ஜீன் பியாஜேயின் தூல சிந்தனை பருவ விருத்தி

 ஜீன் பியாஜேயின் தூல சிந்தனை பருவ விருத்தி பற்றிய செயற்பாடுகள் ஆரம்ப   வகுப்புக்களான 3;, 4, 5 ஆகியவற்றின் செயற்பாட்டில் எவ்வாறு முக்கியத்துவம் பெறுகின்றன என்பதை ஆராய்க.

புறவய அடிப்படையிலும் கணிப்பின் அடிப்படையிலும் அளக்கக்கூடிய தோற்றப்பாடு பற்றிய விஞ்ஞானமே உளவியல் எனலாம். அதாவது மனிதனது நடத்தை, குணநலன் என்பவற்றை விளக்கும் அறிவியலுடன் தொடர்புடைய பகுதி உளவியலாகும். இந்த உளவியலானது பல்வேறு வகைகளைக் கொண்டதாகவுள்ளது. மேலும் இது தொடர்பாக பல்வேறு அறிஞர்களும் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். இதில் முக்கியமானவராக ஜீன் பியாஜே எனும் உளவியலாளர் காணப்படுகிறார்

பியாஜே சுவிட்ஸர்லாந்தில் 9 ஆகஸ்ட் 1896 பிறந்தார். இவர் ஓர் உளவியலாளரும் அறிவியலாளருமாவார். இவர் ஆக்கவியல் கோட்பாடு, மரபுசார் அறிவாய்வியல், அறிதிறன் வளர்ச்சிக் கோட்பாடுகளின் நிலைப்புத்தன்மை, தன்மையச்சிந்தனை போன்ற பல கோட்பாடுகளை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் குழந்தைகளின் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்கினார். சர்வதேச கல்விச்செயலகத்தின் இயக்குனராக இருந்த இவர் 1934 ஆம் ஆண்டில் கல்வி மட்டுமே திடீரென அல்லது படிப்படியாக மாறாச்சாத்தியமுள்ள சீர்குலைவுகளிலிருந்து நமது சமுதாயங்களை காப்பாற்றும் வல்லமை கொண்டது என்று பிரகடனம் செய்தார். இவரது குழந்தை வளர்ச்சிக் கோட்பாடானது பணிமுன் கல்வியியல் பயிற்சிகளில் அதிகமாக பரிந்துரைக்கப்படுகிறது. கல்வியலாளர்கள் தொடரந்து ஆக்கவியல் சார் கருத்தியலை கற்றல் - கற்பித்தல் முறைகளில் உள்ளடக்கி உருவாக்கித் தருகின்றனர். இவர் 1995 இல் ஜெனீவாவில் மரபுசார் அறிவியலுக்கான சர்வதேச மையம் ஒன்றை உருவாக்கினார். இந்த மையத்தில் நடந்த கண்டுபிடிப்புக்கள், கூட்டு முயற்சிகள் என்பவற்றின் தாக்கம் காரணமாக அந்த மையம் ஸ்காலர்லி எனும் இதழில்பியாஜேயின் தொழிற்சாலை எனக்குறிப்பிடப்பட்டது

பியாஜே மருத்துவநல ஆய்வுமுறை மூலம் தனது மகள், மகன் போன்றவர்களில் நீண்ட கால ஆய்வை மேற்கொண்டு பிறந்ததிலிருந்து பிள்ளை வளர்ந்து வாழ்க்கை முழுவதும் இசைவுறுதலே கற்றலாகும் இதுவே சமூக இசைவாக்கமாகும்: இது உளவியல்சார் வல்லமைகளை மேம்படுத்திக்கொள்ளல் தொடர்பான கற்றல் செயன்முறையாகும் என்கிறார். இவரின் அறிவாற்றல் கொள்கையின் படி நுண்மதியானது வளர்ச்சியடையும் உயிரிக்கும் சூழலுக்கும் இடையிலான பரஸ்பர தொடர்புகள் காரணமாக மேன்மேலும் சிக்கலான மற்றும் நெகிழ்ச்சியான பல திட்டங்களுக்கு ஊடாக கட்டியெழுப்பப்படுவதாக கருதப்படுகிறது.

பியாஜேயின் ஆய்வின் விளைவாக பிள்ளை தொடர்பாக அதுவரையில் காணப்பட்ட கருத்து மாற்றமடைந்தது. அதாவது பிள்ளை சூழலினால் வழிப்படுத்தப்படும் வாழவிருக்கும் ஒருவர் எனும் கருத்து மாற்றடடைந்து, உயிரோட்டமாக அறிவைத்தேடுபவர் என்பது கண்டறியப்பட்டது. பிள்ளை சூழலுடன் தொடர்புற்று அறிவாற்றால்களை பெறும் விதமும், சூழலின் செழுமை அல்லது வறுமையின் படி அனுபவங்கள் போசிக்கப்படும் அல்லது நலிவடையும் என்பது இவரது கொள்கை மூலம் கண்டறியப்பட்டது. இவர் ஸ்கீமா, தழுவல், தன்மயமாக்கல், தன்னமைவாக்கல், சமநிலை, ஒழுங்கமைப்பு போன்ற சொற்களஞ்சியங்களை அறிவாற்றல் விருத்தியின் தொடக்கத்தையும் வளர்ச்சியையும் விவரிப்பதற்காக பயன்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பியாஜே பிள்ளையின் வளர்ச்சிக்கட்டங்களை பல்வேறு பருவங்களாக ஆராய்ந்ததைப் போலவே நுண்ணறிவு வளர்ச்சி பற்றி ஆய்வினை மேற்கொண்டு சிந்தனை வளர்ச்சிக் கட்டங்களைப் பருவங்களாக வகுத்துக்காட்டியுள்ளார். அந்த வளர்ச்சிக் கட்டங்களாக, புலன் இயக்கப்பருவம், முன் தூல சிந்தனைப்பருவம், தூல சிந்தனைப்பருவம், நியம சிந்தனைப்பருவம்என்பவற்றை வகுத்துக்காட்டுகிறார்.

தூல சிந்தனைப்பருவம் என்பது 7-12 வயதுக்குட்பட்டவர்களைக் கொண்ட பருவமாகும். இப்பருவத்தின் சிந்தனையின் பிரதானமான இயல்பு அச்சிந்தனைப் பருப்பொருள்களை அதாவது தூலப்பொருள்களை கொண்டிருத்தலாகும். இப்பருவ பிள்ளைகளுக்கு பொருள்களைக் கையாள இடமளிக்காத நிலையில் வாய்மொழி மூலம் மாத்திரம் தருக்கிப்பதற்கு சந்தர்ப்பமளிக்கப்படுவதால் அவர்கள் அதில் வெற்றி பெறமாட்டார்கள். அதாவது செயல்களுடன் அன்றி அவ்வாறு செயல்களுடன் தொடர்புபடுத்தாத வகையில் தர்க்க ரீதியில் மாத்திரம் சிந்தனையைச் செலுத்துவது சாத்தியமானதல்ல.

தூல சிந்தனைக்கு முற்பட்ட பருவத்தில் விடையளிப்பதற்கு சிரமப்பட்ட மாறாத்தன்மை எண்ணக்கருக்களை இப்பருவத்தில் விளங்கிக் கொள்வர். மேலும் இப்பருவத்தில் சிந்தனையை பண்முகப்படுத்தும் ஆற்றல் உண்டு. இப்பருவத்தில் சிந்தனையானது பொருளின் யாதேனும் ஒரு சிறப்பான இயல்பில் தங்கிருக்கமாட்டாது.

தூல சிந்தனைக்கு முற்பட்ட பருவத்தில் பிள்ளைக்கு யாதேனும் பொருளை ஒட்டுமொத்தமாகவும் அதன் பகுதிகளாகவும் கருத்திற்கொண்டு தர்க்கிக்க முடியாத போதிலும் பருப்பொருள் சிந்தனைப்பருவத்தில் அத்திறனைப்பெறும். உதாரணமாக 07 மைனாக்களையும் 05 புறாக்களையும் 03 கிளிகளையும் ஒரே இடத்தில் காட்டி இங்கு கூடுதலாக காணப்படுவது மைனாக்களா? பறவைகளா? எனக்கேட்டால், தூல சிந்தனைக்கு முற்பட்ட பிள்ளையின் விடை மைனாக்கள் என அமையக்கூடும் எனினும் 09 வயதுடைய பிள்ளையின் விடை பறவைகள் என்பதாக அமையக்கூடும்.

இப்பருவ பிள்ளைகள் காலப்படி முறை (முன் - பின் என்றவாறாக) தொடர்பின் விளக்கமும் காலவரையறைகள் (குறுகிய - நீண்ட) தொடர்பான விளக்கமும் இப்பருவத்தில் நிகழும் மேலும் வரிசைப்படுத்தும் திறனையும் பெற்றிருப்பர், அதாவது யாதேனும் சில பொருட்களை, எண்ணிக்கைகளை, நிகழ்வுகளை ஒழுங்குபடுத்துவர். உதாரணமாக முந்திய பருவத்தில் தடிகளை நிரற்படுத்தும்போது தனித்தனியாக ஒப்பிட்டவர்கள் இப்பருவத்தில் கருத்து நிலையில் சிந்தித்து தடிகளை அவதானித்து அளந்து பார்க்காமலேய நிரற்படுபத்துவர். பிள்ளைகள் இவ்வாறு எதிர்பார் திரளமைப்பை பெற்றுள்ளதாகவும் இதனைக் கொண்டே  ஆய்வுகளை செய்ததாகவும் பியாஜே குறிப்பிடுகின்றார். மேலும் இப்பருவத்தினர் முறையான கல்வியைப் பெறுவதனால் வகுப்பறை அனுபவங்கள் மூலம் தவறான எண்ணக்கருக்களை திருத்தமாக அமைக்கவும் கூட்டுறவுத்தன்மைகளை வளர்க்கவும் வாய்ப்புக்கள் உள்ளது. தூல சிந்தனைப்பருவப் பிள்ளைகள் உண்மை உலகப்பொருட்களை நிகழ்ச்சிகளை அல்லது புலக்காட்சி தொடர்பானவற்றை தன்னமைவாக்கிக் கொள்வர். இங்கு குறிப்பிடும் புலக்காட்சி என்பது கவனத்தின் ஊடாக ஐம்புலன்கள் அடையாளம் கண்ட யாதேனுமொன்றை உள்ளத்தினால் இனங்காணல் ஆகும். சுருக்கமாகக் கூறுவதானால் புலக்காட்சி என்பது சூழலில் பெற்ற அனுபவங்களுக்கு அர்த்தம் கற்பித்தலாகும். தன்னமைவாக்கல் என்பது தெரியாதவற்றை தெரிந்துள்ளவற்றுடன் தொடர்புபடுத்திக் கொள்வதாகும்.

இதனை பின்வரும் உதாரணங்கள் மூலம் விளக்கலாம்பெண்கள் தலை முடி நீளமாக வளர்ப்பர்என்பது சிறுபிள்ளையொன்று பெற்றிறுக்கும் விளக்கமாகும். தலை முடியை நீளமாக வளர்த்து காட்சட்டை அணிந்து செல்லும் ஆண் ஒருவரைக் காணும் பிள்ளை அவரை உடனடியாக ஆண் என நினைப்பது தன்மயமாக்கலாகும். இப்பிள்ளை ஆணைப்பார்த்தவுடன் தமது தவறான விளக்கத்தை மாற்றிக்கொள்ளும் ஆண்களும் தலைமுடியை நீளமாக வளர்ப்பர் என்பதை விளங்கிக் கொள்வது இங்கு பரிச்சயமடைதல் அதாவது தன்னமைவாக்கல் எனப்படுகிறது.

மேலும், ஒடுங்கிய பாத்திரத்திலும் அகலமான பாத்திரத்திலும் குளிர்பானம் ஊற்றப்பட்டிருக்கும் போது இப்பருவத்திற்கு முற்பட்ட பிள்ளை ஒடுங்கிய பாத்திரமே குளிர்பானம் கூடியது என முடிவெடுக்கும் ஆனால் இப்பருவத்தில் உள்ள பிள்ளை பாத்திரம் ஒடுங்கியிருப்பதனால் குளிர்பான மட்டம் உயர்ந்திருக்கிறது எனவும் மற்றய பாத்திரம் அகலாமாக இருப்பதனால் குளிர்பான மட்டம் தாழ்ந்திருக்கிறது எனவும் தனது சிந்தனையை தன்னமைவாக்கிக் கொள்கிறது.

பிள்ளையின் சிந்தனை செயற்படுவதற்கு அதன் கற்பனை மனதில் நிலை பெறாததாகவும் வேறுபடுத்தப்படாததாகவும் இருத்தல் வேண்டும். ஆனால் மிகவும் பொதுவானதாகவும் பல உருவங்களாக மாற்றக்கூடியதாகவும் அதே சமயத்தில் அவற்றின் சிறப்பியல்புகளை மாற்றாமலும் இருத்தல் வேண்டும். எனவே செயற்பாடுகளின் சிறப்பியல்புகளை விளக்க, ஒரே சமயத்தில் பல பண்புகளைப்பற்றி சிந்தித்தல், விரிவாக்கல், பொதுமைப்படுத்தல் பின்திரும்பல், மாறாதிருத்தல் என்ற ஐந்து செயற்பாடுகளின் உபயோகம் மிகவும் முக்கியமானதாகின்றது. பிள்ளை பயன்தரும் விதத்தில் சிந்திப்பதற்கு இச்சகல செயற்பாடுகளையும் தன் மனதிலையே செய்யக்கூடியதாக இருத்தல் வேண்டும்.

மேற்கூறிய செயற்பாடுகள் ஆரம்ப வகுப்புக்களான தரம் 3, 4, 5 ஆகியவற்றின் வகுப்பறை செயற்பாட்டில் பெறும் முக்கியத்துவத்தை கீழே விரிவாக நோக்குவோம்.

தரம் 3, 4 பிள்ளைகளுக்குத் திட்டமிடப்பட்ட விளையாட்டுக்கள், செயற்பாடுகள், அமர்ந்த நிலை வேலை எனும் மூவித முறைகளுள் திட்டமிடப்பட்ட விளையாட்டுக்கள் மற்றும் செயற்பாடுகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் விதத்தில் கற்றல் செயற்பாடுகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. மாணவரது சிந்தனையைக் கவரத்தக்கவாறு பொருள்களை பயன்படுத்துவதன் மூலம் பாடங்களில் விருப்பையும் ஆர்வத்தையும் பிள்ளைகளிடத்தே உருவாக்குவது ஆசிரியரின் பொறுப்பாகும். பிள்ளைகளுக்கு முன்வைக்கப்படும் விளையாட்டுக்கள் செயற்பாடுகள் அவர்களின் சிந்தனைசக்தியையும் ஆற்றலையும் அறிவையும் விருத்தி செய்யக்கூடியனவாக இருக்க வேண்டும்

தரம் 4 சுற்றாடல் பாடத்தில், “மரத்தின் பகுதிகள், எம்மைச் சூழவுள்ள பிராணிகள், வேலையை இலகுவாக்கும் கருவிகள்போன்றன பற்றிய விளக்கம் பிள்ளைகளுக்கு வழங்கப்படுகிறது. இங்கு ஒரே சமயத்தில் பல பண்புகளைப் பற்றி சிந்தித்தல் இங்கு தெளிவாகின்றது. உதாரணமாக மரத்தின் பகுதிகளைப் பற்றி பிள்ளை கற்கும்போது மரத்தின் எல்லாப்பகுதிகளின் பண்புகளைப்பற்றியும் கற்றுக் கொள்கிறது எனலாம்.

இப்பருவத்தில் காலம், இடவெளி, கனவளவு, எண்ணிக்கை, ஒழுக்க விதிகள் ஆகியவற்றின் எண்ணக்கருக்கள் தர்க்க சிந்தனை முறையில் விருத்தியடையும். மேலும் பொருட்களின் புற்தோற்றம், நீளம், பரப்பு, கோணம் ஆகிய எண்ணக்கருக்கள் ஆரம்ப நிலையிலும், ஒத்த பண்புகளை அவதானிக்கும் திறனையும் கொண்டவர்களாகவே இவர்கள் காணப்படுவர். அந்த வகையில் பொருள்களை எண்ணுதல், எண்கோலங்களை கட்டியெழுப்புதல், எண்களை கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல், நிறையை அளத்தல், கனவளவு, கொள்ளளவு, காலம், திசைகள், பின்னங்கள், சமச்சீர் போன்றவை கணிதப்பாடத்தில் கற்பிக்கப்படுகிறது. இவற்றுக்கு மேலதிகமாக உரோமன் எண்குறி, லீற்றர், மில்லி லீற்;றர் போன்றவை தரம் நான்கு கணித பாடத்தில் கற்பிக்கபபடுகிறது.

தரம் ஐந்துக்குரிய கற்றல் கற்பித்தல் முறைகளாக விளையாட்டுக்கள், வினோத செயற்பாடுகள், எழுத்து வேலைகள் என்பனவுள்ளன. இவ்வகுப்பு மாணவர்களுக்கு கிரகிக்கும் திறன், பேச்சுத்திறன், எழுதும் திறன் போன்றவற்றை அதிகரிக்க பல்வேறு செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகிறது. உதாரணமாக கிரகிக்கும் திறனை ஏற்படுத்த சிறிய கதை, உரைப்பகுதி, பாடல் என்பவற்றை கூறி அதற்கு பொருத்தமான தலைப்பினை இடுமாறு கூறுதல் அல்லது அதன் சாரம்சத்தை எழுதுமாறு கூறுதல் இங்கு பொதுமைப்படுத்தும் செயற்பாடு இடம்பெறுகிறது. அவ்வாறே, தரம் மூன்று மாணவர்களுக்கு பிராணிகள் எனும் பகுதியின் ஊடாக பறவைகள், விலங்குகள் என்று பொதுமைப்படுத்திக் கூறும் செயற்பாடு ஏற்படுத்தப்படுகிறது.

மேலும், ஒரு பொருள் பற்றி வாக்கியங்கள் எழுதுதல், படம் பார்த்து விளக்கம் கூறுதல், கதையின் ஆரம்பத்தைக்கூறி முடிவினை மாணவர்கள் முடித்தல் போன்றன விரிவாக்கல் செயற்பாட்டுக்கு உதாரணமாக குறிப்பிடலாம். மாணவர்களின் மொழி வளர்ச்சிக்காக காலைக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள், சிறுவர் சந்தை, கண்காட்சி, சமய கலாசார நிகழ்வு, வகுப்பறைக்கூட்டம் போன்றன ஆசிரியர்களால் மேற்கொள்ளப்படுகின்றது.

மாணவர்களுக்காக திட்டமிடும் வேளைகளில் அவதானிப்பு, களப்பிரயாணங்கள், கையாண்டுபார்த்தல்கள், குறகிய கால செயற்திட்டங்கள், சேகரித்தல்கள், வகிபாகமேற்று நடித்துக்காட்டல்கள் போன்ற பல்வேறு கற்றல் முறைகளும், நூல்கள் போன்ற அச்சுஊடகங்கள், வானொலி, தொலைக்காட்சி, இணையம் போன்ற ஊடகங்கள் ஊடாக தகவல்களைப் பெறல் போன்றவற்றின் ஊடாக ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தல் முறைகளை மேற்கொள்கின்றனர். உதாரணமாக தரம் நான்கு மாணவர்களுக்கு எம்மைச்சூழவுள்ள பிராணிகள் எனும் பகுதி சுற்றாடல் பாடத்தில் கற்பிக்கப்படுகிறது. இதன் போது பறவைகள், விலங்குகள் என்பவற்றின் படங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு அவற்றின் இயல்புகள், புறப்பண்புகள் என்பன இனங்காணச் செய்யப்படுகிறது. இங்கு அவதானிப்பின் மூலமே மாணவர்கள் அவை பற்றிய விளக்கத்தை பெற்றுக்கொள்கின்றனர்.

தரம் 3, 4, 5 மாணவர்களுக்கு கையாண்டு பார்த்தல் மூலமும் கற்பித்தல் இடம்பெறுகிறது. உதாரணமாக வட்டம், சதுரம், முக்கோணம், செவ்வகம், போன்ற இருபரிமானங்களும் சதுரமுகி, கனவுரு, உருளை போன்ற முப்பரிமாணங்களும் உபகரணங்களாக மாணவர்களுக்கு கையளிக்கப்படுகிறது. இதன் போது மாணவர்கள் தொட்டு உணர்ந்து இவ்வடிவம் பற்றி அறிந்து கொள்வர். இங்கு கையாண்டுபார்த்தல் மூலம் கற்கிறது எனலாம். மேலும் டீம்ஸ் தொகுதியின் கோள்களினதும் குறிகளினதும் உதவியுடன் பெருக்கல், பிரித்தல் போன்றவை கற்பிக்கப்படுகிறது. இதனையும் கையாண்டு பார்த்து கற்கும் முறைக்கு உதாரணமாக குறிப்பிடலாம்.

நவீன கற்பித்தல் முறைகளில் குழுமுறைக்கற்பித்தல் மிகுந்த பயன்மிக்க முறையாகவுள்ளது. தற்போது ஆரம்ப பிரிவுகளில் மாத்திரமன்றி  உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வியிலும் கூட இம்முறைக் கற்பித்தல் மிகுந்த வினைத்திறனுடையதாக காணப்படுகிறது. மனிதனுள் இயற்கையாகவே அமைந்திருக்கும் குழுவாக செயற்படும் உளவியல் விருப்பினை அடிப்படையாகக் கொண்ட கற்றல் - கற்பித்தல் முறையாக இது உள்ளது. மாணவர்கள் தனித்தனியாக கற்பதிலும் பார்க்க குழுவாகக்கற்பதில் அதிக பயன் கிடைக்கின்றது என பல ஆய்வுகள் இயம்புகின்றன.

ஒரு குழுவில் ஆறு அல்லது எட்டிற்கு மேற்படாத இடம் பெறல் நன்று. ஒற்றுமை, குழுவுணர்வு, கூட்டுறவு முரண்பாட்டுத்தீர்வு, இலக்கை நோக்கும் திறன் ஆகிய திறன்கள், ஐம்புலன்களுக்கு சிறந்த பயிற்சி கிடைத்தல், கடினமான பாட எண்ணக்கருக்களை மகிழ்ச்சியோடு எளிய முறையில் அறிந்து கொள்ளல் போன்ற நன்மைகளை மாணவர்கள் பெற்றுக்கொள்கின்றனர். தரம் 3,4,5 வகுப்புக்களில் குழுமுறையான போட்டி விளையாட்டுக்கள், விநோத விளையாட்டுக்கள், வழிப்படுத்திய விளையாட்டுக்கள் செயற்பாடுகள், எழுத்து வேலைகள் கூட குழுமுறையாக வினைத்திறனுடன் கற்கும் வழிமுறைகளை காட்டி நிற்கின்றன. முக்கியமாக புதிய கல்விச்சீர்திருத்தத்தில் விளையாட்டு முறை (Pடயல றுயல ஆநவாழன) கற்றல் தேர்ச்சிகளை அடைய வினைத்திறனான முறையாகவுள்ளது வினவுதல் முறையானது, “ஆர்வத்தைத் தூண்ட, கவனத்தை ஈர்க்க ஞாபகப்படுத்த, சோம்பலான பிள்ளையை உற்சாகப்படுத்த, மாணவனது நுண் அறிவைப் பெறஉதவுகின்றது.

அவ்வாறே நுண்ணலகுக்கற்பித்தல் முறையானது முக்கியமானது. மிகக் குறகிய நேர கற்பித்தல் முறையே நுண்ணலகு கற்பித்தல் முறையாகும். ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு சகல பாடங்களினதும் பாட அலகொன்றானது சிறு அலகாக்கி அதாவது பாடத்தேர்ச்சிகளை சிறு தேர்ச்சிகளாக்கியே கற்பிக்கப்படுகிறது.

வெளிக்கள கற்பித்தல் முறையானது குறித்த ஒரு களத்திற்கு அல்லது பிரதேசத்திற்கு சென்று அங்கு அவதானித்தல், அனுபவம் பெறல், செய்து பார்த்தல் என்பவற்றின் மூலம் மாணவர்களை கற்க வழிகாட்டும் முறையாகவுள்ளது. மேலும் மாணவர்கள் விரும்பும் முறையாகவும் உள்ளது. உதாரணமாக தரம் 3,4,5 மாணவர்களை வெளிப்பாடசாலை, கடற்கரை, பூங்கா போன்ற பிரதேசங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவதை குறிப்பிடலாம்.

ஆரம்ப பிரிவு மாணவர்களிடையே செய்து காட்டல் முறையானது பல்பரிமாணத்திறன்களை பெற சிறந்த கற்பித்தல் முறையாகவுள்ளது. உதாரணமாக களி, அட்டை, கடதாசி என்பவற்றின் ஊடாக உருவங்களை செய்து காட்டல் அதாவது பட்டம் கட்டுதல், கப்பல் செய்து காட்டுதல் என்பவற்றை கூறலாம். மேலும் நாடக கற்பித்தல் முறையிலும் கற்பித்தல் இடம்பெறுகிறது. அதாவது ஆடல், பாடல், நடித்தல் போன்றவற்றின் ஊடாக கற்பித்தலாகும

இவ்வாறு மேற்குறிப்பிட்ட கற்பித்தல் முறைகளில் பியாஜேயின் தூல சிந்தனைப்பருவ செயற்பாடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன எனலாம். தற்காலத்தில் Multimedia Projector மூலம் கற்பித்தல்கள் இடம்பெறுகிறது. இவ்வாறு பியாஜேயின் செயற்பாடுகள் தகவல் தொழிநுற்பத்தின் ஊடாக கற்பிக்கப்படுகிறது. இதன் காரணமாகவே கல்வியல் கல்லூரிகளில் தகவல் தொழிநுட்ப பாடம் கற்பிக்கப்படுகிறது.

தரம் 3, 4, 5 மாணவர்களுக்கு ஞாபகவிருத்தியை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்தவகையில் குறிப்பிட்ட விடயத்தை கதைகளாக அல்லது பாடலாக வடிவமைத்து பாடமாக்கச் செய்தல். ஆசிரியர் வகுப்பு மாணவர்களின் கவனத்தை பாடத்தின் மீது கொண்டு வருவதற்கு கதை, பாடல் என்பவற்றை கூறுகின்றனர். இவ்வாறு ஆசிரியர்கள் மாணவர்களின் திறன்களையும் மனவெழுச்சிகளையும் விருத்தி செய்ய பல்வேறு முறைகளை பயன்படுத்துகின்றனர்.

எனவே, மேற்கூறியவாறு பியாஜேயின் தூல சிந்தனை விருத்தி பற்றிய செயற்பாடுகள் ஆரம்ப வகுப்புக்களான 3, 4, 5 ஆகியவற்றின் வகுப்பறை செயற்பாடுகளில் முக்கியத்துவம் பெறுகின்றன எனலாம். இவ்வாறு இவரது செயற்பாடுகள் முக்கியத்துவம் பெறுகின்ற போதும் ஆசிரியர்கள் கற்பிக்கும் முறையை சரியாக செய்ய வேண்டும். மேலும் ஆசிரியர்கள் எவ்வளவுதான் அறிவாளியாக இருந்தாலும் தான் கற்பிக்கும் விடயத்தை கவனமெடுத்து ஆயத்தம் செய்ய வேண்டும். அவ்வாறே இவர்கள் பியாஜேயின் அறிவு விருத்திக்கட்டங்கள் பற்றிய அறிவினையும் பெற்றிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.  

-RASIMA, BF (BA-R)

EASTERN UNIVERSITY, SRI LANKA.

Comments

Popular posts from this blog

'வினைத்திறனான கற்றல் கற்பித்தல் செயற்பாடானது மூவழித்தொடர்பாடல் நிகழ்ச்சியினூடாக நடைபெறுவதன் மூலம் ஆசிரியர் - மாணவர் இடைத்தாக்கம் சிறப்பாக அமையும். இக்கூற்றின் அடிப்படையில் உமது கருத்துக்களை முன்வைத்து விளக்குக.

Case Study Analysis Of MAS Holdings

கலைத்திட்ட மேம்பாட்டினை இன்றைய தேவையை முக்கியப்படுத்தி உமது கருத்துக்களை விளக்குக.