கல்வியும் மனிதவள அபிவிருத்தியும்
ஒரு ஒழுங்கமைப்பின் அல்லது ஒரு நிறுவனத்தின் மனித வளம் ஏனைய அனைத்து வளங்களையும் விட விசேடமானதும் முக்கியமானதும் ஆகும். ஒரு நிறுவனத்தின் ஏனைய வளங்கள் கையாளப்படுவது மனித வளங்களினாளாகும். இதனை உள்ளார்ந்த மனித வளங்கள், வெளி வாரியான மனித வளங்கள் என பிரித்து நோக்கலாம். உதாரணமாக பாடசாலையை எடுத்து நோக்குவோமாயின் அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் போன்றோர் உள்ளார்ந்த மனித வளங்கள் எனவும், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், உயர் கல்வி அதிகாரிகள், சமூக அமைப்புக்கள் என்பன வெளி வாரியான மனித வளங்கள் எனவும் குறிப்பிடலாம்.
மேற்கூறப்பட்ட மனித வளங்கள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்ற கருத்தாடல் அதிகமாக உள்ளது. அந்த வகையில், மனித வள அபிவிருத்தி என்பது தொடர்பான பல ஆய்வுகள் இடம் பெற்று வந்துள்ளதை காணமுடிகிறது. இவற்றில் அபிவிருத்தி என்பதற்கு பலதரப்பட்ட விளக்கங்கள் அளிக்கப்படுகிறது. அபிவிருத்தி என்பது பெரிய பரந்த பரப்பு ஆகும் இதற்கு மாற்றம் போன்ற சொற்கள் பயன்படுத்தப்படுகிறது.
தனிமனிதன் தன்னைத் தானே தனது ஆற்றல்களை வளர்த்துக் கொண்டு போதல் அபிவிருத்தி என்று சுருக்கமாக கூறினாலும், சமூக-பொருளாதார சிந்தனையில் வேறுபட்ட கருத்துக்களும் வரையறைகளும் வழங்கப்பட்டு வந்துள்ளன. இதன்படி பொருளியலாளர்கள், அபிவிருத்தி செயற்பாட்டில் மனித வலுவின் உற்பத்தி ஆற்றலை கருத்தில் கொண்டனர். அரசியல்வாதிகள் அபிவிருத்தி என்பதனை, அரசியல் செயற்பாடுகளில் தங்கியிருக்கிறது என்று கருதினர். சமூகவியலாளர்கள் மாறுகின்ற உலகில் மாற்றத்துக்கு ஏற்ப தன்னைத் தானே மாற்றத்தை ஏற்படுத்தல் மனிதவள அபிவிருத்தி என்கின்றனர்.
மனிதனுடைய அறிவு,ஆற்றல், திறன் என்ற மூன்று திட்டத்தினுள் காணப்படுகின்ற குறைகளை நிவர்த்தி செய்து தான் என் நிறுவனத்திற்கோ அல்லது அமைப்புக்கோ பங்களிக்கின்றவன் என்ற வகையில் விருத்தி செய்யப்படுவதனை மனித வள அபிவிருத்தி என்று கூறலாம். உதாரணமாக மனிதவள அபிவிருத்தியினை பாடசாலையை கொண்டு விளக்க முற்படுவோமானால், பாடசாலையில் அதிபர், ஆசிரியர், மாணவர்கள் போன்றோர் மனித வளங்கள் ஆகும். ஆசிரியர் வளமானது, மாணவர் சமூகத்துக்காக அபிவிருத்தி செய்யப்படுகின்றது. ஆசிரியர்களின் மனப்பாங்கு மாற்றம், தேடல்களுக்கான ஊக்குவிப்புகள், திறன்களை வளர்ப்பதற்கான கால விடுமுறை என்பன ஆசிரியர் வளம் அபிவிருத்தி செய்யப்படும் விதமாகும்.
1950 களில் மனித வள அபிவிருத்தியானது கல்வி, பயிற்சி, திறன்களில் தேர்ச்சி, சிறந்த ஊழியர் நல மேம்பாடு என்பவற்றினை உள்ளடக்கும் என்று கருதப்பட்டது. இது மனித மூலதனம் பற்றிய ஒரு புதிய எண்ணக் கருவாகும். ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம் 1950களில் வெளியிட்ட தனது பிரசுரங்களில் வளம் என்ற சொல்லை விடுத்து மனித அபிவிருத்தி என்ற சொல்லை பயன்படுத்தியது. இப் புதிய எண்ணக்கருவானது மக்களுக்கான தெரிவுகளை விரிவுபடுத்தியது. அபிவிருத்தியை இயன்றளவு ஜனநாயகப்படுத்தி மக்கள் பங்கேற்பு காண வாய்ப்புக்களை அதிகரிப்பதாகவும் விளங்கிற்று. 1988 களில் ஜகார்த்தா மாநாடு முன்வைத்த மனிதவள அபிவிருத்திக்கான செயற்திட்டத்தில் 106 செயலாக்க ஆலோசனைகள் உள்ளடக்கப்பட்டிருந்தன.. இது மனிதவள விருத்தி பற்றிய ஒரு கோட்பாட்டை உருவாக்கும் திட்டமாக அமைந்தது. அதன் பின்னர் உலக நாடுகளில் தீர்மானங்களை மேற்கொள்ளும் தொடர்புடையோர் மனிதவள விருத்தி பற்றிய எண்ணக்கருவில் மிதமிஞ்சிய அக்கறை காட்டத் தொடங்கினர் மனிதவள அபிவிருத்தியானது, இரு பெரும் வகையில் முக்கியத்துவம் பெறுகிறது அந்த வகையில்,
- மனித காரணியானது அபிவிருத்திக்கு பயன்படும் ஒரு உள்ளீடகவும் அபிவிருத்திச் செயன்முறையின் தொடக்க கட்டமாகவும் நோக்கப்படும்
- அபிவிருத்தி செயல்முறையின் இறுதிநிலை கட்டமாக அபிவிருத்தியின் விளைவாக வெளிவரும் நலன்களை நுகரும் பயனாளியாக மனிதன் கருதப்படுகின்றான்.இது மனிதக்காரணியின் சமூகப்பரிமாணத்தை குறிக்கிறது.
ஒவ்வொரு தனி மனிதனையும் அரசியல், சமூகம், பொருளாதாரம் என்ற அடிப்படையில் விருத்தியடையச் செய்வதையும், மாறுகின்ற உலகுக்கு ஏற்ப ஏற்படுகின்ற மாற்றங்களுக்கு ஏற்ப தன்னைத் தானே ஒழுங்குபடுத்த செய்யப்படும் விருத்தியையும் மனித வள அபிவிருத்தி எனலாம். இவ்வாறு மனிதனை பல்வேறு வகையில் விருத்தி அடையச் செய்வதற்கு பங்காற்றுகின்ற காரணிகளில் கல்வியானது மிகவும் முக்கியமானதாகும். கல்வி மூலம் மனிதன் முன்னேற்றம் அடைவதானது,, நாட்டையும் அபிவிருத்திப் பாதைக்கு கொண்டு செல்கிறது. இவ்வாறு கல்வியானது மனித வள அபிவிருத்திக்கு இன்றியமையாத ஒன்றாக காணப்படுகிறது.
மனிதவள அபிவிருத்தியில், விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் தற்காலத்தில் முக்கியமானவையாகும். இவற்றை கல்வியின் ஊடாக வழங்குவது குறிப்பிடத்தக்கதாகும். அதாவது பல்வேறு மட்டங்களிலுமான தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்ளத்தக்க மனித வளத்தை உருவாக்குதல், ஆரம்பக் கல்வி, விஞ்ஞான தொழில்நுட்ப கல்வி என்பன இதில் அடங்கும். நாட்டின் அபிவிருத்தி தேவையை ஈடு செய்யக் கூடியதாக ஊழியருக்கு உரிய தொழில்நுட்பங்களை பின்பற்றுதல், புத்தக படிப்பில் ஈடுபடல் என்பவற்றின் மூலம் சமூகத்தில் தொழில்நுட்ப கலாசாரத்தை முன்னேற்றுதலானது இடம்பபெறுகிறது.
மனித வள அபிவிருத்திக்கு கல்விச் செயற்பாடுகள் அடிப்படையாக உள்ளது. கல்வி வழங்கப்படும் காலமெல்லாம் மனிதவள அபிவிருத்தியானது இடம்பெற்றுக் கொண்டே இருக்கும். உதாரணமாக தற்காலத்தில் வாழ்நாள் நீடித்த கல்வி வழங்கப்படுவதை குறிப்பிடலாம் இவ்வாறு மனிதனுக்கு அவன் பிறந்ததிலிருந்து இறக்கும் வரையில் கல்வி வழங்கப்படுவதானது மனித வள அபிவிருத்திக்கு முக்கியமானதாகும். ஒருவருக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும் போதோ அறிவு, திறன், மனப்பாங்கு என்பவற்றில் விருத்தி ஏற்படும் மனிதனானவன் நவீன முறைகள் மற்றும் தொழில்நுட்பம் என்பவற்றை கையாள்வதற்கான அடித்தளத்தினை கல்வியின் ஊடாக பெற்றுக் கொள்கின்றான். இவற்றை பல்வேறு வகையான கல்வியின் ஊடாக ஊடாக பெறுகின்றான் உதாரணமாக கட்டாயக் கல்வி, விழுமியக் கல்வி, வாழ்நாள் நீடித்த கல்வி, பிரச்சினையை தீர்ப்பதற்கான கல்வி, விஞ்ஞான தொழில்நுட்ப ரீதியான கல்வி, இணைய ஒருமைப்பாட்டுக்கான கல்வி என்பவற்றைக் குறிப்பிடலாம்.
கல்வியினை வழங்குவதில் பாடசாலைகள் முக்கியமானவை. அங்கு, கவனம் உற்சாகம், பராமரிப்பு ,அறிமுகம், நகைச்சுவை, ஆர்வம்,விடய தெளிவு,, திட்டமிடலும் ஒழுங்கமைத்தலும், நட்புடைமை போன்ற அம்சங்கள் கற்பித்தலில் இடம்பெறவேண்டும். தற்போதுள்ள மாணவர் மையக் கல்வி முறையானது அறிவாற்றலை வளர்த்து மனிதவள அபிவிருத்தியில் பெரும் பங்காற்றுகின்றது. பாடசாலையின் புதிய சூழல், ஆசிரியர் மாணவர் தொடர்பு, நவீன கற்பித்தல், விஞ்ஞான செயல்முறைகள், பரிசோதனைகள், கலந்துரையாடல்கள் போன்றனவும் கல்வி முறையின் ஊடாக மனித வளத்தை விருத்தி செய்வதாய் அமைந்துள்ளன. ஒரு நாட்டில் கற்றோர் வீதம் அதிகரிக்கும்போது அங்கு புதிய கண்டுபிடிப்புகளும் தேடல்களும் அதிகமாக இடம்பெறும் இதனால் நாடாது அபிவிருத்தி அடையும் எனலாம்.
இலங்கையில் கல்வியினை வழங்கும் நிறுவனங்களான பல்கலைக்கழகங்கள், தேசிய கல்வியற் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிறுவனங்கள் என்பன நவீனமயப்படுத்தப்பட்டு முன்னேற்றகரமாக கொண்டு செல்லப்படுவதனால் மனித வள அபிவிருத்தியானது மென்மேலும் முன்னேற்றம் அடைகிறது. இவ்வாறு மனிதவள விரயத்தை குறைத்து அபிவிருத்தியை அடைவதற்கான வழிமுறைகள் அரசினால் முன்னெடுக்கப்படுகின்றன.
மனித வள அபிவிருத்தி வெளியீடுகளை பொருத்தவரை தெற்காசிய வலயத்தில் இலங்கை மிகச்சிறந்த நாடாக காணப்படுகின்றது. இங்கு சுகாதாரம் மற்றும் கல்வியின் மீது அதிக கவனம் செலுத்தப்படுகின்றது. அதாவது நாட்டினுடைய பாடசாலை மற்றும் உயர் முதல் தர மற்றும் இரண்டாம் தர பாடசாலை உள்நுழைவு ஆகியவற்றில் உலகளாவிய வலைப்பின்னல் காணப்படல், மற்றும் தாய் மற்றும் குழந்தை நல சேவைகளில் ஏறக்குறைய உலகளாவிய அளவிலான பாதுகாப்பு ஆகியவையே இதற்கு சான்றாக உள்ளது. இலங்கை அதனுடைய அண்மித்த நாடுகளையும் விட குறைந்த அளவு உள்நாட்டு உற்பத்தியை கொண்டிருந்தாலும் சுகாதாரம், கல்வி மற்றும் சமூக பாதுகாப்பு என்பவற்றுக்காக செலவளிப்பதன் மூலம் இத்தகைய இடத்தினை வகிக்கின்றது.
தற்காலத்தில் ஏற்பட்டுள்ள கோவிட் 19 ஆனது, இலங்கையின் மனிதவள அபிவிருத்தியில் பல சவால்களை, அழுத்தத்தை செலுத்துகிறது. இது பல வருடங்களாக ஏற்படுத்திய வளர்ச்சியை தலைகீழாக மாற்றுவதற்கு அச்சுறுத்தல் கொடுக்கிறது. கோவிட் 19 காரணமாக குறிப்பாக 2020இல் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறிப்பிடத்தக்க அளவு வறுமை மற்றும் தொழில் மற்றும் வருமான இழப்பின் காரணமாக பாதிப்புகள், ஆகியவை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. இதனால் பல இலங்கை குடும்பங்கள் சாப்பாடு, வைத்தியர்களிடம் செல்லுதல் மற்றும் பாடசாலை செல்லுதல் ஆகியவற்றை கைவிடுதல் போன்ற நேர்மறையான சமாளிக்கும் வழிமுறைகளை பின்பற்றுவதற்கு தள்ளப்படுவது தவிர்க்க முடியாது. இவை குறைவான மனித வள அபிவிருத்திக்கு இட்டுச் செல்கின்றன.
மனிதவள அபிவிருத்தியில் முக்கியமாக உள்ள கல்வியினை வழங்குவது கோவிட் 19 காரணமாக சாத்தியமற்றதாக விளங்குகின்றது. அதாவது பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன இதனால் மாணவர்களுக்குரிய கல்வி தேர்ச்சிகள் கிடைக்கப்பெறவில்லை. இது மனிதவள அபிவிருத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாறு இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து மீண்டும் சிறப்பாக கட்டியெழுப்புவதற்கு உதவுவதற்காக மனிதவள அபிவிருத்தி ஆதாயங்களைப் பாதுகாப்பதற்காகவும் உடனடியானதும் நீண்டகால தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு உதவுவதற்காக ஏற்கனவே இருக்கும் செயற்திட்டங்கள் இருந்து உலக வங்கி 155 மில்லியன் டொலர்கள் புதிய அவசர நிதி வழங்கியுள்ளது. உதாரணமாக அவசர உதவி மற்றும் சுகாதார முறைகளுக்கு தயாராகுதல் செயற் திட்டமானது, அரசாங்கத்திற்கு அவசர சுகாதார தேவைகளுக்கு பதிலளிப்பதற்கு உதவுவதுடன் மற்றும் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு அவசர வருமான உதவியையும் வழங்குகின்றது. மேலும் பல திட்டங்களின் ஊடாக மாணவர்களின் இலத்திரனியல்கல்வி கற்பதற்கான நடவடிக்கைகளுக்காக உதவிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மேற்குறிப்பிட்டவாறு பல்வேறு அமைப்புகளின் உதவிகளையும் பெற்று கோவிட் 19 காலத்திலும் மாணவர்களுக்கு உரிய முறையில் கல்வியினை வழங்கிய எதிர்கால மனித வளத்தினை சிறப்பாக விருத்தி செய்வது அரசினது தலையாய கடமையாக உள்ளது. மனிதன் தனது அறிவை மேலும் விருத்தி செய்து கொள்வதற்கு கல்வி உறுதுணையாக அமைகின்றது. "கல்வி அபிவிருத்தியின் ஊடாக அபிவிருத்தி அம்சங்களில் ஒரு நாடும் பிரதேசமும் கவனம் செலுத்தும்போது மனித வள அபிவிருத்தி ஏற்படுகிறது" என எச் ஹோம்ஸ் என்பவர் குறிப்பிடுகிறார்.. இவ்வாறான அபிவிருத்தி மூலம் மனித வள அபிவிருத்தியை பெறுவதற்கு பல்வேறு வகையான நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும். இதன்போதே மனித வள அபிவிருத்தி சிறப்பாக இடம்பெற்று நாடானது முன்னேற்றம் அடையும் எனலாம்.
Comments
Post a Comment