வகுப்பறை கற்பித்தலில் இயல்பூக்கங்களை பிரயோகித்தல்
இயல்பூக்கங்களை எவ்வாறு ஒரு ஆசிரியர் வகுப்பறைக் கற்பித்தலில் பிரயோகிக்கலாம் என்பதை பல்வேறு உதாரணங்களுடன் விளக்குதல்.
“இன்றைய சிறார்கள் நாளைய தலைவர்கள்” என்கின்ற ரீதியில் மாணவர் சமுதாயத்தினை கல்வி அறிவில் முன்னேற்றுதல், எதிர்கால சவால்களுக்கு முகம் கொடுக்கக்கூய ஆளுமையும் திறனும் கொண்டவர்களாக உருவாக்குதல், அவர்களை முழுமையான மனிதர்களாக்குதல் போன்ற பணிகளில் பாடசாலையானது மிகப்பெரிய வகிபங்கினைக் கொண்டுள்ளது. அத்தகைய வகிபங்கில் ஆசிரியர்கள் முதன்மை பெறுகின்றனர். பாடசாலையின் வகுப்பறையிலிருந்தே சமூக ஆளுமையுடைய அறிவு பூர்வமான மாணவர்களையும் நாளைய சிறந்த தலைவர்களையும் வளர்த்தெடுப்பதற்குரிய கற்றல் - கற்பித்தல் முறைமைகளை ஆசிரியர்கள் சரியான முறையில் முன்னெடுக்கின்ற போது அது சாத்தியமாகும்.
தரமான கல்விக்கு தரமான ஆசிரியர் என்ற பதம் இன்று எல்லோராலும் முன்னெடுக்கப்பபடுகிறது. வேகமாக மாறிவரும் கற்பித்தல் உத்திகளை ஆசிரியர்கள் கற்பித்தலில் உள்வாங்குவதன் ஊடாகவே ஆர்வமான கற்றல் சூழ்நிலை ஏற்படுகின்றது. இந்த வகையில் ஆசிரியர்கள் தங்கள் கற்பித்தல் செயற்பாட்டில் தூண்டி – துலங்கள் கொள்கை, ஸ்கின்னரின் தொழில் நிபந்தனைப்பாடு, மக்டூவலின் இயல்பூக்கக் கொள்கை, பவ்லோவின் பழைய நிபந்தனைப்பாடு போன்ற கொள்கைகளை சிறந்த முறையில் பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் கற்பித்தல் செயற்பாட்டை வெற்றிகரமானதாக மாற்றுகின்றனர். இக்கொள்கைகளில் மக்டூவலின் இயல்பூக்கக் கொள்கையில் உள்ள ஒவ்வொரு இயல்பூக்கங்களையும் ஒரு ஆசிரியர் வகுப்பறைக் கற்பித்தலில் எவ்வாறு பிரயோகிக்கலாம் என்பதை கீழே விரிவாக நோக்குவோம்.
மக்டூவல் 14 வகையான இயல்பூக்கங்களை வகைப்படுத்தியுள்ளார். இவற்றில் சகல இயல்பூக்கங்களையும் ஆசிரியர் வகுப்பறை கற்பித்தலில் பிரயோகிக்க முடியாது. குழுவூக்கம், ஆக்கவூக்கம், ஆராய்வூக்கம், போன்ற சிலவற்றையே பிரயோகிக்கலாம். அந்த வகையில் அவற்றை விரிவாக உதாரணங்களுடன் நோக்குவோம்.
ஆராய்வூக்கத்தினை கற்பித்தலில் மாணவர்களிடத்தே சிறந்த முறையில் பிரயோகிக்கலாம் . உதாரணமாக, வகுப்பறையில் விஞ்ஞானப பாடத்தில் உள்ள பரிசோதனைகளை மாணவர்களிடம் கொடுத்து ஆராயச் செய்தல், பாடத்தினை படிப்பிப்பதற்கு முன் அதன் தலைப்பினை வழங்கி அது தொடர்பாக ஆராய்ந்து தகவல்களை திரட்டி வருமாறு கூறுதல். படித்த கோட்பாடுகளைக் கொண்டு புதிய உபகரணங்களை கண்டுபிடிக்குமாறு ஊக்குவித்தல் போன்றவற்றை ஆசிரியர் வகுப்பறையில் வழங்குவதன் ஊடாக மாணவர்களிடம் காணப்படும் ஆராய்வூக்கமானது கற்பித்தலில் பயன்படுத்தப்படுகிறது. இதன் ஊடாகவே பாடசாலை மட்டத்தில் இடம் பெறும் புதிய கண்டுபிடிப்பாளர்
போட்டியில் மாணவர்கள் பங்குபற்றி சர்வதேச ரீதியல் பேசப்படுவதைக் காணலாம்.
தற்காலத்தில் மெக்னோ செட், கியூப் செட், பார்ம் போர்ட், பிளாஸ்டிக் பொம்மைகள் போன்றவற்றை ஆசிரியர் மாணவர்களுக்கு வழங்கலாம். இதன் போது, படைப்பாற்றல் அதிகரித்து அவர்களின் ஆர்வமும் சக்தியும் அதிகரிக்கின்றது. உதாரணமாக கியூப் செட் ஒன்றினை வழங்கி அதன் நிறங்களை ஒழுங்குபடுத்துமாறு கூறுதல். இதன் போது மாணவன் கடுமையாக முயற்சி செய்து இதனை உருவாக்குகிறான். இது அவனது ஆக்கத்திறனை ஊக்கப்படுத்தும். நுண்ணறிவு அதிகரிப்பதற்கு மிகவும் உதவியாகவுள்ளமையினால் சிறியோர் முதல் பெரியோர் வரை இதனைப் பயன்படுத்துவதில் ஆர்வமாகவுளள்மை குறிப்பிடத்தக்கதாகும்.
பாலியலூக்கமானது, பருவமடைதல் வரை செயலற்றதாகவே இருக்கும். பருவமடைதலில் இது தூண்டப்படுகிறது. இதன் போதே காதல் என்பது மாணவர்களிடத்தே இடம் பெறுகிறது. இதனைக் கவனியாது விடுவதனாலேயே மாணவர்களிடத்தே பல்வேறு பிரச்சினைகள் இடம்பெறுகிறது. ஆசிரியர்கள் இது தொடர்பான விளக்கத்தினை வழங்கி மாணவர்கள் தவறான வழியில் செல்லாது தடுத்தல் வேண்டும். இதற்காகவே சுகாதாரப்பாடத்தில் இது தொடர்பான விளக்கம் வழங்கப்பபடுகிறது. இருப்பினும் ஆசிரியர்களில் சிலர் மாணவர்களிடம் இது தொடர்பாக உரையாடுவதற்கு வெட்கப்படுகின்றனர். இது முற்றிலும் தவறான ஒன்றாகும். இது தொடர்பான விளக்கத்தினை மாணவர்களுக்கு வழங்குவதன் மூலம் அவர்கள் எதிர்கொள்ளும் பாலியல் ரீதியான வன்முறைகளை தடுத்துக்கொள்ள முயற்சி செய்வர். யாதேனுமொரு நடத்தையை தனியாகக் காட்டும் போது அது தொடர்பாக காட்டும் ஆர்வத்திலும் பார்க்க கூடுதலான ஆர்வம் அந் நடத்தையை கூட்டாகக் காட்டும் போது வெளிக்காட்டப்படுகிறது. இதுவே குழுவூக்கமாகும். இந்த வகையிலையே பாடசாலைகளில்
பல்வேறு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, சாரணர் இயக்கம், பசுமைப்படையணி போன்றவற்றை குறிப்பிடலாம். குறிப்பாக ஆரம்பப்பிரிவு மாணவர்களின் வகுப்பறையில் கதிரை, மேசைகள் குழுவாக இருக்கும் வகையிலேயே இடப்பட்டுள்ளது. இது மாணவர்களுக்கு குழு செயற்பாடுகளை வழங்குவதற்கும் அவர்கள் அதனை இலகுவாக செய்வதற்கும் ஏற்புடையதாகும். குழுவில் மாணவர்கள் உள்ள போது அவர்கள் இக்குழுவிற்கு விசுவாசமாகவும் அர்ப்பணிப்புடனும் செயற்படுவர். இதன் போது குழுவிலிருந்து மாணவரை தனிமைப்படுத்தாது கவனமாக ஆசிரியர் செயற்பட வேண்டும்.
குழு முறைக்கற்பித்தலானது, ஆரம்பப்பிரிவு முதல் உயர்கல்வி வரை இடம்பெறுகிறது. குழுவூக்கமானது கற்றலுக்கு பொருத்தமாக அமைவதனாலேயே குழுமுறைக் கற்பித்தல் சிறப்பாகவுள்ளது எனலாம். குழுமுறைக் கற்றல் தான் பிற முறைகளை விட சிறந்தது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குழுவாக செயல்படும் வாய்ப்பின் மூலம், வேகமாகவும் செம்மையாகவும் கற்றுக் கொள்ளல், கல்வி பயிலுதல் பற்றி நேர்மையான எண்ணம், அதிகம் தக்கவைத்துக் கொள்ளும் திறன்
போன்றன கிடைக்கின்றது என்றும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. ஆசிரியர் குழுமுறைக் கற்பித்தலை வகுப்பறையில் பிரயோகித்து குழுவூக்கத்தை கற்றலில் பிரயோகிக்கலாம்.
திரட்டூக்கத்தினை மாணவர்களிடம் பின்வரும் வகையில் பிரயோகிக்கச் செய்யலாம். முத்திரை சேகரித்தல், நாணயங்கள் சேகரித்தல், படங்கள் மற்றும் ஆர்வமுள்ள பொருட்கள் சேகரித்தல் போன்றவற்றை மேற்கொள்ளல். மேலும் முத்திரை சேகரித்தல் தற்காலத்தில் மிகக்குறைவாகவே மாணவர்களிடம் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். அவ்வாறே பாடங்களுடன் சம்பந்தப்பட்ட பொருட்களையும் திரட்டி கொண்டு வர சொல்லுதல் வேண்டும். இவ்வாறு திரட்டும் செயற்பாடு ஊக்குவிக்கப்படாத போது மாணவர்களிடம் திரட்டூக்கம் அதிகமாகி திருடர்களாக மாறுகின்றனர்.
சிரிப்பூக்கமானது, குழந்தைகளின் கேளிக்கை மற்றும் இன்பத்திற்கான ஒரு மூலமாகும். எல்லா வகையான நகைச்சுவைகளின் போதும் மற்றவர்கள் சிரிக்கும் போதும் சிரிப்பர். ஒரு குறும்புச் செயலை செய்துவிட்டு, சிரிப்பது அவர்கள் மத்தியில் பொதுவானது. இந்த உள்ளுணர்வு இருப்பதால் ஆசிரியர் கட்டுப்பாடுகளை விதித்து
தேவையின்றி கட்டுப்படுத்தக் கூடாது.
மேலும் மாணவர்களை ஆரோக்கியமான வகையில் கற்றலில் ஈடுபட வைப்பதற்கு சிரிக்கச் செய்தல் வேண்டும். இதன் போது ஆரோக்கியமும் மேம்படுகிறது. இதற்காக ஆரம்பப்பிரிவு மாணவர்களிடையே யானை, சிங்கம் போன்று செய்து காட்டுதல், நகைச்சசுவை மிக்க படிப்பினைக் கதைகளைக் கூறுதல் போன்றவற்றை செய்யலாம். தற்கால்தில் தொழிநுட்ப வசதிகளானது அதிகமான பாடசாலைகளில் வழங்கப்பட்டுள்ளது இந்த வகையில், ஆசிரியர்கள் திரைகளில் நகைச்சுவை குறும்படங்களை காட்சிப்படுத்தலாம்.
வகுப்பறையில் கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடங்களை பெரும்பாண்மையான மாணவர்கள் விரும்பாமைக்கு வெறுப்பூக்கம் காரணமாகும். உதாரணமாக, கணிதப்பாடத்தில் கணக்குகளை காணும் மாணவன் அவை விளங்காது அதிலிருந்து பின்வாங்குகிறான. இதனாலேயே சில மாணவர்கள் பாடசாலைக்கு சமூகமளிப்பது குறைவாகவே உள்ளது. இதனால் ஆசிரியர்கள் குறிப்பிட்ட அப்பாடங்களை மாணவர்கள் விரும்பும் வகையில் கற்பிக்க வேண்டும்.
வகுப்பறையில் மாணவர்களிடம் உள்ள போரூக்கத்தினையும் பாலியலூக்கத்தையும் நல்ல வகையில் பயன்படுத்தலாம். உதாரணமாக, போரூக்கம் அதிகமாக உள்ள ஒருவரை சொற்களால் போரிடும் ஒருவராக மாற்றலாம். அதாவது, நல்ல பேச்சாளராக அல்லது விவாதம் புரிபவராக மாற்றலாம். கட்டிளமைப்பருவத்தில் பாலியலூக்கமுள்ளவரை ஓவியம் வரைதல், சங்கதீம், நடனம் மூலம் நன்னெறிப்படுத்தலாம்.
எனவே மேற்கூறியவாறு ஆராய்வூக்கம், ஆக்கவூக்கம், திரட்டூக்கம், போன்றவற்றை ஆசிரியர் மேற்கூறியவாறு பிரயோகிக்கலாம். இதன் மூலம் மாணவர்களிடம் உள்ள இயல்பூக்கங்களும் சிறப்பாக வளர்ச்சியடையும். மேலும், இயல்பூக்கங்களுக்கு தன்னிச்சையான சுதந்திரம் கொடுக்கக்கூடாது. அவை அடக்கப்படும் போது பிழையான பொருத்தப்பாடும் நடத்தைகளும் தோன்றலாம். இவ்வாறு
மாணவர்களுக்கு சீரிய கல்வியினை சிறந்த முறையில் வழங்குவதற்கு
ஆசிரியர்கள் கவனம் செலுத்துகின்ற போது நற்சமூகத்தை கட்டியெழுப்புவது என்பது திண்ணம்.
Comments
Post a Comment