பாடசாலைகளில் ஆலோசனை வழங்கல் சேவையினை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு நீர் முன்வைக்கும் உபாயங்களைக் குறிப்பிட்டு ஆலோசனை வழங்கல் சேவையினை பயனுறுதியோடு நிறைவேற்றுவதில் உள்ள சவால்களை நடைமுறை உதாரணங்களைக் கொண்டு விபரித்தல்

 ஆலோசனை வழங்கல் சேவையானது பல்வேறு காரணிகளால் தற்காலத்தில் மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. இச்சேவை இல்லாது இருந்திருந்தால் உளரீதியாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையானது மிகவும் அதிகளவிலேயே காணப்பட்டிருக்கும் இத்தகைய ஆலோசனை வழங்கல் சேவையின் அவசியம் உணரப்பட்டு சகல பாடசாலைகளிலும்  இச்சேவை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இச்சேவை வெற்றிகரமாக மேற்கொள்வதற்குரிய உபாயங்களையும் இச்சேவை பயனுறுதியோடு நிறைவேற்றுவதில் சவாலாக உள்ள விடயங்களையும் கீழே விரிவாக நோக்குவோம்.


பாடசாலைகளில் ஆலோசனை வழங்கல் சேவையானது வெற்றிகரமாக மேற்கொள்வதற்குரிய உபாயங்களாக கீழ்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
  • அதிபர் ஆலோசனை வழங்கல் சேவை தொடர்பான அறிவும் தெளிவும் பொறுப்பும் கொண்டவராக தனது கடமைகளைச் செய்தல்.

  • ஆலோசகராகச் செயற்படும் ஆசிரியர்கள் தங்களது ஆலோசனை வழங்கல் சேவை தொடர்பான கடமைகள் பொறுப்புக்களை சரிவர செய்தல்.

  • ஆலோசனைக்குரிய பயிற்சிகளைப் பெற்றவர்களாக ஆசிரியர்கள் காணப்படல்.

  • பெற்றோர்களும் பாடசாலை ஆலோசனை வழிகாட்டல் சேவை தொடர்பான முழுமையான விளக்கங்களைப் பெற்று தங்களது முழுமையான பங்களிப்புக்களை வழங்குதல்.

  • மாணவர்களும் தங்களது பிரச்சினைகளை வெளிப்படையாக குறிப்பிட்டு அது தொடர்பான ஆலோசனைச் சேவையை பெற்றுக் கொள்வதற்கு தானாக முன்வருதல்.

  • ஆலோசனை நுட்பமுறைகளை சிறந்த முறையில் பயன்படுத்தி ஆலோசனைச் சேவையை வெற்றிகரமானதாக மாற்றியமைத்தல்.

  • சமூக நிறுவனங்களுடன் அதாவது ஆலோசனைச் சேவையினை வழங்கும் ஏனைய நிறுவனங்களுடன் பாடசாலை தொடர்பைப் பேணுவதோடு அந்நிறுவனங்களின் உதவியைக் கொண்டு பாடசாலை ஆலோசனை சேவையை பயனுறுதிமிக்கதாக மாற்றுதல்.

  • வலயக்கல்வி பணிமனை தொடக்கம் கல்வி அமைச்சு வரையிலான ஆலோசனை வழங்கல் சேவை தொடர்பான மேற்பார்வைச் செயற்பாடுகளை வினைத்திறனாகவும் நம்பகத்தன்மை கொண்டதாகவும் மாற்றுதல்.

  • பாடசாலை ஆலோசனை வழங்கல் சேவையானது மாணவர்களின் தேவைகள், பாடசாலையினுள் உள்ள வசதி, சூழ்நிலை என்பவற்றைக் கருத்தில் கொண்டு மைய நாட்ட முறை, மைய நீக்க முறை என்ற முறைகளில் ஏதாவதொரு முறையில் ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

  • பாடசாலையின் குறிக்கோள்கள் பாடசாலையின் ஆலோசனை வழங்கல் சேவையோடு இணைந்து செல்லக்கூடியதாக காணப்படல்.


எனவே மேற்குறிப்பிட்டவாறு பல்வேறு வகையான உபாயங்களைக் கையால்வதன் ஊடாக பாடசாலை ஆலோசனை வழங்கல் சேவையினை வெற்றிகரமானதாக மேற்கொள்ளலாம். இருப்பினும் அத்தகைய சேவையினை பாடசாலையில் மேற்கொள்வதில் பல்வேறு சவால்களை எதிர்நோக்கவேண்டியுள்ளது. அத்தகைய சவால்களை கீழே விரிவாக நோக்குவோம்.


சில அதிபர்களும் ஆசிரியர்களும் இச்சேவை தொடர்பான அதிக அக்கறையோ பொறுப்புணர்ச்சியோ இன்றி காணப்படுகின்றமை என்பது இச்சேவை பயனுறுதி மிக்கதாக செயற்படுத்துவதில் எதிர் கொள்ளும் ஒரு சவாலாகும். அதாவது அதிபர்கள் ஆலோசனை வழிகாட்டல் சேவைக்கு தன்னால் மேற்கொள்ளப்பட வேண்டிய பொறுப்புக்களான, “. வளங்களை தேடுதலும் வழங்குதலும்,   சேவை தொடர்பான தீர்மானங்களை எடுத்தல், பல்வேறு அதிகாரிகளுக்கு இடையில் இணைப்பை ஏற்படுத்தல்,     “ என்பவற்றை புரிவதில் அதிகளவு முக்கியத்துவம் வழங்குவதில்லை. மேலும் இச்சேவையில் ஈடுபடும் ஆசிரியர்களுக்குரிய வசதிகளையும் செய்து கொடுப்பதுமில்லை. மாறாக மாணவர்கள் பெறுபேற்றில் அதிக புள்ளிகளைப் பெற வேண்டும் என்று அதற்கான முயற்சிகளை மாத்திரமே செய்கின்றனர். ஆலோசனை தேவைப்படும் மாணவர்களை கவனிப்பது குறைவாகவே உள்ளது. மேலும் இச்சேவை தொடர்பாக இடம்பெறும் கருத்தரங்குளில் அதிபர், ஆசிரியர்கள அதன் முக்கியத்துவம் உணர்ந்து கலந்து கொள்வதும் குறைவாகும்.


ஆலோசகராக செயற்படும் ஆசிரியர்கள் தங்களுக்குரிய கடமைகளை சரியாக நிறைவேற்றாது பெயரளவில் மாத்திரமே ஆலோசகராகச் செயற்படுவது இச் சேவையில் உள்ள சவாலாகும். இவர்கள் ஆலோசனை வழங்கினாலும் அதற்குரிய ஒழுக்க நெறிகளைப் பேணுவது குறைவாகும். அத்தகைய ஒழுக்க நெறிகளாக கீழ்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.

  • சேவையை கேலிக்கிடமாக்காது இருத்தல்

  •  பொருத்தமற்ற கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடாமை

  •  பொறுப்புக்களை ஏற்காது இருத்தல்

  •  இரகசியத்தன்மை பேணல்

  •  தனிப்பட்ட இலாபம் தரும் சிகிச்சை பெறாதிருத்தல் 

  • நட்புடைமை தவிர தனிப்பட்ட தொடர்பு வைத்திருப்பதில்லை


இவற்றில் இரகசியத்தன்மை பேணல் என்பது ஆலோசகரின் முக்கிய பண்பாகும். இத்தகைய பண்பு ஆலோசகராகச் செயற்படும் சில ஆசிரியர்களில் குறைவாகும். அதாவது ஆலோசனைக்குட்படும் மாணவர்களின் பிரச்சினைகளை வெளிப்படையாக பிற மாணவர்களிடமும் ஆசிரியர்களிடம் கூறுவதைக் குறிப்பிடலாம்.


பெற்றோர்களும் மாணவர்களும் இச்சேவையினைப் பெற்றுக்கொள்வதற்கு முன்வருகின்றமை குறைவாகும்.  ஆலோசகரிடம் செல்லும் சகலரையும் உளநோயாளியாகவே தப்பெண்ணம் கொள்ளும் தன்மை சமூகத்தில் உள்ளது. இதனாலேயே மாணவர்கள் ஆலோசனை வழிகாட்டலை பெற்றுக் கொள்வதற்கு முன்வருவது குறைவாகின்றது. இவ்வாறு ஆலோசனை வழங்கல் சேவை தொடர்பான தப்பெண்ணம் இச் சேவையில் உள்ள ஒரு சவாலாகும். 


அவ்வாறே பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுன் உடல் உள ரீதியான பிரச்சினைகளை கவனிப்பதுமில்லை ஆலோசகரிடம் செல்வதற்கும் அனுமதிப்பதுமில்லை. கட்டிளமைப் பருவத்தினர் தங்களது பிரச்சினைகளை பெற்றோரிடம் கூறுவதற்கு தயங்குவார்கள் அதனால் ஆலோகரின் உதவியை இத்தகைய மாணவர்கள் நாட வேண்டியது அவசியமாகும்.


தற்காலத்தில் ஏற்பட்டுள்ள இணைய ஊடக்க் கலாசாரத்தினால் மாணவர்கள் அதிகளவு உள ரீதியான பாதிப்புக்களை உண்டாக்கியுள்ளது. இவை தொடர்பாக மாணவர்களும் பெற்றோரும் கவனம் செலுத்துவது குறைவாகும். இவை தொடர்பன விளக்கத்தை வழங்குவதற்கு ஆசிரியர்கள் சமூக நடப்பு வடயங்களை அறிந்து தங்களை இற்றைப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். இத்தகைய செயற்பாடுகளை ஆசிரியர்கள் செய்யாது இருப்பதும் இச்சேவையில் உள்ள ஒரு சவாலாகும். 


நேரமின்மை ஆலோசனை சேவையினை திருப்திகரமாக மேற்கொள்வதற்கு தடையாக அமைவதும் இச்சேவையில் உள்ள சவாலாகும். அதாவது 300 மாணவர்களுக்கு மேற்பட்ட பாடசாலைக்கு ஒரு ஆலோசகர் என்ற ரீதியில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர் இத்தகைய ஆசிரியர்கள் ஒரு வகுப்புக்குச் செல்லும் போது, ஆலோசனைகளை ஏனையவர்களுக்கு வழங்க முடியாத நிலை காணப்படுகிறது. அதுமாத்திரமன்றி பகுதி நேரமாக ஆலோசகராக தொழிற்படும் ஆசிரியர்கள் முழுமையான கவனத்தை பாடங்களை கற்பிப்பதிலேயே  செலுத்துகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


எனவே மேற்குறிப்பிட்டவாறு பல்வேறு விடயங்கள் பாடசாலை ஆலோசனை வழங்கல் சேவையை பயனுறுதிமிக்கதாக மாற்றிவதில் சவால்களாகவுள்ளன. இத்தகைய சவால்களை படிப்படியாக முறியடித்து அதனை பயனுறுதி மிக்கதாக மாற்றுவதற்கு சகல அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் தங்களது பங்களிப்புக்களை வழங்குதல் வேண்டும். 

 -RASIMA.BF (BA- R)

Comments

Popular posts from this blog

Case Study Analysis Of MAS Holdings

'வினைத்திறனான கற்றல் கற்பித்தல் செயற்பாடானது மூவழித்தொடர்பாடல் நிகழ்ச்சியினூடாக நடைபெறுவதன் மூலம் ஆசிரியர் - மாணவர் இடைத்தாக்கம் சிறப்பாக அமையும். இக்கூற்றின் அடிப்படையில் உமது கருத்துக்களை முன்வைத்து விளக்குக.

கலைத்திட்ட மேம்பாட்டினை இன்றைய தேவையை முக்கியப்படுத்தி உமது கருத்துக்களை விளக்குக.