற உறுப்பினர்களின் உதவியுடன் கட்டடிடம், ஆய்வு கூடம் போன்றவற்றை பெற்றுக் கொள்ளல்.

  • பெற்றோர், பழைய மாணவர்களினால் சேகரித்து தரப்படும் பணத்தின் மூலம் தேவையான பொருட்களை வாங்குதல்.

  • நூலகப்புத்தகங்களை பாதுகாக்க பொறுத்தமான ஊழியரை நியமித்தல்

  • பழுதடைந்தவைகள், உடைந்தவை என்பவற்றை திருத்தியமிக்க ஏற்பாடு செய்தல்

  • புத்தகங்கள், தளபாடம் போன்றவற்றை சேதப்படுத்தும் மாணவர்களுக்கு தண்டனை வழங்கல் 

  • விஞ்ஞான ஆய்வு கூடம், செயற்பாட்டறை, அழகியல் உபகரணங்கள் ஆகியவற்றை முறையாக பாதுகாப்பதற்கு தேவையான ஊழியரை நியமனம் செய்தல்.


போன்றவற்றைக் குறிப்பிடலாம். 


எனவே மேற்கூறியவாறு வளங்களை முகாமைத்துவம் செய்வது பயன்தரு பாடசாலையை உருவாக்குவதோடு சிறந்த சமூகத்ததை உருவாக்குவதற்கும் உறுதுணையாக அமையும். இவ்வாறு வளங்களை உச்ச அளவில் பயன்படுத்தி வினைத்திறனை அடையும் செயற்பாட்டை அதிபர் மாத்திரம் முயற்சி செய்து அடைய முடியாது பாடசாலையில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் அனைவரும் ஒன்றாக முயற்சி செய்தாலே அடைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

-RASIMA.BF (BA-R)
EASTERN UNIVERSITY, SRILANKA.

Comments

Popular posts from this blog

Case Study Analysis Of MAS Holdings

'வினைத்திறனான கற்றல் கற்பித்தல் செயற்பாடானது மூவழித்தொடர்பாடல் நிகழ்ச்சியினூடாக நடைபெறுவதன் மூலம் ஆசிரியர் - மாணவர் இடைத்தாக்கம் சிறப்பாக அமையும். இக்கூற்றின் அடிப்படையில் உமது கருத்துக்களை முன்வைத்து விளக்குக.

Theory of Instinct [மக்டூகலின் இயல்பூக்கக் கொள்கை]