உடலியக்கத் திறன்களின் வளர்ச்சியானது கற்றல், முதிர்ச்சியின் அடிப்படையிலே அமைகின்றன இதனை தெறிவினை யெற்பாடுகளைக் கொண்டு விளக்குதல்.

 சகல உடலியக்க திறன்களின் வளர்ச்சியும் கற்றல், முதிர்ச்சி போன்ற அமைப்புக்கள் தொழிற்பாட்டு ரீதியாக ஒன்றிணைவதன் மூலமே இயைவுபடுத்தப்படுகின்றன. பல்வேறு தெறிவினை செயற்பாட்டை அடிப்படையாகக் கொண்டு உமது கருத்துக்களை விளக்குக.

உடலியக்க திறன்களின் வளர்ச்சியானது கற்றல், முதிர்ச்சி போன்ற அமைப்புக்கள் தொழிற்பாட்டு ரீதியாக ஒன்றிணைவதன் மூலமே இயைவுபடுத்தப்படுகின்றன. இந்த வகையில் கற்றல், முதிர்ச்சி பற்றி விரிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

பரம்பரை அலகுகளால் தீர்மானிக்கப்பட்டு இயற்கையாகவும் இயல்பாகவும் நிகழும் மாற்றமே முதிர்ச்சி என வரைவிலக்கணப்படுத்தலாம். எனவே முதிர்ச்சி என்பது உள்வாரியாக நிகழும் அது வயதிற்கு ஏற்ப நிகழும். முதிர்ச்சியின் போது குறித்த வளர்ச்சி ஒழுங்கின் படி உடலில் ஒழுங்கான வளர்ச்சி நிகழும். உள்ளுறுப்புக்கள் சார்ந்த காரணிகள் காரணமாகவும் போசாக்கு சுகாதார நிலை போன்ற அம்சங்கள் காரணமாகவும் ஏற்படத்தக்க சூழலின் பாதகமான செல்வாக்குகள் காரணமாக முதிர்ச்சி பாதிக்கப்படலாம். முதிர்ச்சியானது உடல் மற்றும் உளரீதியில் நிகழ்வதாகும். சிறு பிள்ளையின் இயக்கச் செயற்பாடுகளில் உடல் முதிர்ச்சி செல்வாக்குச் செலுத்தும் விதம் பியாஜேயின் அறிவாற்றல் விருத்தி கொள்கை மூலம் எடுத்துக்காட்டப்படுகிறது.

குறித்த முதிர்ச்சி நிலையை அடையும் வரையில் சில செயற்பாடுகளில் ஒருவரால் ஈடுபடமுடியாது. குறித்த முதிர்ச்சியுடன் ஒருவரிடத்தே யாதேனுமொன்றை செய்வதற்கு தேவையான உடல், உள, ஆயத்த நிலை உருவாகும். குறிப்பாக முதிர்ச்சியானது கற்றலுக்கு அவசியமாகும் எனினும் முதிர்ச்சியானது கற்றலினால் ஏற்படுவதில்லை. மேலும் முதிர்ச்சியானது கட்டாயமாக நிகழ்வதொன்றாகும். எனினும் கற்றல் அவ்வாறானதல்ல. ஒவ்வொரு குழந்தையும் சமமான முதிர்ச்சிக்கட்ட ஒழுங்கு முறைப்படி வளர்ச்சியடையும் எனினும் ஒவ்வொரு குழந்தையும் சமமான கற்றல் அனுபவங்களை பெறுவதில்லை.

கற்றல் என்பது யாதேனும் அனுபவம் காரணமாக நடத்தையில் சார்பளவில் ஏற்படும் நிரந்தரமான மாற்றமாகும். கற்றலானது முதிர்ச்சியுடன் நெருங்கிய தொடர்புடையது. உடலின் அமைப்பிலும் தொழிற்பாட்டிழும் ஒழுங்கு முறையான மாற்றங்களை ஏற்படுத்தியவாறு புதிய அமைப்புக்கள் வளர்ச்சியடைதலே முதிர்ச்சி எனப்படுகிறது. முதிர்ச்சி காரணமாக ஒருவர்  தொழிற்படும் செயற்படும் கோலத்தில் மாற்றம் ஏற்படும். இச்செயற்பாடுகளின் முதலான நிலைமைகள் ஏற்படுவதற்கு கற்றல் தேவையில்லை. எனவே முதிர்ச்சியானது கற்றலில் தங்கியிருப்பதில்லை. எனினும் முதிர்ச்சியுடன் கூடவே கற்கும் திறன் உருவாகும் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

மேற்கூறியவாறு கற்றல், முதிர்ச்சி தொடர்பாக விளக்கமாக கூறமுடியும். இத்தகைய செயற்பாடுகள் தொழிற்பாட்டு ரீதியாக ஒன்றிணைவதன் மூலமே உடலியக்க திறன்கள் வளர்ச்சியடைகிறது. இதனை பல்வேறு தெறிவினை செயற்பாடுகளுடன் விளக்கலாம். இதற்கு முதலில் தெறிவினை தொடர்பாக விரிவான விளக்கத்தை நோக்குவோம்.

தெறிவினை என்பது சிறப்பான தூண்டிகளுக்காக காட்டப்படும் தன்னிச்சையான அதாவது இச்சையின்றிய உடற் செயற்பாடாகும். இதனை விரிவாகக் கூறுவதாயின்எளிய தூண்டலிற்கு சார்பளவில் மாறாததும் உடனடியானதுமான இச்சையின்றிய தூண்டற்பேறு ஆகும்”. குழந்தை பிறக்கும் போதே பல தெரிவனைகளுடன் கூடியதாகவே பிறக்கின்றது. குறிப்பாக தூண்டிகளுக்குரிய உடற்துலங்கல் தானாகவே  இக்காலத்ததில் நிகழும். முழங்கால் ஆட்டம், கண் இமைத்தல் என்பவற்யை இச்செயற்பாட்டிற்கு உதாரணங்களாகும். குழந்தையின் தெறிவினைகள் அதிக காலம் காணப்படாத போதிலும் அதன் இருப்புக்கு அத்தியவசியமானவையாகும்.

இக்காலப்பகுதியில் கண்களால் காண்பவற்றை மாத்திரம் நினைவில் வைத்திருப்பர். 4 மாதம் தொடக்கம் நினைவாற்றல் வளர்ச்சியடையும். ஏறத்தாழ 6 மாதம் ஆகும் போது தான் பொருளைக்காணாத போதிலும் அது காணப்படுகின்றமை தொடர்பாக ஞாபகமும் விளக்கமும் குழந்தைகளிடத்தே விருத்தியடையும். இத்தன்மையை பியாஜே நிரந்தர உணர்வு எனக்குறிப்படுகிறார். ஒளித்து வைத்த பொருள்களை குழந்தை தேடத்தொடங்கும் பொருள்களின் நிரந்தர தன்மை பற்றிய உணர்வு பிள்ளையிடத்தே விருத்தியடைவதே இதற்கான காரணமாகும். இவை காரணமாக பிள்ளையிடத்தே மனப்பாடம் தோன்றும்இதனை பியாஜே ஸ்கீமா உருவாக்கம் எனக்குறிப்பிடுகின்றார்.

இவ்வாறு குழந்தைகள் பிறந்தது முதல் கட்டிளமைப்பருவம் வரைஉடலியக்க வளர்ச்சி, இயக்கத்திறன்களின் வளர்ச்சி, புலனுணர்ச்சிகளின் வளர்ச்சி, சமூக மனவெழுச்சி வளர்ச்சி, மொழி வளர்ச்சி, ஆரம்ப அறிவு வளர்ச்சி, சிந்தனை வளர்ச்சி போன்ற சகல உடலியக்க திறன்களின் வளர்ச்சியானது கற்றல், முதிர்ச்சி போன்ற அமைப்புக்கள் ஒன்றிணைவதன் ஊடாகவே இடம் பெறுகிறது. இந்த வகையில் அத்திறன்களின் வளர்ச்சியினை தெறிவினை செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு விரிவாக நோக்குவோம்.

குழந்தை பிறந்தது முதல் அதன் உடலியக்கமானது வளர்ச்சியடைந்த வண்ணமே உள்ளது. முதல் 2 வருடத்திலும் விரைவான உயரத்தையும் நிறையையும் பெற்றுக் கொள்ளும் குழந்தையானது 5 வது மாதத்தில் நிறையில் இரு மடங்காகவும் 12 வது மாதத்தில் 3 மடங்காகவும் விருத்தியுறும். இதே வேளை முதல் வயதில் 10 - 12 அங்குல உயரத்தையும் 2 வயது முடிவில் தமது பின்னைய வளர்ச்சியில் அரைப்பங்கு உயரத்தையும் பெறும். இவ்வாறு கட்டிளமைப்பருவம் வரை வளர்ச்சியும் கற்றலும் மிக விரைவாக இருக்கும். குழந்தையின் உருவத்தில் மாற்றம் நிகழும் போதே உடலின் பகுதிகளில் விகிதாசார மாற்றங்கள் ஏற்படுகின்றன.

உடல் விருத்தியில் ஏற்படும் மற்றொரு மாற்றம் தசைகள், கொழுப்பு, ஓமோன்கள் ஆகியவற்றில் ஏற்படுகின்றன. சுகல தசை நார்களையும் குழந்தை ஆரம்பத்திலே பெற்றுவிடும். இவ்வாறு தசை இழையங்களின் அதிகரிப்பினால் தசை நார்கள் நீளத்திலும் தடிப்பிலும், வடிவிலும் மாற்றம் பெறுகின்றன. இத்தகைய வளர்ச்சி கட்டிளமைப்பருவம் வரை இடம் பெறுவதனால் உடலியக்கத்திறன் வளர்ச்சியானது சிறப்பாக இடம் பெறுகிறது. இதற்கு உதாரணமாக பவன்ஸ்கி தெரிவினையை குறிப்பிடலாம். அதாவது குழந்தையின் உள்ளங்கால்களை தடவும்போது விரல்களை வெளிப்புறமாக விரித்து பின் விரல்களை வளைத்துக் கொள்கிறது. இங்கு குழந்தையானது குறிப்பிட்ட முதிர்ச்சியை பெற்றிருந்தால் மாத்திரமே குறிப்பிட்ட உடலியக்க வளர்ச்சியானது இடம் பெறுகிறது எனலாம். அதாவது கால்களை தொடுவது தூண்டியாகும் அதற்குறிய துலங்களாக குழந்தை கால்களை வெளிப்புறமாக விரித்து பின் விரல்களை வளைத்துக் கொள்கிறது எனலாம்.

பிள்ளைப்பருவத்தில் உடலியக்க வளர்ச்சியானது பூப்பெய்தும் காலம் வரை வேகமாக அதிகரிக்கும். இப்பருவத்தில் நரம்புடன் தொடர்பான அமைப்பு, பொதுத்தொகுதிகளின் அமைப்பு, புறப்பாலுறுப்பு அமைப்பு ஆகியன நிணநீர் சார்ந்த அமைப்பிலும் பார்க்க மெதுவாகவே வளர்ச்சியடைகின்றன.

குழந்தையானது பிறக்கும் போதே சகல சூழத்தாக்கத்திலிருந்தும் பாதுகாக்கும்  மாற்றங்களைக் கொண்டே பிறக்கின்றது. அதாவது குழநதை பிறக்கும் சூழலானது எந்தளவு வெப்பநிலை கூடுதலாகவோ குறைவாகவோ இருந்தாலும் பிறந்ததும் அதற்கு ஏற்றவாறு மாற்றத்தை பேணுகிறது. இவ்வாறான ஆரம்ப நிலை சீராக்கத்தின் பின் அதன் வளர்ச்சியானது துரிதமடையும். இயக்கத்pறன்களின் வளர்ச்சி என்பதானது உளவியலாளர்களால் பிள்ளையின் அசைவுகளிலும் நடவடிக்கைகளிலும் ஏற்படும் சிக்கலான மாற்றங்களை விபரிக்க பயன்படுகிறது.

இயக்கத்திறன் எனும் போது இரண்டு வகையாக நோக்கலாம். அந்தவகையில், மொத்த இயக்கத்திறன், நேர்த்தியான இயக்கத்திறன் என்பனவாகும். இவற்றில் குழந்தையானது உட்கார்வது தவழ்வது ஓடுவது என்பவற்றை மொத்த இயக்கத்திறனுக்கும்  கைளைக்கொண்டு  வரைவது சாப்பிடுவது போன்றன நேர்த்தியான இயக்கத்திறனுக்கும் உதாரணமாக குறிப்பிடலாம் தன்னிச்சையான அதாவது இயல்பான அடிப்படை திறன்களிடையே காணப்படும் ஒன்றிணைதலும் இயைபாக்கம் காரணமாக படிப்படியாக ஏற்படும் சிக்கலான திறன்களுடன் வளர்ச்சியின் தொடர்ச்சியான நிகழ்வு இணைந்து செல்லும்போது இவ்வாறான பிரச்சினைக்குரிய பருவங்கள் ஏற்படுகின்றன.

குறிப்பான திறன்களில் குழந்தை மேலும் தேர்ச்சி பெறும். இவை பிள்ளையானது உடல் ரீதியாக, நுண்ணறிவு ரீதியாக, புலக்காட்சி ரீதியாக தொழிற்படுவதற்கு போதிய முதிர்ச்சியடையும் போது ஏற்படுகின்றன. குறிப்பாக 4 மாதத்தில் குழந்தையானது பின் புறமாக திரும்பி பார்த்தல், கவிழும்போது தலையை உயர்த்துதல், பொருளை எடுக்க முயலுதல், பொருட்களை வாயின் அருகில் கொண்டு செல்லுதல் போன்றவற்றை மேற்கொள்ளும். மேலும் அந்நிய முகங்களை அறிந்து கொள்ளக்கூடிய திறனை குழந்தை கொண்டிருக்கும். இங்கு குழந்தையானது புலக்காட்சி ஊடாக பார்க்கும் முதிர்ச்சியைப் பெற்று கற்றுக் கொள்கிறது எனலாம்.

பிள்ளைப்பருவத்தில் உள்ள பிள்ளையானது பாடச்செயற்பாடுகளுடன் விளையாட்டுக்கள் ஏற்கனவே பிள்ளை பெற்றுள்ள சேர்த்தல், தொடர்புபடுத்தல், ஒன்று சேர்த்தல் போன்ற பல்வேறு இயக்கத்திறன்களையும் கற்றுக்கொள்கிறது. உயர்மட்ட உடலியக்கத்திறன்களைக் கொண்ட குழு விளையாட்டுக்கள் இப்பிள்ளைகளின் முக்கிய தேவையாக இருக்கின்றன. இங்கு எழுத்து, வாசிப்பு, சங்கீதம், கலைகள் என்பவற்றின் முன்னேற்றத்திற்கு இயக்கத்திறன் முக்கியமான வழிவகுக்கிறது.

மேற்கூறப்பட்டது போன்ற குழந்தைகளின் இயக்கத்திறன் வளர்ச்சி செயற்பாடுகள் மற்றவர்களால் கட்டுப்படுத்தப்படும் போது குழந்தையின் குறிப்பிட்ட திறன்களை பெறமுடியாது போகின்றது. அதாவது குழந்தை தவழ வேண்டிய நேரத்தில் தவழ்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்காத போது குழந்தை முதிர்ச்சியை பெற்றிருந்த போதும் குறிப்பிட்ட திறனைக்கற்றுக் கொள்வதற்கு சந்தர்ப்பம் இல்லாமல் போகிறது.   

குழந்தையானது பார்த்தல், கேட்டல், நுகர்தல், உணர்தல் போன்ற புலனுணர்ச்சி திறனுடனையே பிறக்கின்றது. ஆய்வுகள் பல கருவிலுள்ள முதிர்மூலவுருவினாலேயே கேட்கவும் உணரவும் முடியும் எனக்குறிப்பிட்டிருப்பது நோக்கத்தக்கது. பிறந்த குழந்தை 8 அங்குல தூரத்திலுள்ள பொருட்கள் மீது குறிப்பான பார்வையை செலுத்தும் இரண்டு மாத அளவில் பார்வை கூர்மை அதிகரிப்பதுடன் அப்பொருள் என்னவென அறிவதிலும் வலிமை பெறும் இது குழந்தையின் இனங்காணும் திறனின் ஆரம்பமாகும். இவ்வாறு கட்புலரீதியாக பெற்றுக்கொள்வது புலக்காட்சி எனப்படும். 6 மாதக்குழந்தையானது ஆழம் பற்றிய அறிவை பெற்றிருக்கும். இவ்வாறு கட்புல விருத்தியில் ஒரு பொருளை அறியும் திறன் பொருள் நிலைப்பு விருத்தியாகும். கேட்டல் கூர்மையாக இருக்கும் 8 - 12 மாதத்திற்குள் உள்ள குழந்தை முதல் வார்த்தை பேசுதல், ஒலிகளைக் கொண்டு மற்றவர்களை அறிதல்,         தன் பெயரை அழைத்தால் திரும்புதல் என்பவற்றை மேற்கொள்ளும். இங்கு பெயரை அழைத்தல் தூண்டியாகும் அதற்குரிய துலங்கலாக குழந்தை திரும்புவதை குறிப்பிடலாம். இவ்வாறு அனைத்து புலன்களின் ஊடாகவும் தூண்டிக்குரிய துலங்கள் வெளிப்படுத்தப்படுகிறது எனலாம்.

குழந்தையின் சமூக மனவெழுச்சி வளர்ச்சிகள் அனேகமாக முதிர்ச்சியிலும் சூழலிழுமே தங்கியுள்ளது. குழந்தை தனது பெற்றோர் குடும்பத்தவருடன் கலந்து உறவாடுவதன் மூலம் வளர்த்துக் கொள்ளும் மனவெழுச்சிப் பண்புகளே சமூக மனவெழுச்சி பண்புகளாக குழந்தை கற்றுக் கொள்கிறது. குழந்தைகள் அடம்பிடிக்கும் மனவெழுச்சி வெளிப்பாடுகளைக்காட்டும். எனினும் இவை நீண்ட நேரம் நிலைப்பதில்லை. குழந்தை வளரும்போதே கோபம், மகிழ்ச்சி, பயம்என்பன விருத்தியடைகின்றன. குழந்தைகள் பெற்றோர்கள் இடைத்தாக்கம் புரியும் போதே இவ்மனவெழுச்சிகளைக் கற்றுக் கொள்கின்றனர்.

பிள்ளைப்பருவத்தில் பிள்ளையானது தான் ஆணோ பெண்ணோ என்ற உணர்வினை பெறுகின்றது. மேலும் இப்பருவதிதில் சகபாடிகளுடன் இணைந்து வகுப்பறையிலும் வெளியிலும் இடைத்தாக்கம் புரிந்து பல்வேறு மனவெழுச்சிகளை கற்றுக் கொள்கின்றான். குழந்தை பருவத்திற்கும் பிள்ளைப் பருவத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் உண்டாகும் முதிர்ச்சிக்குரிய மாற்றங்களே மனவெழுச்சி நடத்தைகளை உருவாக்குகின்றன. மனவெழுச்சி விருத்தி எனும் போது ஏதாவது தூண்டல் காரணமாக ஏற்படும் உணர்வே மனவெழுச்சியின் ஆரம்ப நிலையாகும். புலொமின் என்பவர் மனவெழுச்சியை விஞ்ஞான ரீதயாக ஆய்வு செய்து தூண்டல் காரணமாக அங்கியில் 2 விதமான மாற்றங்கள் ஏற்படுகின்றன என்றார். அவை, உடல் மாற்றம் - அகரீதயான மாற்றம், உளவியல் மாற்றம் - அறிவு சார்ந்த எதிர்தாக்கம் என்பனவாகும்.

ஒருவருக்கு கோபம் வரும் போது கட்டுப்படுத்துவாராயின் சமூக விழுமியங்களுக்காகவே கட்டுப்படுத்துகின்றார். எனவேதான் மனவெழுச்சியானது உடல் மாற்றம் உளவியல் மாற்றம்,சமூகம்  ஆகிய மூன்று சிறப்பியல்புகளுடன் கூடியதாகவுள்ளது. மேலும் கட்டிளமைப்பருவத்தில் மனவெழுச்சி முதிர்ச்சியை காணலாம். பிள்ளை பிறர் எண்ணங்களை கருத்தில் கொண்டும் அவர்கள் கருத்தை விளங்கியும் ஓர் உயர் நிலையான மனவெழுச்சி தொழிற்பாட்டை அடைகிறது. பிறர் உணர்வுகளை விளங்கி அவர்கள் மீது இரக்க மனப்பான்மையையும் வளர்க்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மொழி வளர்ச்சி எனும் போது  குழந்தையானது தான் கேட்கும் அடிப்படை ஒலிகளையும் அமைப்பையும் பயன்படுத்தி மொழியைக் கற்றுக் கொள்கிறது. படிப்படியாக சொற்களை உச்சரிக்கத் தொடங்கி 2 வயதின் பிற்பகுதியில் முழுமையான வாக்கியங்களை உச்சரிக்கிறது. இங்கு அவர்கள் முன் எவ்வாறு உச்சரித்துக் காட்டப்படுகிறதோ அவ்வாறே அவர்களும் உச்சரிப்பர். இங்கு மொழியை கற்றுக் கொள்வதற்குரிய முதிர்ச்சி உள்ளபோதே குறிப்பிட்ட மொழித்திறன் வளர்ச்சியடைகிறது எனலாம்.

பிள்ளைப்பருவத்தில் பொருட்களை மேலோட்டமாக கற்பதை கைவிட்டு சிந்திக்கவும் பிறரின் கருத்தை விளங்கிக் கொள்ளவும் முயலுகின்றது. மேலும் நுண்ணறிவு, ஞாபகம், நியாயம் காணல், எண்ணக்கருக்களை சிந்தித்தல் போன்ற அறிவாற்றலுக்குரிய அம்சங்கள் விருத்தியடைகிறது.

எனவே மேற்கூறியவாறு சகல உடலியக்க திறன்களின் வளர்ச்சியானது கற்றல், முதிர்ச்சி போன்ற அம்சங்கள் தொழிற்பாட்டு ரீதியாக ஒன்றிணைவதன் மூலமே இயைவுபடுத்தப்படுகின்றன உண்பதை பல்வேறு தெறிவினை செயற்பாடுகளுக்கூடாக விளக்கலாம். அதாவது குழந்தையானது தனக்குரிய முதிர்ச்சியுடன் கற்கும் போது அதன் சகல உடலியக்க திறன்களும் வளர்ச்சியடைகிறது என்பதாகும்.

-RASIMA,BF(BA-R)

EASTERN UNIVERSITY, SRI LANKA.

Comments

Popular posts from this blog

Case Study Analysis Of MAS Holdings

'வினைத்திறனான கற்றல் கற்பித்தல் செயற்பாடானது மூவழித்தொடர்பாடல் நிகழ்ச்சியினூடாக நடைபெறுவதன் மூலம் ஆசிரியர் - மாணவர் இடைத்தாக்கம் சிறப்பாக அமையும். இக்கூற்றின் அடிப்படையில் உமது கருத்துக்களை முன்வைத்து விளக்குக.

கலைத்திட்ட மேம்பாட்டினை இன்றைய தேவையை முக்கியப்படுத்தி உமது கருத்துக்களை விளக்குக.