இலங்கையின் கல்வி வளர்ச்சியில் கல்விக்கான கோட்பாடுகளும் அவற்றின் பிரயோகங்களும் செல்வாக்கு செலுத்தும் விதம்

கல்விக்கான பரந்துபட்ட வரைவிலக்கணங்களை வரிசைப்படுத்தி அவை ஒன்றில் இருந்து ஒன்று மாற்றமடைவதற்கான காரணிகளில் கல்விக்கான கோட்பாடுகளும் அவற்றிற்கான பிரயோகங்களும் செல்வாக்கு செலுத்தும் விதத்தினை இலங்கையின் கல்வி வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு ஆராய்க.

மனிதனுடைய நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்துவது கல்வியாகும். அந்த வகையில் கல்வி என்பது குழந்தைகளை உடல் மற்றும் மன வளர்ச்சியில் அறிவு, நல்லொழுக்கம் ஆகிய மதிப்புடன்  வளர்க்க உதவும் ஒரு சமூக அமைப்பாகும் .

கல்வி என்ற சொல்லிற்கான ஆங்கிலச்சொல் Education என்பதாகும். இந்த சொல் Educatio என்ற இலத்தின் மொழிச்சொல்லில் இருந்து தோற்றம் பெற்றதாகும். இந்த  Educatio என்பது வளர்த்தலைக் குறிக்கின்றது. இது கற்பித்தல்,பயிற்றுவித்தல் எனும் பொருளைத்தரும் ; Educo என்ற சொல்லை அடிப்படையாகக்  கொண்டது. இதற்கு ஒத்த சொல்லாக வெளிக்கொணரல், உயர்த்திவிடல், முன்னேற்றி விடல் என்பன உள்ளன. எனவே, கல்வி என்பது  தகுந்த சூழ்நிலையை உருவாக்கி மனிதர்களின் உள்ளார்ந்த தகுதிகளை வெளியில் கொண்டு வருவது எனலாம்.

கல்வி என்பதற்கான வரைவிலக்கணங்கள் பல்வேறு அறிஞர்களால் காலத்திற்கு காலம் முன்வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், அவற்றை மேலைத்தேய அறிஞர்கள் கூறிய வரைவிலக்கணங்கள் கீழைத்தேய அறிஞர்கள் கூறிய வரைவிலக்கணங்கள் என்று இரு வகையாக நோக்கலாம்

மேலைத்தேய அறிஞர்கள் கூறிய வரைவிலக்கணங்கள்

சோக்கிரடீஸ்

“உறுதியான உடலில் உறுதியான மனத்தைதோற்றுவிப்பதே கல்வி”  எனக்கூறுகிறார். இவரின் கருத்துப்படி பிள்ளையின் உடலிலும் உள்ளத்திலும் ஆற்றலை விருத்தியாக்க வேண்டும் என்பது புலனாகிறது. 

ஜோன் டியுவி

கல்வியை பொறுத்து சமூக சூழலுக்கு முக்கியம் கொடுத்த இவர் “ஒருவனுக்கு சூழலை பயன்படுத்த உதவுவதும் அவனது பொறுப்புக்களை நிறைவு செய்ய உதவுவதுமான ஆற்றல்களை விருத்தியாக்குவதே கல்வி” என்றார்.

ஜோன் லொக்

“அனுபவங்களின் மூலம் பெறப்படுவனவே கல்வி” அதாவது குழந்தை அனுபவம் மூலமே எல்லாவற்றையும் அறிகிறது என்பது இவரது கருத்தாகும்.

காண்ட்

“நல்ல குடிமையின் அடிப்படை ஒழுக்கமாகும் அது மனிதனின் நம்பிக்கையில் தங்கியுள்ளது”இவரது கருத்துப்படி சமயமற்ற வாழ்வு பூரணமற்றதாகும் சமயத்தை போதிப்பதே கல்வி என்கிறார்.

ரூசோ 

“ இயற்கையிலிருந்து தோன்றுவன அனைத்தும் நல்லனவே மனிதனின் கை பட்டே அவை கெடுகின்றன எனவே இயற்கைத்தன்மைக்கு இயைந்ததாக அமைய வேண்டும் ” என்றார்.

தோம்சன்

“ ஒரு தனியாளின் வாழ்கையில் நடத்தை, சிந்தனை, மனப்பாங்கு  என்பவற்றில் நிரந்தரமாக ஏற்படுத்தும் சூழல் செல்வாக்கே கல்வியாகும்” பிள்ளை சமூகத்தில் இசைவாக்கம் பெறுவதையே கல்வி என்பது இவரது கருத்து.

ரேட்டின் 

“கல்வி என்பது முதியோர் இளையோர் மீது செலுத்தும் செல்வாக்கு, இச்செல்வாக்கானது போதனை, ஒழுக்கம், அபிவிருத்தி என்பவையாக அமையும் இவ்விருத்தி பிள்ளையின் உடல், அறிவு, அழகியல், சமூகம், ஆத்மீகம் என்பவற்றில் ஏற்பட வேண்டும் என்பது இவரின் கருத்தாகும்.

கீழைத்தேய  அறிஞர்கள் கூறிய வரைவிலக்கணங்கள் 

தாகுர் 

“மாயை நீக்கி உண்மை ஒளியை கண்டறிய உதவுவதே கல்வி” அறியாமையை நீக்குவதே  கல்வி என்பதே இவரது கருத்து ஆகும்.

ஜி டு கிறிஸ்னமூர்த்தி

“கல்வி என்பது தன்னைப்பற்றிய விளக்கத்தை பெற்றுக்கொள்ளல்”

மகாத்மா காந்தி

“பிள்ளையினுள்ளே அடங்கியுள்ள அனைத்து ஆற்றல்களையும் வெளிக்கொணர்வதே கல்வி”.

விவேகானந்தர்

“மனிதனுள் ஏற்கனவே அமைந்துள்ள தெய்வீக பூரணத்துவத்தை வெளிக்கொணர்வதே கல்வி”.

அரவிந்தர் 

“ஆன்மாக்குள் இருக்கும் ஆற்றலை வெளிக்கொண்டு வர உதவுவதே கல்வி”.

எஸ் ராதாகிருஷ்ணன்

“உள பயிற்சியையும் ஆத்மீக பயிற்சியையும் கொடுப்பதே கல்வி”

மேலே கூறப்பட்ட கல்வி தொடர்பான வரைவிலக்கணங்களில் கூறப்படுகின்ற கருத்துக்கள் ஒன்றுக்கு ஒன்று வேறுபட்டதாக உள்ளன. இதற்கு பல காரணங்கள் உள்ளன. அவை பின்வருமாறு

மனித சூழலின் சிக்கலான தன்மை   

“ஒரு மனிதன் தனது சூழலுக்கு ஏற்ப இசைவாக்கம் பெறுவதற்கான செயன்முறையே      கல்வி” எனக்கொள்வோம் இங்கு சூழல் என்பது இடத்திற்கு இடம் வேறுபடக்கூடியது. உதாரணமாக, ஆரம்ப கால சூழலில் ஒழுக்கம் முக்கியத்துவமிக்கதாக காணப்பட்டது. இதனால் கல்வியில்  ஒழுக்கம்   அதிகமாக போதிக்கப்பட்டது. இன்று தொழிலை மையமாகக் கொண்ட கல்வி போதிக்கப்படுகிறது 

மனித ஆளுமையின் சிக்கலான தன்மை  

“கல்வியின் பிரதான நோக்கம் மனிதனின் ஆளுமை விருத்தியாகும். இங்கு ஆளுமையானது  சிக்கலான தன்மையுடையதும் பல்வேறு அம்சங்களை கொண்டதுமாகும். கலவியியளாலர்கள் தத்தமது ஆளுமையை முக்கியப்படுத்தி வரைவிலக்கணங்களை முன்வைக்கின்றனர். உதாரணமாக, “தன்னை உணர்தலே கல்வி” என்று ஆத்மீகவாதிகளும், “பண்பு விருத்திக்கு வழி செய்வதே கல்வி” என்று ஒழுக்கவியலாளர்களும் வரைவிலக்கணங்களை முன்வைக்கின்றனர். எனவே “மனித ஆளுமையின் சிக்கலான தன்மை” பல்வேறு வகைப்பட்ட  வரைவிலக்கணங்கள் தோன்றக் காரணமாகிறது எனலாம் .

பல்வேறு தத்துவங்கள் 

வாழ்கையை நுணுகி ஆராய்ந்த தத்தவ ஞானிகள் தத்தமது தத்துவங்களுக்கு ஏற்ப கல்வி தொடர்பாக  வரைவிலக்கணங்களை முன்வைக்கின்றனர். உதாரணமாக, வாழ்க்கையின் நிலையாமையை ஆராய்ந்த புத்தர் “ஆசையே துக்கத்தின் காரணம்” எனக் கண்டார். திருவள்ளுவர் “கற்றாங்கு ஒழுகுதலே கல்வி” என்கிறார். எனவே, வாழ்க்கையின் பல்வேறு தத்துவங்கள் கல்விக்கு வரையறை வகுக்கின்றன.

கல்வி கோட்பாடுகளும் அவற்றின் பிரயோகங்களும் 

கற்பித்தல் செயற்பாடுகள் மீது செல்வாக்கு செலுத்திய பல்வேறு உளவியற் கோட்பாடுகள் உள்ளன. சில ஆரம்ப கால உளவியலாளர்கள் “பிள்ளையின் மனம் தெளிவான கரும்பலகை போன்றது அதன் மீது எதனையும் எழுதலாம்” என்று கருதினர்.   சில உளவியலாளர்கள் “பிள்ளை களிமண் போன்றது அதைப் பயன்படுத்தி எவ்வாறன  வடிவத்திலும் அமைக்கலாம்”என்று கருதினர்.           சிலர்  “ தண்டனையே கல்விக்கு வழி” என்று கருதினர். வேறு சிலர் “மனப்பாடம் செய்வித்தலே கல்வி” என்று கருதினர். ஆனால் பின் வந்த கல்விக்கோட்பாடுகள் நவீன கல்வி வரைவிலக்கணத்துக்கு வழி அமைத்தன. அந்த வகையில், அறிவு, திறன், மனப்பாங்குகளில் நிரந்தர மாற்றம் தரும் செயற்பாடே கல்வி போன்ற வரைவிலக்கணங்கள் தோன்றின. அதாவது ஆசிரியர் மையக்கல்வி, மாணவர் மையக்கல்வியாக மாறியது. எனவே கல்வி கோட்பாடுகளும் அவற்றின் பிரயோகங்களும் கல்விக்கான வரைவிலக்கணங்கள் தோன்றக் காரணமாகிறது எனலாம்.

மேலே, கூறப்பட்ட கல்வி தொடர்பான வரைவிலக்கணங்கள் தோன்றுவதற்குரிய காரணங்களில் ஒன்றாக உள்ள “கல்விக் கோட்பாடுகளும் அவற்றின் பிரயோகங்களும்” என்பது இலங்கையின் கல்வி வளர்ச்சியில் செல்வாக்கு செலுத்தும் விதத்தினை  பின்வருமாறு நோக்குவோம்.

இலங்கையின் ஆரம்ப காலத்தில் அதாவது, தமிழர் மரபில், திண்னைப்பள்ளிக்கூடங்கள், மடாலயங்கள், குருகுலப்பள்ளிகள், சங்கங்கள் என்பன கல்வியை வழங்குவனவாய் இருந்தன. இவ்விடங்களில் மாணவரது கல்வி வளர்ச்சிக்கு ஏற்றவாறு கலைத்திட்டம் வளர்ந்து சென்றது. இலக்கணம், தருக்கம், கணிதம் போன்றனவும் கவின்கலைகளும் கற்பிக்கப்பட்டன. மேலும், அடிநிலை மக்களுக்கு கல்வி வழங்க “நிலாப்பள்ளிகளும்”; பெண்களுக்கு கல்வி  வழங்க “மர நிழற்பள்ளிகளும”; காணப்பட்டன. இவ்வாறே முஸ்லிம்களுக்கு கல்வி வழங்குமிடமாக பள்ளிவாயல்களும், பௌத்தர்களுக்கு கல்வி வழங்குமிடமாக விகாரைகளும் பன்சலைகளும் காணப்பட்டன. இவ்வாறு  ஆரம்ப காலத்தில் அவர்களது கொள்கைகளுக்கு ஏற்ப கல்வி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை மேலைத்தேயர்களின் ஆளுகைக்குட்பட்ட போது இலங்கையின்  கல்விக் கொள்கை மாற்றமடைந்தது. இவர்கள் கல்வியின் ஊடாக அவர்களுடைய மதத்தை பரப்பினர்.

 அந்த வகையில், போர்த்துக்கேயர் கத்தோலிக்க சமயத்தை பரப்பும் நோக்கில் சிறிய பாடசாலைகளை ஆரம்பித்து இலங்கையினரின் தாய்மொழி ஊடாக கல்வியை வழங்கி மதத்தை விரைவாக பரப்பினர். அவ்வாறே ஒல்லாந்தரும் மதத்தை பரப்பும் நோக்கோடும் வருமானத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கோடும் கல்வியை வழங்கினர். இவர்கள் “கட்டாயக் கல்வி” என்ற சட்டம், கல்வி ஆணைக்குழு, பெண்கல்வி, உயர்கல்வி என்பவற்றை ஏற்படுத்தினர்

                               

பிரித்தானியர் காலத்தில் இலங்கையின் கல்வியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது. இதற்காக மிஷனரி இயக்கங்களின் உதவி கிடைக்கப்பெற்றது. பாடசாலை ஆணைக்குழு, மத்திய பாடசாலை ஆணைக்குழு, லண்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயற்படும் வகையில் பல்கலைக்கழகம் என்பன உருவாக்கப்பட்டன. 1931ல் டொனமூர் சீர்திருத்தத்தில் நிர்வாகக் குழு உருவாக்கப்பட்டது. இதில் கல்விப்பொறுப்பை ஏற்றிருந்த CWW.கன்னங்கரா அவர்களின் தலைமையில் கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கமைவாக 1946 ஆம் ஆண்டு இலவச கல்விச் சட்டம் உருவாக்கப்பட்டு இந்நாட்டு மக்களுக்கு சுதந்திரமான பாதை திறக்கப்பட்டது.  இதனாலேயே CWW. கன்னங்கரா இலவசக் கல்வியின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
                                 
டொனமூர் சீர்திருத்தத்தில் கல்வி தொடர்பாக பல ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன. அந்த வகையில் கட்டாயக்கல்வி முறை, இலவசக் கல்வி, பாடசாலைகளுக்கு மதிய உணவு வழங்குதல், 5ம் தரத்தில் உபகார நிதி வழங்குதல், மத்திய பாடசாலைகளை ஆரம்பித்தல் என சிலவற்றை கூறலாம். 
இவ்வாறு ஒவ்வொரு நாட்டவரும் இலங்கையை ஆண்ட போது அவர்களுடைய நோக்கங்கள் தேவைகளுக்கு ஏற்ப “கல்விக் கோட்பாடுகளும் அவற்றின் பிரயோகங்களும்”மாற்றமுற்று கல்வி வளர்ச்சியடைந்துள்ளதை காணமுடிகிறது.

இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னரே கல்வி தொடர்பான முறையான கொள்கைகளும் கோட்பாடுகளும் உருவாக்கப்பட்டன.  அந்த வகையில் 10 வருடங்களுக்கு ஒரு தடவை கல்வி சீர்திருத்தம் இடம்பெற்று வருகிறது. அந்த வகையில் 1951 ஆம் ஆண்டு 5ம் இலக்க கட்டளைச் சட்டத்தின் ஊடாக பல சீர்திருத்தங்கள் ஏற்பட்டன. உதாரணமாக, உயர்நிலை பாடசாலை உருவாக்கம், தாய்மொழியை கல்வி மொழியாக்குதல் என்பவற்றை குறிப்பிடலாம்.  1951 ஆம் ஆண்டின் பின்னரும் சில துணைச்சீர்திருத்தங்கள் உருவாக்கப்பட்டன உதாரணமாக 8ம் வகுப்பு முடிவடைந்ததும் கலை, விஞ்ஞானம் என்ற வகைப்படுத்தலுக்கு மாணவரை கொண்டுவருதல். இது 1972 கல்வி சீர்திருத்தம் வரை தொடர்ந்தது.
                             
1962 ஆம் ஆண்டு தேசிய கல்வி ஆணைக்குழு உருவாக்கப்பட்டது. இதன் மூலம் வேறு விதமான கல்வி கொள்கைகளும் கோட்பாடுகளும் முன்மொழியப்பட்டன. 1972 கல்வி சீர்திருத்தத்தின் ஊடாகவும் பல்வேறு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டன. அந்த வகையில் கலைத்திட்டம் உருவாக்கப்கட்டது. இதன் மூலம் பாடசாலை செல்லும் வயது ஐந்தில் இருந்து ஆறாக உயர்த்தப்பட்டது.  மேலும் இடைநிலைக் கலைத்திட்டத்தில் பல புதிய மாற்றங்கள் உட்புகுத்தப்பட்டன. அந்த வகையில் 10, 11 கல்வித்திட்டம் உயர்கல்விக்கு மாணவர்களை வேறு வேறாக ஆற்றுப்படுத்தல் செய்யுமாறு ஒழுங்கமைக்கப்பட்டது.

 1997 கல்விச்சீர்திருத்தத்தின் ஊடாக, 5  - 14 வயது வரை கட்டாயக்கல்வி, 6ம் 7ம் தரங்களை உள்ளடக்கிய கனிஷ்ட்ட பாட உள்ளடக்கம், முறைசார் கல்வியை பெறத்தவறியவர்களுக்கும் பாடசாலையை விட்டு இடை விலகியோருக்கும் வேறு ஏற்பாடுகளை மேற்கொள்ளுதல் போன்ற பல சீர்திருத்தங்கள் உருவாக்கப்பட்டன.

இலங்கையின் கல்விச் சட்டங்களும் கொள்கைகள் கோட்பாடுகளுக்கு அமையவே உருவாக்கப்பட்டுள்ளன. இவை காலத்திற்கு காலம் மாறும் கொள்கைகள் கோட்பாடுகளுக்கு அமைய கல்விச் சட்டங்களும் மாற்றப்பட்டுள்ளதை காணமுடிகிறது. உதாரணமாக, 1939 ஆம் ஆண்டு கல்விச் சட்டம் 1973 ஆம் ஆண்டு கல்விச் சட்டத்தினால் மாற்றப்பட்டதை குறிப்பிடமுடியும். கல்விச் சட்டவாக்கத்தில் முக்கியமானது 1991 உருவாக்கப்பட்ட தேசிய கல்வி ஆணைக்குழு பற்றிய சட்டமாகும். இந்த  ஆணைக்குழு ஊடாக, கல்வியின் இலக்குகள், குறிக்கோள்கள், உயர்கல்வி வாண்மை மற்றும் சமயக்கல்வி தொடர்பான கொள்கைகள் வகுப்பதற்குரிய பரிந்துரைகள் முன் மொழியப்பட்டன.

இலங்கை அரசியல் அமைப்பின் 13 வது திருத்தத்தின் ஊடாகவும் பல கல்விச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.  உதாரணமாக, தேசிய பாடசாலை, சிறப்பு பாடசாலைகள் மாகாண சபையின் கீழ் வராது, ஏனைய பாடசாலைகளையும் முன்பள்ளிகளையும் முகாமை செய்தல்,  மற்றும்  முறைசாராக் கல்வி நிகழச்சித் திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தல் போன்றவற்றை குறிப்பிட முடியும். 

மேலும், 2003,2007 ஆண்டுகளிலும் பல கல்விச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்த வகையில் , 2007 ஆம் ஆண்டில் முதல் தடவையாக இடைநிலை பாடசாலைக் கலைத்திட்டம் சீரமைப்பு செய்யப்பட்டது  இந்த கலைத்திட்ட அறிமுகத்தின் போது ஏற்கனவே இருந்த பல பாடங்கள் நீக்கப்பட்டு புதிய பாடங்கள் சேர்க்கப்பட்டன. 

இதன் பிற்பட்ட காலப்பகுதியிலும் இலங்கையின் கல்வி வளர்ச்சியில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது.  5-16 வயது பிள்ளைகள் கட்டாயம் பாடசாலை செல்ல வேண்டும், 1ம் 2ம் 3ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டு வேலைகள் கட்டாயமாக்கப்படக்கூடாது, ஆரம்ப பிரிவுகளுக்கு 5 மணித்தியாலங்களும் இடைநிலை பிரிவுக்கு 6 மணித்தியாலங்களும் கற்பிக்கப்பட வேண்டும், புத்தகங்களின் பாரத்தை குறைப்பதற்கு சிறிய பிரிவுகளாக்குதல், பல்கலைக்கழக பட்டதாரிகளை ஆசிரியர்களாக சேர்க்கும்போது 3 மாத கால முழு நேரப்பயிற்சி வழங்கப்படல் போன்ற சில மாற்றங்கள் கடந்த வருடங்களில்  கொண்டு வரப்பட்டது.

முன்னர் இருந்த அரசாங்கம் சில கல்வித்திருத்தங்கள் மேற்கொள்ளும் பொருட்டும் சில சிபாரிசுகள் முன்வைத்தது.  அதற்கமைய ஓரு நிகழ்வில்  முன்னால் ஜனாதிபதி, “தேசிய கல்வி ஆணைக்குழு, தேசிய கல்வி நிறுவனம் மற்றும் மாகாண கல்வி நிறுவனம் ஆகியன 6 மாதங்களுக்கு ஓரு முறை கூடி புதிய மாற்றங்கள் தொடர்பில் கலந்துரையாட வேண்டும், 5ம் புலமைப் பரீட்சை தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும், அடிப்படை வசதிகள் கூட இல்லாத பாடசாலைகள்  தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும்” போன்ற கருத்துக்களை முன்வைத்திருந்தார்,

மேலும், கௌரவ கல்வியமைச்சரினால் பல மாற்றங்கள் மற்றும் புதிய விடங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதைக் காணலாம். அந்தவகையில்  கோட்டமுறை ஒழிக்ககப்பட்டு பூரணமான வலயத்தின் கீழ் கொண்டுவரப்படல், பாடசலைகளில் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை நியமித்தல், சிறந்த ஆசிரிகளுக்கான குரு பிரதீபா விருது வழங்கும் நிகழ்வை உரிய காலத்தில் வழங்களி ஆசிரியர்களுக்கு ஊக்கமளித்தல், கல்விக்கான வசதிகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் ஒன்பது பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயத்தப்படல், அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை அபிவிருத்தி திட்டம், கணித்ப்பாடத்தின் அடைவுமட்;டத்தை கூட்டும் வகையில் “அணைவருக்கும் கணிதம்” எனும் வேலைத்திட்டம் மத்திய மாகாணத்தின் நடைமுறைபடுத்தப்படுகிறது மற்றும் மாணவர்களுக்கு மத்தியில் நல்வுறவைக் கட்டியேழுப்பல் எனும் வேலைத்திட்டத்தின் கீழ் “சகோதரத்துவ பாடசாலை” எனும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றதை உதாரணமா குறிப்பிடலாம்.

எனவே, தொகுத்து நோக்கும் போது இலங்கையின் கல்வி வளர்ச்சியில் “கல்விக் கோட்பாடுகளும் அவற்றின் பிரயோகங்களும்”என்பது மேற்கூறியவாறு செல்வாக்கு செலுத்துகிறது எனலாம் . சுருங்கக் கூறின் காலத்திற்கு காலம் அரசாங்கம் மாறும் போது கல்விக் கோட்பாடுகளும் கொள்கைகளும் மாற்றமடையும் என்பதாகும். 

உசாத்துணை நூல்கள்

  • செல்வராஜா மா., 2005, கல்வியியல் அடிப்படை எண்ணக்கருக்கள்,எவர்கிறீன் அச்சகம்,மட்டக்களப்பு
  • ஜெயராசா சபா., 2008, இலங்கையின் கல்வி வரலாறு,சேமமடு புத்தகசாலை,யுஜி.50,பீப்பள்ஸ் பார்க்,கொழும்பு-11
  • செல்வராஜா மா.,2009,ஒப்பியற் கல்வி,ever green press,batticaloa
  •   http:// thaimoli.com/news-detail. php>date:15.07.2018>time: 7.10 pm

      -RASIMA,BF (BA-R)

EASERN UNIVERSITY,SRILANKA.       

Comments

Popular posts from this blog

Case Study Analysis Of MAS Holdings

'வினைத்திறனான கற்றல் கற்பித்தல் செயற்பாடானது மூவழித்தொடர்பாடல் நிகழ்ச்சியினூடாக நடைபெறுவதன் மூலம் ஆசிரியர் - மாணவர் இடைத்தாக்கம் சிறப்பாக அமையும். இக்கூற்றின் அடிப்படையில் உமது கருத்துக்களை முன்வைத்து விளக்குக.

கலைத்திட்ட மேம்பாட்டினை இன்றைய தேவையை முக்கியப்படுத்தி உமது கருத்துக்களை விளக்குக.