“கல்வித்துறையில் உள்ள பிரச்சினைகளை தீர்த்தல், முன் திட்டமிடலுக்குரிய ஏற்பாடுகளை செய்தல் என்பன கல்வித் திட்டமிடலின் நோக்கமாகும்” இக்கூற்றினை யாதாயினும் பாடசலையைக் கொண்டு ஆராய்க.

 திட்டமிடல் என்ற பதமானது PREVOYANCE  என்ற பிரான்ஸிய பதத்திலிருந்து பெறப்பட்டதாகும். இதன் பொருள் முன்னோக்கிப் பார்த்தல் என்பதாகும். இன்னொரு வகையில் கூறின் திட்டமிடல் என்பது செயல்கள் அல்லது நடத்தைகளை மேற்கொள்வதற்குரிய தயார் நிலை எனலாம். பொது நிர்வாகவியலில் ஒழுங்கமைப்பு, ஆட்சேர்ப்பு போன்ற யாவும் திட்டமிடப்பட்டே மேற்கொள்வதினால் இதனை எதிர்கால செயலுக்கு தற்போது கையிலுள்ள மக்கள் சக்தி, மூலப்பொருள் என்பவற்றை  சிக்கனமாகவும் திறமையாகவும் பயன்படுத்தி பூரணத்துவம் பெறுவதற்கு உதவிபுரியும் நிகழச்சி நிரல் எனவும் கூறிக்கொள்ளலாம்.


மேலும் விரிவாக கூறுவதாயின், திட்டமிடல் என்பது நிறுவனத்தின் நோக்கத்தினை வரையறுத்து அதனை அடையும் பொருட்டு செயற்பாடுகளை தீர்மானித்து அவற்றினை ஒன்றினைத்துக் கொள்வதனைக் குறிக்கிறது. அதாவது எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும்? எங்கு செய்ய வேண்டும் என்ற விடயங்களில் கவனம் செலுத்துதலாகும். எதிர்கால நிகழ்வுகள் குறித்து நிகழ்கால தீர்மானத்தை மேற்கொள்வது திட்டமிடல் எனலாம்.

திட்டமிடலானது விஞ்ஞான ரீதியான செயன்முறையாகும். திட்டமிடலை கல்வி அபிவிருத்திக்குள் கொண்டு வரும் போது கல்வித்திட்டமிடலாகும். இந்த வகையில் கல்வித்திட்டமிடல் என்பது இயன்றளவு விரைவாக விருத்தியின் விளைவைப் பெற்றுக் கொடுப்பதாகும். இவ் விளைவு இலாபமளிக்கக் கூடியவகையிலும் அளவு ரீதியாகவும் பண்பு ரீதியாகவும் அமைவதுடன் அதனைத் தனியாட்களுக்குக் கிடைப்பது போன்று முழு இனத்துக்கும் பெற்றுக் கொடுத்தல் வேண்டும். என்கிறார். வீலர் என்பவர்.

தி;ட்டமிடல், குறிக்கோளை அடைவதற்கு உறுதுணை செய்வது போல திட்டமிடல் செயன் முறையும் முக்கியமானதாகும். இவ்வாறான திட்டமிடல் செயன் முறைகளாக,

  •    முன் திட்டமில்          
  •    திட்டமிடல்
  •    திட்ட உருவாக்கம்                    
  •    திட்ட விரிவாக்கம்.
  •    திட்ட அமுலாக்கம்.
  •    திட்ட மதிப்பீடு.    

என்பவற்றை குறிப்பிடலாம்.

மேற்கூறிய திட்டமிடல் செயன் முறைகளில் முன் திட்டமிடல் அதாவது முன் திட்டமிடலுக்குரிய ஏற்பாடுகளை செய்தல், கல்வித் துறையில் உள்ள பிரச்சினைகளை தீர்த்தல் போன்றன கல்வித் திட்டமிடலின் அடிப்படை நோக்கமாகும். இதனை 1AB பாடசாலையினை கொண்டு கீழே விரிவாக நோக்கலாம்.

திட்டமிடல் செயன்முறையானது, பாடசாலையில் உள்ள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான முக்கிய செயன்முறையாக உள்ளது. ஒவ்வொரு பாடசாலையையும் விளைதிறன் மிக்கதாக உருவாக்குவதற்கு திட்டமிடல் அவசியமாகின்றது. பெரிய பாடசாலைகளிலும் சிறிய பாடசாலைகளிலும் இனங்காணப்பட்ட குறிக்கோளை அடைவதற்காக நீண்டகாலத் திட்டம் (ஐந்தாண்டுத் திட்டம்), குறுங்காலத்திட்டம் (ஓருவருட திட்டம்) ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றமையை விளைதிறனை நோக்கிய பயணத்துக்கு உதாரணமாக குறிப்பிடலாம்.

1AB பாடசாலை எனும் போது .பொ. உயர் தரத்தில் சகல துறைகளையும் உள்ளடக்கியதாகக் காணப்படும். பல  1AB பாடசாலைகள் விடுதி வசதிகளைக் கொண்டு காணப்படும்;. மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப மேலும் தரம் உயர்த்தப்படும். இப்  பாடசாலைகளில்   1-13 அல்லது 6-13 வகுப்புக்கள் நடைபெறுகின்றன.   இத்தகு பாடசாலைகளில் இலங்கை அதிபர் சேவை தரம்; I அல்லது கல்வி நிர்வாக சேவை வகுப்பு II ஆகிய தரம் கொண்ட அதிபர்கள் கடமையாற்ற முடியும்.

இவ்வகைப் பாடசாலையானது விரிவான கட்டமைப்பை கொண்டிருக்கும். அதாவது, அதிபர், பிரதி அதிபர், உப அதிபர், பகுதித் தலைவர், வகுப்பாசிரியர், பாட ஆசிரியர், ஊழியர்கள் என்ற வகையில் அதன் கட்டமைப்பு விரிவாக இடம் பெறும். மேலும் இவ்வகைப் பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகக் காணப்படுவதனால் இதன் முகாமையாளரான அதிபர் மேற்கூறிய கல்வித் திறன்களை கொண்டிருத்தல் வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது.

முன் திட்டமிடல் எனும் போது திட்டமிடல் செயன்முறைகளில் முதலாவதாக உள்ளது. இக் கட்;டத்தில் திட்டமிடலுக்கு ஆயத்தமாகும் செயற்பாடுகள் இடம் பெறுகிறது. அதாவது, திட்டத்திற்கு தேவையான பொருத்தமான ஆளணியினர் இக்கட்டத்தில் தெரிவு செய்யப்படுவர், தேவையான பொருத்தமான செய்திகளையும் சேகரித்தல், ஏனைய நிறுவனங்களுடன் தாம் தயாரிக்கும் திட்டத்திற்கு பொருத்தமான தொடர்பினை ஏற்படுத்தல், பாடசாலை வீண்விரயத்தை அறிந்து அவற்றை தீர்க்க முன் உரிமை அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்தல். போன்றவற்றை குறிப்பிடலாம்.

முன்திட்டமிடலில், திட்டமிடலுக்குத் தேவையான பொருத்தமான ஆளணியினர் தெரிவுசெய்யப்படுவர்.இந்த வகையில் 1AB பாடசாலையினை எடுத்துக் கொண்டால், அங்கு த்pட்டமிடலானது மிக முக்கியமானதாகும். மேலும் அப்பாடசாலைகளில் சிறப்பாக முறையாக திட்டமிடலானது மேற்கொள்ளப்படுகிறது. அந்தவகையில், முன்திட்டமிடலில் ஆசிரியர்கள், பெற்றோர், பழைய மாணவர்கள், பாடசாலையின் மாணவத் தலைவர்கள் போன்றோர் உள்ளடங்கிய ஆளணி தெரிவு செய்யப்படும். இவ்வாறு குறிப்பிட்ட திட்டமிடலை மேற்கொள்வதற்குரியவர்கள் முன்னரே தெரிவு செய்யப்படுவது திட்டமிடல் வெற்றிகரமாக அமைய வழிவகுக்கிறது.

ஏனைய நிறுவனங்களுடன் நாம் தயாரிக்கும் திட்டத்திற்கு பொருத்தமான தொடர்பினை ஏற்படுத்த வேண்டும். என்பது முன் திடட்மிடலில் இடம் பெறுகிறது. இந்த வகையில் 1AB பாடசாலையானது திட்டமிடலை மேற்கொள்ளும் போது அதற்கு பொருத்தமான தொடர்பினை பின் வரும் ஏனைய நிறுவனங்களுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தும் வகையில் அமைத்துத்துக் கொள்ள வேண்டும். அந்நிறுவனங்களாக, வலயக்கல்வி அலுவலகம், மாகாணக்கல்வி பணிப்பகம், பிரதேச சபை, சமூக சேவை அமைப்புக்கள் போன்றவற்றை குறிப்பிடலாம்.

இவ்வாறு மேற்கொள்வதன் ஊடாக திட்டத்;தினை சிறப்பாக மேற்கொள்ளல், திட்டத்தில் ஏதும் திருத்தம் செய்ய வேண்டி ஏற்படின் அதனை திருத்திக் கொள்ளல், திட்டத்தினை அமுல்படுத்தும் போது உதவிகளை பெற்றுக் கொள்ளல் ஆகியவற்றை பெற்றுக் கொள்ளலாம். உதாரணமாக, கணிதப்பாடத்தில் குறைந்த புள்ளிகளை பெறும் மாணவர்களுக்கு மாலை நேர வகுப்பினை ஆரம்பித்தல் தொடர்பாக ஒரு திட்டத்தினை மேற்கொள்ளும் போது அதனை மேற்கூறிய நிறுவனங்களுடன் தொடர்பினை பேணும் வகையில் மேற்கொள்ளும் போது அதற்கான நிதி உதவிகள் வழங்கப்படும்.

பாடசாலையில் வீண்விரயத்தை அறிந்து அவற்றை தீர்க்க முன் உரிமை அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்தல். இந்த வகையில் பாடசாலையில் மேற்கொள்ளும் வீண்விரயங்களை வரிசைப்படுத்தி மிக அவசரமாக தவிர்க்கப்பட வேண்டியதை முதலில் என்ற வகையில் முன்னுரிமை அடிப்படையில் தீர்த்தல் இடம் பெறும்.

மேலும், தேவையான பொருத்தமான செய்திகளையும் தரவுகளையும் சேகரித்தல் இக் கட்டத்தில் இடம் பெறும். உதாரணமாக,  .பொ. சாதாரன தர மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிக்க அம்மாணவர்கள் கடந்த காலங்களில் பெற்ற புள்ளிகள், குறிப்பாக தரம் 10ல் பெற்ற புள்ளிகள் போன்றவற்றை சேகரித்தல் வேண்டும். இதனை பகுப்பாய்வு செய்வதன் ஊடாக முறையான வகையில் திட்டமிடல் அமையும்.

மேற்கூறியவாறு முன்திட்டமிடலுக்குறிய ஏற்பாடுகளை செய்தல் கல்வித்திட்டத்தில் அடிப்படை நோக்கமாகும். இவ்வாறே கல்வித் துறையில் உள்ள பிரச்சினைகளை தீர்த்தலும் கல்வித்திட்டத்தில் அடிப்படை நோக்கமாகவுள்ளது. அதனை விரிவாக நோக்குவோம்.


எந்த ஒரு நிறுவனமும் பிரச்சினைகளை எதிர் கொள்ளாமல் வெற்ற்p பெற முடியும் என்பது சாத்தியமற்றதாகும். அந்த வகையில், பாடசாலையும் கல்வித்துறையில் பல்வேறு வகையான பிரச்சினைகளை எதிர்கொள்கிறது எனலாம். இவ்வாறான கல்வித்துறையில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்த்தல் என்பது கல்வித்திட்டமிடலின் அடிப்படை நோக்கமாகவுள்ளது.

பாடசாலை எதிர்கொள்ளும் முதன்மையான பிரச்சினை வளப்பற்றாக்குறை ஆகும். இதனை தீர்ப்பதற்கு அரசாங்கமானது இன்று வரை முயற்சி செய்து கொண்டே இருக்கிறது. இருப்பினும் அதனை முழுமையான வகையில் தீர்த்துக் கொள்ள முடியவில்லை. இதனாலேயே இது கல்வித்திட்டமிடலில் அடிப்படை நோக்கங்களில் ஒன்றாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.  அதாவது திட்டமிடலினை மேற்கொள்ளும் போது அந்த திட்டமிடலானது இருக்கின்ற வளங்களை வினைத்திறனாக பயன்படுத்த வேண்டும். என்ற வகையில் மேற்கொள்ளப்படுகிறது.

மேற்கூறிய வளங்களில் ஆசிரிய வளம் பற்றாக்குறையாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. பாடசாலைகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களின் எண்ணிக்கை இல்லை. இது கல்வித் துறையில் உள்ள பிரதான பிரச்சினையாகும். இதனைத் தீர்க்கும் வகையில் திட்டமிடலின் போது பல்வேறு வழிகள் இனங்காணப்படுகிறது. இந்த வகையில், குறிப்பிட்ட பாடத்திற்கு மட்டும் உள்ள ஆசிரியர்களை வேறு பாடத்தினையும் அதாவது அவர்களால் முடிந்த வேறு பாடங்களையும் கற்பிக்கச் செய்தல், மற்றும் பழைய மாணவர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு கற்பிக்கச் செய்தல் போன்றவற்றை உதாரணமாக குறிப்பிடலாம்.

பாடசாhலைகளில், ஆசிரியர்களினால் மாணவகைளுக்கு பலவேறு வகையான பிரச்சினைகள் இடம்பெறுகிறது. உதாரணமாக, தண்டனை வழங்குதல், ஆசிரிய-மாணவர் காதல், சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல் ரீதியான பிரச்சினைகள் போன்றவற்றை குறிப்பிடலாம். இவ்வாறான பிரச்சினைகள் அடிக்கடி இடம் பெறுவதை பத்திரிகைகளில் காண்கிறோம். இதனை தவிர்ப்பது முக்கியமானதாகவுள்ளது.

ஆசிரியர்கள் தங்களுக்குரிய ஒழுக்ககக் கோவையை முறையாக பின்பற்றாமையே இத்தகைய செயற்பாடுகள் இடம்பெறுகின்றமைக்கான காரணமாகும். இப்பிரச்சினைகளை தீர்க்க ஒழுக்கக் கோவையானது கட்டாயப்படுத்தப்பட்ட வகையில் சகல ஆசிரியர்களாலும் பின்பற்றப்பட வேண்டும்.

தற்போது பாடசாலைகளில் போதைப் பொருள் பாவனையானது அதிகரித்துச் செல்கின்றது. இன்று எமத நாட்டின் பிரதான பிரச்சினையாகவும் போதைப் பொருள் பாவனை தோற்றம் பெற்று வருகிறது. கைபேசிகளில் இணையப்பயன்பாடு கிடைக்கப் பெற்றமை பல்வேறு சமூகவிரோதச் செயல்களுக்கு துணைபுரிகிறது. பாடசாலைகளில் கைபேசி பாவனை தடுக்கப்பட்ட போதும் அவற்றின் பாவனையை முற்றாக ஒழிக்க முடியவில்லை. இவ்விடயத்தில் சகல பாடசாலை அதிபர்களும் கண்டிப்புடன் செயற்படுவது கட்டாயமாகிறது. மாணவர்கள் மாத்திரமன்றி ஆசிரியர்களின் அநாவசிய கைபேசி பாவனையை வரையறுக்கும் பொறுப்பையும் அதிபர்கள் ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும். இவ்வாறு போதைப் பொருள் பாவனை, கைபேசி பாவனை என்பன கல்வித் துறையில் அவசரமாக தவிர்த்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் கல்வி நிர்வாகம் உள்ளது எனலாம்.

கல்வித் துறையில் உள்ள பிரச்சினைகளில் அதிபர், ஆசிரியர்கள் அப்பாடசாலையில் கடமையாற்றுவதற்குரிய திறன்களை அற்றவர்களாக காணப்படுதலும் குறிப்பிடத்தக்கதாகும். உதாரணமாக, அதிபர் பல திறன்களை கொண்டவராக இருத்தல் வேண்டும். குறிப்பாக தெழிநுட்பத் தேர்ச்சித் திறன், மனிதவியல் திறன், எண்ணக்கரு தொடர்பான தேர்ச்சித் திறன் போன்றவற்றை கொண்டிருக்க வேண்டும். மேலும் ஆசிரியர்களும் தங்களது பாடங்களின் புதிய விடயங்களை இற்றைப்படுத்திக் கொண்டவராக இருத்தல் வேண்டும். ஆனால் இவ்வாறு தன்னை இற்றைப்படுத்திக் கொள்ளும் ஆசிரியர்கள் ஒரு சிலரே உள்ளனர். இதனால் மாணவர்கள் புதிய விடயங்களை கற்பிக்கும் ஆசிரியர்களை நாடிச்செல்கின்றனர். எனவே ஆசிரியர்கள் தங்களை இற்றைப்படுத்திக் கொண்டு கற்பித்தலை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.

மேற்கூறிய பிரச்சினைகளைத் தீர்க்க திட்டமிடலானது மிக முக்கியமாகும். இவ்வாறு திட்டமிடலினை மேற்கொள்ளும் போது பின்வரும் பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

1.ஆசிரியர்கள் திட்டமிடலில் பங்குபற்றாமையும் பங்குபற்றுவதை விரும்பாத சூழ்நிலையும் காணப்படுதல்

2.முகாமைத்துவம் தொடர்பாக போதுமானளவு அறிவு, திறன் இல்லாதவர்கள் திட்டமிடலில் ஈடுபடல்.

3.உயர் அதிகாரிகளினதும் அரசியல்வாதிகளினதும் தலையீடுகள்.

4.பாடசாலைச் சமூகத்தின் எதிரான மனப்பான்மை.

5.வளப்பற்றாக்குறை காணப்படுதல்.

6.திட்டமிடல் தொடர்பாக ஆர்வம் குறைவாக காணப்படுவதும் அதன் முக்கியத்துவத்தை உணராமையும்.

7.திட்டம், தேவையான சந்தர்ப்பங்களில் சரியான மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்படாமை.

8.வெளிநாட்டு அனுபவங்களை பெறுவதற்காக முறையான வேலைத்திட்டம் இல்லாமை.

கல்வித் திட்டமிடலானது பெரும்பாலும் பாடசாலையில் உள்ள மாணவர்களின் அடைவுமட்டத்தை அதிகரித்து பாடசாலையின் இலக்கை குறிக்கோளை சிறப்பான முறையில் அடையச் செய்தல், பாடசாலையில் உள்ள பிரச்சினைகளை தீர்த்து மாணவர்கள் கற்றலை இலகுவாக மேற்கொள்ளல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டே இடம் பெறுகிறது.

திட்டமிடலை நேரடியாக ஒருபோதும் மேற்கொள்ள முடியாது. அதனை படிப்படியாகவே மேற்கொள்ள வேண்டும். இந்தவகையில் திட்டமிடலுக்கு முன் மேற்கொள்ளும் செயற்பாடுகள் மிகவும் முக்கியமானதாகும். இதனையே மேலே விரிவாக நோக்கினோம்.

எனவே மேற்கூறியவாறு கல்வித்திட்டமிடலின் அடிப்படை நோக்கங்களாக, முன் திட்டமிடலுக்குரிய ஏற்பாடுகளை செய்தல், கல்வித் துறையில் உள்ள பிரச்சினைகளை தீர்த்தல் என்பன உள்;ளன எனலாம்.

பாடசாலை மட்டத்தில் திட்டமிடல் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டால் பாடசாலையின்  நோக்கம், குறிக்கோள் என்பன எதிர்பார்த்த மட்டத்தில் அடையப்படும் அதேவேளை தேசிய கல்வி நோக்கமும் வெற்றிகரமாக அடையப்படும். தேசிய கல்வி நோக்கம் அடையப்பட்டால் இலங்கை ஒரு அபிவிருத்தி அடைந்த நாடாக உருவாகும் நிலை வெகு தொலைவில் இல்லை.

 உசாத்துணைகள்

1.புண்ணியமூர்த்தி.கி,  (2014)பாடசாலை முகாமைத்துவம்;;;;;;;;; : கோட்பாடும் பிரயோகங்களும்”, சேமமடு பதிப்பகம், கொழும்பு 11.

2.செல்வராசா. சுபா, (1987),  கல்வித் திட்டமடல்,  முரசொலி அச்சகம், யாழ்ப்பாணம்.

3.செல்வராசா.மா,(1995), கல்வி அபிவிருத்தி முகாமைத்துவம்,  செபஸ்டியன் அச்சகம்,  கொழும்பு.


-RASIMA,BF (BA-R)

EASTERN UNIVERSITY, SRI LANKA.

Comments

Popular posts from this blog

Case Study Analysis Of MAS Holdings

'வினைத்திறனான கற்றல் கற்பித்தல் செயற்பாடானது மூவழித்தொடர்பாடல் நிகழ்ச்சியினூடாக நடைபெறுவதன் மூலம் ஆசிரியர் - மாணவர் இடைத்தாக்கம் சிறப்பாக அமையும். இக்கூற்றின் அடிப்படையில் உமது கருத்துக்களை முன்வைத்து விளக்குக.

Theory of Instinct [மக்டூகலின் இயல்பூக்கக் கொள்கை]