பிள்ளையின் கற்கை முறைகள் (Methods Of Child Study)

 இன்றைய நவீன கல்விச்சிந்தனை போக்குகளில் சிறப்பான கல்வியை வழங்குவதற்கு கற்றல் கற்பித்தலுடன் தொடர்பான முக்கிய விடயங்களை சரியாக இனங்காண்பது அவசியமாகும். இதனடிப்படையில் இன்று கல்விச்செயற்பாடுகளில் பிள்ளைகளை முழுமையாக விளங்கிக்கொள்வது இன்றியமையாததாகும். ஆசிரியரின் செயற்பாடுகள் வெற்றிகரமாக அமைவதற்கும் பிள்ளைகளை விளங்கிக்கொள்வதற்கும் பிள்ளை ஆய்வு முறைகள் பற்றிய விளக்கம் பிரதானமாதாகும்.

பிள்ளைகளை விளங்குவது என்பது பிள்ளையின் அறிவுமட்டம் மனப்பாங்குகளின் தன்மை, திறன்களின் வெளிப்பாடுகள், குடும்பப்பின்னணி, சுகாதார நிலை, ஆளுமைக்கோலம், நுண்ணறிவுமட்டம்ஆன்மீக ஈடுபாடு, ஒழுக்கப்பண்பாடுகள், தனியாள் வேறுபாடுகள், விசேட தேவைகள், குறைபாடுகள் போன்ற அனைத்தையும் விளங்கிக்கொள்வது இன்றியமையாததாகும். முதலில் ஒவ்வொரு ஆசிரியரும் தன்னை முழுமையாக அறிந்துகொள்ளல் வேண்டும். தன்னுடைய கல்வி அறிவு, திறன்கள், பழக்கவழக்கங்கள், தொடர்பாடல், உளவியல் அறிவு, போதனா அறிவு, பிள்ளைகளை புரிந்துகொள்ளும் ஆற்றல் என்பவற்றில் தெளிவு ஏற்படவேண்டும்.

இரண்டாவது விடயமாக பிள்ளையை விளங்கிக்கொள்ளல் ஆகும். இவற்றில் பில்ளையின் அறிவுமட்டம், கற்றல் கற்பித்தலில் வகுப்பறையில் பிள்ளையின் மனோநிலை என்பவற்றை விளங்கிக்கொண்டு அதற்கேற்ப போதனை வழங்கப்பட வேண்டும். ஏனெனில் எல்லாபிள்ளைகளும் ஒரே அறிவுமட்டத்தை கொண்டு காணப்படமாட்டார்கள். எனவே இவற்றை ஆசிரியர் புரிந்துகொண்டு கற்றல் கற்பித்தலை ஒழுங்குசெய்ய வேண்டும். இதுபோன்றே மாணவர்களின் மனப்பாங்குகளை புரிந்துகொள்ளல் வேண்டும். மாணவர்களின் மனப்பாங்குகளில் வித்தியாசம் தென்படும்போது அதற்கேற்றாற்போல் கற்பித்தலை மேற்கொள்ளல் வேண்டும்.

ஏனெனில் சில மாணவர்கள் நல்ல தன்மைகளைக் கொண்டு காணப்படுவார்கள். இன்னும் சில மாணவர்கள் முரண்பாடான சுபாவம் உடயவர்களாகவும் காணப்படுவார்கள். இந்த சந்தர்ப்பத்தில் ஆசிரியர்கள் மாணவர்களை புரிந்துகொள்வதுடன் கற்றல் கற்பித்தல்களையும் வழங்க வேணடும்.அவ்வாறே மாணவர்கள் காட்டும் திறன்களின் வெளிப்பாடுகளிலும் வித்தியாசம் காணப்படும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் குறைவான திறன்களை வெளிக்காட்டும் மாணவர்கள் மீது அதீத கவனம் செலுத்தவேண்டும். ஆசிரியரின் சிறந்த கற்பித்தலினால் காலப்போக்கில் நல்ல நிலையை மாணவர்கள் அடைய முடியும்.

மாணவர்களின் பழக்கவழக்கங்களை அறிந்துகொள்வது அவசியமாகும். வகுப்பறையில் உள்ள மாணவர்கள் வெளிக்காட்டும் பழக்கவழக்கங்களை புரிந்துகொண்ட அதற்கேற்றாற்போல் கற்றல் கற்பித்தலை மேற்காள்ளும்போது நாளடைவில் மாணவர்களிடையே பழக்கவழக்கங்களில் மாற்றத்தினை அவதானிக்க முடியும். அவ்வாறே மாணவர்களின் குடும்பப்பின்னணியை விளங்கிக் கொள்வதும் போதனையாளர்களின் கடமையாகும். ஏனெனில் வகுப்பறையில் தாய் தந்தைகளை இழந்த பிளளைகளும் இருக்கலாம் அல்லது வறுமைக் குடும்பத்தை சேர்ந்தவர்களும் இருக்கலாம். அல்லது கல்வி அறிவு குறைந்த பிளளைகளும் இருக்கலாம். எனவே அவ்வாறானவர்களை நன்கு விளங்கிக்கொள்ளும்போதுதான் கற்றலை இலகுபடுத்த முடியும்.

மாணவர்கள் மத்தியில் காணப்படும் ஆளுமைக் கோளமும் முக்கியமான ஒரு விடயமாக உள்ளது. ஆளுமையை வெளிக்காட்டுவதில் பிள்ளைகளிடத்தில் வேறுபாடுகள் காணப்படும். எனவேதான் மாணவர்களின் ஆளுமை வெளிப்பாடுகளையம் புரிந்து கொள்வது அவசியமாகும்.

இது போன்றே மாணவர்களின் ஆன்மீக ஈடுபாட்டையம் ஓவ்வொரு ஆசிரியரும் விளங்கிக் கொள்ள வேண்டும். பாடசாலையில் மாணவர்களிடையே ஆன்மீகத் தன்மையைக் கட்டியெழுப்ப நல்லதொரு சந்தர்ப்பம் காணப்படுகிறது. சில மாணவர்கள் இவ்வாறான விடயத்தில் பின்தங்கி காணப்படும் போது அவர்களை இனங்காண்பது அவசியமாகும்.

ஓவ்வொரு மாணவர் மத்தியிலும் தனியாள் வேறுபாடுகள் காணப்படும்.  எல்லா மாணவர்களும் ஒரே ஆற்றல் உள்ளவர்களாக காணப்பட மாட்டார்கள். எனவே இவ்வாறான மாணவர்களின் தன்மையை புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். மேலும் பிள்ளையின் ஒழுக்க பண்புகளையும் அசிரியர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஓவ்வொரு பிள்ளையும் பாடசாலையின் ஒழுக்க விடயங்களை வெளிக் காட்டுவதிலும் பின்பற்றவதிலும் வித்தியாசப்பட்டு காணப்படுவார்கள்.

பிள்ளையின் சுகாதார நிலையையும் ஆசிரியர் புரிந்து கொள்ள வேண்டும். சில மாணவர்கள் சுகாதார நிலையில் பின் தங்கிய நிலையில் இருப்பார்கள். இவ்வாறர்ன மாணவர்களை இனங் கண்டு பரிகார முறைகளை ஏற்படுத்த வேண்டும். இது போன்றே விசேட தன்மையுடைய பிள்ளைகளும் காணப்படுகிறார்கள். இவற்றில் மீள்திறன் கூடிய பிள்ளைகளும் மீள்திறன் குறைந்த பிள்ளைகளும் காணப்படுகின்றனர். இவ்வாறான நிலையில் உள்ள பிள்ளைகளை அவரவரது நிலைகளுக்கு ஏற்ப கற்றல் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபடுத்தவும் பரிகாரங்களை வழங்கவும் பிள்ளைகளை முழுமையாக புரிந்து கொள்வது அவசியமாகும். எனவே மேற்கூறியவாறு அசிரியர் முதல் தன்னையும் பின்பு மாணவர்களையம விளங்கிக்கொள்ள வேண்டும். மூன்றாவதே பாடத்தை விளங்கி செயற்படுத்த வேண்டும்.

இதன் போதுதான் பிள்ளையின் கற்றலுக்கான ஆர்வம் அதிகரிக்கும் அதே வேளை ஏனைய பிற தலையீடு மற்றும் இடர்பாடுகள் இன்றி தனது கற்றலை முன்னெடுக்க அது வாய்ப்பாக அமைகிறது. பிள்ளைக்கான கற்பித்தலை முன்னெடுக்கும் போது பிள்ளையின் மனோநிலை, நினைவாற்றல்திறன் என்பவற்றை கவனிக்க வேண்டியது போதனையாளர்கள் ஒவ்வொருவரும் உணர வேண்டியது அவசியமாகும். ஏனெனில் குறிப்பிட்ட ஒரு வயதையுடைய இவர்களுக்கு அவர்களது அறிவு மற்றும் உளச்சார் அளவுகளுக்கு ஏற்பவே கற்றலை முன்னெடுக்க வேண்டும்.

மாறாக திணிப்பினை அவர்கள் மீது எற்படுத்தும் போது அவர்களை அது மன உளைச்சலுக்கு உள்ளாக்குவதோடு வேறு பிரச்சனைகளுக்கும் உள்ளாக்கும் வாய்ப்பும் அதிகமாகவே உள்ளது. எனவே கற்றல் முறைகளும் சிறப்பாகவும், மகிழ்ச்சிகரமாகவும் ஏனைய பாடம்சார் மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளுடன் முன்னெடுக்கப்படுவதும் இன்றியமையாத ஒன்றாகும்.  ஏனெனில் ஒரு குழந்தை பிறப்பின் போது மாணவாகி விடுகிறது இயற்கையால் என்ற ரூசோ வின் கூற்றும் இன்று சூழல் சார் இடைத்தாக்க இணைப்பாடவிதான செயற்பாட்டில் உள்வாங்கப் பட்டிருப்பதும் இதன் அடிப்படையிலாகும்.

எனவே, பிள்ளைக்கு கற்பிக்கும் ஆசிரியர் பிள்ளையின் தேவைகளையும், மனோநிலையையும் அறிந்து கற்பித்தலை மேற்கொள்ளும் போதுதான் அப்பிள்ளை சவால்களை துணிவுடன் எதிர் கொண்டு உடல் உள சமூக ஆளுமை பெற்று எதிர்கால இலக்குகளை உரிய முறைப்படி அடைந்து கொள்வதற்கான வழிமுறைகளை தன்னுள் ஏற்படுத்திக் கொண்டு நாட்டிற்கு தேவையான நற்பிரசையாக உருவாகி எதிர்கால உலகை வெற்றி கொள்ளும் ஆற்றல் படைத்தவராக உருவாகும் என்பதே உண்மையாகும்.

M.U. NOUFERKHAN B.Ed.(Hons)

EASTERN UNIVERSITY.                                                 

 

                                                                                   

 

Comments

Popular posts from this blog

Case Study Analysis Of MAS Holdings

'வினைத்திறனான கற்றல் கற்பித்தல் செயற்பாடானது மூவழித்தொடர்பாடல் நிகழ்ச்சியினூடாக நடைபெறுவதன் மூலம் ஆசிரியர் - மாணவர் இடைத்தாக்கம் சிறப்பாக அமையும். இக்கூற்றின் அடிப்படையில் உமது கருத்துக்களை முன்வைத்து விளக்குக.

Theory of Instinct [மக்டூகலின் இயல்பூக்கக் கொள்கை]