முன்பள்ளி ஆசிரியர்கள்

குழந்தை உளவியலும் முன்பள்ளி ஆசிரியர்களும்



பொதுவாக ஆரம்பகாலங்களில் கல்விச்செயன்முறையானது ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் தற்காலத்தில் கல்விச் சமூகத்தில் பல்வேறு விதமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதனால் கல்வியின் அடித்தளத்திற்கு உந்து சக்தியாய் அமையும் ஆசிரியர்களின் கடமைகளும் பொறுப்புக்களும் தகைமைகளும் நாளுக்குநாள் பெருகிக்கொண்டு செல்கின்றது.


இந்த வகையில்தான் உளவியல் (PSYCHOLOGY)  என்ற எண்ணக்கருவானது இன்று மிகவும் முக்கியப்படுத்தப்பட்ட ஒரு விடயமாக வளர்ச்சி அடைந்து வருகின்றது. இந்நிலையில் உளவியல் என்பது மனிதனின் செயற்பாடுகள் மற்றும் நடத்தைகளை அறிவியல் முறையில் ஆய்வு செய்யும் கற்கை மற்றும் பயன்பாட்டு ஒழுங்கு முறையாகும்.  

 

அந்தவகையில் ஆசிரியராகவுள்ள ஒவ்வொரு தனிமனிதனும் உளவியல் பற்றிய கற்கையை கற்றிருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக முன்பள்ளி ஆசிரியர்கள் குழந்தை உளவியல் தொடர்பான அறிவைப் பெற்றிருப்பது மிக மிக அவசியமாகும். ஏனெனில் ஆச்சரியமான நாட்டை உருவாக்கும் நோக்கில் சுதந்திரம் கொண்ட, சுய ஆளுமை கொண்ட சிறுவர் பரம்பரையை நாட்டுக்கு அளிப்பதற்கான வழிகாட்டலைச் செய்தல் என்ற நோக்கத்தினை முன்பள்ளிப்பிள்ளைகளினூடாக அடைந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.

 

நமது நாட்டைப் பொறுத்த வரை கல்வி ஆரம்பிக்கப்படும் வயது ஐந்து வயது பூர்த்தியாகி ஆறாம் வயது ஆரம்பிக்கும் காலமாகும். இக்காலத்திற்கு முந்திய நான்கு வயது, ஐந்து வயதுகளில் குழந்தையானது முறையாகப்பெறுகின்ற கல்வியைத்தான் நாம் முன்பள்ளி கல்வி என்கிறோம். இம்முன்பள்ளி கல்வியை வழங்கும் ஆசான்கள் தான் முன்பள்ளி ஆசிரியர்கள் எனப்படுகின்றனர். 

 

பிறந்து மூன்று வருடங்களும் தாயோடும், தந்தையோடும், குடும்பச் சூழலோடும் இணைந்திருந்த குழந்தையானது முன்பள்ளியில் சேர்க்கப்படும் போது தன்னுடைய இரண்டாவது பெற்றோராகக் கருதுவது ஆசிரியரையே ஆகும். குறிப்பாக முன்பள்ளிக் கல்வி கூடங்களில் பெண்களே ஆசிரியராக இருப்பர். காரணம் பெண்கள்தான் குழந்தைகளின் உடல், உள நிலைமைகளை கருத்திற் கொண்டு செயற்படக் கூடியதாக இருக்கும். முன்பள்ளிப் பிள்ளைகளும் ஆண்களை விட பெண்களிடமே அதிகம் ஈர்ப்புக்கொள்வர். 

 

முன்பள்ளி ஆசிரியர்கள் குழந்தைகளின் உடல், உள்ளம், மனவெழுச்சி, விருத்தி, சமூக இசைவாக்கம், மொழி, கவர்ச்சிகளதேவைகள போன்ற பலவற்றையும் தன்னுடைய உளவியல் உத்திகள் மூலம் தெரிந்திருக்க வேண்டும். குழந்தைகள் நாங்கள் கல்வி கற்கின்றோம் என்ற உணர்விற்குட்படாத நிலையில் ஆசிரியர்கள் கற்பிக்கும் கலையைத் தெரிந்திருக்க வேண்டும். அத்தோடு ஆசிரியரகள் முன்பள்ளிப் பிள்ளைகளுக்கு வலிந்து கற்பிக்கும் வேலையை மேற்கொள்ளக் கூடாது. அதாவது, குருவியின் தலையில் பனங்காயை சுமத்துதல் கூடாது. இவ்விடயம் முன்பள்ளி ஆசிரியர் உளவியலைக் கற்றிருந்தால் மாத்திரமே சாத்தியமாகும்.

முன்பள்ளி ஆசிரியருக்கு குழந்தை உளவியல் தொடர்பான அறிவு இருந்தால் மாத்திரமே அவர்களுடைய முன்னேற்றம் மற்றும் பிரச்சினைகளில் சிறப்பான முடிவை எடுக்கக் கூடியவராக இருப்பார். இல்லையெனின், நேரம், சக்தி, மனிதவளம் போன்றன கணிசமானளவில் வீணாகும். ஏனெனில் குழந்தைகளின் தனியாள் வேறுபாட்டினை அறிய உளவியல் கற்கை அவசியமாகும்.

 

குழந்தையின் விளையாட்டு, கற்றல் போன்ற செயற்பாட்டிற்கு ஆசிரியர் உதவியாளராக இருக்க வேண்டும். பிள்ளைகள் கண்டறிவதற்காக உடன்பாடான வழிகாட்டல்களையும் திறந்த வினாக்களையும் போட்டிச் செயற்பாடுகளைத் தவிர்த்து கூட்டான செயற்பாடுகளையும் வழங்குபவராக ஆசிரியர் இருக்க வெண்டும். இயற்கையான சூழல் செயற்பாடுகளை வைத்து கல்வியினை முன்பள்ளி மாணவருக்கு வழங்க வேண்டும் என்றுதான் மரியா மொன்ரிசோரி அம்மையார், புரோபல், ரூசோ, ஜோன்டியூவி போன்ற கல்வியியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.



முன்பள்ளிப் பிள்ளைகளுக்கு வேண்டியது மகிழ்ச்சி, மகிழ்ச்சிக்கேதுவான விளையாட்டு, மகிழ்ச்சி தரும் ஆடல், பாடல், நடித்தல், கதை சொல்லல் முதலியனவாகும். இதனால் பல அனுபவங்களைப் பெற்று அனுபவக் கல்வியினையும்  புலன்கள்   மூலமான கல்வியினையும்        இயல்பூக்கங்களுக்கேற்ற கல்வியினையும் குழந்தைகள் பெற்றுக் கொள்கிறார்கள். இப்பணியை மறக்காமல் மாணவருக்கு வழங்கும் பொறுப்பு முன்பள்ளி ஆசிரியரைச் சார்ந்ததாகும். இவைகளெல்லாம் குழந்தை உளவியலைக் கற்று தேர்ச்சி பெற்றவர்களால் மாத்திரமே சாத்தியப்படக்கூடியது.


உளவியலைக் கற்றறிந்த சிறந்த முன்பள்ளி ஆசிரியர் இனிய மெல்லிய குரலில் பேசுதல், வசீகரமான தோற்றத்தைக் கொண்டிருத்தல், பிள்ளையை பெயர் சொல்லி அழைத்தல், எல்லாக் குழந்தைகளையும் ஒரே விதமாக நடாத்துதல், அன்பும் அரவணைப்பும், புதிய செயல்களை ஊக்குவித்தல் போன்ற பண்புகளைக் கொண்டவராக இருப்பார், இவ்வாறு ஆசிரியர் செயற்படும் போது தான் பிள்ளையானது கல்வியைக் கற்று தன் இலக்கினை அடையக் கூடியதாக இருக்கும்.



அத்தோடு முன்பள்ளிக் குழந்தைகள் இப்பருவத்தில் ஒரே இடத்தில் இருக்காது துருதுருவென்று செயற்பட்டு குழப்பங்களை விளைவிப்பவர்களாக இருப்பர். அதற்காக ஆசிரியர்கள் குழந்தைகள் மீது கோபம் கொள்ளாது அவர்களுக்கு தண்டனை வழங்காது அழகிய முறையில் அணுகி விடயத்தைத் தெளிவுபடுத்தல் வேண்டும். எக்காரணம் கொண்டும் ஒரு குழந்தை முன்னால் மற்றொரு குழந்தைக்கு தண்டனை வழங்கல் கூடாது. அவ்வாறு செய்பவர் குழந்தை உளவியல் கற்றறியாத அசிரியராகவே இருப்பார். அவ்வாறு செய்தால் அது மாணவரிடையே மன உளைச்சலை ஏற்படுத்தும்.

மேலும், முன்பள்ளிப்பிள்ளைகளிடம்     விருப்பங்கள், புதியவற்றைத் தேடுவதற்கான நாட்டமும், அதிக கேள்விகளைக் கேட்கக் கூடிய தன்மையும் அதிகமிருக்கும். இப்பண்புகளை உளவியல் கற்றிருந்த ஓர் ஆசிரியரால் மாத்திரமே நிர்வகிக்கக் கூடியதாக இருக்கும். அத்தோடு முன்பள்ளி ஆசிரியர்கள் குழந்தைகளோடு குழந்தைகளாக இருந்து அவர்களுக்கு கற்பிகக் க்கூடிய சூழலை ஏற்படுத்த வேண்டும் அப்போதுதான் அவர்கள் தங்குதடையின்றி கற்றலை மேற்கொள்வார்கள்.



அதேபோன்று   உளவியலைக் கற்றறிந்த   ஆசிரியர் முன்பள்ளிப் பிள்ளைகளுக்கான கல்வியை நாடகம், நடனம், உட்புற மற்றும் வெளிப்புற விளையாட்டு, போன்றவற்றின் அடிப்படையிலேயே அமைத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு கற்பிக்கின்ற போது குழந்தைகளை தானாகவே செயலாற்ற வைக்க வேண்டும். இவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் ஆசிரியரின் செயற்பாடுகள் அமைய வேண்டும். அத்தோடு கற்பித்தலுக்குத் தேவையான சாதனங்களும் சிறப்பான முறையில் ஒழுங்கு படுத்தப் பட்டிருக்க வேண்டும். இவர்களுடைய சிந்தனை தெளிவாக இருப்பதற்கும் வழிவகைகளை முன்பள்ளி ஆசிரியர்கள் செய்தல் வேண்டும்.

 

மேலும் குழந்தைகளுக்கு தங்கள் கலை உணர்வினை வெளிப்படுத்த சந்தர்ப்பம் அளித்துத் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தவும் நிறங்கள், சமநிலை, இயற்கை அழகை ரசிக்க அழைத்துச் செல்லுதல், அல்லது கலை அழகுமிக்க இடங்களுக்கு அருகில் நடக்கச் செய்தல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். தற்காலத்தில் இம் முன்பள்ளி பிள்ளைகளை வாராந்த சந்தை, மிருகக்காட்சிசாலை, திறந்த வெளிப்பிரதேசங்கள் போன்றவற்றிற்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கைகள் அதிகம் இடம்பெறுகிறது. இதனால் பிள்ளைகளின் மனநிலை தெளிவாகி புதிதாக சிந்திப்பதற்கான மனநிலை உருவாக்கப்படுகிறது. இதனால் அப்பிள்ளை புதிய விடயங்களின் பால் அதிக நாட்டம் கொள்ளும். 

 

மேலும் பிள்ளைகளுக்கு தன்னிலை உணர்த்தும் செயல்களான தானே உண்ணுதல், உடையணிந்து கொள்ளுதல், சுத்தத்தைப் பராமரித்தல் போன்ற செயற்பாடுகளை மாணவர்கள் பழகிக் கொள்வதற்கான வழிவகைகளை முன்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களிடத்தில் மேற்கொள்ளல் வேண்டும். அப்போதுதான் பிள்ளைகள் பிறரில் தங்கியிருக்காத நிலைக்கு ஆட்படுவர். இவையனைத்தும் உளவியலை சிறப்பாகக் கற்றறிந்த ஓர் ஆசிரியரால் மாத்திரமே சாத்தியமாகும்.

 

இந்தவகையில் நாட்டிற்கான நற்பிரஜைகளை உருவாக்கும் ஆசிரியர்களின் மகத்தானபணி முன் பள்ளிகளிலிருந்தே தொடங்குகிறது. இப் பணியை சிறப்பாக முன்னெடுக்கக்கூடிய முன்பள்ளி ஆசிரியர்கள் கட்டாயம் குழந்தை உளவியலைக் கற்று அதற்கேற்ற வகையில் கற்பித்தற் செயற்பாடுகளை முன்னெடுப்பது அவசியமாகும். 

 

.பா. ஹாழிறா,

02ம் வருடம், கல்வியியல் சிறப்புக்கற்கை, 

கல்வி பிள்ளை நலத்துறை, கிழக்குப்பல்கலைக்கழகம். 

 

Comments

Post a Comment

Popular posts from this blog

'வினைத்திறனான கற்றல் கற்பித்தல் செயற்பாடானது மூவழித்தொடர்பாடல் நிகழ்ச்சியினூடாக நடைபெறுவதன் மூலம் ஆசிரியர் - மாணவர் இடைத்தாக்கம் சிறப்பாக அமையும். இக்கூற்றின் அடிப்படையில் உமது கருத்துக்களை முன்வைத்து விளக்குக.

Case Study Analysis Of MAS Holdings

கலைத்திட்ட மேம்பாட்டினை இன்றைய தேவையை முக்கியப்படுத்தி உமது கருத்துக்களை விளக்குக.