மாணவர்களின் ஞாபகத்திறனை வளர்த்துக் கொள்வதற்கு ஆசிரியர் மேற்கொள்ளும் நடைமுறைகள்

மாணவர்களின் ஞாபகத்திறனை வளர்த்துக் கொள்வதற்கும் கற்றுக் கொண்டவற்றை நினைவில் நிலைநிறுத்திக் கொள்வதற்கும் ஆசிரியர் என்ற ரீதியில் நீர் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை விளக்குக.

நம் மூளையில் தேக்கிவைக்கின்ற விடயங்களைத் தேவைப்படும் போது வெளியே எடுத்து தகுந்த நேரத்தில் அதை உபயோகப்படுத்துவது ஞாபகம்ஆகும். உள்வாங்கப்பட்ட தகவல்களை களஞ்சியப்படுத்தி சேமித்து அவற்றைத் தேவையான போது மீட்டி எடுத்துக் கொள்ளும் திறன் ஞாபகம் அல்லது நினைவு என வரைவிலக்கணப்படுத்தலாம்.

யாதேனும் தூண்டலின்பால் கவனம் செலுத்தும் போது ஒருவரின் புலனங்கங்கள் மூலம் தகவல்கள் பிரவகிக்கும். இத்தகவல்களை உளரீதியில் இனங்காணலின் அல்லது புலக்காட்சி பெறலின் விளைவாக உள்ளத்தில் உருவாகும் மனப்பாடங்களை பிற்காலத்தில் எமக்குத் தேவையான போது நினைவுபடுத்தலாம். எனவே ஞாபகம் என்பது தகவல்களை களஞ்சியப்படுத்தும் திறனும் அவற்றை மீண்டும் நினைவு கூறும் திறனுமாகும்”.

ஞாபகம் தொடர்பாக பல்வேறு அறிஞர்களும் பல்வேறு கருத்துக்களைக் கூறியுள்ளனர். அந்தவகையில்,

Ø     நினைவகம் என்பது காலப்போக்கில் தகவல்களை பராமரிக்கும் செயல்முறையாகும். (மாட்லின், 2005)

Ø  இந்த தகவலை நிகழ்காலத்தில் பயன்படுத்த நம் கடந்த கால அனுபவங்களை நாம் ஈர்க்கும் வழிமுறையே நினைவகம்.    (ஸ்டென்பேர்க், 1999)

நம் வாழ்நாள் முழுவதும் ஞாபகம் அவசியம் கடந்த கால ஞாபகம் இல்லாமல் நாம் நிகழ்காலத்தில் செயற்படவோ எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கவோ முடியாது. நாங்கள் நேற்று என்ன செய்தோம் இன்று என்ன செய்தோம் அல்லது நாளை என்ன செய்ய திட்டமிட்டுள்ளோம் என்பதை நினைவில் கொள்ள முடியாது. ஞாபகம் இல்லாமல் எங்களால் எதையும் கற்றுக் கொள்ள முடியாது. அதிகளவான விடயங்களை அல்லது தகவல்களை செயலாக்குவதில் நினைவகம் ஈடுபட்டள்ளது. இந்த தகவலானது படங்கள், ஒலிகள், பொருள்கள் போன்ற பல வடிவங்களைக் கொண்டிருக்கும்.

கற்கைப் பணியுடன் தொடர்புடையவையென ஞாபகத்தின் இரண்டு பேதங்கள் தொடர்பாக உளவியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அந்தவகையில்,

1.            பொறிமுறை ஞாபகம்  ( Rote Memory )

காரண காரிய தொடர்பு, அர்த்தம் போன்ற அம்சங்களைக் கருத்தில் கொள்ளாது, யாதேனுமொன்றை மனனம் செய்தலே(Memorizing இதனால் கருதப்படுவதாகும். உதாரணம் - வெவ்வேறு நீளமுடைய சில வாக்கியங்களை மனனஞ் செய்தல், ஒன்றன் கீழ் ஒன்றாக சில எண்களை ஒழுங்கு முறைப்படி மனனஞ் செய்தல், அர்த்தம் ஏதுமின்றி சில சொற்களை மனனஞ் செய்தல்.

2    தர்க்க ரீதியான ஞாபகம்Logical Memory )

அர்த்தம் தொடர்பான விளக்கத்துடன், காரணகாரியத் தொடர்பு பற்றிய விளக்கத்துடன், நுணுக்கமாக நோக்கி, யாதேனுமொன்றை நினைவில் வைத்திருத்தலையே இது கருதுகின்றது. உதாரணம் நீண்ட  கதையொன்றின் பொழிப்பை நினைவில் வைத்திருத்தல், கணிதப்பிரச்சினங்களை தீர்ப்பதற்காக சூத்திரமொன்றினை பயன்படுத்தம் விதத்தை நினைவில் வைத்திருத்தல், பொறிமுறை ஞாபகத்திற் போன்றல்லாது இங்கு நுண்ணறிவு சார் சிந்தனைக்கு முதன்மையிடம் உரித்தாகின்றது. எனவே நுண்ணறிவின்        (கூட, குறைய) அளவுக்கு ஏற்ப தர்க்க ரீதியான நினைவாற்றலின் தன்மை வேறுபடும்.

ஒரு விடயத்தை மனனம் செய்து தேவையான நேரத்தில் கொடுக்கின்ற செயலில் மூன்று படிகள் முக்கியமானவை. அவை,

01.          மனனம் செய்தல்

02.          மனதில் நிலைநிறுத்துதல்

03.          மீதமாக கற்றல்.

சிந்திக்கும் தொழிற்பாட்டிற்கு மனனம் செய்யும் ஆற்றல் மிகவும் முக்கியமானது. மனனம் செய்வதில், “ நுண்மதி  ஈவு, கற்கும் நோக்கம், விடயத்தின் பொருள், மீட்டல், இடைவிட்ட மீட்டல்போன்ற பல்வேறு காரணிகள் ஆதிக்கம் செலுத்துவதாக பல உளவியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்

மனதில் நிலை நிறுத்துதல், நனவிழி நிகழச்சியாகும். மனனம் செய்யும் போது மூளையினுள் கலங்கள் ஒருங்கமைக்கப்படுகின்றன.  பின்னர் குறித்த தூண்டி அளிக்கப்படும் போது அந்த அமைப்புக்கள் தொழிற்பட்டு அவற்றுடன் தொடர்புடைய விடயங்கள் ஞாபகத்துக்கு வருகின்றன. மனனமிடப்பட்ட விடயங்கள், ஒழுங்கமைப்பு பெற்ற கலங்கள் அழிக்கப்படாமல் இருக்கும் வரையே நினைவிலிருக்கும். கல அமைப்புக்கள் அழியும் போது மறந்துவிடும். கற்ற ஒரு விடயம் சில நாட்களில் மறைக்கப்படுவதாகவும் பின்னர் மறதி மந்தமாக நிகழ்வதாகவும் மறதி பற்றிய ஆய்வில் ஈடுபட்ட எப்பிங்கொஸ் என்பவர் குறிப்பிடுகிறார்.

ஒரு விடயத்தை மீட்டறிவதற்குப் போதுமான அளவிற்கு மேலதிகமாக மனனம் செய்தல் மீதமாக கற்றலாகும். மீதமாக கற்பதன் மூலம் கற்ற விடயங்களைத் தடையின்றிக் கூறவும், சில காலத்தின் பின் மீட்டறியவும் முடியும். அடிக்கடி கற்கும் விடயங்கள் மீதமாக கற்கப்படல் வேண்டும் என கூறப்படுகிறது.

உளவியலாளர்கள் ஞாபகத்தின் மூன்று கட்டங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளனர். அக்கட்டங்களாவன,

01.          புலன்சார் ஞாபகம் (SENSORY MEMORY)

சூழலில் தூண்டல்களாக தகவல்கள், புலனங்கத் தொகுதிக்கு கிடைத்தவுடன், அத்தகவல்களை மூளை இனங்காணும் வரையில் தாங்கி வைத்திருத்தல், புலன்சார் ஞாபகத்தினால் செய்யப்படுகின்றமைக்கு சான்றுகள் உள்ளன. இத்தகவல்கள் அரை நிமிடத்துக்கு குறைவான நேரத்துக்கு இவ்வாறு தேக்கப்படும். அப்போது அது தொடர்பாக கவனம் செலுத்தப்படவில்லை எனின், அது மறந்து போய்விடும். அத்தகவல்களின் பால் கவனம் செலுத்தப்படுமானால் அவை குறுகிய கால ஞாபகக் கட்டத்தை அடையும்.

02.          குறுகிய கால ஞாபகம் (SHORT TERM MEMORY)

புலக்காட்சி பெறுபவை தொடர்பான உடனடியான ஞாபகமே குறுகிய கால ஞாபகம் எனப்படுகிறது. இது முதன்மையான ஞாபகம் என அழைக்கப்படும். குறுகிய கால ஞாபகத்தில் ஒரு சில நிமிடங்களுக்கே தகவல்கள் தங்கியிருக்கும். உதாரணமாக எமக்கு மீண்டும் தேவைப்படாத தொலைபேசி எண் ஒன்றினை குறுகிய கால ஞாபகத்தில் வைத்து மறந்து விடுவதைக் குறிப்பிடலாம்.

03.          நீண்ட கால ஞாபகம் (LONG TERM MEMORY)

நீண்ட காலத்துக்கு தேங்கியிருக்கும் தகவல்கள் நீண்ட கால ஞாபகத்தில் களஞ்சியப்படுத்தப்படும். உளவியலாளரின் கருத்துப்படி நீண்ட கால ஞாபகத்தின் கொள்ளளவு மிகப் பெரியது. இதனுள் மிக நீண்ட காலத்துக்கு தகவல்களை களஞ்சியப்படுத்தி வைக்கலாம். குறுகிய கால ஞாபகத்துள் புகும் தகவல்கள், ஒரு விதமான பயிற்சியின் பின்னர் நீண்ட கால ஞாபகத்தை அடையும்.


ஒரு விடயத்தடத்தினைக் கற்பதற்கும் அதனை மீட்டறிவதற்கும் இடையே நிகழும் நிகழ்ச்சிகள் மனதில் நிலை நிறுத்தும் செயற்பாடுகளை பாதிக்கின்றன. இவ்வாறு பாதிக்கின்ற நிகழ்வுகள் குறுக்கீடுகள் எனப்படும். ஒருவர் ஒரு விடயத்தினை படிப்பதற்கு முன்னர் கற்றுக் கொண்ட விடயங்களும், படித்த பின்னர் கற்றுக் கொண்ட விடயங்களும் குறிப்பிட்ட விடயத்தினை மீட்டறிவதற்கு தடைகளாக அமைகின்றன. அவை இரண்டு வகைப்படும்.

              பின்னோக்கு அகத்தடைRetroactive Inhibition)

              முன்னோக்கு அகத்தடைProactive  Inhibition )

பின்னோக்கு அகத்தடை என்பது, சில  காலத்துக்கு முன்னர் கற்ற யாதேனும் ஒன்றை நினைவு கூறும் போது அண்மைக்காலத்தில் கற்ற யாதேனுமொன்று காரணமாகத் தடை ஏற்படலாம். அதாவது கற்ற பழையவற்றின் மீது புதியவை தடையாக அமைதலாகும்.

முன்னோக்கு அகத்தடை என்பது, அண்மைக்காலத்தில் கற்ற யாதேனுமொன்றை நினைக்கும்போது முன்னர் கற்ற யாதேனுமொன்று காரணமாகத் தடை ஏற்படலாம். அவ்வாறு கற்கும் புதியவை மீது கற்ற பழையவை தடையாக அமைதலாகும்.

உள்ளத்தில் களஞ்சியப்படுத்தி வைத்த யாதேனுமொரு தகவல் தொடர்ந்து தேங்கியிருக்காமை மற்றும் நினைவு கூற முடியாமற் போதலைமறத்தல்எனலாம். மறத்தல் நிகழும் விதம் மற்றும் அதற்குக் காரணங்காட்டலுக்காக சில கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு,

  •            ஞாபகச் சுவடுகள்
  •            ஞாபகச் சுவடுகள் காலப்போக்கில் மாற்றமடைவது பற்றிய கருத்து
  •         அடக்கல் பற்றிய கருத்து
  •               பரஸ்பர அகத்தடைகள் பற்றிய கருத்து

ஞாபகப்படுத்தலானது மீட்டறிதல் (Recall), இன்னதென்று அறிதல் (Recognition)) என இருவகைப்படும். முன்னால் உள்ள விடயத்தை இதற்கு முன்னர் அறிந்தது எனக் கண்டுபிடித்தல் இன்னதன்று அறிதலாகும். பல் தேர்வு வினாக்களுக்கு விடையளித்தல் இதற்குரிய உதாரணமாகும். கண் முன் இல்லாத விடயத்தை சிந்தனையால் வரவழைத்தல் மீட்டறிதலாகும். ஒரு வினாவிற்கு விடை எழுதுதல் அதற்கு உதாரணமாகும்.

வூல் (Wulf,,1978) என்பவர் ஒருவன் மீட்டறியும் போது விடயங்கள் எவ்வாறு மாற்றமடையும் என்பதனை பரிசோதனை மூலம் நிறுவி, “மட்டமாக்கல், கூராக்குதல், நியமமாக்கல் அல்லது தன்மயமாக்கல்போனற முடிவுகளை வெளியிட்டார்.

இவ்வாறு ஞாபகம் தொடர்பான விடயங்களை விரிவாக நோக்கும் போது மாணவர்களுக்குஞாபகம்என்பது மிகவும் முக்கியமானதாகும். அதிகமான பரீட்சைகளுக்கு விடைகளை மனனம் செய்து ஞாபகத்தில் வைத்திருந்தாலே விடையளிக்க முடியும். தான் நன்றாக படித்தும் பரீட்சையின் போது ஞாபகத்தில் வரவில்லை என்று புலம்பும் மாணவர்களை நாம் அதிகம் காண்கிறோம். இத்தகைய மாணவர்கள் தங்கள் ஞாபகத்திறனை அதிகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அந்த வகையில் மாணவர்களின் ஞாபகத்திறனை அதிகரிப்பதற்கும் அவர்கள் கற்றுக் கொண்டவற்றை நினைவில் நிலைநிறுத்திக் கொள்வதற்கும் பல்வேறு நடைமுறைகளை ஆசிரியர்; கடைப்பிடிக்க வேண்டும். அவற்றை கீழே விரிவாக நோக்குவோம்.

ஞாபகவிருத்தியில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளாக பின்வருவனவற்றை குறிப்பிடலாம்.

01.          மிகைக் கற்றல்

02.          பொருளுடன் கற்றல்

03.          பயிற்சி

04.          ஒழுங்குபடுத்தல்

05.          உரத்து வாசித்தல்

06.          உருவவெளிப்பாடு, மனப்பாடங்கள்

07.          உயிரோட்டமாக கற்றல்

08.          முழுமையாக கற்றல்

09.          தொடர்புகளை அறிதல்

10.          தரவுகளை முன்வைக்கும் விதம்.

11.          செயற்கை முறைகள் ( குறியீடுகளை உருவாக்கிக் கொள்ளல்.

இவற்றை சிறந்த முறையில் பின்பற்றுவதன் ஊடாக மாணவர்களின் ஞாபகத்திறனை அதிகரிக்க முடியும்.

ஒரு விடயத்தினை கற்பிக்கும் போது அதனுடைய நோக்கத்தை அறிந்து ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும். நோக்கம். இல்லாதவை ஒரு போதும் ஞாபகத்தில் இருக்காது. கற்பிக்கும் விடயத்தினை வாழ்வில் இடம்பெற்ற அனுபவங்களோடு தொடர்புபடுத்தி கற்பிக்க வேண்டும். இதன் போது மாணவர்களின் ஞாபக சக்தி அதிகரிப்பதோடு கற்றுக்கொண்டவற்றை நினைவில் நிலைநிறுத்திக் கொள்ள முடியும். உதாரணமாக, அதிரினலின் சுரப்பி பற்றி கற்பிக்கும் போது தனக்கு இடம்பெற்ற நாய் துரத்தும் போது பெரிய மதில் ஒன்றைக் கடந்தமை  போன்ற பயத்தினால் இடம்பெற்ற அனுபவங்களைக் கூறி கற்பிக்கும் போது மாணவர்களுக்கு அச்சுரப்பியானது நகைச்சுவையுடன் ஞாபகத்திலிருக்கும்.

பாடத்துடன் தொடர்புடைய படங்கள், பெரியார்களின் படங்கள், தாவரத்தின் பகுதிகள், மனித உடலின் அங்கங்கள், மனித நரம்புத்தொகுதி போன்றற்றை வகுப்பறையில் வரைந்து காட்சிப்படுத்தல். இதன் போது அடிக்கடி மாணவர்கள் அதை வகுப்பறையில் பார்ப்பதன் மூலம் ஞாபகத்திலிருக்கும். இது பரீட்சைகளில் கேட்கப்படும் போது குறித்துக் காட்டுவதற்கு இலகுவானதாக இருக்கும். இவ்வாறு வகுப்பறையில் காட்சிப்படுத்துவது மாணவர்களின் ஞாபத்தை அதிகரிக்கும்.

ஒரு விடயத்தை மீட்டறிவதற்குப் போதுமான அளவிற்கு மேலதிகமாக மனனம் செய்தல் மீதமாக கற்றலாகும். மீதமாக கற்பதன் மூலம் கற்ற விடயங்களைத் தடையின்றிக் கூறவும், சில காலத்தின் பின் மீட்டறியவும் முடியும். இதன் போது படித்த விடயங்கள் ஞாபகத்திலிருக்கும் இந்த வகையில் மாணவர்கள் ஒரு விடயத்தை புரிந்து கொண்ட பின்னரும் அதைத் தொடர்ந்து கற்குமாறு ஊக்குவித்தல் வேண்டும்.

பாடசாலை தொடங்கிய காலத்திலிருந்தே படிக்கும் விடயங்களை அன்று இரவே மாணவர்கள் வாசித்து விளங்கி குறிப்பெடுத்து வைத்திருத்தல் வேண்டும். பரீட்சை நெருங்கும் போது தான் எழுதிய குறிப்புக்களை தொகுத்து நோக்கினால் அவை ஞாபத்திலிருக்கும். இதனை மேற்கொள்ளுமாறு மாணவர்களுக்கு ஆசிரியர் ஊக்குவித்தல் வேண்டும். மேலும் மாணவர்கள் எழுதிய குறிப்புக்களை வகுப்பிற்கு கொண்டுவருமாறு கூறி அவ்வாறு கொண்டு வரும் மாணவர்களை பாராட்ட வேண்டும். இது ஏனைய மாணவர்களுக்கு ஊக்குவிப்பாக இருக்கும்.

ஒரு விடயத்தை ஞாபகத்தில் வைப்பதற்கு அவ்விடயம் தெளிவாக புரிந்து கொள்ளப்படல் வேண்டும். இதற்காக வகுப்பறையானது குறுக்கீடுகள் அற்ற ஆரோக்கியமானதாக இருத்தல் வேண்டும். குறிப்பாக வீத்யோரங்களில் காணப்படும் பாடசாலைகளில் வீத்pயில் பயண்க்கும் வாகனங்களின் ஒலியானது ஆசிரியர் கற்பிக்கும் போது தடையாக அமையும் இதனைத் தவிர்க்கும் வகையிலான நடவடிக்கைகளை ஆசிரியர், அதிபரின் உதவியுடன் மேற்கொள்ள வேண்டும்.

கற்ற விடயத்தினை தானே உரத்து மீட்டுக்கூறுதல் அல்லது இன்னொருவருக்கு எடுத்துக் கூறுதல் பயனுடையதாகும். இது தானே தொழிற்ப்பட்டுக் கற்கும் முறைActive Learning) எனப்படும். மீட்கப்படாமல் மௌனமாக கற்பது தொழற்படாமுறை (Passive Learning) எனப்படும். எனவே பாடத்தை கற்பித்து முடித்ததும் அதிலுள்ள மனனம் செய்ய வேண்டிய வியங்களை வகுப்பில் ஒரு மாணவரை எழுந்து சத்தமாக வாசிக்குமாறு கூறுதல் அல்லது வகுப்பில் உள்ள மாணவர்களை 4 அல்லது 5 பேர் கொண்ட குழுக்களாக பிரித்து குழுவுக்குள் ஒருவர் மாறி  ஒருவர் வாசிக்குமாறு கூறுதல் இவ்வாறு மேற்கொள்ளும் போது வாசிக்கும் மாணவனுக்கும் அதனைக் கேட்கும் மாணவர்களுக்கும் குறிப்பிட்ட விடயமானது ஞாபகத்தில் இருக்கும

பாடங்கள் வாய்ப்பாடு, மன்னர்களின் பெயர்கள், மூலகங்களின் பெயர்கள் போன்றவற்றை எதுகை, மோனை அமைப்பில் உருவாக்கி, சொல்லிக் கொடுத்தல் அவ்வாறே மாணவர்களிடமே  எதுனை மோனை அமைப்பில் உருவாக்குமாறு கூறுதல். இதன் போது அவை இலகுவாக ஞாபகத்திலிருக்கும். மேலும் குறியீட்டு முறைகளின்  ஊடாகவும் ஞாபப்படுத்திக் கொள்ளுதல் இவ்வாறு குறியீடுகள், பாடல்கள் அல்லது கதை வடிவில் மாற்றி தங்களுக்கு விளங்கும் வகையில் மனனம் செய்து  கொள்ள வேண்டும். இது நீண்ட காலத்துக்கு ஞாபகத்திலிருக்கும். உதாரணமாக தரம் 10 மாணவர்கள் ஆவர்த்தன அட்டவணையில் உள்ள மூலகங்களைHi  He Little Boy …. எனும் பாடலின் ஊடாக ஞாபகத்தில் வைத்துக் கொள்வதைக் குறிப்பிடலாம்.

சங்கிலி நுட்பத்தைப் பயன்படுத்தி ஞாபகப்படுத்திக் கொள்ளுதல். உதாரணமாக வரலாறு பாடத்தில் மன்னர்கள் தொடராக கற்பித்து முடிந்ததும் ஆசிரியர் மன்னர்களின் பெயர்களை ஆண்டுகளின் ஒழுங்குக்கு ஏற்ப முறையாக சங்கிலி வடிவில் எழுதிக்காட்டுதல் வேண்டும். அதனை மாணவர்கள் எழுதி வைத்துக் கொண்டு இலகுவாக மனனமிட்டுக் கொள்ள முடியும்.

குறிப்பிட்ட இடத்தில் இருந்தே அனைத்து பாடங்களும் கற்பிக்கப்படும் போது மாணவர்களுக்கு களைப்பாக இருக்கக்கூடும். இதனைத் தவிர்க்கும் வகையில் விஞ்ஞானப்பாடத்தினை ஆய்வுகூடத்திலும் வரலாறு, தமிழ் போன்ற பாடங்களை வகுப்பறைக்கு வெளியே காற்றோட்டமான இடத்திலும் கற்பிக்கலாம். இவ்வாறு இடம் மாற்றப்பட்டு கற்பிக்கப்படும் போது மாணவர்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படுவர். இது படிக்கும் விடயங்களை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள பெரிதும் துணை புரியும்.

பாடவேளையும் ஞாபகத்தில் தங்கியுள்ளது. அதாவது மனனம் செய்ய வேண்டிய பகுதிகள் உள்ள பாடங்களை உதாரணமாக வரலாறு தமிழ் போன்ற பாடங்களை 7 வது, 8வது, 9வது பாடவேளைகளில் நடாத்தும் போது அதனை மாணவர்கள் புரிந்து கொள்வதற்கே சிரமமாக அமையும் இதனால் குறிப்பிட்ட அப்பாடங்களை காலையில் நடாத்துவதன் ஊடாக மாணவர்கள் புத்துணர்ச்சியுடன் கற்று தங்கள் ஞாபகத்திறனை அதிகரித்து கற்பவற்றை நிiனைவில் நிலை நிறுத்திக் கொள்வர்.


விளையாட்டுக்களின் ஊடாகவும் ஞாபத்திறனை அதிகரிக்கலாம். உதாரணமாக, 2ஆம், 3ஆம்இவ்வாறான வாய்ப்பாடுகளை கட்டங்களுக்குள் எழுதி மாணவர்களிடம் கொடுத்து ஆசிரியர் எதேர்ச்சையாக ஒரு வாய்பாட்டை கேட்கும் போது உரிய மாணவர் அவ்வட்டையை உயர்த்திக்காட்டுமாறு கூறுதல். வகுப்பறைக்கு வெளியே நிறைய கட்டங்களைக் வரைந்து அதற்குள் மாணவர்களை ஏதாவது ஒரு வாய்ப்பாடு கேற்கும் போது அதற்கு விடையாக அமையும் கட்டத்திற்குள் பாயுமாறு கூறுதல் இவ்வாறு ஒரு கட்டத்தில் இருந்து ஒரு கட்டத்திற்கு என்றவாறு பாய்தல் வேண்டும். விடை தவறான கட்டத்திற்குள் செல்லும் போது அவர் தோல்வி அடைவார் . இவ்வாறு விளையாடும் மாணவர்களுக்கு வாய்ப்பாடானது இலகுவாக ஞாபகத்திலிருக்கும் அனைத்து மாணவர்களும் தான் இவ் விளையாட்டில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக வாய்ப்பாட்டை மனனம் செய்து கொள்வர்.


எனவே மேற்கூறியவாறு பல்வேறு நடவடிக்கைகளை கடைபிடிப்பதன் மூலம் மாணவர்களின் ஞாபகத்தினை வளர்த்துக் கொள்ளவும் கற்றுக் கொண்டவற்றை நிலை நிறுத்திக்கொள்ளவும் முடியும் எனலாம். “ஞாபகம்என்பது மாணவர்கள் பரீட்சைகளை சிறப்பாக எழுதி வெற்றி பெறுவதற்கு மிகவும் முக்கியமானதாகும். இந்த வகையில் இவர்களின் ஞாபகத்திறனை வளர்க்க ஆசிரியர்கள் நடவடிக்கைகளையும் வழிகளையுமே காட்டிக்கொடுக்க முடியும். அதனை மேற்கொள்வது மாணவர்களின் பொறுப்பாகும். மாணவர்கள் தங்களின் ஞாபகத்தை வளர்த்துக் கொள்ள பல நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். உதாரணமாக ஞாபகத்திறனை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ளல், ஞாபகப்படுத்த சிரமமாகவுள்ள வாய்ப்பாடுகள், சூத்திரங்கள் போன்றவற்றை அட்டை ஒன்றில் எழுதி தான் படிக்கும் அறையில் காட்சிப்படுத்தல் போன்றவற்றை மேற்கொள்ளல். பரீட்சையின் பின்னர்  குறிப்பிட்ட விடை ஞாபகத்தில் வரவில்லை என்று புலம்புவதில் அர்த்தம் இல்லை பரீட்சைக்கு முன்னர் குறிப்பிட்ட விடயங்களை சிறப்பாக மனனமிட்டுக் கொள்ள வேண்டும்.

 RASIMA,BF (BA-R)

EASTERN UNIVERSITY SRI LANKA.

 

Comments

Popular posts from this blog

Case Study Analysis Of MAS Holdings

'வினைத்திறனான கற்றல் கற்பித்தல் செயற்பாடானது மூவழித்தொடர்பாடல் நிகழ்ச்சியினூடாக நடைபெறுவதன் மூலம் ஆசிரியர் - மாணவர் இடைத்தாக்கம் சிறப்பாக அமையும். இக்கூற்றின் அடிப்படையில் உமது கருத்துக்களை முன்வைத்து விளக்குக.

Theory of Instinct [மக்டூகலின் இயல்பூக்கக் கொள்கை]