தேசிய நல்லுறவுக்காக கல்வி

தேசிய நல்லுறவு என்பது தனிமனிதன், சமயம், இனம் குலம், கோத்திரம், கலாச்சாரம் ஆகிய பேதங்களை பாராமல் மக்கள் அனைவரும் ஒருவரோடு ஒருவர் ஒற்றுமையாக வாழ்ந்தல் ஆகும். இதனை ஏற்படுத்துவதில் இன்று கல்வி மிகப்பெரிய பங்கினை வகிக்கின்றது.தேசிய நல்லுறவுக்காக கல்வி

பூகோளமயமாதலின் காரணமாக பல கலாச்சாரத்தினை கொண்டவர்களும் ஒன்றாக வாழ வேண்டிய சூழல் இன்று ஏற்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொருவரும் ஏனையோரின் கலாச்சாரத்தினை ஏற்றுக்கொண்டு அவற்றினை முடியுமானவரை சகித்துக்கொண்டு வாழ பழகிக் கொள்ள வேண்டும். இவ்வாறு வாழ்வதற்கான மனநிலையை வழங்குவதாக கல்வி அமைகிறது. இங்கு கல்வியானது, பல்வகைமையை ஏற்றுக்கொள்ளவும் சகிக்கவும் பல்கலாசார மக்களும் பிரச்சினையின்றி வாழ்வதற்கான ஆற்றலையும் வழங்குவதாக உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

தேசிய ஒருமைப்பாட்டுக்கான ஜனநாயக ரீதியான தலைமைத்துவம் உருவாக்கப்படுவதற்கு கல்வி அவசியமானதாகும். கல்வி மூலம் இதனை ஏற்படுத்துவதற்காகவே இலங்கையில் 1992 ஆம் ஆண்டு தேசிய கல்வி ஆணைக்குழு பல்வேறு குறிக்கோள்களை உருவாக்கியிருந்தது. அந்த வகையில்,

  • மனித கௌரவத்தை கண்ணியப்படுத்துதல் எனும் எண்ணக்கருவுக்குள், தேசிய பிணைப்பு, தேசிய முழுமை, தேசிய ஒற்றுமை, தேசிய இனம், சமாதானம் என்பவற்றை மேம்படுத்தல் மூலமும் இலங்கை பன்மை சமூகத்தின் கலாச்சார வேறுபாட்டினை அங்கீகரித்தல் மூலமும் தேசத்தை கட்டியெழுப்புதலும் இலங்கையர் எனும் அடையாளத்தை ஏற்படுத்தலும்.
  • மாற்றமுறும் சவால்களுக்கு தக்கவாறு முகங்கொடுத்தலோடு தேசிய பாரம்பரியத்தின் அதி சிறந்த அம்சங்களை அங்கீகரித்தலும் பேணுதலும்.
  •  மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல், கடமைகள், கடப்பாடுகள் பற்றிய விழிப்புணர்வு ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள ஆழ்ந்த இடையறாத அக்கறை உணர்வு என்பவற்றை மேம்படுத்தும் சமூகநீதியும் ஜனநாயக வாழ்க்கைமுறை நியமங்களும் உள்ளடங்கிய சுற்றாடலை உருவாக்குதலும் ஆதரித்தாலும்.
  •  ஒருவரது உள, உடல்நலனையும் மனித விழுமியங்களுக்கு மதிப்பளிப்பதை அடிப்படையாகக் கொண்ட நிலைபேறுடைய வாழ்க்கை கோலத்தையும் மேம்படுத்தல்.
  •  நன்கு ஒன்றிணைக்கப்பட்ட சமநிலை ஆளுமைக்குரிய ஆக்க சிந்தனை,தற்றுணிவு, சிந்தித்தல், பொறுப்புக்கூறல் உடன்பாடான அம்சங்களை விருத்தி செய்தல்.
  • தனிநபர் வாதம் தேசத்தினதும் ஆறினதும் தேசத்தினதும் வாழ்க்கை தரத்தை பேணக் கூடியதும் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிக்க கூடியதுமான ஆக்க பணிகளுக்கான கல்வியும் அதன் மூலம் மனித வள அபிவிருத்தியை ஏற்படுத்தல்
  •  தனிநபர்களின் மாற்றத்திற்கு ஏற்ப இணங்கி வாழவும், மாற்றத்தை முகாமை செய்யவும், தயார் படுத்தவும் விரைவாக மாறிவரும் உலகில் சிக்கலானதும் எதிர்பாராததுமான நிலைமைகளை சமாளிக்கும் திறமைகளைை விருத்தி செய்தல்.
  •  நீதி, சமத்துவம், பரஸ்பர மரியாதை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச சமுதாயத்தில் கௌரவமானதோர் இடத்தை பெறுவதற்கு பங்களிக்க கூடிய மனப்பாங்குகள் திறன்களையும் வளர்த்தல் 

மேற்குறிப்பிட்ட குறிக்கோள்களை அடைந்து கொள்வதற்கு பின்வரும் தேர்ச்சிகள் அவசியம் என கூறப்படுகின்றது. அந்த வகையில்,


1.தொடர்பாடல் பற்றிய தேர்ச்சிகள் - இது நான்கு துணை தொகுதிகளை அடிப்படையாகக் கொண்டவை. அவை எழுத்தறிவு, எண்ணறிவு, சித்திர அறிவு, தகவல் தொழில்நுட்ப தகைமை என்பனவாகும். அவற்றை சற்று விரிவாக கீழே குறிப்பிடலாம்.

  • எழுத்தறிவு - கவனமாக செவிமடுத்தல், தெளிவாக பேசுதல், வாசித்தல், சரியாகவும் செம்மையாகவும் எழுதுதல், பயன்தரு வகையான கருத்துப் பரிமாற்றம்
  •  எண்ணறிவு - பொருள், இடம், காலம் என்பவற்றுக்கு எண்களை பயன்படுத்தல்   எண்ணுதல்,ஒழுங்குமுறை, அளத்தல்
  •  சித்திர அறிவு - கோடு, உருவம் என்பவற்றின் தன்மையை அறிதல், விபரங்கள், அறிவுறுத்தல்கள், ஆகியவற்றை கோடு, உருவம், வர்ணம் என்பவற்றால் வெளிப்படுத்துதலும் பதிவு செய்தலும்
  •  தகவல் தொழில் நுட்பத் தகைமை - கணினி அறிவு, கற்றலில், தொழில் சுற்றாடலில், சொந்த வாழ்வில் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பங்களை பயன்படுத்தல் 

2 ஆளுமை விருத்தி தொடர்பான தேர்ச்சிகள் விரிந்த சிந்தனை, தீர்மானம் எடுத்தல், பிரச்சினை விடுவித்தல், நுணுக்கமான மற்றும் பகுப்பாய்வு சிந்தனை, அணியினராக பணி செய்தல், தனியாள் இடைவினை தொடர்புகள், கண்டுபிடித்தாலும் கண்டறிதலும் முதலான திறமைகள் நேர்மை, சகிப்புத்தன்மை மனித  கௌரவத்தை கண்ணியப்படுத்தல் ஆகிய விழுமியங்கள் மன எழுச்சிகள் நுண்ணறிவு.


3 சூழல் தொடர்பான தேர்ச்சிகள் இதனோடு தொடர்புடையனவாகின்றன. சமூகம், உயிரியல், பௌதிகம் என அமையும். சமூகச் சூழல் தேசிய பாரம்பரியம் பற்றிய விழிப்புணர்வு, பன்மைச் சமூகத்தின் அங்கத்தவர்கள் என்ற வகையில் தொடர்புறும் நுண்ணுணர்வு திறன்களும் பகிர்ந்தளிக்கப்படும் நீதி, சமூகத் தொடர்புகள், தனிநபர் நடத்தைகள், பொதுவானதும் சட்டபூர்வமானதுமான சம்பிரதாயங்கள், உரிமைகள், பொறுப்புகள், கடமைகள், கடப்பாடுகள் என்பவற்றில் அக்கறை. 


4 வேலை உலகிற்கு தயார் செய்தல் தொடர்பான தேர்ச்சிகள் அவர்களை உச்சநிலைக்கு கொண்டு வருவதற்கும் அவர்களது ஆற்றலை போசிப்பதற்கு வேண்டிய தொழில் பொருளாதார விருத்திக்கு பங்களித்தல், அவர்களது தொழில் வெறுப்புகளையும் உணர்வுகளையும் கண்டறிதல், அவர்களது ஆற்றலுக்கு பொருத்தமான வேலையை தெரிவு செய்தல்.


5 சமயம் தொடர்பான தேர்ச்சிகள் அன்றாட வாழ்க்கையில் மிகப் பொருத்தமானவற்றை தெரிவு செய்யவும், நாளாந்த வாழ்க்கையில் ஒழுக்கநெறி, அறநெறி, சமய நெறி தொடர்பான நடத்தைகளை பொருத்தமுற மேற்கொள்ளவும் விழுமியங்களை தன்னை மாற்றிக்கொள்ளளும் உள்வாங்கலும்.


 6 ஓய்வு நேரத்தைப் பயன்படுத்தல் விளையாட்டு பற்றிய தேர்ச்சிகள் இங்கு இலக்கியம், விளையாட்டு, மெய்வல்லுனர் போட்டிகள், ஓய்வு நேர பொழுது போக்குகள் மற்றும் வாழ்வின் ஆக்கபூர்வ செயற்பாடுகள்


 7 கற்றல் தொடர்பான தேர்ச்சிகள் விரைவாக மாறுகின்ற சிக்கலான ஒருவரில் ஒருவர் தங்கி நிற்கின்ற உலகம் ஒன்றில் ஒருவர் சுயாதீனமாக கற்பதற்கான வழி அமைத்தலும் மாற்றியமைக்கும் செய்முறை ஊடாக மாற்றத்திற்கேற்ப இயங்கவும் அதனை முகாமை செய்யவும் வேண்டிய உணர்வையும் வெற்றியையும் பெறச் செய்தல்.


மேற்குறிப்பிட்ட தேர்ச்சிகளானது, தேசிய குறிக்கோள்களை அடைவதற்கு முக்கியமானவையாக அமைகின்றன. இவை தேசிய நல்லுறவை ஏற்படுத்துவதற்கும் முக்கியமானவையாகும் பல்லின மக்கள் வாழும் இலங்கை போன்ற நாட்டில் நல்லிணக்கத்தையும் சக வாழ்வையும் கட்டியெழுப்புவது என்பது சிரமமான காரியமாகும். இதனை பாடசாலை மாணவர்களிடம் இருந்தே கற்றலின் ஊடாக வழங்குவதன் மூலம் எதிர்காலத்தில் சிறந்த முறையில் தேசிய நல்லுறவை கட்டியெழுப்ப முடியும்..

தேசிய கல்வி ஆணைக்குழுவின் அறிக்கையானது, கல்வியின் நான்கு தூண்களை குறிப்பிடுகின்றது. அவை "அறிந்துகொள்ள கற்றல், செய்வதற்கு கற்றல், கற்பதற்கு கற்றல், ஒன்றிணைந்து வாழ கற்றல்" என்பனவாகும். இத்தூண்களில் ஒன்றாக உள்ள ஒன்றிணைந்து வாழ கற்றல் ஆனது தேசிய நல்லுறவை வலியுறுத்துவதாக அமைகின்றது எனலாம்.


பன்மை சமூகத்துடன் வாழுகின்ற. இலங்கையில் தேசிய நல்லுறவு மிகவும் முக்கியமானதாகும். பல்வேறு காலகட்டங்களிலும் இத்தகைய தேசிய நல்லுறவு சீர்குலையும் செயற்பாடுகள் இடம்பெற்ற வண்ணமே இருக்கின்றன. இவற்றை தவிர்த்து தேசிய நல்லுறவு சிறந்த முறையில் அமைப்பதற்கு பாடசாலை கல்வி வழி அமைக்க வேண்டும். இந்த வகையில் யுத்த சூழ்நிலையின் போது இனங்களுக்கிடையில் கடுமையான மோதல்களும் பிரச்சினைகளும் காணப்பட்டன இதனால் தேசிய நல்லுறவு கேள்விக்குறியாகவே காணப்பட்டது. வெற்றிகரமாக யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின் தேசிய நல்லுறவை கட்டியெழுப்பும் வகையில் பாடசாலை மட்டத்தில் இருந்து பல செயற்பாடுகள் இன்றுவரை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில்,

  •  இனங்களுக்கிடையிலான நட்புறவாக்கல்
  • விழாக்களில் ஒன்றுகூடல்
  • வேற்று இன பாடசாலை விஜயங்கள்
  • இரண்டாம் மொழி தமிழ் அல்லது சிங்களம் பாடம் கற்பிக்கப்படல்
  • சகோதரத்துவ நல்லிணக்கம் பேனல் எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பாடசாலைகளுக்கிடையில் விஜயம் செய்தல்
  • ஆசிரியருக்கான இரு மொழிகள்

போன்றவற்றை உதாரணமாகக் குறிப்பிடலாம்

 

தேசிய நல்லுறவை உருவாக்குவதற்கு சிறந்த இடங்களில் ஒன்றாக விளங்குவது பல்கலைக்கழகங்கள் ஆகும். தற்காலத்தில் இவை தேசிய நல்லுறவை ஏற்படுத்துவதில் கேள்விக்குறியாகவே அமைகின்றன. இங்கு மூவின மாணவர்களும் கல்வி பயிலும் நிலை உள்ளது இதனால் இனங்களுக்கிடையில் பிரச்சினைகள், மோதல்கள் இன்றி சிறந்த முறையில் தேசிய நல்லுறவை அவர்கள் கட்டி எழுப்ப வேண்டும். இதற்காக அங்குள்ள மாணவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

 

தேசிய நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் பல பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் சமாதான கல்வி, சமய ஒப்பீட்டுக் கல்வி போன்றவற்றை உதாரணமாகக் குறிப்பிடலாம். சமய ஒப்பீடு பாடத்தினை கற்கும் மாணவர்கள் இனங்களை புரிந்து கொண்டு நல்ல முறையில் நடந்து கொள்வார்கள். இதனால் இனங்களுக்கிடையிலான பிரச்சினைகள் இடம்பெறுவதை தவிர்த்துக் கொள்ளலாம்.

தேசிய நல்லிணக்கம் தொடர்பாக பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டும், "மாணவர் வாழ்விற்கு ஒரு புதிய அர்த்தம்" எனும் தேசிய நிகழ்ச்சித்திட்டம் முன்னர் இருந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டது. மேலும் தேசிய சமாதான மற்றும் நல்லிணக்கத்தை சமய கல்வியினூடாக கட்டியெழுப்ப வேண்டும் என்ற சமய பாடங்கள் பாடசாலையில் கற்பிக்கப்படுகின்றன.


ஈஸ்டர் தாக்குதலுக்கு பின் இலங்கையில் தேசிய நல்லுறவு நம்பிக்கையின்றி காணப்படுகிறது. இதனை நிவர்த்தி செய்யும் பல செயற்திட்டங்கள் அரசினால் மேற்கொள்ளப்பட வேண்டியது கட்டாயமாகும். இதற்கு கல்வியினை சிறந்த ஊடகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த வகையில் கல்வியானது எதனையும் சாதிக்கும் ஒன்றாகவுள்ளது.


-RASIMA,BF (BA-R),

EASTERN UNIVERSITY, SRI LANKA.


Comments

Popular posts from this blog

Case Study Analysis Of MAS Holdings

'வினைத்திறனான கற்றல் கற்பித்தல் செயற்பாடானது மூவழித்தொடர்பாடல் நிகழ்ச்சியினூடாக நடைபெறுவதன் மூலம் ஆசிரியர் - மாணவர் இடைத்தாக்கம் சிறப்பாக அமையும். இக்கூற்றின் அடிப்படையில் உமது கருத்துக்களை முன்வைத்து விளக்குக.

கலைத்திட்ட மேம்பாட்டினை இன்றைய தேவையை முக்கியப்படுத்தி உமது கருத்துக்களை விளக்குக.