Theory of Instinct [மக்டூகலின் இயல்பூக்கக் கொள்கை]
ஒவ்வொரு இயல்பூக்கமும் பொருள், மனவெழுச்சி, தொழிற்பாடு ஆகியவற்றின் மூலம் ஆக்கம் பெறுகின்றது. இது தொடர்பான விளக்கத்தை முன்வைத்து விபரித்தல்.
ஊக்கல் என்பதை வெவ்வேறு உளவியலாளர்கள் வெவ்வேறு விதமாக வரைவிலக்கணம் செய்துள்ளனர். அந்த வகையில்,
·
J.W. Atkinson (1996)
“அது யாதேனும் பெறுபேற்றைப் பெறுவதற்காக ஆட்களை வழிப்படுத்தும், உந்தும் போக்காகும்.”
·
G.M. Blair & others ( 1947)
“ ஊக்கல் என்பது கற்பவரின் உள்ளார்ந்த ஆற்றல்களை அல்லது தேவைகளை அவரது சூழலில் காணப்படும் பொருள்களின்பால் வழிப்படுத்தும் ஒரு செயன்முறையாகும்.”
·
Ball ( 1977)
“மனித நடத்தையை தூண்டி, நெறிப்படுத்தி மனித நடத்தையை முன்னெடுத்துச் செல்லும் உந்து சக்தியாகும்.”
·
கலோல் ( 1965)
“ "ஒரு செயலில் கற்பதற்கு செலவிட முடியுமானதும் செலவிடக் கூடியதுமான நேரம் மாணவர்களின் ஊக்கலின் வலிமையை கணக்கிடும் முறை”
·
அட்கின்சன் (1980)
“ "குறிப்பிட்ட செயல்களில் செலவிடப்பட்ட நேரத்தின் அளவும், அச்செயல்களுக்கான ஊக்கலின் தொடர்பும் ஓர் சமன்பாடாகிறது.”
இவ்வரைவிலக்கணங்களில் இருந்து, “ஒருவனிடம் ஏதோ ஒரு தேவைக்காக ஆரம்பித்து அந்தத்தேவை நிறைவு செய்யப்படும் வரை இடம் பெறுகின்ற ஒரு உள உடலியக்க தொழிற்பாடு,
“’ஊக்கல்” என வரையறுக்கலாம். இந்த ஊக்கலானது ஒருவனிடம் உந்தலாக சக்தியாக அல்லது செயல் மூலமாக வெளிக்காட்டப்படுகிறது.
ஊக்கலினைப் பற்றி பல்வேறு அறிஞர்களால் பல்வேறு கொள்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. அக் கொள்கை ஒவ்வொன்றும் ஊக்கலின் சில அம்சங்களையே தெளிவுபடுத்துகின்றன. அந்த வகையில் பின்வரும் கொள்கைகள் முக்கியம் பெறுகின்றன.
1. உளப்பகுப்புக் கொள்கை ((Psycho – Analytic Theory)
2.
தேவைக் கொள்கை (Theory of Needs)
3.
மக்டூகலின் இயல்பூக்கக் கொள்கை ( Theory
of Instinct)
4.
ஓல்போட்டின் ஊக்கிகள் தாமே தொழிற்படும் தன்மைக் கொள்கை
5. சமூகக்
கொளகை (Social
Theory)
·
பண்பாட்டுக் கோலக் கொள்கை
· மண்டலக் கொள்கை

மேற்குறிப்பிட்ட கொள்கைகளில் மக்டுகலின் இயல்பூக்கக் கொள்கையானது மிகவும் முக்கியமானதாகும். இது கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இக் கொள்கையினை வெளியிட்டவர் மக்டூவல் (Mc Dougall ) ஆவார். இவர் 1871 ஜூன் 22 பிறந்தார். 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப கால உளவிளயலாளரான இவர் தனது வாழ்க்கையின் முதல்பகுதியை ஐக்கிய இராச்சியத்திலும் பிற்பகுதியை அமெரிக்காவிலும் கழித்தார். இவர் செல்வாக்குமிக்க பல புத்தகங்களை எழுதினார். அவற்றில் உள்ளுணர்வு மற்றும் சமூகவியல் கோட்பாடு பற்றிய நூல்கள் முக்கியமானவையாகும்.
ஓவன்ஸ் கல்லூரி மற்றும் கேம்பிரிஜ் ஜான்ஸ் கல்லூரி என்பவற்றில் கல்வி பயின்றார். மருத்துவம் மற்றும் உடலியல் பற்றி லண்டன் மற்றும் கோட்டிங்கனில் படித்தார். நடத்தை வாதத்தை எதிர்த்து நடத்தைவாதம் பெரும்பாலும் குறிக்கோள் சார்ந்ததாக இருக்கின்றது என்று வாதிட்டார்.
ஊக்கல்கள் என்பவை ஒருவர் பரம்பரை மூலம் பெற்றுக்கொள்பவை என ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அவை இயல்பூக்கங்கள் எனப்படுகின்றன. எனவே இயல்பூக்கம் என்பது ஒரே வகையைச் சேர்ந்த அங்கி இனங்களுக்கேயுரிய சிக்கலான இயல்புகலாகும் என குறிப்பிடலாம். ஒரு குறித்த ஊக்கமாயினும் வெவ்வேறு ஆட்களிடத்தே வெவ்வேறு மட்டங்களில் கூடியும் குறைந்தும் காணப்படலாம். என மக்டுவல் குறிப்பிடுகின்றார். இவரின் கருத்துப்படி மனிதனின் உள்ளத்தில் இயல்பாகவே அமைந்த ஒரு வித முனைப்பு காணப்படுகிறது. அவனது எண்ணங்களும் செயன்முறைகளும் அவ்வூக்கங்களினாலேயே நெறிப்படுத்தப்படும் என்பதாகும். இவர் அவ் ஊக்கங்களை இயல்பூக்கங்கள் என பெயரிட்டுள்ளார். இயல்பூக்கங்கள் உருவாவதற்கு பயிற்சி தேவைப்படுவதில்லை. தனியால் விருத்தியின் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இவை தோன்றும் என மக்டுவல் காட்டியுள்ளார். எனவே தனியாளது விருத்தியின் வெவ்வேறு பருவங்களிலேயே வெவ்வேறு இயல்பூக்கங்கள் தொழிற்படும்.
வில்லியம் மக்டூவல் பரந்த உளவியலாளர் மற்றும் கோட்பாட்டாளர் ஆவார். எல்லாவற்றிற்கும் மேலாக மனித ஆன்மாவை புரிந்து கொள்ளக் கிடைக்கக் கூடிய ஒவ்வொரு கருவிக்கும் பயன்படுத்தக்கூடிய ஒரு முழுமையான உளவியலை அவர் நம்பினார். மனித உள்ளுணர்வு நடத்தை பற்றிய ஒரு கோட்பாட்டை முதலில் உருவாக்கி சமூக உளவியலின் ஒரு புதிய துறையில் அவர் செல்வாக்குச் செலுத்தினார்.
இவர் மனிதனின் உள்ளத்தை பற்றியும், உளக்கோளாறு உள்ளோர்களைப் பற்றியும் ஆய்வுகளைச் செய்து தமது இயல்பூக்கக் கொள்கையை வெளியிட்டார். இவரின் கொள்கையின் படி இயல்பூக்கம் என்பது பிறக்கும் போதே ஒரு உயிரிடத்தில் அமைந்துவிட்ட இயல்பான உளப்போக்காகும். பூச்சிகள், பறவைகள், விலங்குகள் ஆகியன இயல்பாகவே கூடுகட்டுதல், இனப்பெருக்கம் செய்தல், உணவு தேடல் ஆகிய நடத்தைகளில்
ஈடுபடுகின்றன. இதே போன்றே மனித நடத்தையிலும் இவ்வகையான இயல்புகளுண்டு.
இயல்பூக்க நடத்தையானது மூன்று உளக்கூறுகளைக் கொண்டுள்ளது.
01. அறிதல் - உயிரியில் எதாவது தூண்டி எதிர்ப்படும் போது அவ்வுயிரி அதனைக் கவனிக்கின்றது.
02. உணர்தல் - இவ்வாறு அறிந்ததும் அது தொடர்பான மனவெழுச்சியைப் பெறுகின்றது. ஒவ்வொரு இயல்பூக்க செயற்பாட்டிலும் ஒரு குறிப்பிட்ட மனவெழுச்சி உண்டென மக்டூவல் கூறுகின்றார.
03. தொழிற்படுதல் - குறிப்பிட்ட மனவெழுச்சி வழியே பணியாற்றுதல் ஆகும்.
இயல்பூக்கம் என்பது உயிர்களிடம் அமைந்துள்ள சிக்கலான நடத்தைக்கோலமாகும். மனித நடத்தையை நிர்ணயிக்கின்ற அடிப்படையான விடயங்களே இயல்பூக்கங்களாகும். இந்த ஒவ்வொரு இயல்பூக்கமும் பொருள், மனவெழுச்சி, தொழிற்பாடு ஆகியவற்றின் மூலம் ஆக்கம் பெறுகின்றது எனலாம். அதனை கீழே விரிவாக நோக்கலாம்.
மக்டூவல் 14 வகையான இயல்பூக்கங்களை வெளியிட்டுள்ளார.ஒவ்வொரு இயல்பூக்கத்துடனும் தெடர்பான பொருள், மனவெழுச்சி, தொழிற்பாடு (துலங்கள்) ஆகியவற்றையும் தருகின்றார.
|
இயல்பூக்கம் |
பொருள் |
மனவெழுச்சி |
செயற்பாடு |
|
உணவு தேடூக்கம்
(Appetitive) |
உணவு |
பசி |
உண்ணல் |
|
திரட்டூக்கம் (Acquisitive) |
பொருட்கள் |
உடைமை |
திரட்டுதல் |
|
ஆராய்வூக்கம் (Curiosity) |
புதுமையான பொருள் |
விழிப்பு |
தேடுதல்
|
|
வெறுப்பூக்கம் (Repulsion) |
விரும்பாத பொருள் |
வெறுப்பு |
பின்வாங்குதல்
|
|
போரூக்கம் (Aggression) |
எதிரி |
கோபம் |
எதிர்த்தல்
|
|
ஆக்கவூக்கம் (Creative) |
பலவகைப்பொருள் |
படைப்பு |
ஆக்கல்
|
|
பாலூக்கம் (Sex) |
எதிர்ப்பாலார் |
காமம் |
கூடல் |
|
தன்னெடுப்பூக்கம் |
தான்
|
செருக்கு |
சுயாதீனம்
|
|
பணிவூக்கம் (Submissive) |
வலியோர் |
தாழ்வுணர்வு |
பின்பற்றுதல் |
|
மகவூக்கம் (Parental) |
பிள்ளை |
அன்பு |
பராமரித்தல் |
|
குழுவூக்கம் (Gregarious) |
நண்பர் |
குழுவுணர்வு |
குழுப்பணிகள் |
|
தன்னிழிவூக்கம் |
தோல்வி |
துன்பம் |
அழுதல் |
|
சிரிப்பூக்கம் (Laughter) |
சாதாரணநிலை |
களிப்பு |
நகைத்தல்
|
|
ஒதுங்கூக்கம் (Escape) |
அச்சம் தரும் சூழல் |
அச்சம் |
ஓடுதல்
|
மேற்குறிப்பிட்ட ஊக்கங்களில் உணவு தேடூக்கம், கலவியலூக்கம், மகவூக்கம் என சில ஊக்கங்கள் விலங்குகளிடத்திலும் காணப்படுகின்றன. விலங்குகள் இயல்பாக இவற்றால் உந்தப்பட்டு செயல்புரிகின்றன. பறவை கூடு கட்டுகிறது. தூக்கணாங்குருவி அழகான கூடு ஒன்றை நாரைக் கொண்டு கட்டிவிடுகிறது. அந்த வித்தையை அதற்கு யாரும் கற்றுக்கொடுக்கவில்லை. அது இயல்பூக்கத்தால் உண்டான திறமை ஆகும். ஆனால் மனிதனில் உள்ள இயல்பூக்கங்கள் விலங்குகளைப் போல முற்றிலும் உந்தல்களால் செயல்புரிவதில்லை. அந்த இயல்பூக்கத்தால் ஏற்படும் சில இச்சைகள் இழிந்தவை என்று அவற்றை அடகக் முயலும் மனச்சான்று அவனிடத்தில் அமைகின்றது.
போரூக்கத்தினை நோக்கும் போது, எதிர் எனும் பொருளைக் காணும் மனிதன் கோபம் எனும் மனவெழுச்சியை அடைந்து அவனுடன் போராடுதல் எனும் செயற்பாட்டை செய்கின்றான் எனலாம். ஒருவன் தன்னுடைய போரூக்கத்தை
தன்னுடைய தோழர்களைத் தாக்கவும் பயன்படுத்தலாம். தன் தோழர்களை வலியோரிடமிருந்து காப்பாற்றவும் பயன்படுத்தலாம். இவ்வாறு உயர் மன மாற்றம் செய்து தீய பலனுக்கு பதிலாக நற்பலனையும் அடையலாம்.
பாலியலூக்கத்தை எடுத்துக்கொண்டால், எதிர்ப்பாலார் அதாவது ஆண்களுக்கு பெண்கள் பெண்களுக்கு ஆண்கள் என்ற வகையில் பொருள் காணப்படும் போது காமம் என்ற மனவெழுச்சி தோன்றி கூடல் இடம்பெறுகிறது. இங்கு எதிர்ப்பாலார் (பொருள்), காமம் (மனவெழுச்சி),கூடல் (தொழிற்பாடு) என்ற மூன்றின் மூலமே இவ் இயல்பூக்கம் ஆக்கம் பெறுகிறது. மனிதனால் இவ் இயல்பூக்கத்தை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது எனலாம். இச்சைகளை கட்டுக்குள் வைத்திருக்கும் சக்தி எல்லாம் அகத்திலேயே இருக்கின்றது. கலவியூக்கத்தால் உந்தப்பட்டு அகம் பொங்கியெழுகிறது என வைத்துக் கொண்டால், அந்த நிலையிலே மனிதன் தன் விருப்பம் விலங்கு முறையிலே நடந்தால் சமூகத்தில் அமைதி குழைந்து குழப்பமே மிஞ்சும். அந்த சமயத்தில் அகமானது அடிமனதினை கடடுப்படுத்த முயல்கிறது. அகத்தில் உள்ள கலவியூக்கமானது, கல்யாணம் போன்ற சமூகம் ஏற்றுக் கொள்ளும் ஒழுங்குக்கு உட்பட்டு நிறைவேற்றப்படுகிறது.
இயல்பூக்கம் முதலில் ஒரு பொருளை கவனிக்கிறது. பிறகு அதனால் எழும் உள்ளக்கிளர்ச்சியை உணர்கிறது. அதன் பின் அதனை அடைவதற்கான ஒரு செயலைப் புரிகின்றது. என்பதே மக்டூவல் வகுத்த இலக்கணமாகும். இதிலிருந்தே இயல்பூக்கங்களானது தோற்றம் பெறுகிறது எனலாம். உதாரணமாக, உணவூக்கத்தை நோக்கும் போது உணவு எனும் பொருளை அவதானிக்கும் போது பசி எனும் மனவெழுச்சி உண்டாகிறது. பசியை போக்கிக் கொள்ள உணவை உண்ணுகிறோம் எனலாம்.
ஒதுங்கு ஊக்கம் எனும் போது தப்பிக்கும் உள்ளுணர்வு ஆகும். குழந்தைக்கு பெற்றோர் நாய், பூனை, காளை மற்றும் இடி, மின்னல் ஆகியவற்றை குறிப்பிட்டு பயமுறுத்துகின்றனர். குழந்தை பூனை, காளை மற்றும் இடி, மின்னல் ஆகியவற்றை காணும் போது, அச்சத்தால் அம்மாவிடம் ஓடி வந்து அடைக்கலம் தேடுகிறது. இங்கு பயமுறுத்துபவை பொருள்களாகும். இதனைக்காணும் போது அச்சம் எனும் மனவெழுச்சி இடம்பெற்று ஓடுதல், ஒழிதல் தொழிற்பாடு இடம்பெறுகிறது எனலாம்.
ஆராய்வூக்கமானது அனைத்து உள்ளுணர்வுகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இவ்வூக்கத்தினாலே தகவல்களைப் பெறுவதற்கான ஆராய்வு இடம்பெறுகிறது. புதுமையான பொருள்களைக் காணும் போது அது தொடர்பான விழிப்பு இடம்பெற்று தேடுதல் செயற்பாடு மேற்கொள்ளப்படுகிறது. ஆக்கவூக்கமானது, ஒன்றை உருவாக்குதலாகும். ஒரு குழந்தையானது களி, அட்டைகள் மற்றும் பொருட்களை ஆக்கக்கூடிய பொருள்களைக் காணும் போது படைப்பு அதாவது உருவாக்குதல் வேண்டும் என்ற மனவெழுச்சி எழுகிறது. பின்னர் அதனை உருவாக்குகிறது எனலாம்
நண்பர்களைக் காணும் போது அவர்களுடன் உரையாடுதல், சேர்ந்து இருத்தல் போன்ற குழுவுணர்வு எற்பட்டு குழுவாக செயற்படுவதையே குழுவூக்கம் எனலாம். இயல்பாகவே மனிதன் குழுவாக ஒத்து வாழும் தன்மை கொண்டவன் உதாரணமாக, கூட்டமாக நிற்கும் போது ஒருவர் திரும்பி பார்த்தால் கூட்டத்தில் அனைவரும் திரும்பிப் பார்ப்பதை பார்க்கிறோம். இது இயல்பான ஒன்றாகும். இவ்வாறு மனிதன் குழுவாக ஒத்து வாழும் இயல்பைக் கொண்டுள்ளான் எனலாம்.
பணம், நகை மற்றும் வேறு பொருட்களைக் கண்டதும் அவற்றை தனது உடைமையாக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவற்றை திரட்டி கொள்வதனை மேற்கொள்கின்றோம் இது திரட்டூக்கமாகும். இங்கு
மேற்கூறியவற்றைக் கண்டதும் உடைமையாக்குதல் வேண்டும் என்ற மனவெழுச்சி இடம்பெற்று திரட்டுதல் செயற்பாடு மேறகொள்ளப்படுகிறது. இங்கு பணம், நகை (பொருள்) உடைமை (மனவெழுச்சி), திரட்டுதல் (செயற்பாடு) போன்ற மூன்றும் சேர்ந்தே திரட்டூக்கத்தினை ஆக்குகிறது எனலாம். கேளிக்கையான விடயங்களை பார்க்கும் போது இயல்பாகவே சிரிப்பு இடம்பெறுகிறது. இது சிரிப்பூக்கமாகும். இங்கு கேளிக்கை பொருளாகவும் களிப்பு மனவெழுச்சியாகவும் நகைத்தல் தொழிற்பாடாகவும் உள்ளது.
தன்னிழிவூக்கம் என்பது குற்றம் அல்லது அவமானத்தினால் தன்னைத்தானே நொந்து கொள்ளுதல், இழிவுபடுத்திக் கொள்ளுதல் ஆகும். தோல்வியைக் காணும் போது துன்பம் மனவெழுச்சி உண்டாகி அழுதல் எனும் தொழிற்பாடு இடம்பெறுகிறது. வெறுப்பூக்கம் எனும் போது விரும்பாத ஒரு பொருளைக்காணும் போது வெறுப்பு எனும் மனவெழுச்சி தோன்றி பின்வாங்கும் செயற்பாடு இடம் பெறுகிறது எனலாம். உதாரணமாக,
குழந்தைகளுக்கு பாகற்காய் போன்ற கசப்பான உணவுகள் அல்லது மருந்துகளைக் கொடுக்கும் போது அதனை விரும்பாது பின்வாங்குவது நாம் அவதானிக்கும் ஒன்றாகும்.
குழந்தைகள் பிள்ளைகளைக் காணும் போது அன்பு எனும் மனவெழுச்சி உண்டாகிறது. இதன் காரணமாகவே பராமரித்தல் செயற்பாடு இடம்பெறுகிறது. பணிவூக்கம் எனும் போது, வலியோரைக் காணும் போது தாழ்வுணர்வு மனவெழுச்சி ஏற்பட்டு அவர்களைப் பின்பற்றும் செயற்பாடு இடம்பெறுகிறது. இவ்வாறு சகல இயல்பூக்கங்களும் பொருள், மனவெழுச்சி, தொழிற்பாடு ஆகியவற்றின் மூலமே ஆக்கம் பெறுகின்றன. திரட்டூக்கம் திருடனிடத்தில் அதிகமாகவும் போரூக்கம் கொலைகாரனிடத்தில் அதிகமாகவும் பாலூக்கம் கட்டிளமைப் பருவத்தில் அதிகமாகவும் இருக்கும். இந்த வகையில் இயல்பூக்கத்தின் அளவானது வயது, பால் என்பவற்றுக்கு ஏற்ப மாறுபடும். எனவே மனித வயதிலும் இயல்பூக்கம் செல்வாக்குப் பெறுகின்றது. ஆகவே மேற்குறிப்பிட்ட இயல்பூக்கங்களை மூன்று பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம்.
1. தனியாள் ஊக்கம் - ஆராய்வூக்கம், உணவூக்கம்
2. சமூக ஊக்கம் - குழுவூக்கம், தன்னெடுப்பூக்கம்
3. இனப்பாதுகாப்பூக்கம் - மகவூக்கம், பாலூக்கம், போரூக்கம்
இயல்பூக்கத்தை ஆக்குகின்ற பொருள், மனவெழுச்சி, தொழிற்பாடு போன்றவற்றில் மனவெழுச்சி முக்கியமானது. இயல்பூக்கம் ஏற்பட உள்ளத்தில் ஏதாவது ஒரு உணர்வு தோன்றும் இதுவே மனவெழுச்சி ஆகும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மனவெழுச்சிகள் ஒரே நேரத்தில் தோன்றுவதில் சிக்கலான மனவெழுச்சிகள் தோன்றுகின்றன. உதாரணமாக, கோபம், வெறுப்பு, ஆகிய மனவெழுச்சியினால் பொறாமை எனும் மனவெழுச்சி தோன்றுகிறது. சில மனவெழுச்சிகள உடலை பாதிக்கின்றது. உதாரணமாக, கோபம் ஏற்படும் போது இதயத்துடிப்பு, கைநடுக்கம,; இரத்த ஓட்டம் அதிகரிப்பு என்பன ஏற்படுவதைக் குறிப்பிடலாம். மனவெழுச்சிகள் இன்பமானவை (காதல், மகிழ்ச்சி), துன்பமானவை ( கோபம், துக்கம்) என இரண்டாக பிரிக்கப்படுகிறது.
சில மனவெழுச்சிகள் செரிவு குறைந்ததிலிருந்து கூடிச்செல்லக் கூடியது.
உதாரணமாக,
சினம் - எரிச்சல், சீற்றம்
களிப்பு - புன்முறுவல், மகிழ்ச்சி
மனவெழுச்சிகள் ஒன்றோடு ஒன்று தெடர்புற்று தொழில் புரியும் போது கலப்பு மனவெழுச்சிகள் உண்டாகும்.
உதாரணமாக,
நன்றி - பரிவு, பணிவு
சினம் - அச்சம், வெறுப்பு, அகங்காரம்
ஏதாவது ஒரு பொருளை அல்லது எண்ணத்தைச் சூழந்து செயற்படும் மனவெழுச்சிகள் பற்றுக்கள் எனப்படுகின்றன. தாய்ப்பற்று, நாட்டுப்பற்று, மொழிப்பற்று என்பவற்றை உதாரணமாக குறிப்பிடலாம். தாய் எனும் போது அன்பு, வணக்கம், நன்றி ஆகிய மனவெழுச்சிகள் தோன்றும். இவை தாயின் பராமரிப்பில் பிள்ளை பெறும் மனவெழுச்சிகளாகும்.
மேலும் இயல்பூக்க வாதிகள் பின்வரும் கருத்துக்களைக் கூறி இயல்பூக்கத்துககு விளக்கம் தருகின்றனர்.
1. மனித இயல்பூக்கங்கள் சூழலுக்கு ஏற்ப மாற்றமடையக்கூடிய தன்மை கொண்டன.
2. மனிதனுடைய அறிவு, அனுபவம் ஆகியன இயல்பூக்கங்களை மாற்றியமைத்துள்ளன.
3. நுண்ணறிவு, சிந்தனை ஆகியனவும் மனித நடத்தைகளைக் கட்டுப்படுத்தும்.
4. குழந்தை பிறந்ததும் எல்லா இயல்பூக்கங்களும் தொழிற்படுவதில்லை. சில இயலபூக்கங்கள் குழந்தையின் வளரச்சிப் போக்கில் ஒரு பருவத்தில் வலுப்பெறுவனவாகவும் வேறு பருவத்தில் வலுக்குன்றுவனவாகவும் காணப்படும்
இயல்பூக்கத்தினால் மனித நடத்தைகள் அனைத்தும் கட்டுப்படுத்தப்படுவதில்லை அவையாவும் அறிவு, சிந்தனை என்பவற்றினாலேயே கட்டுப்படுத்தப்படுகின்றன. என்று கூறி வேணர், ஒல்போட் ஆகியோர் இக் கொள்கையை எதிர்க்கின்றனர். இந்த வகையிலே இக் கொள்கையை அனைத்து அறிஞர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. இயல்பூக்கங்கள் உள்ளக்கிளர்ச்சிகளுடன் இணைந்தவை என்பதை ஏற்றுக்கொள்ள முடியுமாயினும் இன்ன இயல்பூக்கத்திற்கு இந்த உள்ளக்கிளர்ச்சிதான் என்று வரையறுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. போரூக்கத்திற்கு வெகுளியும், ஒதுங்கூக்கத்திற்கு அச்சமும் நன்கு அமையும் ஆனால் உணவு தேடூக்கம், கட்டூக்கம் முதலியவற்றில் இத்தகைய உள்ளக்கிளர்ச்சி நிலைகளைக் காண்பதரிது.
உதாரணமாக, நாய் குரைததால் சினத்தால் தான் அது குரைக்கிறது என்று கூற முடியாது. அது தற்காப்புக்கும் அச்சத்தாலும் குரைக்கலாம். மேலும், இயல்பூக்கம் எனும் சொல் அறிதிறனின் மறுதலையாக வழங்கி வருவதால் மக்களின் செயல்களை அதனைக் கொண்டு விளக்குவது தவறு என்பது பல அறிஞர்களின் கருத்தாகும். மக்டூவலும் தன் பிற்கால நூலாகிய “மனிதனுடைய ஆற்றல்கள்” எனும் நூலில் இயல்பூக்கம் எனும் சொல்லை பயன்படுத்தவில்லை. தற்கால அறிஞர்களும் இயல்பூக்கம் எனும் சொல்லைவிடுத்து உள்ளகக்கிளர்ச்சிகளை ஆற்றலின் தோற்றுவாயாக கொண்டு நடத்தையை விளக்குகின்றனர்.
இவ்வாறு மக்டூவல் குறிப்பிட்ட 14 வகையான இயல்பூக்கங்களும் பொருள் மனவெழுச்சி, தொழிற்பாடு என்ற மூன்றின் மூலமே ஆக்கம் பெறுகின்றன. என்பது குறிப்pடத்தக்கதாகும். இக் கொள்கை தொடர்பாக விமர்சனங்கள் உள்ளபோதும். மேற்கூறிய மூன்றின் மூலமே அனைத்துச் செயற்பாடுகளும் இடம்பெறுகிறது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டமையாலேயே இக் கொள்கை இன்று வரை பயன்பாட்டில் உள்ளது எனலாம்.
உசாத்துனைகள்
1.கலாநிதி அருள்n;மாழி.செ, (2017), “கற்பித்தலுக்கான உளவியல்”, துர்க்கா பிரின்டரஸ்;, கொக்குவில்.
2. முத்துலிங்கம்.ச,(2010), “கல்வியும் உளவியலும்”, சேமமடு பதிப்பகம்.
--Rasima,BF (BA -R)
Eastern University
Sri Lanka.




Comments
Post a Comment