இடைநிலைப் பாடசாலைகளின் ஆலோசனை வழங்கல் சேவையின் தன்மைகள், நோக்கங்கள்
ஆரம்பப் பாடசாலை மாணவர்களைப் பார்க்கிலும் இடைநிலைப் பாடசாலை மாணவர்களே அதிகளவான பிரச்சினைகளையும் சவால்களையும் எதிர்கொள்கின்றனர். இவர்களே அவர்களது கல்வி வாழ்க்கையை முடித்து சமூகத்துக்கு செல்பவர்கள். இவ்வாறு சமூகத்திற்குள் நுழையும் இம்மாணவர்கள் சிறந்த நற்பிரஜைகளாக நல்லதொரு தொழிழை செய்யக்கூடியவர்களாக திகழ வேண்டும். இதற்காக அவர்களுக்கு பாடசாலையிலே ஆலோசனை வழிகாட்டல் சேவை கட்டாயமாக வழங்கப்பட வேண்டும். இந்தவகையில் இடைநிலைப் பாடசாலைகளின் ஆலோசனை வழங்கல் சேவையின் தன்மைகள், நோக்கங்களை கீழே விரிவாக நோக்குவோம்.
இடை நிலைப் பாடசாலைகளில் ஆலோசனை வழிகாட்டல் சேவையின் தேவையினை உருவாக்கிய காரணிகளாக கீழ்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
குடும்ப சூழ் நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்
விரும்பத்தக்க பொருத்தமான நடத்தையை விருத்தி செய்வதற்கு பாரம்பரியமாக சமுதாயத்தினால் வழங்கப்பட்டு வந்த ஆதரவு இல்லாத போனமை
கட்டிளைப் பருவ விருத்தியுடன் ஏற்படும் விரைவான மாற்றங்கள்
பாடசாலையில் சிக்கல்கள் அதிகரித்துள்ளமை
குடும்பத்தகராறு, பெற்றோர் பிரிதல், பெற்றோர் வேலை தேடி வெளிநாடு செல்லுதல், குடும்பத்தின் குறைந்த பொருளாதார நிலை, குடும்ப சூழ்நிலையில் இடையூறு ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களுக்கு இட்டுச் செல்கின்ற குறிப்பிடத்தக்க சிக்கல்கள் நிலவுதல் போன்றவை குடும்ப அமைப்பில் பாரிய மாற்றங்கள் ஏற்படுவதற்கு காரணமாகவுள்ளன. இத்தகைய குடும்ப சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் பின்வரும் விளைவுகள் ஏற்படுகின்றன.
பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் சிறந்த புரிந்துணர்வின்மை பிள்ளைகளுக்கு வீட்டில் போதியளவு அன்பும் பாசமும் கிடைக்கப்பெறாமை
பிள்ளைகளை பொருத்தவரையில் பெற்றோர் போதிய கவனிப்பு வழங்காமை
மேலும் வாழ்க்கைச் சிக்கல்கள் காரணமாக பிள்ளைகளது பிரச்சினைகளை தீர்ப்பதற்கு போதிய நேரத்தை பெற்றோர்களுக்கு வழங்க முடியாதுள்ளது.
இத்தகைய பிரச்சினைகளை இடைநிலைப் பாடசாலை மட்டத்தில் உள்ள மாணவர்கள் எதிர் நோக்கும் போது அவர்களுக்கு உதவி செய்வதற்கு பாடசாலை ஆலோசனை வழிகாட்டல் சேவையானது முன் நிற்கின்றது.
மிகையான வன்நடத்தை, சக மாணவருடன் அல்லது சகபாடிகளுடன் முரண்படுதல், சமூக கிலி, அதீத பயம், பாடசாலை சூழ்நிலைக்கேற்ப பொருத்தப்பாடு அடைவதில் பிரச்சினை, போதை வஸ்துக்கள் பயன்படுத்தல் போன்றவை இலங்கையில் இடைநிலைப் பாடசாலை மாணவர்கள் அனுபவிக்கும் சில பொருத்தப்பாடு பிரச்சினைகள் என அவதானிக்கப்பட்டுள்ளது. இத்தகைய பிரச்சினைக்குரிய நடத்தைகள் தோன்றுவதற்குரிய காரணங்களை இல்லாமல் செய்வது பாடசாலை ஆலோசனை வழங்கல் சேவையின் அவசியமான பணியாக உள்ளது.
கட்டிளமைப்பருவ வயதினரிடம் காணப்படும் மிக முக்கியமான பிரச்சினை தம்பால் உணர்வுகளை தம்மால் கட்டுப்படுத்திக்கொள்ளவதற்கு முடியாமையினால் ஏற்படும் கஷ்டங்கள் ஆகும். இப்பிரச்சினைக்கு முழுமையான விளக்கமானது மூத்தோர்களால் வழங்கப்படுவது குறைவாகும். பாலியல் ரீதியான அடிப்படை தகவல்கள் வழங்கப்படாததன் காரணமாகவே எதிர்ப்பாலார் பற்றிய எதிர்மறையான மனப்பாங்குகள் கட்டிளம் பருவ மாணவரிடையே விருத்தி அடைகிறது என்பது தெளிவாகின்றது. கட்டிளம் பருவ வளர்ச்சியுடன் தொடர்புடைய பாலியல் ரீதியான சரியான தகவல்கள் இல்லாமையின் காரணமாக கட்டிளம் பருவ ஆண்களும் பெண்களும் தம்மில் தேவையற்ற எண்ணங்களை வளர்த்துக் கொண்டு தம்மைத் தாமே துன்புறுத்திக் கொள்கின்றனர். மாணவர்கள் இதனைத் தவிர்த்துக் கொள்வதற்கு மட்டுமல்லாது எதிர்ப்பாளர் பற்றிய சாதகமான மனப்பாங்கை விருத்தி செய்து கொள்வதற்கும் பாடசாலை ஆலோசனை வழங்கல் சேவையானது உதவுகின்றது.
தற்காலத்தில் வேலை வாய்ப்புகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக பாடசாலைக் கலைத்திட்டத்தில் அடிக்கடி மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளது. இத்தகைய மாற்றங்களுக்கு ஏற்ப தம்மை மாற்றி அமைத்துக்கொள்வது மாணவருக்கும் சிரமத்தை ஊட்டுவதாக உள்ளது. பாடசாலை கலைத் திட்டம் சிக்கல் அடைந்து செல்வதை தடுக்க முடியாத வகையில் பெற்றோரில் பதற்றத்தை உருவாக்குகின்றது. இத்தகைய விடயங்களை மாணவர்கள் சரியாக முகங்கொள்வதற்கு பாடசாலை ஆலோசனை வழங்கல் சேவையானது முக்கியமாக உள்ளது.
மேற்குறிப்பிட்ட காரணிகளை இல்லாமல் செய்தல் அல்லது அதற்குறிய மாற்றீடுகளை செய்தல் ஆலோசனை வழிகாட்டல் சேவையின் நோக்கங்களாக அமைகின்றன எனலாம்.
விருத்திசார் தேவைகள், பிரச்சினைகள் எழாது தடுத்தல் தேவைகள், பிரச்சினைகளை சமாளிப்பதற்கு உதவி செய்ய வேண்டிய தேவைகள் போன்றவை இடைநிலை மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கல் சேவையின் அவசியத்தை ஏற்படுத்தும் தேவைகளாகும். தான் எதிர்காலத்தில் வெற்றியடைதல், கற்றல் செயற்பாடுகளில உள்ள பிரச்சினைகளை தீர்த்து சிறந்த முறையில் கற்றலில் ஈடுபடல் போன்ற இரண்டுமே இத்தகைய மாணவர்களின் பிரதான தேவைகளாகும். கல்வி ரீதியாக அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளாக கீழ்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
பாடத்தில் கவனம் செலுத்த முடியாமை
பாடப்பிரிவை தெரிவு செய்வதில் கஷ்டம்
வாசித்தல், எழுதுதல் சிரமம்
பாடசாலைக்கு செல்வதற்கு சோம்பல்
பரீட்சை நெருங்கும் போது பதற்றம்
நினைவில் இருத்திக் கொள்வதில் சிரமம்
கற்றல் செற்பாடுகளில் ஆர்வம் குறைவு
இத்தகைய பிரச்சினைகளைத் தீர்க்கும் தன்மை கொண்டதாக பாடசாலை ஆலோசனை வழிகாட்டல் சேவை பாடசாலையினால் ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் அவசியமாகும். இடைநிலை மாணவர்களுக்கு பிரச்சினைகள் ஏற்படாது தடுப்பதற்கு அல்லது பிரச்சினைகளை சமாளிப்பதற்கு வழிகாட்டல் சேவை முக்கியமாகிறது. அதாவது போதைப்பொருள் பாவனை, புகைத்தல் என்பவற்றை தடுத்தல் போன்றவற்றைத் தடுத்துக் கொள்ளக்கூடிய வகையில் ஆலோசனை வழங்கல் சேவை பாடசாலையில் முறையாக இடம்பறுகிறது.
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களில் இடைநிலை மாணவர்களும் உள்ளடங்குகின்றனர். அவர்களை மையமாக்க் கொண்டே சில வகையான போதைப்பொருட்கள் விற்பனையாகுன்றன. இத்தகைய மாணவர்கள் பாடசாலையிலேயே வைத்து பொலிசாரால் பிடிக்கப்படும் சந்தர்ப்பங்களும் உள்ளன. இத்தகைய நிலைமையினைத் தடுப்பதற்கு பாடசாலையிலே ஆலோசகராக செயற்படும் ஆசிரியர்கள் இப்பாவனை தொடர்பான விளைவுகளை எடுத்துக் கூறுவதோடு அப்பாவனைக்கு அடிமையாக உள்ள மாணவர்களை உளவள ஆலோசகரடம் அனுப்புதல் வேண்டும்.
எனவே மேற்குறிப்பிட்டவாறு பல்வேறு வகையான நோக்கங்களையும் தன்மைகளையும் கொண்டதாக இடைநிலைப் பாடசாலை ஆலோசனை வழங்கல் சேவை காணப்படுகிறது எனலாம். இடைநிலை மாணவர்களின் பிரச்சினைகளை தீர்த்து அவர்கள் கல்வியில் சிறந்த பெறுபேற்றை பெறச்செய்தல் வேண்டும்.
Comments
Post a Comment