மூன்றாம் நிலைக் கல்வி
இன்றைய நவீன கல்வயில் மூன்றாம் நிலைக் கல்வியின் தாக்கமும் அதன் முக்கியத்துவமும்
ஒருவரின் அறிவு, திறன், மனப்பாங்கு என்பவற்றில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி மனிதனை மனிதனாக வாழ வழிகாட்டுவது கல்வியாகும். அந்த வகையில் கல்வியின் நிலைகள் ஆரம்ப நிலைக் கல்வி, இரண்டாம் நிலைக் கல்வி, மூன்றாம் நிலைக் கல்வி என மூன்றாக வகுக்கப்படுகின்றது. அந்த வகையில் இரண்டாம் நிலை கல்வியை முடித்த பின்னர் நாம் பெறும் கல்வி நிலை மூன்றாம் நிலைக் கல்வி எனப்படும். பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்கள், சமூகக் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், ஆராய்ச்சி ஆய்வகங்கள், சிறப்பான மையங்கள் மற்றும் தொலைதூர கற்றல் மையங்கள் போன்ற குறிப்பிட்ட திறன்களை கற்பிக்கும் நிறுவனங்களை உள்ளடக்கியது மூன்றாம் நிலைக் கல்வியாகும். இது உயர்கல்வி, இளங்கலை மற்றும் முதுகலை கல்வி ஆகியவற்றை உள்ளடக்கியது.
எமது நாட்டின் இலவசக் கல்வி நடைமுறைக்கு ஏற்ப 93.6% ஆனோர் பாடசாலைக்குள் நுழைந்தாலும் அதில் 3.6% மானோரே உயர் கல்வி பெறும் சந்தர்ப்பத்தை பெறுகின்றனர். அந்த வகையில் உயர்தரப் பரீட்சை சித்தியடையும் 17% மானோரே பல்கலைக் கழகம் செல்கின்றனர். 83%மானோர் பல்கலைக் கழகம் செல்வதில்லை. அந்த வகையில் எமது நாட்டில் இலவசக் கல்விக்காக அரசாங்கம் பெரும் தொகைப் பணத்தை செலவு செய்து கல்வியை வழங்குகின்றது. அதன் பயனை எதிர்கால சந்ததி முழுமையாக அடைந்து கொள்ள அனைத்து மாணவர்களுக்கும் மூன்றாம் நிலைக் கல்வி மூலம் உயர் கல்வி வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
இன்றைய கல்வியில் மூன்றாம் நிலைக் கல்வி பாரிய தாக்கத்தை செலுத்துகின்றது. மாணவர்கள் தொழிற் தகைமையையும், அறிவையும் பெற மூன்றாம் நிலைக் கல்வி வழிகாட்டுகின்றது. இன்று பல்கலைக் கழகம் மாத்திரமன்றி மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் தொழிற் கல்வி ஆணைக்குழு மூன்றாம் நிலைக் கல்வியை வழங்குவதுடன் சைட்டம் போன்ற நிறுவனங்களும் மூன்றாம் நிலை கல்வி மூலம் மருத்துவ கல்வியை வழங்கி வருகின்றன. தற்போதைய அமைச்சரவை “அரசாங்கம் அல்லாத உயர் கல்வி நிறுவனங்களில் அரசாங்கத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பட்டப்படிப்பு கற்கை நெறியை தொடர வட்டியற்ற கடன் உதவியை விரிவுபடுத்த நடவடிககை எடுக்கப்படவுள்ளதாக” குறிப்பிடப்பட்டுள்ளது வரவேற்கத்தக்க விடயமாகும்.
மூன்றாம் நிலைக் கல்வியின் மூலம் இன்று மாணவர் திறன் விருத்திக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற நிலை காணப்படுகின்றது. அரச பல்கலைக்கழகங்கள் மாத்திரமன்றி அரச சார்பற்ற நிறுவனங்களும் இதில் தற்போதைய சூழலில் பாரிய தாக்கம் செலுத்துகின்றன. இதனால் கல்வியை விட்டு இடை விலகுவோர் வீதம் குறைக்கப்பட்டு இங்கு உயர் கல்விக்கான ஊக்குவிப்புக்கள், அது தொடர்பான பயிற்சிகள், திறன் விருத்தி போன்றவை ஏற்படுத்தப்பட்டு உயர் தொழில் வாய்ப்பும், சிறந்த சம்பளமும் கிடைக்கும் நிலை காணப்படுகின்றது.
மூன்றாம் நிலைக் கல்வியின் மூலம் விவசாயம், மீன்பிடி, உணவு, வேலைப்பாடு, குடிசைக் கைத்தொழில், தகவல் தொடர்பாடல், மனைப் பொருளியல் போன்ற பல் துறைசார் விருத்தி ஏற்படுதப்படுகின்றது. பல்கலைக் கழகங்களிலும் கூட மாணவர் அவரவர் கற்க விரும்பும் துறைக்கு ஏற்ப பிரிக்கப்படடு; பயிற்றுவிக்கப்படுகின்றனர். அந்த வகையில் “குறுகிய காலப் பகுதிக்குள் தொழிற்படையை உருவாக்க பல்கலைக் கழகத்திற்குள் டிப்ளோமா கற்கை நெறியை அறிமுகப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்துவதாக” தற்போதைய அதிமேதகு ஜனாதிபதி கருத்து தெறிவித்துள்ளhர்.
இன்று அரசு 50ற்கு மேற்பட்ட தொழிற் துறைசார் கல்வியை அளிக்க முன்வந்துள்ளன. அறிவியல் ரீதியான பல புதிய கற்கையுடன், வாகனத் தயாரிப்பு, வீட்டு உபயோகப் பொருட்கள், ஆடை அலங்காரம், நகை வடிவமைப்பு, கைத்தொழில் போன்ற பல தொழில்கள் முக்கியம் பெற்று காணப்படுகின்றன. இவ்வாறான மூன்றாம் நிலைக் கல்வி பெறுபவர்களுக்கு ஊக்குவிக்கும் விதமாக பல செயற்றிட்டங்கள் நடைபெற்று அதன் மூலம் சிறந்த பயிற்சியையும் தொழில் வாய்ப்பையும் பெற்றுக் கொடுத்தல் மற்றும் சுய தொழில் செயற்பாட்டிற்கு மாணவர்களை தயார் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்கு 3ம் நிலை கல்வியின் பங்களிப்பு அவசியமாகும்.
உயர் கல்வி பட்டம் பெற்றும் கூட வேலையில்லாப் பிரச்சினை ஒரு பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது. இந்த நிலையில் இவர்களுக்கு தற்போதைய நடைமுறை சூழலிற்கு ஏற்ற வகையில் மூன்றாம் நிலை கல்வி வழங்கப்பட வேண்டும். இதன் மூலம் அவர்கள் தாங்கள் ஈடுபட விரும்புகின்ற தொழில் சார் அறிவையும், திறனையும் பெற்று வினைத்திறனாக தொழிலில் ஈடுபட சந்தர்ப்பம் வழங்கப்படுவதுடன் வேலையற்றோர் பிரச்சினைக்கும் இது ஒரு தீர்வாக அமையலாம். அந்த வகையில் தற்போதைய அதிமேதகு ஜனாதிபதி “வெற்றிடங்கள் உள்ள நிறுவனங்களை கண்டறிந்து வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஆட்சேரப்பு செய்தல்” விடயம் தொடர்பாக கவனம் செலுத்தப்படவுள்ளதாக கூறியுள்ளார்.
மூன்றாம் நிலை கல்வி சரியான முறையில் வழங்கப்படாது விட்டாள் பல மாணவர்கள் உயர் கல்வியையும் தொழிலிற்குரிய போதிய தகைமையையும் பெறாமல் சமூக சீர்கேடுகளுக்கு உட்பட்டு அதன் மூலம் சட்ட விரோத தொழில்களில் ஈடுபடக் கூடிய வாய்ப்புள்ளது. இது மாணவர்களின் தனிப்பட்ட வாழ்வை மாத்திரமன்றி முழு நாட்டையும் பாதிக்கின்ற ஒரு பிரச்சினையாகவும் மாறலாம். எனவே மூன்றாம் நிலை கல்வி முறையாக கொடுக்கப்படுகின்ற பொழுது இப் பிரச்சினையை ஓரளவேனும் குறைக்கலாம்.
பூகோளமயமாக்கம் காரணமாக நவீன உலகின் மாற்றத்திற்கு ஏற்ப புதிய தேவைகள் உருவாகிக்கொண்டே வருகின்றன. பல்துறைசார் வளரச்சி காரணமாக பல்துறைசார் தேர்ச்சி பெற்ற மனிதவளம் அதற்காக தேவைப்படுகின்றது. உதாரணமாக நவீன வீட்டுப் பாவனைப் பொருட்கள் மற்றும் அலங்காரப் பொருட்கள் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவற்றை நிவர்த்தி செய்யும் பொருட்டு மூன்றாம் நிலைக் கல்வி வழங்கப்பட வேண்டும்.
பொதுவாக ஒவ்வொரு மனிதனிடமும் பல் துறைசார் வெவ்வேறு விதமான திறமைகள், ஆற்றல்கள் காணப்படுகின்றன. இவை “இலை மறை காய்களாய்” மறைந்து காணப்படவும் செய்கின்றன. இவ்வாறான அறிவு ஆற்றல்களை வெளிக்கொண்டு வந்து அவர்களின் திறமைக்கு முன்னுரிமை கொடுத்து அதன் பயனை அனைவரும் பெறும் விதமாக அதை பிரதிபலிக்க மூன்றாம் நிலை கல்வி வழங்கப்பட வேண்டும். இதன் மூலம் உயர் கல்வி வாய்ப்பு அதிகரிக்கப்பட்டு தொழில் துறைசார் மேம்பாடு ஏற்படும்.
எனவே மூன்றாம் நிலைக் கல்வி ஒரு நாடு முனN;னற்றமடைவதற்கு ஒரு முக்கிய தேவையாக உள்ளது. அந்த வகையில் எமது நாடு அரசியல், பொருளாதார, சமூக ரீதியில் வளர்ச்சியடைவதற்கு மூன்றாம் நிலைக் கல்வி ஒரு பாரிய தேவையாகவுள்ளது.
ஆகவே அரச சார்பான, அசர சார்பற்ற நிறுவனங்கள் மூலம் தற்காலத்திற்கு ஏற்ற வகையில் மூன்றாம் நிலை கல்வியை விருத்தி செய்து அவை முறையாக அவர்களுக்கு வழங்கப்படுகின்ற போது சிறந்த சமூகமொன்றை கட்டியெழுப்பலாம்.
மு.ஜ.பா. ஸஜீதா
02ம் வருடம், கல்வியியல் சிறப்புக்கற்கை,
கல்வி பிள்ளை நலத்துறை, கிழக்குப்பல்கலைக்கழகம்.
good article.
ReplyDelete